*7*

மதிய உணவு நேரம் முடிந்தும் சில நிமிடங்கள் வெறுமெனக் கடக்க, கடுப்பான மேலாளர், “இன்னும் எவ்ளோ நேரம் சார்? ரெபியூட்டட் பொஷிஷன்ல இருக்கோம் எங்களையே இவ்ளோ நேரம் காக்க வைக்குறீங்க? இந்த அம்மாதான் பொய் கேஸ் கொடுத்தா நீங்களும் உங்க பங்குக்கு எங்களை காக்க வச்சி அவமானப்படுத்துறீங்க.” என்று பொங்கினார். 

“நாங்க என்ன சார் பண்ண முடியும். உங்களை கூட்டிட்டு வந்து வெயிட் பண்ண வைக்கணும்னு எங்களுக்கு என்ன இருக்கு? இன்ஸ்பெக்டர் சாருக்கு திடீர்னு வேற வேலை வந்துடுச்சு சீக்கிரம் வந்து விசாரிக்குறேனு போனாரு.”

“விசாரணைக்குதான சார் அழைச்சிட்டு வந்தீங்க. நீங்களே விசாரிக்கலாம் அதைவிட்டு இல்லாத இன்ஸ்பெக்டரை காரணம் காட்டுறீங்க.” என மேலும் கொதித்தார் மேலாளர்.

“எஸ்.ஐ சாரும் மீட்டிங் போயிருக்காங்க. போக்ஸோ கேஸ் ஒன்னு தவிர்க்க முடியாதது சார் அதான் இன்ஸ்பெக்டர் அங்க போயிருக்காரு. வந்ததும் முத ஆளா உங்களுக்கு க்ளியர் பண்ணிடலாம், அதுவரைக்கும் கோ-ஆப்ரேட் பண்ணுங்க.” என ஒருவாராக பேசி அவரை அமரவைத்தனர்.

‘இதுக்கெதுக்கு காலையிலேயே கூட்டிட்டு வரணுமாம்.’ என முனகியவர் தங்களின் மேலதிகாரியை தொடர்புகொண்டு வக்கீல் அனுப்பச்சொல்ல, அவர்களின் கிளையை தொடர்புகொண்டு அந்த நகைக்கடன் பற்றிய ஆவணங்களை சரிபார்த்துக் கொண்டிருப்பதாக சொன்னார். மேலும் தேவையான கோப்புகள் எடுத்துக்கொண்டு விரைவில் வக்கீல் வருவார் என்ற சொல்லிவிட காத்திருப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. பல்லைக்கடித்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.

மேலும் ஒருமணி நேரம் கழித்து கூடவே போக்ஸோ வழக்கில் ஒருவரை கைது செய்து அழைத்து வந்தார் இன்ஸ்பெக்டர். தொடர்ந்து அந்த வழக்கு குறித்த ஆவணங்கள் தயார் செய்வது என சில நிமிடங்கள் கரைந்தது. அதன்பின்தான் இவர்களின் பொறுமையை வெகுவாக சோதித்துவிட்டு அழைத்தார்.

“உங்களை நம்பிதான சார் நகையை அடகு வச்சி கடன் வாங்குறாங்க. அதை பொறுப்பா ஒப்படைக்க வேண்டிய நீங்களே இப்படி பண்ணலாமா?” என்றுதான் ஆரம்பித்தார்.

“விசாரிக்குறதுக்கு முன்னாடியே எங்களை ப்ளேம் பண்றது சரிகிடையாது சார். முறையான ஆவணம் இல்லாம நாங்க யார்கிட்டேயும் நகையை ஒப்படைக்குறது இல்லை. இந்த அம்மா சுயநினைவோடு கையெழுத்து போட்டாங்கன்னும் அவங்களால உடனே இயல்பா நடமாடக்கூடிய சூழல் இல்லைன்னும் அவரை செக் பண்ண டாக்டரே சர்டிபிகேட் கொடுத்திருக்கார் சார். சில தவிர்க்க முடியாத சமயத்துல இதுமாதிரி பேப்பர்ஸ் இருந்தா கொடுக்கிறது உண்டு. எங்க பக்கம் க்ளியரா இருக்கு. அந்த அம்மாவுக்கும் அவங்க தம்பிக்கும் என்ன சண்டையோ இப்போ பழியை எங்க மேல போடுறாங்க.” தன் தரப்பு நியாயத்தை மேலாளர் விளக்க, 

“அந்த டாக்டரோட சேர்ந்து இவங்களும் என்னை ஏமாத்துறாங்க சார். நான் எந்த கையெழுத்தும் போடல. நீங்கதான் என் நகையை மீட்டுத்தரணும்.” என்றார் அப்பெண்மணி. அவரை அமைதிப்படுத்தி அவர் உடலுக்கு என்ன, எந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று தகவல் கேட்டுக்கொண்டார்.

“இவங்க தம்பியை புடிச்சி விசாரிக்காம எங்களை கூட்டிட்டு வந்தது நியாயமே இல்லை சார். எங்ககிட்ட எல்லா பேப்பரும் சரியா இருக்கு.”

“எல்லாம் இருந்தாலும் இந்த அம்மாதான் மெயின் அக்கவுண்ட் ஹோல்டர் அப்போ இவங்ககிட்டதான் கொடுத்திருக்கணும். இப்போ இவங்க நான் கையெழுத்தே போடலைங்குறாங்க. அதுக்கு என்ன பதில்?” என மேலாளரிடம் பேசிவிட்டு ஏட்டை பார்த்தவர், “இந்த அம்மாவோட தம்பியை கூட்டிட்டு வராம இவங்களை இவ்ளோ நேரம் வெயிட் பண்ண வச்சிருக்கீங்க?”

“அவன் ஊர்ல இல்லை சார், அந்த டாக்டரும் இன்னைக்கு லீவாம்.” என்றவர் இன்ஸ்பெக்டரை நெருங்கி வந்து, ‘அந்த அம்மாவோட தம்பி கவுன்சிலர் ரைட் ஹேண்ட். கொஞ்சம் முரண்டு பண்ணுவான்னு நினைக்குறேன்.’ என கிசுகிசுக்க, நிதி நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் மூலம் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.

“உங்க தம்பி மேலதான் சந்தேகமா இருக்கு. போர்ஜெரி பண்ணி உங்க சைன் போட்டு நகையை சுருட்டியிருப்பாருனு நினைக்கிறோம். நீங்க அவன் மேலையும் ஒரு புகார் கொடுங்க, நிதி லிமிடெட்ல எல்லா டாக்குமென்ட்டும் பக்காவா இருக்கு. போர்ஜெரினு அவங்களும் உங்க தம்பி மேல கேஸ் போடுவாங்க இது அப்படியே இழுத்துட்டு போகும். கோர்ட் போனாலும் உங்க நகையை வாங்குறதுக்குள்ள வருஷமாகிடும்.”

“தங்கத்தோட மதிப்பு என்னனு தெரியும்ல சார் உங்களுக்கும். திரும்ப என்னால சம்பாரிச்சு அவ்ளோ நகை வாங்க முடியுமா? இவங்களாட அஜாக்கிரதையாலதான் எல்லாம். இப்போ என் நகைக்கும் என்னோட மனஉளைச்சலுக்கு யார் பதில் சொல்றது… ஏதாவது பாத்து செஞ்சிவிடுங்க.” என தணிந்து போவது போல் அப்பெண்மணி இறங்கி வர, 

“இவங்க தம்பி பண்ண பிராடுதனத்துக்கு எங்களை தேவையில்லாம அலைய வைக்கலாமா சார்? எங்களை பொறுத்தவரை எங்க சைட் எல்லாமே கரெக்ட்டா இருக்கு. ரூல்ஸ் படிதான் எல்லாம் செஞ்சிருக்கோம். சைன் மேட்ச் ஆச்சு, டாக்டர் சர்டிபிகேட் இருந்துச்சு அதனால கொடுத்தோம். இந்த மோசடி கேஸ் அவங்க மேல நாங்க கொடுக்க வேண்டியது. எங்க நிறுவனத்துக்குனு ஒரு பேர் இருக்கு அதுக்கு கலங்கம் வரமாதிரியான கேஸ் எல்லாம் நீங்க ஆதரிக்குறது நியாயம் இல்லை சார். இவ்ளோ நேரம் எங்களையும் எங்க ஸ்டாஃப்பையும் உக்கார வச்சிருக்கிறதுக்கு உங்க டிபார்ட்மென்ட் மேல அண்ட் இந்த அம்மா மேல கம்ளைண்ட் கொடுக்கலாம் நாங்க.” என்று ஒருபக்கம் எகிற தலைவலியானது இன்ஸ்பெக்டருக்கு. 

ஏமாற்றிவிட்டதாக அப்பெண்மணி வரவும் இருந்த அவசரத்தில் விசாரித்து அழைத்து வருமாறு சொல்லிவிட்டு சென்றுவிட்டார். இப்போது பார்த்தால் அப்பெண்மணியின் தம்பி இருபக்கமும் விளையாடியிருக்கிறான். அவனை பிடிக்காத வரை இதற்கு தீர்வு இல்லை என புரிந்து அப்பெண்மணியிடம் திரும்பியவர்,

“இங்க பாருங்கமா உங்க தம்பியை புடிச்சி அவர்கிட்ட உங்க நகையை ரெகவரி பண்றது எங்க பொறுப்பு. உங்களை மாதிரியே அவங்களும் ஒருவகையில ஏமாந்து போயிருக்காங்க.” என நிதி நிறுவனத்தாரை காட்டிச் சொல்லி தணிந்து போகச் சொல்ல,

“என் தம்பி மேல கூட கேஸ் எழுதுங்க சார். ஆனா உண்மை என்னனு தெரியாம நகையை தூக்கி கொடுத்தது இவங்க அஜாக்கிரதை தான. அதுக்கு பதில் இல்லையே. இவங்க சுதாரிப்பா இருந்திருந்தா எனக்கு இந்த நிலை வந்திருக்குமா? எனக்கு நஷ்டஈடு வேணும்.” என பிடிவாதமாய் நிற்க, என்னடா இது என்று பார்த்தனர்.

“நஷ்டஈடு எல்லாம் கொடுக்க முடியாது. நாங்க ஏன் கொடுக்கணும்?” என்ற மேலாளரிடம் அப்பெண்மணி மேலும் வாதாட காவலர்கள் இருதரப்பினரையும் சத்தம் போட்டு அமைதியாக்க, விறுவிறுவென இருவருடன் உள்ளே நுழைந்தான் ரத்னதீபன். 

“இதோ இருக்கானே ரமேஷ் இவனும் இவன் அக்காவும் சேர்ந்து கோல்மால் பண்ணிட்டு பழியை தூக்கி என் வொய்ப் மேல போட்டு அவ வேலை செய்யுற இடத்துலேந்து காசு பாக்கலாம்னு போட்டு பாத்திருக்காங்க. இதுக்கு அந்த டாக்டரும் ஒத்தாசை, அவரே பேசுன வாய்ஸ் நோட்ஸ் இருக்கு கேளுங்க.” என்று ஒன்றை ஓடவிட, அதில் புகார் கொடுத்திருக்கும் பெண்மணிக்கு சிறிய அளவில் வாயு தொந்தரவு மட்டும்தான். இவர்கள் இருவரும் சேர்ந்து வலிய கேட்டுக்கொண்டதால் எழுந்து நடமாட முடியாத அளவிற்கு அப்பெண்மணியின் உடல்நிலை இருப்பதாக ஆவணம் தயார் செய்து கொடுத்ததாக சொன்னார். அந்த ஆடியோ முடிந்ததும்,

“அக்காகாரி நான் முடியாத மாதிரி படுத்துக்குறேன் நீ போய் நகையை மீட்டுட்டு வந்துரு அப்புறம் ஒரு ரெண்டு மாசம் கழிச்சி நகை மீட்குற மாதிரி நான் போறேன். அவங்க ஏற்கனவே கொடுத்துட்டேன்னு சொல்லுவாங்க ஆனா அதுல இருக்குற சைன் என்னோடதில்லைனு அடிச்சி பேசிடுறேன். போலீஸ் கேஸ்னு போனா பேர் கெடக்கூடாதுனு ஏதாவது கொஞ்சம் கொடுப்பாங்க. கிடைச்ச வரைக்கும் லாபம் பாத்துடலாம்னு பிளான் பண்ணி செய்துருக்காங்க.” என அவர்கள் திட்டத்தை பிட்டு பிட்டு வைக்க, அதிர்ந்து வாயில் கைவைத்துவிட்டாள் செண்பகா. எப்படியெல்லாம் ஏமாற்றலாம் என யோசிக்கும் மனிதர்கள் தான் எத்தனைபேர்…

ரத்னதீபன் கையோடு அழைத்து வந்திருந்த ரமேஷை இரண்டு தட்டு தட்டவும் அவன் குற்றத்தை ஒப்புக்கொள்ள, அக்கா தம்பி இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

“எங்களுக்கு வேலையே கொடுக்காம எல்லாத்தையும் முடிச்சிட்டீங்க. நீங்க சார்?” இன்ஸ்பெக்டர் ரத்னதீபனிடம் வந்து பேசி அவன் பதவியை தெரிந்துகொண்டு அத்தனை மரியாதையாய் நடத்த, செண்பகாவின் மேலாளர் கூட அவனிடம் நன்றி தெரிவித்து இன்முகமாக பேசினார். 

“கவுன்சிலரே கூட பத்து பேர் வச்சிக்கிட்டு சுத்திட்டு இருக்குற காலத்துல ரொம்ப சிம்பிலா இருக்கீங்க சார். செண்பகா ஹஸ்பண்ட் எம்.எல்.ஏன்னு இவ்ளோ நாள் எங்களுக்கு தெரியாம போச்சு.”

“கூட இருக்குற எண்ணிக்கையா பெருசு. நம்ம செய்யுற வேலை பெருசா இருக்கனும், பேர் சொல்லணும்.” என்று இன்முகமாக ரத்னதீபனும் பேசினான். 

ஆனால் உரியவளோ எனக்கென்ன என்பது போல் நின்றாள். 

“உங்க ஹஸ்பண்ட் எம்.எல்.ஏனு சொல்லவே இல்லை. அவர் வந்ததால எவ்ளோ ஈஸியா முடிஞ்சிடுச்சு பாருங்க. கையோட ஆளை கூட்டிட்டு வந்து ஒப்படச்சிட்டாரு. நீங்க நாளைக்கு வேலைக்கு வந்தா போதும்.” காலையிலிருந்து அப்படி காய்ந்த மேலாளர் சட்டென தணிந்து செண்பகாவை மரியாதையுடன் பேச, எல்லாம் கணவனின் பதவி செய்யும் மாயம் என்பது புரிந்தது. அதை மகிழ்வாக ஏற்கவோ பெருமைப்பட்டுக்கொள்ளவோ முடியவில்லை.

மேலாளர் சொல்லிக்கொண்டு கிளம்ப, இவள் அண்ணனைப் பார்த்தாள். ரத்னதீபனிடம் பேசிக்கொண்டிருந்தான். பல்லைக் கடித்துக்கொண்டு இவள் வெளியே சென்று நிற்க, பேசிக்கொண்டே வெளியே வந்தனர் மச்சினர்கள்.

“ரொம்ப தேங்க்ஸ் மாப்பிள்ளை. உங்களுக்குதான் முதல்ல போன் போட்டேன் எடுக்கலைங்கவும் என்ன பண்றதுனு தெரியல. நீங்க வருவீங்கன்னு எதிர்பாக்கவே இல்லை. அதுவும் பிரச்சனையை கையோட முடிச்சிட்டுதான் வந்து இறங்கியிருக்கீங்க.” வளவன் மாப்பிள்ளையை வாய் ஓயாது பாராட்ட, பற்றிக்கொண்டு வந்தது செண்பகாவிற்கு.

“நீ பாராட்டுர அளவுக்கு வொர்த்தானவர் இல்லை இவரு.” வாயை வைத்துக்கொண்டு சும்மா இராமல் இவள் வார்த்தை விட, சிலிர்த்துக்கொண்டு வந்தான் ரத்னதீபன்.

“வேலை மெனெக்கட்டு இரண்டு மணி நேரம் தாம்பரத்துலேந்து இங்க வந்து இறங்கி ஆளை கண்டுபுடிச்சி நேக்கா தூக்கி இங்க கொண்டுவந்து நிறுத்தி, உன்னை பிரச்சனைலேந்து காப்பாத்துற அளவுக்கு நீயும் ஒர்த் இல்லைதான்.”

“அப்போ எதுக்கு செஞ்சீங்க? உங்க உதவியை எதிர்பார்த்து ஒன்னும் யாரும் இங்க இல்லை. நீங்க வரலைனாலும் எங்க மேல தப்பில்லைனு நாங்க நிரூபிச்சிருப்போம்.” நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு அவனிடம் மல்லுக்கு நின்றாள் செண்பகா. 

“பாப்பா என்ன பேசுற… உனக்காக தான வந்திருக்காரு.” என வளவன் சமாதானம் செய்ய முயல,

“செண்பகா வையாபுரிக்காக வரல செண்பகா ரத்னதீபனுக்காக வந்தேன். எம்.எல்.ஏ பொண்டாட்டி மோசடி கேஸ்ல சிக்கிட்டான்னு பேர் வந்துடக்கூடாதுனு வந்தேன்.” என்றான் இவனும் விடாமல்.

“எம்.எல்.ஏ பொண்டாட்டி பேர் வரக்கூடாது ஆனா எம்.எல்.ஏ பேர் வரலாம். அதுவும் கள்ளக்காதல் விவகாரத்துல. அது பெரிய விஷயமில்லை… ஓ.. நீங்கதான் ஆம்பளையாச்சே அப்போ எப்படி வேணும்னாலும் வரலாம்.” என்றுவிட, மனைவியை உறுத்து விழித்தவன் தாடை இறுக ஆட்காட்டி விரலுயர்த்தி அவளை எச்சரிப்பது போல் செய்ய, தளராது அவனை எதிர்கொண்டவள் முகம் தணலாய் தகித்தது.

ஒருவரை ஒருவர் நன்றாக முறைத்துக்கொண்டு இறுகி நிற்கும் கணவன் மனைவிக்கு நடுவில் என்ன செய்வது என்று தெரியாது அப்பாவியாய் நின்றான் வளவன்.

“சொல்லி வைங்க உங்க தங்கச்சிகிட்ட… வார்த்தை வரைமுறை இல்லாம வருது.” என வளவனிடம் சொல்லிவிட்டு விறுவிறுவென ரத்னதீபன் கிளம்பிவிட, பின்னோடே ஓடினான் பிரபு.

“என்ன பாப்பா இப்படி பேசிட்ட? அதுவும் இப்படி போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல வச்சி. யார் காதுலையும் விழுந்தா என்ன நினைப்பாங்க. மாப்பிள்ளை பதவிக்கு மரியாதை ரொம்ப முக்கியம்டா…” வருத்தம் கொண்ட அண்ணனை கருத்தில் கொள்ளாத செண்பகா,

“ஊரே பாக்கதான எல்லாத்துலயும் வந்துச்சு. நீங்க எல்லாரும் வேணும்னா மறக்கலாம் ஆனா நான் மறக்கல. ப்ச்… வீட்டுக்கு போகணும் எனக்கு. வர்றீயா என்ன?” செண்பகா எரிச்சல்பட, அமைதியாக அவளை அழைத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றான். 

பயந்துவிடுவார்கள் என வீட்டில் யாரிடமும் செண்பகாவை காவல் நிலையம் அழைத்துச் சென்றதை வளவன் சொல்லியிருக்கவில்லை. இப்போது சொல்லிவிட பெற்றோருக்கு பதட்டமானது.

“கவனமா வேலை பாக்கணும் பாப்பா.” என மாறி மாறி பத்திரம் சொல்லியவர்கள்,

“இவ்ளோ தூரம் வந்திருக்காரு மாப்பிள்ளை. அவரை வீட்டுக்கு கூப்பிட்டியாடா?” என மகனை பார்த்துக் கேட்க, அட இது நமக்கு தோணலையே என மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டான் வளவன்.

“தப்புடா… கூப்பிட்டிருக்கணும். எவ்ளோ வேலை இருக்கும் எல்லாத்தையும் விட்டுட்டு வந்திருக்காரு.” என வையாபுரியும் ரத்னதீபனுக்கு பரிந்து பேச, அதனை கசப்புடன் காதில் வாங்கிய செண்பகா அவ்விடத்தை காலி செய்துவிட்டாள். 

செல்லும் மகளை யோசனையுடன் பார்த்த அமுதா, “மாப்பிள்ளைக்கிட்ட பாப்பா பேசுனாளாடா?” என தவிப்பாய் கேட்க, “பேசிட்டாலும். நல்லா முட்டிகிட்டாங்க ரெண்டு பேரும்.” என நொடித்தான் வளவன். 

“அச்சோ எப்போதான் சரியாகும்.” அமுதா கவலை கொள்ள, வையாபுரிக்கும் அதே எண்ணம்தான், “நான் வேணும்னா மாப்பிள்ளையை நேரா பாத்து பேசிட்டு வரவா? அப்படியே சம்பந்திகிட்டேயும் இவங்களுக்கு ஒருவழி பண்ண சொல்லுவோம்.” 

“கொஞ்ச நாள் போகட்டும் ப்பா. நான் பாத்துக்குறேன்.” என்ற மகனை முழுமையாக நம்ப முடியவில்லை.

“ப்பா… அவர் வீட்ல சொல்லாமையா இருப்பாங்க. அபிராமி அத்தை சொல்லிட்டுதான் இருக்காங்களாம். இவளை மாதிரி அவரும் பிடிகொடுக்குறதில்லை. நான் பிரெண்ட்லியா மூவ் பண்றேன்.” என சமாதானப்படுத்தியவன் உடனே விமலுக்கு அழைத்தான்.

“உங்க பிளான் எல்லாம் நல்லாதான் ஆரம்பிக்குது ஆனா பினிஷிங் சரியில்லை.” 

“என்னாச்சு வளா?” என்ன நடந்தது என கேட்டு தெரிந்துகொண்ட விமல், “இந்த ரெண்டு பேரும் இருக்காங்களே… கத்தியை வாயில வச்சிட்டுதான் வாயை தொறக்குறதே. வாயை தச்சிவிட்டு கிணத்துல இறக்கிடனும். அப்போதான் சரிப்படுவாங்க.”

“மாப்பிள்ளையும் நீங்க அப்படி நியூஸ் எடிட் பண்ணி போட்டோ அனுப்பவும்தான வந்தாரு.” அவனின் மரியாதைக்கு பங்கம் விளைந்துவிடக்கூடாது என்றுதானே ரத்னதீபன் வந்து நின்றது என்பதில் சின்ன சுணக்கம் வளவனுக்கு. 

“விஷயம் இதுதான்னு நீங்க சொல்லி அவர் வரலைனா நீங்க அப்படி நினைக்கலாம். உங்க போன் எடுக்கலையே. நானுமே விஷயத்தை அவர்கிட்ட கொண்டு போகணும்னுதான் அப்படி பண்ணேன். ஒருவேளை உங்க போன் கால் அட்டென்ட் பண்ணி உங்க மூலமா பிரச்சனைனு தெரிஞ்சிருந்தாலும் வந்திருப்பார்.”

“அப்படியா சொல்றீங்க?” நம்பாமல் கேட்டான் வளவன். 

“செண்பா மேல அவருக்கு அக்கறை இல்லைனு நினைக்குறீங்கனு புரியுது. ஆனா பாருங்களேன் செண்பா வேண்டாம்னா எப்போவோ அவர் வேற வழியை பாத்துட்டு போயிருக்கலாம், அவருக்கு அதுக்கு வாய்ப்பும் இருந்துச்சு. ஆனா இன்னமும் செண்பாவைதான் வொய்ப்பா பாக்குறாரு. என்ன ஈகோ அதிகம் இருக்கு. செண்பாவா இறங்கி வந்தா பெரிய மனுஷன் மாதிரி சீன் போட்டுட்டு உள்ளுக்குள்ள கூத்தாட்டம் போடுவாரு மனுஷன். வெளிய சும்மா கெத்து காட்டிக்கிறது.” என ரத்னதீபன் மனதிற்குள் புகுந்து அங்கு என்ன இருக்கிறது என்று அறிந்தது போல் பேசினான் விமல்.

“என்னவோ சொல்றீங்க. நம்பவும் முடியல நம்பாம இருக்கவும் முடியல. இவங்களை என்னதான் பண்றது?”

“சத்தியா எனக்கும் தெரியலைங்க…” என வடிவேல் மாடுலேஷனில் விமல் பேச, வளவனுக்கு சிரிப்பு வந்தது. 

“சத்தமா சிரிச்சிக்கோங்க. நான் தப்பா எடுக்க மாட்டேன். இன்னும் கொஞ்சம் டைம் கொடுங்க யோசிப்போம், ஏதாவது ஐடியா சிக்காமையா போயிடும்…” என்று விமல் காலஅவகாசம் கேட்டு அழைப்பை துண்டிக்க, இம்முறையும் அவனுக்கு வேலை வைக்காமல் விதிவசத்தால் செண்பகாவே சென்னைக்கு பயணமாகும்படி ஆனது.