மாவட்டத்திலேயே அதிக மதிப்பெண் வாங்கி முதல் மாணவியாக வந்திருந்தாள் இளந்தென்றல்.. பரசுராமிற்கும் வாசுகிக்கும் பெருமை பிடிபடவில்லை. அதைவிட மாதவிக்கு கால்கள் தரையில் படவில்லை. “என் அண்ணன் பொண்ணு” தெரிந்தவர்கள் அனைவரிடமும் காட்டி பெருமைப்பட்டார்.
அத்தோடு நிற்காமல் கிளம்பி கோயம்புத்தூர் சென்று விட்டார்.. தென்றலை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்காத ஒரே குறை.
” தென்றல் அடுத்து என்ன படிக்கப் போறம்மா.. ” பொறுப்புள்ள தந்தையாக கேட்டார் பரசுராம்.
” அப்பா எனக்கு ஃபேஷன் டிசைனிங் படிக்கணும்னு ஆசை.. ” தயங்கியபடியே தன்னுடைய ஆசையை வெளியிட்டாள் தென்றல்.
” ஃபேஷன் டிசைனிங்கா? ஏன்டி நீ டாக்டருக்கு படிக்கணும்னு நாங்க கனவு கண்டுட்டு இருக்கோம்.. நீ என்ன துணி தைக்க படிக்கணும்னு ஆசைப்படுற.. அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. இதுக்கா இவ்ளோ கஷ்டப்பட்டு ப்ளஸ் டூல நிறைய மார்க் வாங்குன..” வாசுகிக்கு மகள் மருத்துவராக வேண்டும் என்பது கனவு.
” அம்மா ஃபேஷன் டிசைனிங் படிச்சாலும் நல்ல பியூச்சர் இருக்கு.. அப்ரோட்ல பெரிய பெரிய கம்பெனீஸ்ல இருந்து என்ன அப்ரோச் பண்ணுவாங்க. ஏன் நாமளே சொந்தமா ஒரு பொட்டிக்கு வைக்கலாம்..” தென்றல் எவ்வளவு எடுத்துக் கூறினாலும் வாசுகிக்கு மனதை உருத்தியது.
” அண்ணி அவ தான் படிச்சிட்டு சொந்தமா பொட்டிக் வைக்கலாம்னு சொல்றால. அடுத்தவங்க கிட்ட கை கட்டி வேலை பார்க்கறதுக்கு பதிலா நாமளே சொந்தமா ஒரு தொழிலை கத்துக்கிட்டு பண்ணா அது நல்லது தானே.. சொந்தத் தொழில் என்னிக்கும் கைவிடாது.. ” அதிசயமாக மாதவி மருமகளுக்கு பரிந்து பேசினார்.
வாசுகியின் முகம் இன்னும் தெரியாததைக் கண்டு ” வாசு.. நம்மளோட விருப்பத்தை எப்பவும் பிள்ளைங்க மேல திணிக்க கூடாது. அவளுக்கு பிடிச்சத அவ படிக்கட்டும்.. கடை வைக்கிறத பத்தி அப்புறம் பேசிக்கலாம்..” என்ற பரசுராம் மகள் பக்கம் திரும்பி
” எந்த காலேஜ்லடா அப்ளிகேஷன் போட போற..” இப்பொழுது தான் விதி அதன் பங்கை சிறப்பாக செய்ய ஆரம்பித்தது.
” அண்ணா.. இங்க பிறந்து இங்கயே படிச்சு இங்கயே கட்டிக் கொடுத்தா பிள்ளைங்க நம்ம கைக்குள்ளயே இருக்கும். அதுங்களுக்கும் வெளி உலகம் தெரிய வேண்டாமா.. பேசாம சென்னைல காலேஜ் படிக்க வை.. என் வீட்டில தங்கியே தங்கமா காலேஜ் போயிட்டு வரட்டும்.. பிள்ளைகள பொத்தி பொத்தி வளர்த்தா நமக்கு பின்னாடி அவங்களுக்கு வாழ்க்கையே மிரட்டி விட்ரும்” தென்றல் மாதவியை ஆச்சரியமாக பார்த்தாள்..
வீட்டு பூனையாக இருக்கும் அத்தைக்கு வெளி உலக அறிவு எப்படி வந்தது?
வாசுகிக்கு மாதவி தன் வீட்டு விஷயத்தில் தலையிடுவது அறவே பிடிக்கவில்லை. அதனை அப்படியே முகத்தில் காட்டியவர்
” சென்னையா அதெல்லாம் ஒன்னும் வேணாம். தோ பாருடி நீ ஃபேஷன் டிசைனிங் படிக்கணும்னு சொன்ன சரின்னு விட்டுட்டேன். சென்னை அது இதுன்னு வாய தொறந்தா.. அப்புறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன்.. ” மறைமுகமாக நாத்தனாரை தாக்கினார் வாசுகி.
” சென்னையில இருக்கிறவங்க எல்லாம் மனுசனா தெரியலையா உங்க கண்ணுக்கு.. என் வீட்ல தங்கி படிச்சா உங்க பொண்ணு என்ன கரைஞ்சிட போகுதா.. அண்ணா இப்படியே பொத்தி பொத்தி எத்தன காலத்துக்கு பிள்ளைங்கள முட்டாளா வச்சுக்க போற.. என் பொண்ணு பிருந்தா கூடத்தான் இப்ப டெல்லியில படிக்கிறா. அடுத்து அவ அப்ரோட் போய்டுவா..
கைக்குள்ளயே வச்சு வளர்த்தா அவங்களுக்கு வாழ்க்கைனா என்னனு தெரியாம போயிடும். சென்னை என்ன கண் காணாத தூரத்துலயா இருக்கு. நான் சொல்றதை கேளு. அங்கேயே நிறைய கம்பெனிஸ் இருக்கு. படிச்சிட்டு அப்படியே வேலை கிடைக்கும். அவளுக்கும் அனுபவம் வேணும் இல்ல.. ” பரசுராம் யார் பக்கமும் பேசாமல் யோசனையில் ஆழ்ந்தார்.
மாதவி இந்த அளவிற்கு அண்ணன் மகளுக்கு பரிந்து பேச விஷயம் இருந்தது.. ஹரிதாசின் அக்கா சௌபாக்கியாவின் மகளை அகிலனுக்கு மணமுடிக்க மாதவியின் மாமியார் மனதில் ஒரு எண்ணம் இருந்தது. அந்த எண்ணத்தை மாதவி அறிந்து வைத்திருந்தார்.. அது என்னவோ தெரியவில்லை சௌபாக்கியாவையும் அவரின் மகளையும் பார்த்தாலே மாதவிக்கு பற்றி கொண்டு வரும்.
அந்தப் பெண் மட்டும் தன் வீட்டிற்கு மருமகளாக வந்து விட்டால் நாத்தனாரின் ராஜ்ஜியம் கொடி பிடித்து விடும். இப்பொழுதே அவளின் அட்டூழியம் தாங்க முடியவில்லை.. மேலும் அகிலனை உரசி பேசும் பூர்ணாவை கண்டாலே இழுத்து நான்கு அறை விட வேண்டும் போல இருக்கும் மாதவிக்கு.
அகிலனின் பக்கத்தில் பூர்ணாவை கற்பனை கூட செய்து பார்க்க அவரின் தாய் உள்ளம் ஏற்றுக்கொள்ளவில்லை..
அப்படியே மாதவியின் கண்கள் தென்றலை நோக்கியது. அழகிலும் அறிவிலும் தென்றலை அடித்துக் கொள்ள ஆள் இல்லை. குணத்திலும் வாசுகியின் பொறுமையையும் பரசுராமின் பொறுப்பையும் ஒருங்கே கொண்டவள். எந்த விதத்திலும் தென்றலை குறை சொல்ல முடியாது. மேலும் அண்ணன் மகளே மருமகளாக வந்தால் பிறந்த வீட்டில் அவரின் மரியாதை என்றும் நிலைநாட்டி இருக்கும்.
புகுந்த வீட்டிலும் மாமியார் சொல்கேட்டு நடக்கும் நல்ல மருமகளாக இருப்பாள் தென்றல். இப்படி தனக்குள்ளாகவே அனைத்து கணக்கையும் போட்டு முடித்த மாதவி இப்பொழுதே அதற்கான வேலைகளை செய்ய ஆரம்பித்து விட்டார். அதன் முதல் படி தான் தென்றலை எப்படியாவது சென்னையில் படிக்க வைக்க வேண்டும். படித்து முடித்த கையோடு அண்ணனின் தலையை உருட்டி தன் சொல்பேச்சு கேட்க வைத்து அகிலனுக்கு தென்றலை மணம் முடித்து வைக்க வேண்டும்.
அனைத்திற்கும் முதல் காரியமாக அகிலன் மீது தென்றலுக்கு ஒரு பிடிப்பு வரவேண்டும். அந்த ஒரே காரணத்திற்காக தான் மாதவி மெனக்கெட்டு பேசிக் கொண்டிருக்கிறார். பரசுராமை பற்றி மாதவிக்கு நன்றாக தெரியும். ஒரு விஷயத்தை ஒரே முறையில் மட்டுமே அவரிடம் கூற முடியும். அதை சற்று அழுத்தி கூறினால் கூட அழுத்தமான பார்வையால் எதிராளியை வாய் மூட வைத்து விடுவார்.
தன்னுடைய மகள் சென்னையில் படிக்கக் கூடாது என்ற ஒரே நோக்கத்தில் வாசுகி கணவனின் இந்த குணத்தை மறந்து சென்னை வேண்டாம் கோயமுத்தூரில் பக்கத்திலேயே படிக்கட்டும் என்று புலம்பவே செய்தார். முதலில் மனைவியின் பேச்சை செவிமடுத்த பரசுராம் வாசுகி ஒரு விஷயத்தை வேண்டாம் என்று விடாப்பிடியாக கூற தங்கை சொன்னதின் உள்நோக்கத்தை பற்றி ஆராயாமல் மகளுக்கு உலக அறிவு வேண்டும் என்பதை மட்டுமே யோசித்து இறுதியில் நாட்டாமையாக தென்றல் சென்னையில் படிக்க வேண்டும் என்கிற முடிவுக்கு வந்தார்.
தென்றலைப் பொறுத்தவரை படிக்க வேண்டும். அது மட்டும் தான் அவளின் எண்ணம். எங்கே படித்தால் என்ன?
இதனால் வீட்டில் பெரிய பூகம்பமே வெடித்தது.. இறுதியில் பரசுராமின் முடிவு உறுதி பெற்றது. தான் வந்த வேலை முடிந்த சந்தோஷத்தில் மாதவி ஊர் வந்து சேர்ந்தார்.
அடுத்த சில நாளிலேயே குடும்பத்தோடு சென்னை வந்த பரசுராம் நல்ல காலேஜாக தேர்ந்தெடுத்து மகளை அதில் சேர்த்து விட்டார். கூடவே பக்கத்தில் ஒரு பெண்கள் தங்கும் விடுதியை பார்த்து அதில் தென்றல் தங்க ஏற்பாடு செய்தார். விஷயத்தை கேள்விப்பட்ட மாதவி விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்தார்.
” ஏன் எங்க வீட்டுல உன் பொண்ணு தங்குனா என்ன வந்துட போகுது”
” விஷயம் புரியாம கத்தாத. அகிலன் இருக்கான். சும்மாவே உன் மாமியார் நம்ம குடும்பத்தை கண்டாலே கரிச்சி கொட்டுவாங்க. தேவை இல்லாம வெறும் வாய்க்கு ஏன் அவல் கொடுக்கணும். காலேஜ் பக்கம் தான் ஹாஸ்டல். தென்றல் அங்க தங்கியே படிக்கட்டும். ஏதாச்சும் ஒன்னுனா நீ போய் பாத்துக்கோ..” மாதவி எவ்வளவோ எடுத்துக் கூற முயற்சி செய்தார். பரசுராம் இந்த விஷயத்தில் பிடிவாதமாக இருந்தார்.
கல்லூரியின் முதல் நாள் சந்தோஷமாக சென்றாள் இளந்தென்றல்.. அவளுக்கு புதிதாக சில தோழிகள் கிடைத்தார்கள். அதிலும் சுமித்ரா என்கின்ற சுமி தென்றலின் ரூம் மேட் என்பதால் இருவரும் ஒரே நாளில் மிகவும் நெருங்கிய தோழிகளாக மாறிவிட்டார்கள்.
அன்றைய கல்லூரியை பற்றி தனக்கு கிடைத்த தோழிகளைப் பற்றி பெற்றோரிடம் விரிவாக பேசிய தென்றலுக்கு தெரியாது அடுத்த ஒரே மாதத்தில் படிப்பின் மீது அவளுக்கு இருந்த நாட்டம் மாறி காதல் என்னும் வலையில் அவள் மீனாய் சிக்கி துடிக்கப் போகிறாள் என்று.
பெயருக்கு ஒரு டிகிரியை கையில் வைத்துக் கொண்டு கனவுகளை மட்டுமே சுமந்தபடி சுற்றிக் கொண்டிருந்தான் சசி மித்ரன்.. நகரின் பிரபலமான நகைக்கடை ஓனரின் மகன். படித்து முடித்த கையோடு ஒரு கடையை எடுத்து அவன் தந்தை நடத்த சொல்ல தன்னுடைய சினிமா கனவை பற்றி தந்தையிடம் ஒப்பித்து அவரின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டான் சசி.
இதனால் சசி வீட்டில் தினமும் போராட்டம் தான்.. எப்படியாவது பெயர் பெற்ற இயக்குனர் ஒருவரிடம் துணை இயக்குனராக ஆகிவிட வேண்டும் என்பதுதான் அவனுடைய அப்போதைய குறிக்கோள்.
டீக்கடையில் நின்று கொண்டு டீயும் சிகரெட்டிலும் அவனுடைய கதைகள் புகையாய் கரைந்தன. அவனைப் போலவே கனவுகளை மட்டும் சுமந்து கொண்டு பல ஆயிரம் இயக்குனர்கள் அந்த தெருவில் சுற்றிக் கொண்டிருந்தார்கள்.
அவன் சினிமாவை தன் பாதையாக தேர்ந்தெடுத்ததும் அவனுக்கு கொடுத்துக் கொண்டிருந்த பாக்கெட் மணியில் கை வைத்தார் தந்தை.
” உனக்கு ஒரு வருஷம் டைம் கொடுத்து இருக்கேன். நீயே சம்பாதிச்சு நீயே உன் செலவ பாத்துக்கோ. அஞ்சு பைசா உனக்குன்னு இனிமே என்னால இழக்க முடியாது” என்ற தந்தையிடம் பணத்திற்கு கை நீட்ட தன்மானம் தடுத்தது அவனுக்கு.
” இந்த ஒரு வருஷமும் நீ வீட்ல சாப்பிடவே கூடாது.. நீ காசு கொடுத்து சாமான் வாங்கி அம்மாவ சமைக்க சொல்லு. அப்போ நீ தாராளமா உக்காந்து தட்டு தட்டா சாப்பிடலாம். நீ திங்கிற ஒவ்வொரு பருக்கை சோறும் என் காசு..” அனைத்து விதத்திலும் தன்னுடைய வெறுப்பை தாராளமாக காட்டினார் தந்தை.
கணவனுக்கு தெரியாமல் விசாலாட்சி அவ்வப்போது மகனுக்கு பணம் கொடுப்பார்.
கையில் பணம் இருந்தால் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடையில் ஒரு அழுத்தத்தோடு டீக்கடை முன்பு நின்று ” அண்ணே ஒரு டீ ரெண்டு சமோசா” அன்றைய காலை உணவு அவனுக்கு திருப்திகரமாக முடிந்துவிடும்.
கையில் பணம் வற்றி விட்டால் ஒரு டீயோடு அவனது காலை பொழுது தொடங்கி விடும். அன்றும் அப்படியான டீயும் காலையும் அவனுக்கு அமைய தான் புதிதாக எழுதிய கதையைப் பற்றிய யோசனையில் ஆழ்ந்திருந்தான் சசி மித்ரன்.
பக்கத்தில் அவனது நண்பர்கள் கதிர், மார்க், விஜய் ஆகியோர் நின்று கொண்டிருந்தார்கள். இவனைப் போலவே சினிமா மோகத்தில் அவர்களும் சுற்றிக் கொண்டிருப்பவர்கள்.
திடீரென்று என்ன நினைத்தானோ இரு உள்ளங்கைகளையும் ஹேங்கிள் பார்ப்பது போல விரித்து வைத்து ” அப்படியே லோ ஆங்கிள்ல வைக்கிறோம்டா.. அங்க ஹீரோயினோட கால காட்டுறோம்.. காலுல இருக்கிற கருப்பு கையிற ஜூம் பண்றோம்.. அப்படியே டில்லப்பு.. ஹீரோயின் சிரிக்கிறாங்க.. அத ஒய்ட் ஷார்ட்டா எடுத்துக்கலாம்.. இதான் ஷார்ட்டு ரெகார்ட் போட்டுக்கோ.. ” சில வினாடிகள் கழித்து
” ரெக்கார்ட் போட்டியாடா” என்பதாக விஜய்யை பார்த்து கேட்டான் சசி.
” போட்டேன் மச்சான்”தலையாட்டினான் விஜய்.
இதனை சற்று தள்ளி நின்று கவனித்துக் கொண்டிருந்த ஒருவன் ” சார் நீங்க டைரக்டரா” அருகில் பவ்யமாக வந்து சசியை பார்த்து கேட்டான்.
சசி அசாதாரணமான தோரணையோடு புதியவனை மேலும் கீழும் ஒரு இலப்பமான பார்வை பார்த்து அப்படியே பார்வையை கதிர் பக்கம் திருப்பினான். கதிருக்கு புரிந்து விட்டது. சசி ஒன்றும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு அகல அன்று மூன்று பேருக்கும் நண்பனின் தயவால் மூன்று வேளை உணவு தடையின்றி கிடைத்து விட்ட மகிழ்ச்சி அவர்கள் முகத்தில் பீறிட்டு ஊற்றியது.
கதிர் மெல்ல புதியவனிடம் பேச ஆரம்பித்தான்..” தம்பி என்ன ஆள் பார்க்க ஹீரோ மாதிரி இருக்கீங்க சென்னைக்கு புதுசா”
புதியவன் முகம் மலர்ந்து ” ஆமாண்ணே ஆமாண்ணே எப்படியாச்ச சினிமாவில ஹீரோ ஆயிடனும்னு ஊர்ல இருந்து வெறியோட வந்துருக்கேன். உங்கள பார்த்த உடனே அந்த வெறி வெற்றிக்கனியா என் மடியில விழுந்த மாதிரி இருக்குண்ணே.” இதைக் கேட்ட மார்க்
“எப்பா டயலாக் எல்லாம் சூப்பரா பேசுறான்.. பேசாம டயலாக் ரைட்டரா வச்சுக்கலாம் போலயே..” என்றதும் புதிதாய் வந்தவனுக்கு புல்லரித்து விட்டது.
” டிபன் சாப்டியா ” கதிர் கேட்க
” இன்னும் இல்ல அண்ணே.. வாங்கண்ணே ஒன்னா சாப்பிடலாம்.. நான் வாங்கி தரேன்” ஆடு அதுவாக தலையை நீட்ட சசியின் திட்டம் அந்த நொடியில் இருந்து நிறைவேற ஆரம்பித்தது.
இது வழக்கமாக சினிமா துறையில் நடப்பது தான். புதிதாக வருபவர்கள் தனக்குத் தெரியாத துறை என்பதால் அதில் பணியாற்றுபவர்களுக்கு அவர்களின் நற்பெயர் பெற வேண்டும் என்று கையில் இருக்கும் காசை கணக்கு வழக்கு இல்லாமல் செலவு செய்வார்கள்.. ஏனெனில் அவர்கள் ஜெயித்தாக வேண்டும்.. ஆனால் கையில் இருக்கும் காசு காலியானவுடன் சிலர் வேலை பார்த்து உழைத்து முன்னேறுவார்கள்.. சிலரோ வேலை கடினமாக இருக்கிறது என்று ஊர் பக்கம் சென்று விடுவார்கள்..
இதுதான் சசியின் வாழ்க்கை இப்பொழுது.. நாளை அவனின் பிறந்தநாள். தந்தை கொடுத்த கெடு முடிவதற்கு இன்னும் மூன்று மாதங்களே மிச்சம் இருக்கிறது.. வாழ்க்கையை நினைத்து படு டென்ஷனாக பைக்கில் சென்று கொண்டிருந்தான்.