“உக்காந்துட்டியா? போகலாமா?”

“ம்ம்”

“இந்த ஷோல்டர்ல கை எல்லாம் வைக்க மாட்டியா டி அழகி?”

“ஆபீஸ்க்கு நேரம் ஆகுது? வண்டி போகுமா? இல்லை நான் நடந்து போகவா?”, என்று கேட்டதும் அமைதியாக அவன் வண்டியை எடுக்க அவளும் சிறு சிரிப்புடன் அமர்ந்திருந்தாள். ஏனோ மீனாவின் கண்கள் தன்னால் ஹோட்டலுக்கு உள்ளே சென்றது. அங்கே அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த மகேஷ் தென்பட்டான். ஏற்கனவே அவள் பார்த்து விட்டாள் தான். இப்போது தான் அவன் தங்களைப் பார்ப்பது தெரிந்தது.

என்ன நினைத்தாளோ தன்னாலே அவன் தோளில் கை வைத்துக் கொள்ள தாமரையின் சந்தோஷத்தை வார்த்தையால் சொல்ல முடியுமா என்ன? வண்டியின் வேகம் கூட மகேஷ் கண்டிறாத அழகான புன்னகை அவள் முகத்தில் உருவானது.

அவர்களை ஜோடியாக கண்டதும் அவனுக்கு என்ன தோன்றியது என்று அவனே அறியான். ஒரு மாதிரி குழப்பத்துடன் வீட்டுக்குச் சென்றவனிடம் என்ன என்று விசாரித்தாள் கல்யாணி.

            “இன்னைக்கு ஹோட்டல்ல அவளைப் பாத்தேன்”

            “யாரு அந்த மீனாவையா?”

            “ஆமா, இன்னொருத்தன் கூட சிரிச்சு பேசிட்டு இருக்கா மா. அவன் கூட வண்டிலயும் போறா. என்னைப் பாத்தாளான்னு தெரியலை. ஆனா அப்படி பல்லைக் காட்டிட்டு போறா”

            “என்ன டா சொல்ற? இன்னொருத்தன் கூடயா? உன்னையே நினைச்சிட்டு இருப்பான்னுல நினைச்சேன்?”

            “நானும் அப்படி தான் மா நினைச்சேன். ஆனா அவ சந்தோஷமா தான் இருக்கா. ரெண்டு பேரும் சிரிச்சு பேசிட்டே போறாங்க. நீ சொன்னது உண்மை தான் போல மா. அவ தப்பான பொண்ணு தான். அன்னைக்கு பிரியாணி கொண்டு வந்தவன் கூட தொடர்புல இருந்தா. இப்ப வேற ஒருத்தன் கூட. இல்லை அவனே தான் இவனான்னு தெரியலை. நல்ல வேளை நான் தப்பிச்சிட்டேன்”

            “இதுக்கு தான் டா நாங்க அவளை விரட்டி விட்டுட்டோம். அவ குணம் தெரிஞ்சு அவ வீட்லயும் அவளை விட்டு வைக்காம துரத்திட்டாங்க டா. அதான் இப்ப கேக்க ஆள் இல்லாம அலையுது அந்த கழுதை. நல்லதா போச்சு குழந்தை கிட்ட அம்மா செத்துட்டான்னு சொன்னோம். இல்லைன்னா மறுபடியும் வந்து ஒட்டிக்குவா. நீ ஆர்த்தியை கல்யாணம் பண்ணிக்கோ டா”

            “நானா வேண்டாம்னு சொல்றேன்? அவ தான் குழந்தை இருக்குன்னு தயங்குறா?”

            “அவளையும் தப்பு சொல்ல முடியாது. எவளோ பெத்த பிள்ளைக்கு அவ எப்படி அம்மாவா இருப்பா? நான் குழந்தையைப் பாத்துக்குறேனு சொல்லிப் பாக்குறேன். அதுக்கும் ஆர்த்தி சம்மதிக்கலைனா பேசாம பிள்ளையை அந்த மீனா கிட்டயே கொடுத்துறலாம் டா?”

            “அம்மா என்ன சொல்ற?”

            “என்ன டா? அவ கண்ட படி ஊரு சுத்திக்கிட்டு உல்லாசமா இருக்க அவ பிள்ளைக்காக நீ வாழ்க்கையை இழந்து நிக்கணுமா?”

            “அவ எனக்கும் மக தானே மா?”

            “உனக்கு பிள்ளை வேணும்னா ஆர்த்தி வேற பிள்ளை பெத்து தர போறா. அது மட்டும் இல்லாம மகி குட்டி அப்படியே அவ அம்மா மாதிரியே இருக்காளா? அது வேற கொஞ்சம் கடுப்பா வருது”, என்று சொல்ல அவன் நல்ல தந்தையாக இருந்திருந்தால் “என் மகள் எப்படி இருந்தாலும் என் கூட தான் இருப்பா”, என்று சொல்லி இருப்பான்.

            அவனை எல்லாம் தான் நல்லவன் என்ற வார்த்தையில் சேர்க்கவே முடியாதே. அதனால் “சரி ஆர்த்தி கிட்ட பேசிப் பாருங்க. இல்லைன்னா அவ கிட்டயே கொடுத்துறலாம்?”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான்.

மீனாவின் சென்டர் முன்பு வண்டியை நிறுத்தினான் தாமரை. என்ன நினைத்தாளோ அவன் தோளில் லேசாக கிள்ளி விட்டு அவள் இறங்கி நிற்க அவன் முகம் எல்லாம் புன்னகை. “அப்பாடி இப்ப தான் நிம்மதியா இருக்கு. இல்லைன்னா இதெல்லாம் கனவோன்னு நினைச்சு ஏமாந்து ரொம்ப ஏங்கிப் போயிருப்பேன்”, என்று சொல்ல முதல் முறையாக வெட்கம் என்ற உணர்வு அவள் முகத்தில் வந்தது.

            “தேவையில்லாதது பேசாம கிளம்புங்க”, என்றாள் முறைப்பாக.

            “சரி அழகி கிளம்புறேன். பேச வந்தது பேசவே இல்லை. நைட் கால் பண்ண முடியாது. வண்டியை விட பன்னிரெண்டு ஆகிரும். நாளைக்கு கால் பண்ணவா? என் கிட்ட பேசுவியா?”, என்று ஏக்கமாக கேட்டான்.

            “எதுக்கு இப்படி கேக்குறீங்க?”

            “நாமளும் லவ் பண்ணுறோம்ல?”

            “ஏது? லவ்வா?”

            “முழுசா பேச விடு டி. ஆமா லவ் தான் பண்ணுறோம். இடைல பேசி டென்ஷன் பண்ணாத. லவ் பண்ணும் போது நிறைய நேரம் போன்ல பேசனுமாம்? நிறைய ஊர் சுத்தனுமாம். நல்லா இருக்குமாம்? லவ் பண்ணுவோமா கொஞ்ச நாள்?”, என்று கேட்க சிரிப்பு வந்தது அவளுக்கு.

            “இதெல்லாம் உங்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தா?”

            “கதிர் என் பிரண்ட்”

            “சரி நேரம் ஆச்சு, கவனமா போங்க. பஸ் ஓட்டும் போதும் கவனம்”

            “கண்டிப்பா கவனமா தான் இருப்பேன். அது உனக்கே தெரியுமே? ஏற்கனவே என்னை நம்பி நாலு ஜீவன் இருந்துச்சு. இப்ப இன்னும் ரெண்டு ஜீவன் இருக்கு. அப்புறம் எப்படி கவனம் இல்லாம இருப்பேன்?”

            “யாரு புதுசா ரெண்டு பேர்?”

            “நீயும், நம்ம குழந்தையும் தான்”, என்று சொல்ல அவள் அவனை திகைப்பாக பார்த்தாள். இவன் எந்த குழந்தையை சொல்கிறான் என்று அவளுக்கு குழப்பம் தான்.

            “ஒரு பொம்பளை பிள்ளை எப்பவும் அம்மா கிட்ட தான் டி இருக்கணும். அவங்க நல்லாவே பாத்துக்கிட்டாலும் அது நீ பாக்குற மாதிரி இருக்காது. அந்த குழந்தையை நாம திருப்பி வாங்கிறலாம்? நான் ராஜன் கிட்ட பேசுறேன். தாத்தா பாட்டி, ரெண்டு அத்தை, அம்மா, அப்பா, அப்புறம் நாளைக்கு பிறக்க போற குட்டி தம்பின்னு நம்ம எல்லார் கூடவும் தான் பாப்பா இருக்கணும்”, என்று சொல்ல நெகிழ்ந்து போனாள் அழகு மீனா.

            “இதை விட அவளுக்கு வேற என்ன வேண்டுமாம்? அவள் கண்கள் இப்போது கண்ணீரை சொறிந்தாலும் அவள் உதடுகள் புன்னகைக்க “ஏய் அழகி அழுதுட்டே சிரிக்கிற? அழகா இருக்க டி? பேசாம ரெண்டு பேரும் லீவ் போட்டுருவோமா?”, என்று கிசுகிசுப்பாக கேட்டான்.

            இப்போது அழுகையை அடக்கி அவனை முறைத்தவள் “போய் வேலையைப் பாருங்க. நானும் கிளம்புறேன். நைட் பன்னிரெண்டு மணிக்கு எனக்கு ஒரு மெசேஜ் மட்டும் போட்டு விட்டுருங்க”, என்றாள்.

            “நான் சொன்னதுக்கு சந்தோஷப் பட்டதும் போதும் அழுததும் போதும். நான் கடைசியா சொன்ன ஒரு உறவையும் மறந்துறாத டி”, என்றவன் அவள் அடுத்து எதுவும் சொல்லும் முன் வண்டியை எடுத்துக் கொண்டு சென்று விட்டான்.

            “அது என்ன உறவு?”, என்று எண்ணியவள் அதை யோசிக்க புரிந்த அவளுக்கோ முகம் குப்பென்று சிவந்து போனது. ஏனோ தன்னுடைய மகள் தாமரை கையில் இருக்க தாமரையைப் போல ஒரு குட்டி மகன் தன்னுடைய கையிலும் இருப்பது போல ஒரு காட்சி அவள் கண்களில் விரிய அவள் முகம் மலர்ந்து தான் போனது.

            அன்று முழுவதும் மீனா அவ்வளவு சந்தோஷமாக இருந்தாள். அவன் வேண்டும் என்று அவள் மனது முடிவு எடுத்து விட்டது தான். அவனுடனான வாழ்க்கைக்கு அவள் தயாராகி விட்டாள் தான். ஏனோ அவனைத் தொட்ட போது எழுந்த குறுகுறுப்பில் அவள் உடலுமே அவனை ஏற்றுக் கொண்டு விட்டது தான்.

            ஆனாலும் அவனிடம் முடிவைச் சொல்ல கொஞ்சம் பயமாக தான் இறந்தது. விருப்பம், தயக்கம், பயம் என மூன்றுக்கும் இடையில் அவள் மனம் அல்லாடிக் கொண்டிருந்தது.

            வண்டியில் சென்று கொண்டிருந்தவனுக்கோ மனம் உல்லாசமாக இருந்தது. அவளின் அக்கறை, இரவு அழைப்பேன் என்று சொன்னது, அவளது வெட்கம் எல்லாமே ஒரு நிறைவைத் தந்தது. அது பிடிக்கவும் செய்தது.

            சிரிப்புடன் வந்தவனைக் கண்டு “என்ன மச்சான் முகத்துல பல்ப் எரியுது? தங்கச்சி ஓகே சொல்லிருச்சா?”, என்று கேட்டான் கதிர்.

            “ஓகே சொல்லலை. ஆனா எனக்கு புரியுது அவளுக்கு என்னைப் பிடிக்குதுன்னு”

            “நீ நடத்து, சரி சட்டையை மாத்து, கிளம்பலாம்”, என்று சொன்னதும் அவனும் சென்றான்.

            அன்று இரவு பன்னிரெண்டு மணிக்கு அவன் அழைக்க அவள் ஒரு ரிங்கிலே அதை எடுத்து விட்டாள்.

            “ஏய் அழகி டக்குன்னு அட்டென்ட் பண்ணிட்ட? தூங்கலையா நீ?”

            “தூக்கம் வரலை? எப்பவும் லேட்டா தான் தூங்குவேன்”

            “தூக்கம் கூட உனக்கு பெரிய பொக்கிஷம்ன்னு எனக்கு தெரியும் டி”

            “ம்ம், சாப்பிட்டீங்களா?”

            “சாப்பிட்டேன் டி. எனக்கு உன் கிட்ட ஒரு விஷயம் பேசணும். நாளைக்கு ஒரு பதினொரு மணிக்கு வண்டியை விட்டுட்டு வரேன். பாக்க முடியுமா?”

            “என்ன விஷயம்? கல்யாணம் பத்தியா?”

            “அதுக்கு எல்லாம் உன்னைக் கட்டாயப் படுத்த மாட்டேன். இது வேற ஒரு விஷயம். நேர்ல தான் சொல்லணும்”

            “சரி அரை மணி நேரம் பெர்மிஷன் வாங்கிட்டு வரேன்”

            “சரி மா, நீ தூங்கு. நானும் கொஞ்ச நேரம் படுக்குறேன். நாலு மணிக்கு எல்லாம் கிளம்பனும். நான் உன் கூடவே இருக்கேன்னு நினைச்சிட்டு படு சரியா?”

            “ம்ம்”, என்று சொல்லி போனை வைத்தவளுக்கு மற்ற நாளை விட இன்று சீக்கிரம் தூக்கம் வந்து விட்டது.