“உன் மனசுல என்ன இருக்குன்னு எங்களுக்கு தெரியாது. என் மகன் கிட்ட நீ வேண்டாம்னு சொல்லிருப்ப போல? அதான் எதுக்குன்னு தெறிஞ்சிக்கலாம்ன்னு வந்தோம்”

“அது.. அது வந்து..”, என்று அவள் திணற “இரு மா நான் பேசிக்கிறேன். நாங்க எல்லோரும் உன்னை எங்க வீட்டு மருமகளா ஏத்துக்க தான் ஆசைப் படுறோம். அவங்க அப்பா தான் முதல்ல மாட்டேன்னு சொன்னாங்க. இப்ப அவங்களும் சரின்னு சொல்லிட்டாங்க. உன்னை எங்க வீட்டு பொண்ணு மாதிரி பாத்துக்குவோம்ன்னு நாங்க சொன்னாலும் ஒரு தடவை அடி பட்ட நீ அதை நம்புவியான்னு தெரியாது. ஆனா சில விஷயங்கள் வாழ்ந்தா மட்டும் தான் மா புரியும்”, என்றாள்.

“அம்மா, எனக்கு இதுல ஒரு துளி கூட உடன்பாடு இல்லை. நீங்களே சொல்லிட்டீங்க. நான் வாழ்க்கைல பட்ட அடி பத்தி. இது தான் நம் நாட்டின் எதார்த்த நிலை. ஏற்கனவே கல்யாணம் முடிஞ்சு குழந்தை இருக்குற ஒரு பொண்ணை யாருமே மருமகளா ஏத்துக்க மாட்டாங்க. அது சரியும் கூட. ஏன்னா அது அவங்க பையன் வாழ்க்கை. நீங்க எதுக்காக இப்படி யோசிச்சீங்கன்னு தெரியலை. அது உங்க பெருந்தன்மையா கூட இருக்கலாம். இல்லை உங்க மகன் சந்தோசத்துக்காக இருக்கலாம். ஆனா எனக்கு இது வேண்டாம். உங்க பையனுக்கு நான் தான் கடைசி பொண்ணு இல்லை. அவங்களுக்கு நல்ல பொண்ணாவே கிடைக்கும். இந்த பேச்சு வேண்டாம் மா. உங்க மகனுக்கு என் மேல ஒரு பரிதாபம். அதான் கல்யாணம் அது இதுன்னு பேசிருக்காங்க”, என்று பதிலளித்தாள்.

“அக்கா, அண்ணன் அப்படி எதுவும் யோசிக்காம முடிவு எடுக்குற ஆள் கிடையாது. உண்மையிலே அவங்களுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். நீங்க எங்க அண்ணியா வந்தா கண்டிப்பா உங்களை நல்லா பாத்துக்குவோம். எங்க அம்மா அப்பா உங்களுக்கும் அம்மா அப்பாவா  தான் இருப்பாங்க. நாங்களும் உங்க தங்கச்சிங்க தான். நம்பி கல்யாணத்துக்கு சரின்னு சொல்லுங்க அக்கா”, என்றாள் வதனா.

அவர்கள் இருவரின் பேச்சைக் கேட்டு மீனாவுக்கு ஆச்சரியமாக கூட இருந்தது. எந்த தாயும் தங்கையும் தங்கள் வீட்டுப் பையனுக்காக மீனா போன்ற பெண்ணிடம் இப்படி கெஞ்சிக் கொண்டிருப்பார்கள்? உண்மையிலே அவர்கள் அன்பை எண்ணி பொறாமையாக கூட இருந்தது. அந்த வீட்டில் தானும் ஒரு அங்கமாக மாட்டோமா என்று ஆசையாக தான் இருந்தது. ஆனால் தன்னுடைய ஆசைக்காக வாழ வேண்டிய ஒரு நல்ல மனிதனின் வாழ்வை சூனியமாக்க அவள் தயாராக இல்லை.

            “நீங்க இந்த உலகத்தை பத்தி புரியாம பேசுறீங்க வதனா. இந்த சமூகம் ரொம்ப மோசமானது. நான் உங்க வீட்டுக்கு வந்தா உங்களையும் என் கூட வச்சு தப்பா பேசும். இல்லைன்னா உங்க மனசையே மாத்திரும். அப்படிப் பட்ட வல்லமை இங்க இருக்குற மனுச நாக்குகளுக்கு இருக்கு. அது மட்டும் இல்லாம நான் உங்க வீட்டுக்கு வந்தா உங்க ரெண்டு பேரோட வாழ்க்கைல கூட பிரச்சனை வரலாம். நான் ஒரு ராசி கெட்டவ. நான் தொட்டா எதுவுமே நல்லா இருக்காது. டீ வாங்கிட்டு வரட்டா? குடிச்சிட்டு நேரத்துக்கு வீட்டுக்கு கிளம்புங்க “, என்றாள்.

            “எங்களை அனுப்புறதுல குறியா இருக்கீங்க போல? ஏன் கூட கொஞ்ச நேரம் பேசினா மயங்கி சரின்னு சொல்லிருவீங்கன்னு பயத்துல தானே? நீங்க சொல்றது எல்லாம் முந்தைய காலத்துல தான் அக்கா. இந்த காலத்துல அது ஒரு பெரிய விஷயமே இல்லை. எல்லாரோட தனிப்பட்ட விருப்பத்தையும் உலகம் ஏத்துக்குது. இப்ப எங்க அண்ணனை கல்யாணம் பண்ண எது உங்களை தடுக்குது தெரியுமா? பயம் மட்டும் தான். அது வேண்டாம்னு தான் நாங்க சொல்லுறோம்”, என்று வதனா சொல்ல மீனாவுக்கு என்ன சொல்ல என்று தெரிய வில்லை.

அவள் அமைதியாக இருக்க “இந்த விஷயத்துல எங்களால உன்னைக் கட்டாயப் படுத்த முடியாது மா. உனக்கு முழு விருப்பம்னா உன்னோட முடிவை தாமரை கிட்ட சொல்லிரு. ஆனா அவன் உறுதியா இருக்கான். நீ இல்லைன்னா கல்யாணமே வேண்டாம்னு. அப்புறம் உன்னோட விருப்பம். நாங்க கிளம்புறோம். அப்புறம் இதுல நைட்க்கு டிபன் இருக்கு. சாப்பிடு”, என்று கொடுத்தாள்.

ஏனோ மீனாவுக்கு அதை மறுக்க தோன்ற வில்லை. அவளே அன்பு என்ற ஒன்று பிச்சையாக கூட கிடைக்காதா என்று தவம் இருப்பவள் ஆயிற்றே. ஆனால் இங்கே அவர்கள் கொட்டிக் கொடுக்க அதை பெறுவதற்கு பயமாக தான் இருந்தது.

அவர்கள் இருவரும் கிளம்பிச் சென்ற பிறகு அங்கிருந்த சேரில் அப்படியே அமர்ந்து விட்டாள். நாய்க்கு முழு தேங்காய் ஒட்டுமா என்ற பழமொழி போல தான் அவள் வாழ்வும். அவளுக்கும் நல்ல விஷயங்களுக்கும் ரொம்ப தூரமாயிற்றே. அவளுக்கும் அவனைப் பிடித்திருக்கிறது தான். ஆனால் ஏற்றுக் கொள்ள அவ்வளவு தயக்கம். பயமும் கூட.

அன்னை மற்றும் தங்கை இருவரும் வீட்டுக்கு வந்ததும் ஆவலாக அவர்களை எதிர்கொண்டான் தாமரை.

“என்ன மா சொன்னா? சரின்னு சொல்லிட்டாளா?”

“வேண்டவே வேண்டாம்னு சொல்லிட்டா தாமரை. ஆனா அவளுக்கு உன்னை பிடிக்கும். கொஞ்சம் பொறுமையா மட்டும் இரு. அவ மனசு மாறும்”, என்று வசந்தா சொல்ல “என்னது வேண்டாம்ன்னு சொன்னாளா? உண்மையிலே இந்த பொண்ணு வித்தியாசமானது தான் போலவே?”, என்று எண்ணிக் கொண்டார் வேலாயுதம்.

            தாமரை முகம் களையிழந்து போனது. அவளை எப்படி சம்மதிக்க வைக்கப் போகிறோம் என்று குழப்பமாக இருந்தது. தன்னுடைய அறைக்குச் சென்றவன் உடனே அவளை அழைத்து விட்டான்.

            அவன் அழைக்கவும் அடுத்த நொடி எடுத்தவள் “ஹலோ, அம்மா வீட்டுக்கு வந்துட்டாங்களா? என்ன சொன்னாங்க? நான் மரியாதை இல்லாம எதுவும் பேசிட்டேன்னு எதுவும் நினைச்சிட்டாங்களா?”, என்று படபடப்பாக கேட்க அப்போது தான் அவனுக்கும் அவள் மனது புரிந்தது. தன்னைப் போலவே அவளுக்கும் தவிப்பு இருக்கிறது என்று கண்டு கொண்டான்.

            “எதுக்கு டி அழகி இப்படி பண்ணுற? அதான் என் குடும்பத்து மேல இவ்வளவு பாசம் இருக்குல்ல? அப்படினா இங்க வந்து வாழ்ந்து தான் பாரேன். இல்லைன்னா என்னை பிடிக்கலைனா சொல்லு. நான் வேற மாப்பிள்ளை பாக்குறேன்”, என்று அவன் சொன்னதும் ஏனென்றே தெரியாமல் கோபமாக வந்தது அவளுக்கு.

            “எங்க ஊர்ல விக்கின்னு ஒரு பையன் இருக்கான். அவன் குழந்தைக்கு இப்ப ரெண்டு வயசு. குழந்தை பிறந்ததும் அவன் பொண்டாட்டி இறந்துருச்சு. இப்ப கல்யாணத்துக்கு பாக்குறாங்க. கவர்ன்மென்ட்  வேலை பாக்குறான். அம்மா அப்பாவை பேச சொல்லட்டுமா?”

            “ஓஹோ சார் எனக்கு மாப்பிள்ளை பாக்குறீங்களோ? ரொம்ப நல்லா இருக்கு. அப்படின்னா நான் ஓகே சொல்லலைனா கல்யாணமே பண்ண மாட்டேன்னு சொன்னது எல்லாம் பொய் அப்படி தானே? இப்படி நிமிஷத்துக்கு ஒரு தடவை மாத்தி மாத்தி பேசுறவங்களைப் பாத்தா தான் பயமா இருக்கு. எனக்கு மாப்பிள்ளை நானே பாத்துக்குறேன். நீங்க கஷ்ட படாதீங்க. நீங்க எனக்கு கடன் காரனா கூட வேண்டாம். பை”, என்று பொறிந்தவள் போனை அணைத்து விட்டாள்.

            அவள் கோபத்தில் சிரிப்பு வந்தாலும் “போச்சு டா, மேடம் மலையேறிட்டாங்க போலயே?”, என்று எண்ணிக் கொண்டு அன்னையைக் காணச் சென்றான்.

தொடரும்..