அடுத்த நாள் இருவரும் அந்த பார்க்கில் அமர்ந்திருந்தார்கள். அந்த நேரம் அங்கே யாரும் இல்லை. ஒரு ஆள் மட்டும் செடிகளுக்கு தண்ணீர் பாய்த்துக் கொண்டிருந்தார். அவரும் சென்று விட இருவர் மட்டுமே அமர்ந்திருந்தார்கள்.

            “என்ன விஷயம்?”, என்று நேரடியாகவே கேட்டு விட்டாள்.

            எழுந்து நின்றவன் அதை எப்படி அவளிடம் சொல்ல என்ற யோசனையில் இருந்தான். சிறு புருவம் தூக்கி அவனைப் பார்த்து அவளும் எழுந்து அவன் அருகே சென்று கேள்வியாக அவனைப் பார்த்தாள்.

            “ஒரு வேளை நம்மளை வேண்டாம்னு சொல்லுறானோ?”, என்று அவள் மனம் கவலையில் இருக்க       “நம்ம கல்யாணம் எப்ப வேணாலும் நடக்கும் டி அழகி. அதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான வேலை இருக்கு”, என்றான்.

            “என்ன?”

            “பிள்ளையை திருப்பி வாங்கணும்? நான் கூப்பிட்டா கேஸ் கொடுக்க வருவியா? நாம வாங்கிறலாம் அழகி. அந்த குட்டி நம்ம கூட நம்ம வீட்ல தான் இருக்கணும் வளரணும்? அங்க அவ எப்படி இருக்காளோன்னு யோசிச்சு நாம நிம்மதியா இருக்க முடியாது. நம்ம கூட நம்ம கைக்குள்ள தான் பிள்ளை இருக்கணும்”, என்று சொல்ல அவ்வளவு தான் அடுத்த நொடி அவனை அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டாள்.

அவள் செய்கையில் திகைத்துப் போனான் தாமரை. இதை எதிர் பார்க்கவே இல்லை. அவனும் அவளை இடையோடு சேர்த்து அணைக்க அவன் மார்பில் முகம் புதைத்து கொண்டு ஏங்கி ஏங்கி அழுதாள். அவள் அழுவது புரிய ஆதரவாக அவள் முதுகை அணைத்திருந்தான். அவள் பின்னந்தலையை மென்மையாக கோதி விட்டவன் “என்னடி அழகி சின்ன பிள்ளை மாதிரி பன்ற?”, என்று கேட்டான்.

அதற்கு அவள் பதில் சொல்லும் நிலையில் இல்லை. அவன் மார்பில் இருந்து விலகவும் இல்லை. ஏனோ தன்னிடம் வந்து சேர்ந்த நிம்மதி அவளுக்கு.

            “வெளிய இருக்கோம் டி, இங்க யார் வேணா வரலாம். கொஞ்சம் புரிஞ்சிக்கோ. நம்மளை இப்படிப் பாத்தா தப்பா போயிரும் அழகி”, என்று அவன் சொன்ன பிறகு தான் இருக்கும் நிலையே புரிந்தது. ஆனாலும் அவசரமாக எல்லாம் விலக வில்லை.

            நிதானமாக அவனை விட்டு விலகி நின்றவள் காதலாக அவனைப் பார்க்க “என்ன மேடம் பார்வை எல்லாம் பலமா இருக்கு”, என்றான்.

            “என் புருஷன் நான் பாப்பேன்? உனக்கு என்ன?”, என்று அவள் சர்வ சாதாரணமாக கேட்க அவனுக்கு எப்படி இருக்குமாம்?

            “குழந்தை விஷயம் இனி என்னோட பொறுப்பு. நம்ம பொண்ணு நம்ம கூட தான் இருப்பா. அதுக்கு நான் பொறுப்பு”

“உங்களை நம்புறேன். உங்களை மட்டும் நம்புறேன்”

“தேங்க்ஸ் டி, சரி இன்னைக்கு சாயங்காலம் பக்கத்துல இருக்குற சிவன் கோவிலுக்கு போகலாமா டி? எனக்கு உன் கூட கொஞ்ச நேரம் இருக்கணும் போல இருக்கு?”, என்று சொல்ல அவள் எந்த மறுப்பும் சொல்ல வில்லை. அவளுக்கும் அந்த ஆசை இருக்கும் தானே?

            சொன்னது போல மாலை அவளை அழைக்க வந்து விட்டான். இந்த முறை அவன் சொல்லாமலே அவள் அவன் பின்னால் ஏறி கொண்டாள். அது மட்டும் அவள் வலது கையை அவன் தோளிலும் வைத்துக் கொண்டாள்.

            நேராக கோவிலுக்கு சென்றதும் தேவையில்லாத பேச்சுக்கள் எதுவும் இல்லாமல் இருவரும் கடவுளை தரிசித்தார்கள். ஏனோ அந்த சிவலிங்கம் கூட இருவருக்கும் அப்படி ஒரு அமைதியையும் சந்தோஷத்தையும் தந்தது போல இருந்தது.

            கடவுளை வணங்கி விட்டு அங்கேயே அமர்ந்தார்கள். இருவரின் மனதுக்குள்ளும் ஆயிரம் எண்ணங்கள் ஓடினாலும் அங்கே இருந்த அமைதியில் உள்ளம் என்னவோ நிதானமாக இருந்தது.

சிறிது நேரம் கழித்து வெளியே வந்ததும் “போகலாமா?”, என்று கேட்டான் தாமரை.

            “ஒரு பத்து நிமிஷம் அந்த பார்க்ல உக்காரலாமா?”, என்று அவளே கேட்க அவன் எப்படி மறுப்பானாம்?

இருவரும் சென்று ஒரு பென்ஜில் சிறிது இடைவெளி விட்டு அமர அந்த மாலை வேளைக்குரிய குளுமையும் மரங்கள் அடர்ந்திருந்ததால் வந்த ஜில்லென்ற தென்றலும் அவர்களை தாலாட்டவே செய்தது. இருள் கவிழும் நேரம் என்றாலும் சில குழந்தைகள் விளையாடிக் கொண்டு தான் இருந்தார்கள்.

            அவள் பார்வை அந்த குழந்தைகள் மீது நிலைத்திருந்தது. அவள் பார்வை அங்கே இருந்தாலும் அவள் சிந்தனை அங்கே இல்லை என்று அவனுக்கு புரிந்தது. நிச்சயம் அவள் மகளை நினைத்துக் கொண்டிருப்பாள் என்று எண்ணிக் கொண்டவனுக்கு அவளைக் கலைக்கவும் மனதில்லை. அப்படியே விடவும் மனதில்லை.

            நேரம் சென்று கொண்டே இருக்க ஒரு முடிவுக்கு வந்தவனாக “பாப்பா ஞாபகமா?”, என்று கேட்டு அவளைக் கலைத்தான்.

“ம்ம்”

            “நாளைக்கு போய் வாங்கிட்டு வந்துறலாமா?”

            “இல்லை வேண்டாம், இப்ப போனா எங்க அவளை வச்சிக்கிறது? ஹாஸ்டல் கூட்டிட்டு போக முடியாது”

            “நான் கூட்டிட்டுப் போய் வச்சிக்கவா என் வீட்ல?”

            “அது சரி வருமானு தெரியலை? முதல்ல அவளுக்கு என்னையே தெரியாது. என் கூடவே வருவாளானு தெரியலையே? நான் செத்துட்டேன்னு சொல்லி வச்சிருக்காங்க”

            “அப்படின்னா உடனே கல்யாணம் பண்ணிக்கலாமா? நீ நாளை நீட்டிக்க நீட்டிக்க யாரும் நிம்மதியா இருக்க போறது இல்லை டி அழகி. சட்டுன்னு ஒரு முடிவு எடுத்தா தான் நல்லது. நீயும் என் கைக்குள்ள இருப்ப. பிள்ளையையும் கூட்டிட்டு வந்துறலாம்”

            “ஓகே தான், ஆனா வீட்ல என்ன சொல்லன்னு தெரியலையே”

            “அவங்க வேண்டாம்னு சொன்னா என்னை வேண்டாம்னு சொல்லிருவியா?”

            “இன்னொரு ஏமாற்றத்தை எல்லாம் என்னால தாங்க முடியாது. ஒரு கடமைக்கு அவங்க கிட்ட சொல்லணும். அவங்க கண்டிப்பா சரின்னு சொல்ல மாட்டாங்க தான். ஆனா சொல்லணும். வேண்டாம்னு சொல்லிட்டா நான் அநாதைன்னு நினைச்சு வாழ்க்கை கொடுங்க”

            “அநாதைன்னு சொன்ன அடி பிச்சிருவேன். நான் இருக்கும் போது நீ அப்படி சொல்லலாமா?”

“சரி சொல்லலை. எனக்கு சம்மதம்”

“அப்படினா அம்மா அப்பாவை விட்டு உங்க வீட்ல பேச சொல்லட்டுமா?”

            “அவங்க எதுவும் கஷ்ட படுற மாதிரி சொல்லிட்டா உங்க அம்மா அப்பாவுக்கு என்னை பிடிக்காம போயிருமே?”

            “அப்படி எல்லாம் உன்னை பிடிக்காம போகாது? அவங்க மருமகளுக்காக சாரி மகளுக்காக இதை பொறுத்துக்குவாங்கன்னு தோணுது. நாளைக்கே பேச சொல்றேன்”

            “ஹம் சரி, உங்களுக்கு என்னைப் பிடிக்காம போகாது தானே?”, என்று கேட்கும் போதே அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.

            “உன் மேல பஸ்ல வச்சு முதல் தடவை கோப பட்ட அப்புறம் உன்னோட கண்ணீர் முகம் தான் டி என்னை அதிகம் பாதிச்சது. சத்தியமா அதை கடந்து வரவே முடியலை. அப்ப கூட உன்னை சிரிக்க வைக்கணும்னு மட்டும் தான் நினைச்சேன். ஆனா உன் வாழ்க்கை பத்தி கேட்டதும் உனக்கு எல்லாமுமா நான் இருக்கணும்னு தோணுச்சு. யாருக்கும் உன்னை விட்டுக் கொடுக்க கூடாதுன்னு முடிவே பண்ணிட்டேன். உன் இடத்துல வேற யாரும் வர முடியாதுன்னு அப்புறம் தான் புரிஞ்சது. என் மனசுக்கு புடிச்ச முதல் பொண்ணும் நீ தான். கடைசி பொண்ணும் நீ தான். உன்னை எந்த அளவுக்கு பிடிக்கும்னு இப்ப என்னால காட்ட முடியாது. கல்யாணத்துக்கு அப்புறம் அத்தான் உன் மேல எவ்வளவு உயிரா இருக்கேன்னு பாப்ப?”, என்று சொல்ல சிறு சிரிப்புடன் அவனை முறைத்தாள் மீனா.

            அவனும் சிரித்தவன் வேறு பேசி அவளை சிரிக்க வைத்து பிறகு இரவு உணவையும் உண்ண வைத்து ஹாஸ்டலில் விட்டுவிட்டு கிளம்பி விட்டான். தன்னுடைய அறைக்கு வந்து உடை மாற்றி விட்டு படுக்கையில் விழுந்தவள் தன்னுடைய போனை எடுத்துப் பார்த்தாள். ஏனோ விரல்கள் அவனது எண்ணையும் அதனுடன் இருந்த புகைப்படத்தையும் தான் பார்த்தது.

பேருந்தில் டிரைவர் சீட்டில் அமர்ந்த படி அவன் இருக்கும் புகைப்படம் தான் அது. சாதாரண காக்கி உடையில் கூட அவன்  ஸ்டைலாக இருப்பது போல தோன்றியது.

            “இந்த கண்டக்டரும் சரி டிரைவரும் சரி எப்படி தான் இவ்வளவு அழகா இருக்காங்களோ தெரியலை”, என்று யாரோ சொன்ன வார்த்தை நினைவுக்கு வர அது தாமரைக்கும் பொருந்தியது போல தான் இருந்தது. சிறு சிரிப்புடன் போனை வைத்து விட்டு படுத்தவளுக்கு நிம்மதியாக உறக்கம் வந்தது.

            அடுத்த நாள் எப்போதும் போல அழகாக விடிந்தது. தாமரைக்கு அன்று விடுமுறை என்பதால் காலையிலே வயலுக்கு கிளம்பிச் சென்று விட்டான். அவளைப் பற்றிய நினைவுகள் மனதில் சுற்றித் திரிந்தது என்றால் அவன் பழகிய வரப்பில் அவன் கால்கள் சுற்றி திரிந்தது.

            மனம் சிறிய குழந்தை போல அலைபாய ஆரம்பித்தது. நடக்கப் போகும் திருமணமும் அதற்கு பின்னான வாழ்க்கையும் எப்படி இருக்கும் என்ற கேள்வி பிறந்தது. எந்த வேற்றுமையும் பிரிவினையும் காட்டாமல் அவளின் குழந்தையை வளர்க்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான். அதைச் செய்யாமல் அவன் சாதாரண ஆண்மகனாக அது அவள் குழந்தை தனே என்று அலட்சியம் காட்டி நடந்து கொண்டால் அவனாலே அவனை மன்னிக்க முடியாது.

தன்னுடைய சிறிய சறுக்கல் கூட குழந்தையையும் அதனுடைய அன்னையையும் கூடவே தங்களின் வாழ்க்கையையும் அதிகம் பாதிக்கும் என்று அவனுக்கு தெரியும்.

            இன்று தாய் தந்தையிடம் பேசி அவளது வீட்டில் பேச சொல்ல வேண்டும் என்று எண்ணியவனுக்கு அவர்கள் வீட்டில் தங்களுக்கு என்ன வரவேற்பு கிடைக்கும் என்று தெரியுமே?

            அவளுக்காக பார்த்தாலும் தன்னுடைய தாய் தந்தையும் முக்கியம் அல்லவா? அதனால் தான் முதலில் சென்று பேசி விடலாம். அதற்கு பின் அவர்களை அழைத்துச் செல்லலாம் என்று முடிவு எடுத்து கிளம்பி விட்டான்.

            தொடரும்..