அத்தியாயம் 06

“இன்னைக்கு எந்த ஏரியாவுக்கு போறீங்க ப்ரபா?”

“எங்க காலேஜ்க்கு போறவழியில கொஞ்சம் பெருசா ஒரு கால்வாய் ஓடுதுல்ல ம்மா, அததான் சுத்தப்படுத்த போறோம்.”

“உங்கூட யாரெல்லாம் வர்றாங்க?”

“கமலி, ரேஷ்மி, யுகேன், இந்தர்…”

தனத்தின் கேள்விகளுக்கு இயல்பாக பதில் சொல்லிக் கொண்டே சென்ற ப்ரபாவுக்கு, இத்தனை நாட்கள் இல்லாமல் புதிதாக இந்த கேள்விகளைக் கேட்கும் அன்னையின் செயல் வித்தியாசமாகத் தெரிய,

“ஏம்மா கேக்குறீங்க!” என்றாள் ஆச்சர்யமாக.

“ஒரு ஆத்திரஅவசரத்துக்கு உதவுமேன்னு கேட்டு வச்சுக்குறது தான்டி. அதுக்குப் போய் ஏம்மா, நோம்மான்னு சும்மா கேள்வி கேட்டுட்டு.” சிடுசிடுத்தவர்,

“போனமா, போனகாரியத்தை முடிச்சமான்னு வரணும். அதவிட்டுட்டு எதும் வம்புதும்ப இழுத்துட்டு வந்துராத ப்ரபா.”

அந்த வார இறுதியில் தனத்தின் கைகள் வழக்கம் போல மகள் கேட்கும் சாப்பாட்டைக் கட்டிக்கொண்டிருக்க, வாயோ, வழக்கமில்லாத வழக்கமாக மகளிடம், கேள்விகளை கேட்டு, அறிவுரைகளை சொல்லிக்கொண்டிருந்தது.

ம்ம்… அன்று தாம்பாளத்தை எடுத்துவிட்டு வருகிறேனென்று சொல்லி நாத்தனார் வீட்டுக்குள் சென்ற மகள் வெறுங்கையோடு வந்து நிற்க, அவளை மேலும் கீழுமாக பார்த்த தனம், “என்னடி? தாம்பாளம் எடுக்கப் போறேன்னு சொல்லிட்டு வெறுங்கையோடு வந்து நிக்குற?” என்று கோபத்தோடு கேட்டார்.

“அது… அது… ஹாங்… சுபா அண்ணி கூட பேசிட்டு இருந்தேன் ம்மா. அப்போ பாத்து சின்ன ண்ணா ஃபோன் பண்ணுனாங்களா, அதான் நேரமாகிடிச்சோன்னு டென்ஷன்ல ஓடி வந்துட்டேன்.”

ஆமாம்… வீட்டினுள் சென்ற மகளை நீண்ட நேரமாகியும் காணாததால் சின்னமகனிடம், “அந்த கழுதையை சீக்கிரமா வரச்சொல்லி ஒரு ஃபோனப் போடுடா” என்று தனம் சொல்லி, முரளி அழைத்த ஃபோன் அழைப்பின் சத்தத்தில் தானே, முத்தத்திலிருந்து அவளுக்கு விடுதலை கொடுத்திருந்தான் அவளின் அத்தான்.

எதிர்பாராத முதல் முத்தத்தில் அதிர்ந்து போயிருந்தவளுக்கு, பதட்டத்தில் வந்த காரியம் மறந்து போவதில் ஆச்சர்யம் ஏதுமில்லை தானே?

ஒருவித படபடப்போடு பதில் சொன்ன மகளின் தலையில் எல்லா கோபத்தையும் சேர்த்து நறுக்கென்று கொட்டிய தனம், “வாய் மட்டும் ஏழூருக்கு இருக்கு. ஆனா செயல்ல ஒண்ணும் கெடையாது” என்று முணுமுணுக்க,

சரியாக அப்போது பார்த்து சௌந்தர்யா வீட்டில் வேலை செய்யும் பொன்னம்மா, “அம்மா… சின்னய்யா இதை உங்ககிட்ட குடுத்துட்டு வரச்சொன்னாங்க.” வாசலை திரும்பி பார்த்துக் கொண்டே தாம்பாளம் அடங்கிய பையை ப்ரபாவிடம் நீட்டினார்.

சின்னையா என்ற வார்த்தையில் பொன்னம்மாவை பின்பற்றி மற்றவர்களும் வாசலைப் பார்க்க, அங்கே ரஞ்சித் நின்று கொண்டிருந்தான்.

அப்போதிருந்த மனநிலையில் தனத்திற்கு வேறு எதுவும் பெரிதாகத் தோன்றவில்லை. ஆனால் வீட்டுக்கு வந்து அவர் மனதைக் குழப்பிய விஷயங்களை மகனிடம் பேசி தெளிவுபடுத்தியப் பிறகு, நீருக்குள் இருக்கும் காற்று நீர்க்குமிழியாக மேலெழுந்து வருவது போல, ரஞ்சித் வாசலில் வந்து நின்று இவர்களைப் பார்த்ததும், மகளின் படபடப்பும் மனதுக்குள் ஒருவித குழப்பத்தை உண்டு பண்ணியது.

அதிலும், ‘அந்தப் பயல் என்னைச் சவாலாகப் பார்த்தானோ? ஏளனமாகச் சிரித்தானோ?’ என்று ரஞ்சித்தின் சிரிப்பையும், பார்வையையும் கூட அங்குல அங்குலமாக அலசி ஆராய்ந்து பார்க்குமளவிற்கு குழப்பத்தில் மூழ்கிப் போயிருந்தார் தனம்.

‘ஒருவேளை ப்ரபாவுக்கும் அவனுக்கும் ஏதாவது…’ அந்த நினைப்பே தனத்தின் மனதிற்குள் அமிலத்தை சுரந்தது.

மகளிடம் எதையும் இலைமறை காயாகக் கேட்கவும் கூட பயமாக இருந்தது. ‘ஒருவேளை மகளின் மனதில் எதுவுமே இல்லாமல், தன்னுடையப் பேச்சுக்களே வில்லங்கமாக எதுவும் நடப்பதற்கு காரணமாகி விடக்கூடாதே’ என்று மௌனத்தைக் கடைபிடித்தாலும், என்றுமில்லாத கேள்விகளும், அறிவுரைகளும் அவரையும் மீறி வந்து விழுந்து விடத்தான் செய்தது.

ஆனால் ப்ரபாவுக்கோ, மனது வெற்றுக் காகிதமாக இருந்தபோது இருந்த தைரியம் அதில் காதல் கவிதையை எழுதிய பின்னர் இல்லாமல் போனது.

அம்மாவின் பேச்சில் ‘தன் காதலைப் பற்றி அவருக்கு ஏதேனும் தெரியவந்திருக்குமோ?’ என்ற சந்தேகத்திலேயே , வீட்டிலிருந்து எப்பொழுதும் போல பெரிய அண்ணனுடன் கிளம்பி வந்திருந்தாள்.

ப்ரபாவோடு சேர்ந்து அவர்கள் நண்பர்கள் கூட்டணியில் ஆறுபேர் உண்டு. தன்னார்வத் தொண்டு எங்கு நடந்தாலும், தாங்களாகவே அதில் தங்களை இணைத்துக் கொள்வார்கள்.

நீர்நிலைகளை சுத்தப்படுதல் மட்டுமன்றி, அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் என்று, எங்கெங்கெல்லாம் இவர்களின் சேவை தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் இவர்களின் வருகை இருக்கும்.

இன்று அவர்கள் கல்லூரியில் உள்ள ஒரு அமைப்பு, கல்லூரிக்கு அருகில் இருக்கும் கால்வாயை ஆக்ரமித்திருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தப்படுத்தும் பணியில் இறங்கியிருக்கிறது. அதில் இணைந்து கொள்வதற்காகத்தான் சென்று கொண்டிருக்கிறாள் ப்ரபா.

அண்ணன் கடைக்கருகிலிருந்து அவளை அழைத்துச் செல்வதற்காக இன்று கமலி காத்திருக்க, சத்யாவிடம் விடைபெற்று கமலியோடு இணைந்து கொண்டாள் ப்ரபாவதி.

“என்னாச்சு ப்ரபா?”

ஸ்கூட்டியில் தன் பின்னால் அமர்ந்து வரும் தோழி என்றுமில்லாமல் அமைதியாக இருப்பதோடு, முகமும் சிந்தனை வயப்பட்டிருப்பதைக் கண்டு கமலி கேட்டாள்.

“ப்ச்ச்… இல்ல கமல்… அம்மாவுக்கு எம்மேல லேசா சந்தேகம் ஏதும் வந்திடிச்சோன்னு தோணுது?”

“எப்டி?” என்று கேட்ட கமலியிடம், வீட்டில் நடந்தவற்றை சொன்னாள் ப்ரபா.

“அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாத் தெரியுமாம். அப்படித்தான் வீட்டுக்குத் தெரியாமல் லவ் பண்ணும் போது, அம்மா, அப்பா சாதாரணமாப் பேசுனாக்கூட சந்தேகப்பட்டது போலவே இருக்கும்.” சொன்ன கமலி, ஒரு நிமிஷம் அமைதியாக இருந்துவிட்டு,

“என்ன இருந்தாலும், வீட்டுக்கு தெரியாமல் நீ செய்யுற காரியம் தப்புத் தானடி. அதுவும் இல்லாமல் உங்க இரண்டு வீட்டுக்கிடையில இவ்வளவு பிரச்சினை இருக்கும் போது, உங்க காதல் சாத்தியமா ப்ரபா?” குரலில் தோழி மீதான அக்கறை இருந்தது.

இருவரும் பள்ளிக்காலத்து தோழிகள் என்பதால் இருவரின் நட்புக்கும் வயது அதிகம். அதனால் ப்ரபாவதியின் வீட்டு சங்கதிகள் எல்லாம் ஓரளவுக்கு கமலிக்கும் தெரியும்.

இதேக் கேள்வி மனதிற்குள் இருந்தாலும், ‘எல்லாம் தன் அத்தான் பார்த்துக் கொள்வார்’ என்ற நம்பிக்கையில் வலம் வந்து கொண்டிருக்கிறாள் ப்ரபாவதி.

அதற்கு மேல் அவர்கள் வந்து சேரவேண்டிய இடமும் வந்துவிடவே, ஏற்கனவே அங்கு வந்திருந்த நண்பர்கள் பட்டாளத்தோடு வேலையில் இறங்கினார்கள்.

அது ஒரு நன்னீர் கால்வாய் தான். ஆனால் நகரவாசிகளின் கைங்கரியத்தால் கிட்டத்தட்ட சாக்கடையாக உருமாறிக் கொண்டிருக்கிறது.

கைகளுக்கு பாதுகாப்பாக கையுறையும், முகத்துக்கு முககவசமும் அணிந்துகொண்டு, எல்லோரும் மும்முரமாக வேலையில் இறங்கினார்கள்.

 அன்றைய பொழுது முடியும் நேரத்தில் சுடிதார் பாக்கட்டில் இருந்த ப்ரபாவின் கைபேசி அழைத்தது. கையுறைகளையும், முகக்கவசத்தையும் கழற்றிவிட்டு, அங்கிருந்த நல்ல தண்ணீரில் கைகளைக் கழுவியவள், அழைப்பை ஏற்று காதில் கைபேசியை வைக்க,

“ஹேய்…ப்ப்ரபா! இங்க என்ன டி பண்ணுற?” என்றான் ரஞ்சித் கைபேசி வழியாக. குரலில் கொஞ்சம் அசூயை கலந்திருந்தது.

ரஞ்சித்தின் கேள்வியில் சட்டென்று கால்வாய்க்கு மேல் நீண்டிருந்த தரைப்பாலத்தைப் பார்த்தாள் ப்ரபா. ரஞ்சித்தின் பி எம் டபிள்யூ கார் பாலத்திலிருந்து இறங்கி மறுபுறம் போய்க்கொண்டிருந்தது.

“அத்தான்… நான் உங்க காரைப் பாத்துட்டேன்.” கூவினாள் சிறுபிள்ளையாய்.

“கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு. இந்த சாக்கடையில நீ என்ன பண்ணிட்டிருக்குற?” ரஞ்சித்தின் குரலில் இப்போது வெளிப்படையாகவே எரிச்சல் தெரிந்தது.

“ஹல்லோ! எக்ஸ்கியூஸ்மீ அத்தான்… முதல்ல இது சாக்கடை கிடையாது. நம்ம மக்கள் தான் சாக்கடையா மாத்திட்டு இருக்காங்க, அதை முதல்ல ஞாபகம் வச்சிக்கோங்க.” அழுத்திச் சொல்லியவள்,

“நாங்க ஒரு டீமா சேர்ந்து இந்த கால்வாயை சுத்தபடுத்திட்டு இருக்கிறோம்” என்றாள் நிமிர்வாக.

“என்னது? சுத்தப்படுத்துறீங்களா?”

“ஹ்ம்ம்… போன ஃப்ளுட்ல பிளாஸ்டிக் கவர்ஸ்ஸால சிட்டியோட ட்ரைனேஜ் எல்லாம் அடைபட்டதும் கூட, நம்ம சென்னை வெள்ளபெருக்குக்கு ஒரு காரணம்ங்குற மறந்துட்டீங்களா த்தான்?”

“அதுக்கு?”

“அதுக்குத் தான் நாங்க ஒரு டீமா சேர்ந்து இந்த மாதிரி இடங்கள்ல சேர்ந்திருக்குற பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தப்படுத்துறதோட, பிளாஸ்டிக் ஒழிப்பு பிரச்சாரத்தையும் மக்கள் மத்தியில பரப்புறோம்.”

“அதுக்குத் தான் கவர்மென்ட் இருக்கே, நீங்க எதுக்கு?”

“எல்லாத்துக்கும் கவர்மென்டையே எதிர்பாக்காம நாம செய்தாலும் தப்பில்லையே த்தான்?”

பதிலுக்கு பதில் பேசிக்கொண்டிருந்தவளின் செயலில் ரஞ்சித்துக்கு கோபம் வந்தது. ஏற்கனவே தனக்கு சமுகசேவையில் நாட்டம் உண்டு என்று ப்ரபா சொல்லி அவனுக்குத் தெரியும் தான். ஆனாலும் இந்த மாதிரி இடத்தில் அவளைக் காணப் பிடிக்காதவனாக ஃபோன் செய்துவிட்டான்.

ஆனால் அவளோ நிமிர்வாகவேப் பதில் சொல்ல, வீண் வாக்குவாதம் இப்போது வேண்டாமென்று நினைத்தவன்,

“ஹேய்… இந்த மாதிரி இடத்துல இறங்கி வேலை பாக்குறதுனால உனக்கு ஹெல்த் இஸ்யூ எதுவும் ஆகிடக்கூடாதில்ல பேபி. அதனாலத் தான் அத்தான் கேட்டேன்” என்றான்.

“நாங்கல்லாம் சுனாமியிலேயே ஸ்விம்மிங் அடிக்கிறவங்க சாரே. இதெல்லாம் எங்களுக்கு சப்பமேட்டரு சால்ட்டு வாட்டரு. சோ, யூ டோண்ட்டு வொர்ரி.”

விளையாட்டாக அவள் பேசிய அழகில் பதறிப்போன அமெரிக்க ரிட்டர்ன் ரஞ்சித், “எனக்கு இன்னொரு கால் வருது, நான் அப்புறமா உங்கூட பேசுறேன்” என்று சொல்லி அழைப்பை துண்டித்து விட்டான்.

ஆனால் ப்ரபாவின் மனதிலோ, ‘அத்தான் வாய்ஸ்ஸே சரியில்லை. நான் இப்படி செய்யுறதெல்லாம் அவங்களுக்கு பிடிக்கலையோ? அப்டின்னா கல்யாணத்துக்கப்புறம் என்னை சர்வீஸ் பண்ண அலவ் பண்ணுவாங்களா?’ என்ற கேள்வி முதன்முறையாக எழுந்தது.

************

“கல்யாண வயசுல ஆணும், பொண்ணுமா வீட்டுல இரண்டு பசங்க இருக்காங்கங்குறது உனக்கு கொஞ்சமாவது ஞாபகம் இருக்கா ராஜா!”

அன்று தங்கள் ஷோரூமில் வாரவிடுமுறை நாளாதலால் சாவகாசமாகச் செய்தித்தாளை வாசித்துக் கொண்டு ஹாலில் உட்கார்ந்திருந்த மகனின் பக்கத்து இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டே கற்பகம் கேட்டார்.

 ‘ஞாயிற்றுக்கிழமை’ பொது விடுமுறை தினமாதலால், அன்று ஜவுளி எடுக்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். அதனால் வாரநாளான செவ்வாய்க்கிழமை தான் கற்பகம் சில்க்ஸ்ஸின் விடுமுறை தினம்.

அம்மாவின் கேள்வியில் பேப்பரை மடித்து முன்னால் இருந்த சிறிய டேபிளில் வைத்துவிட்டு, “நானே இன்னைக்கு உங்ககிட்ட அதைப்பற்றி பேசணும்னு நினைச்சிட்டுத் தான் இருந்தேன் ம்மா. நீங்களே ஆரம்பிச்சிட்டீங்க” என்ற இராஜசேகரன்,

“சௌந்தர்யா! ஒரு கப் காஃபி கொண்டு வா” என்று குரல் கொடுத்தார்.

அடுத்த ஒருசில நிமிடங்களில் தன்முன்னே காஃபி கப்புடன் நின்ற மனைவியிடமிருந்து காஃபியை வாங்கிக்கொண்டவர்,

“வா… நீயும் வந்து உக்காரு.” இருக்கையில் தன்னருகே இருந்த இடத்தை மனைவிக்கு கையால் தட்டிக்காட்டிக் கொண்டே, “ரஞ்சித்தையும், சுபாவையும் எங்க?” என்று கேட்டார்.

 மாமியாரை பார்த்துக் கொண்டே, கணவனருகில் ஒரு தயக்கத்தோடு அமர்ந்த சௌந்தர்யா, “ரஞ்சித் காலையிலே வாக்கிங் போனவன் இன்னும் வரலைங்க. சுபாவும், சின்னவளும் ஸ்கூலுக்கு போக ரெடியாகிட்டு இருக்குறாங்க” என்று சொன்னார்.

“நான் சொல்லப்போற விஷயத்தை ரெண்டு பேரையும் வச்சிட்டு சொன்னா நல்லாயிருக்கும்ன்னு நினச்சேன்.” என்ற பீடிகையோடு பேச்சை ஆரம்பித்தார் மனிதர்.

“ஷங்கரி பாரடைஸ், உங்களுக்கு தெரியும்னு நினைக்குறேன் ம்மா?”

“ம்ம்… இங்க சென்னைல இருக்குற ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் தான ப்பா?” பாட்டியிடம் கேட்ட கேள்விக்கு, ரஞ்சித் பதில் சொல்லியபடியே, தந்தைக்கு எதிரில் கிடந்த சோஃபாவில் வந்தமர்ந்தான்.

 பணத்தை வஞ்சமில்லாமல் விழுங்கியிருந்த அந்த இருக்கை, இப்போது அந்த நாயகனையும் விழுங்கிக் கொள்வதில் பாகுபாடு காட்டவில்லை.

மகனுக்கு புன்னகை முகம் காட்டிய இராஜசேகரன், “ஆமா… இங்க சென்னைல மட்டும் இல்ல, பாண்டிச்சேரிலயும், திருச்சிலயும் கூட இருக்கு டா” என்றார்.

“ம்ம்… தெரியும் ப்பா. ஆனா இப்போ எதுக்கு அவங்க பேச்சு வந்துச்சு?”

“எல்லாம் காரியமாத்தான்” என்றவர் அருகிலிருந்த மனைவியின் முகத்தை திரும்பிப் பார்த்துவிட்டு, “அவங்க வீட்லயிருந்து சம்மந்தம் கேட்டு விட்டுருக்காங்க ப்பா” என்றார் ஆவலாக.

இராஜசேகரனின் வார்த்தைகளில் மறுநொடியே கற்பகத்தின் முகத்தில் சந்தோஷப்பூ பூத்தது என்றால் சௌந்தர்யாவின் முகம் யோசனையைக் காட்டியது .

“யாருக்கு ப்பா?” புருவங்களை லேசாக நீவி விட்டுக்கொண்டே சாதாரண குரலில் கேட்டான் ரஞ்சித்.

“எல்லாம் உனக்கும் சுபாவுக்கும் தான் ரஞ்சித். நம்ம வீட்ல பெண்ணெடுத்து, பெண் கொடுக்கணும்னு ரொம்ப ஆசப்படுறாங்க.” சொல்லியவர், பதிலுக்காக ஆவலோடு மகனின் முகத்தைப் பார்த்தார்.

“அவங்க ஆசைப்பட்டா மட்டும் போதுமா ப்பா?”

“டேய்… என்னடா சொல்லுற?”

“ம்ம்… எனக்கு இந்த சம்மந்தத்துல விருப்பம் இல்லைன்னு சொல்லுறேன். உங்க பொண்ணுக்கு விருப்பம் இருந்தா அவ கல்யாணத்தை மட்டும் நடத்துங்கன்னு சொல்லுறேன்.”

மகனின் பதிலில், மனதிலிருந்த உற்சாகம் வடிந்தவராய் சோஃபாவில் தளர்வாக சாய்ந்தமர்ந்து கொண்டார் இராஜசேகரன்.

“வீட்டுக்கு மூத்த பிள்ளையா இருந்துட்டு இப்டி பொறுப்பில்லாமல் பேசினா எப்டி ரஞ்சித்? உன் தங்கச்சி கதையை தெரிஞ்சு, ஒருத்தரும் பொண்ணு கேட்டு வரமாட்டேங்குறாங்க.”

“இவங்க, எல்லாம் தெரிஞ்சு வந்துருக்காங்க. அப்படியிருக்குறப்போ, நீ இப்டி பொறுப்பில்லாமத் தட்டிக் கழிக்கலாமாப்பா? உன் தங்கச்சிகாகவாவது நீ இந்த கல்யாணத்தைப் பண்ணித் தான் ஆகணும்.”

இப்படிச் சொன்னாலாவது பேரன் அசைந்து கொடுப்பானென்று கொஞ்சம் அழுத்திச் சொன்னார் கற்பகம்.

“ஹஹ… எப்டி? எப்டி?” ஒரு அலட்சியச் சிரிப்போடு பேசத் தொடங்கியவனின் பேச்சை, “பாட்டி…” என்ற சுபாவின் ஆங்காரக்குரல் இடைவெட்ட, எல்லாருடைய பார்வையும் குரலுக்கு சொந்தக்காரியிடம் நங்கூரமிட்டது.

இவர்கள் நால்வரும் ஹாலில் உட்கார்ந்து பேச ஆரம்பித்ததுமே, தன் அறையிலிருந்து வெளியே வந்திருந்த சுபத்ரா, தன் பெயரும் பேச்சில் அடிபடவே, நின்று நிதானமாகப் பேச்சைக் கவனிக்க ஆரம்பித்தாள்.

அதுக் கல்யாணப் பேச்சு எனப் பிடிபடவுமே எரிச்சலோடு நகர்ந்துபோக எத்தனித்தவளை, பாட்டியின் பேச்சு உசுப்பி விட, தன்னை மறந்து கத்தியிருந்தாள்.

“எங்கதையா? இப்டி நீங்கல்லாம் சொல்லுற அளவுக்கு அப்டி என்ன நடந்திடிச்சி என்வாழ்க்கையில? அப்டியே நடந்திருந்தாலும் அது உங்க பிள்ளையோட கேர்லெஸ்ஸாலயா? இல்ல என்னாலயா? ஹாங்…”

விழிகளை உருட்டி, புருவத்தை நெறித்தபடிக் கேள்விக் கேட்டவள், “கேக்குறேன்ல சொல்லுங்க பாட்டி?” என்று கற்பகத்தை அதட்டினாள்.

ஏற்கனவே இந்த ஏழு வருடங்களாக, ‘நான் அவசரப்பட்டு விட்டேனோ? கொஞ்சம் நிதானமாக செயல்பட்டிருக்கலாமோ? கண்ணால் காண்பதுவும் பொய், காதால் கேட்பதுவும் பொய், தீர விசாரிப்பதே மெய்னு சொல்லியிருக்காங்களே! நானும் விசாரித்து உண்மையை தெரிந்திருக்க வேண்டுமோ?’ என்று தினம் தினம் மருகிக் கொண்டிருப்பவளை, இன்றையப் பேச்சு விரக்தியின் உச்சியில் கொண்டு தள்ள, தன்னை மறந்து கத்தி விட்டாள்.

லேசாக உடல் நடுங்க வியர்வையில் குளித்தபடி நின்றிருந்த மகளின் கோலம் காணப் பொறுக்காதவராய் தனது இருக்கையிலிருந்து எழும்பிய சௌந்தர்யா, தன் பெண்ணை ஆதரவாக அணைத்து முதுகைத் தடவிக் கொடுத்தார்.

பின்னர், எழும்பியக் கல்யாணப்பேச்சை விட்டுவிட மனமில்லாதவராக, “நடந்ததையெல்லாம் ஒரு கெட்ட கனவா மறந்துட்டு, எனக்காகவாவது ஒரு கல்யாணத்தை பண்ணிக்கோடா?” தழுதழுத்த குரலில் கிட்டத்தட்ட மகளிடம் மன்றாடினார் சௌந்தர்யா.

“ம்ஹூம்… இந்த இமோஷனல் ப்ளாக்மெயிலுக்கெல்லாம் தலையாட்டுற ஆள் நானில்ல ம்மா. எனக்கு கல்யாணம் செய்துக்க இஷ்டமில்லை. அதையும் மீறி என்னை எல்லாரும் இப்படி நெருக்கிக்கிட்டே இருந்தீங்கன்னா, அப்புறம் நான் இந்த வீட்ல இருக்குறதுக்கே யோசிக்க வேண்டி வரும்.” உறுதியாகச் சொன்னாள்.

பின், “லேசாகத் தாயை அணைத்து,”சாரி ம்மா…” என்ற சுபத்ரா, “இந்த சாரி கூட உங்களுக்காக மட்டும் தான் ம்மா” என்றபடியே விறுவிறுவென்று இடத்தை காலிசெய்தாள்.

அனைத்தையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சித் தந்தையிடம், “உங்க மகளோட முடிவைக் கேட்டீங்கத் தானே ப்பா, நானும் எனக்காகத் தான் வாழணும்னு நினைப்பனேயொழிய வேற யாருக்காகவும் எனக்கு பிடிக்காத வாழ்க்கையைத் தூக்கி என் தோள்ல போட்டுக்க மாட்டேன். அதனால இந்த சம்மந்தத்தை வேண்டாம்னு சொல்லிடுங்க” என்றான் உறுதியாக.

“அப்புறம்… என்னடா, நாம ஒரு அலையன்ஸ் சொன்னா அதப்பற்றி விசாரிக்கக் கூடச் செய்யாம, சட்டுன்னு எப்டி இந்த கல்யாணம் வேண்டாம்னு இவன் சொல்லுறான்னு உங்களுக்கு குழப்பமா இருக்கலாம்!”

தகப்பனைக் கூர்ந்து பார்த்தவன்,”நம்ம மனசுக்குள்ள ஏற்கனவே ஒரு பொண்ணிருக்கும் போது, இன்னொரு பொண்ணப்பற்றி நினச்சுக்கூட பாக்கக் கூடாதுன்னு உங்களுக்கு தெரியாதா, என்ன?”

மகன் சொல்லிய பாவனையில் இராஜசேகரன் விலுக்கென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாரென்றால், சௌந்தர்யாவோ மகளைப் பற்றியக் கவலையைச் சற்றே தள்ளிவைத்து, மகனைக் கொஞ்சம் சுவாரஸ்யமாகப் பார்த்தார்.

ஆனால் கற்பகம் அம்மாவோ, “இப்படித் தான் நீ சொல்லுவன்னு நான் எதிர்பார்த்தேன் டா” என்பது போல பேரனைப் பார்த்து வைத்தவர், பூனைக்குட்டி வெளியே வரும் நேரத்திற்காக காத்திருக்க,

அவனோ யாருடைய பார்வையையும் கண்டு கொள்ளாமல், “நான் நம்ம ப்ரபாவதியை காதலிக்கிறேன். அவ மட்டும் தான் என்னோட பெட்டர்ஹாஃப் ஆக முடியும்” என்று சொன்னான்.

சுவாரஸ்யமாக மகனைப் பார்க்க ஆரம்பித்திருந்த சௌந்தர்யாவின் முகத்தில், இப்போது கவலை அப்பிக் கொண்டது…