மறுநாள் மிகவும் பொறுப்பானவளாக இரண்டாயிரத்து முன்னூறு ரூபாய் பணத்துடன் காலையிலிருந்து சித்தார்த்தைத் தேடி அலைந்தவளுக்கு அவன் கண்ணிலேயே படவில்லை.
யாரிடம் கேட்பது என்றும் தெரியாமல், சுற்றிச் சுற்றி தேடிக் கொண்டிருந்தாள்.
மாலையிலும் வீட்டிற்குப் புறப்படும் முன் கேன்டீன், பார்க்கிங் ஏரியா, ஆடிட்டோரியம் என எல்லா இடங்களும் சுற்றித் திரிந்துவிட்டு, அவன் கிடைக்காத ஏமாற்றத்துடன் சோர்ந்து போய் திரும்பி வந்தவள் முன்னே ஆர்ம் கட் டீசர்ட், ஷார்ட்ஸ் சகிதம் வியர்க்க விறுவிறுக்க சித்தார்த் வந்து நிற்க, வைஷ்ணவி இப்படி திடீரென்று எதிரில் வந்து நிற்பான் என எதிர்ப்பாக்காமல் திட்டுக்கிட்டு ஓரெட்டு பின்னே வைத்தவள், நெஞ்சில் கை வைத்து மூச்சு வாங்கினாள்.
சித்து அவளின் அச்சத்தைக் கவனித்து வசீகரிக்கும் புன்னகையுடன், “பயந்து போயிட்டியா என்ன?” என சீண்டலுடன் கேட்க, முகம் இன்னுமே மிரட்சியைக் காட்டிக் கொண்டிருந்தது வைஷுவிற்கு.
“சீனியர் இப்படி திடீர்ன்னு வந்து நீக்கறீங்க?” என்றாள் படபடத்த குரலில்.
“ஹாஹா…” என்று ஆர்ப்பாட்டமாய் சிரித்தவனுக்கு அவள் பதறிக் கொண்டு துள்ளி விலகியதை நினைத்து அப்படி சிரிப்பு பொங்கியது.
“ம்ப்ச் சிரிக்காதீங்க…” என்று வைஷு சங்கடமாகச் சொல்ல, சித்து பாவம் பார்த்து சிரிப்பை அடக்க முயற்சி செய்தாலும்… சிரிப்பு நிற்க மறுக்க இதழ் கடித்து சிரிப்பை அடக்க முயன்றான். அவளோ அவனின் கேலியில் சிறு பிள்ளை போல முகம் சுருக்கி நின்றிருந்தாள்.
“சரி… சரி… சிரிக்கலை…” என சிரிப்பைக் கட்டுப்படுத்தியபடி கரைக்குள் அடங்காத மென்சிரிப்புடன் சொன்னவன், “என்ன இன்னைக்கு முழுக்க யாரையோ தேடி காலேஜ் முழுக்க சுத்தி வர… யாரை பார்க்கணும் உனக்கு?” என விசாரித்தான்.
கண்களை அகல விரித்தவள், “நான் காலையிலிருந்து தேடினதை பார்த்தீங்களா? ஆனா நான் உங்களை கவனிக்கவே இல்லையே!” என்றாள் ஆச்சரியமாக. அவள் தேடி அலைவதே அவனை காணத்தான். அதை அவனே கவனித்திருக்கிறான். அப்படியிருக்க, அவள் கண்ணில் எப்படி படாமல் போனான்? ஆச்சரியமாக இருந்தது.
சித்தார்த்துக்கு அவள் முகபாவனைகளைப் பார்க்க இன்னும் இன்னும் தான் சிரிப்பு பொங்கியது. “எலும்பும் தோலுமா இருந்தாலும் கண்ணு பெருசா கோலி குண்டு மாதிரி இருக்கிறதால நல்லா கண்ணு தெரியும் போலன்னு நினைச்சேன்… அப்படி இல்லையா?” என்றான் மீண்டும் சீண்டலாக.
வைஷு அவனது கேலியில், ‘இதுதான் சீனியர் குசும்பு’ என அவனை முறைத்தபடி சில நொடிகள் நின்றாள். அவளின் முறைப்பிற்கான காரணம் புரியாமல் ‘என்ன?’ என அவன் புருவம் உயர்த்தி வினவ,
“சீனியர் ரொம்ப தான் கலாய்க்கறீங்க…” என்று உம்மென்ற முகத்துடன் சொன்னவள், “நான் தேடறதே உங்களைத் தான்… நீங்க என்னன்னா நான் தேடறதை கவனிச்சிட்டும் என்னை கண்டுக்கலை…” என்றாள் சிறுபிள்ளை கோபத்துடன்.
ஆச்சரியம் மிக, “என்னை தேடுனியா? எதுக்கு?” என்றான் மின்னும் விழிகளுடன். அவனுக்கும் ஆர்வம் அதிகரித்தது. அவளிடம் என்ன எதிர்பார்க்கிறான் என்று அவனே அறியவில்லை.
வைஷுவோ, “என்ன நீங்க? நான் தான் நேத்தே இன்னைக்கு காசு கொஞ்சம் கொண்டு வந்து தரேன்னு சொல்லிட்டு தானே போனேன்…” என கோபித்து விட்டு, தனது புத்தக பைக்குள்ளிருந்து அவள் கொண்டு வந்த பணத்தை எடுத்து நீட்ட, ‘இதற்காகத்தான் என்னை தேடினாளா?’ என்று உப்பில்லாத பானம் போல சப்பென்று ஆன போதிலும்… அவளின் தன்மானத்தை மதித்துச் சிரித்தபடி வாங்கிக் கொண்டான்.
“இதுக்காகத்தான் தேடிட்டு இருந்தியா? என்ன அவசரம்?” என்று கேட்டபடி சித்தார்த் தன் பர்ஸில் அவள் தந்த பணத்தை வைக்கப் போக,
“சீனியர் எண்ணி பார்க்காம வைக்கறீங்க…” என்று வேகமாக இடையிட்டு சொன்னாள்.
‘ஐயோ! இந்த கொசு தொல்லை தாங்க முடியலையே!’ என்றுதான் அவன் உள்ளம் எண்ணிக் கொண்டது. சிரிப்பு வாடாமல், “அது சரி…” என இருபுறமும் தலையை அசைத்துக் கொண்டவன், பணத்தை அவள் கண் முன்னாலேயே எண்ணி, “ரெண்டாயிரத்து இருநூறு இருக்கு…” என்று வேண்டுமென்றே குறைத்துச் சொல்ல,
அவன் சீண்டுவது புரியாமல் அவளுக்கு எப்படி சொல்ல என தயக்கம் வந்து ஒட்டிக் கொண்டது. தயக்கமாக “சீனியர் ரெண்டாயிரத்து முன்னூறு கொண்டு வந்தேன். மறுபடி ஒரு தடவை எண்ணி பார்க்கறீங்களா?” என்றாள்.
“அப்படியா?” என்றவன் மீண்டும் எண்ணிவிட்டு, “ஆமா… ரெண்டாயிரத்து முன்னூறு தான்…” என சொல்லிக்கொண்டே பர்ஸில் வைத்தவன், “இனிமே என்னை தேடி காலேஜ் முழுக்க சுத்திட்டு இருக்காத… பிரேக் டைம்ல காலேஜ் கேன்டீனை சுத்தி தான் எங்கேயாவது இருப்பேன். ஈவினிங் காலேஜ் பேஸ்கெட் பால் கிரவுண்டுல இருப்பேன்” என்று அவளிடம் சொல்ல,
“தேங்க்ஸ் சீனியர்… இனி கரெக்ட்டா தேடி வந்துடறேன்…” என பொறுப்பாகச் சிரித்த முகத்துடன் விடை பெற்றவள், மீண்டும் அவனைத் தேடி வருவதற்கு மறு மாதத்தின் ஆரம்ப தேதி ஆகிவிட்டது.
தினம் தினம் அவளை எதிர்பார்த்து சித்தார்த் கொஞ்சம் ஏமாந்து தான் போனான். கல்லூரி வளாகத்திற்குள் நடக்கும் போது விழிகள் தன்போல அவளைத் தேடி அலைபாயத் தொடங்கியது.
பெண்ணவளை பார்க்க வேண்டும் போலொரு ஆவல்! உள்ளுக்குள் அவள் குரலைக் கேட்க வேண்டும் போலொரு ஆர்ப்பரிப்பு! அடிக்கடி உள்ளம் அவள் பெயரினை உச்சரித்துக் கொள்ளும். அப்பொழுதெல்லாம் இவன் விழிகள் சுகமாக சில நொடிகள் மூடிவிட அவளின் முகம் மனக்கண்ணில் தோன்றி மறையும்.
ஒருவழியாக அவளைப் பார்த்து விட்டால் வேண்டுமென்றே அழைத்துக் கொஞ்ச நேரம் பேச்சு கொடுப்பான். சில நேரம் அமைதியாக அவளின் அருகே சிறு இடைவெளி விட்டு நின்று கொள்வான். அவள் பக்கத்தில் இருந்தாலே அந்தரத்தில் பறப்பது போன்ற சுகமான உணர்வு!
எல்லாமே அவனுக்கு புதியதாக இருந்தது. இந்த அவஸ்தை பிடித்ததாகவும் இருந்தது.
மீண்டும் அவளாக அவனைத் தேடியே வராததால் காரணமே இல்லாமல் கோபம் கூட வந்தது. அவன் கோபத்தை நினைத்து அவனுக்கு சிரிப்பு தான் வரும். ‘ரொம்ப முத்தி போச்சு சித்தார்த் உனக்கு…’என தன்னை நினைத்தே சிரித்துக் கொண்டான்.
மறு மாதத்தின் தொடக்கத்திலும் ஆயிரத்து இருநூறு ரூபாய் கொண்டு வந்து தந்துவிட்டுப் போனாள்.
அவ்வளவு தான் மீண்டும் பழையபடி அவனைத் தேடி வருவதில்லை. பணம் திருப்பி தருவதற்காக மட்டும் தான் தன்னை தேடி வருகிறாள் என்பது அவனுக்குப் புரிந்தது. அதனால் அவனுள் ஒருவித ஏமாற்றமும்.
ஆனால், இவனாக அடிக்கடி நெருங்க எல்லாம் முயற்சிக்கவில்லை. அவளுடைய உணர்வுகளை அவனும் மதித்தான். அவளுக்காகவே… தன் மீதான தேடல் தொடங்க வேண்டும் என்று அவன் காத்திருக்க தொடங்கினான். இந்தவித காத்திருப்பு மிகவும் அவஸ்தையாகத் தான் இருந்தது.
அவனுக்கு அவளுடைய நேசம் எந்தவித வற்புறுத்தலும் இல்லாமல் கிடைக்க வேண்டும். ஆக, அவளைத் தொந்தரவு செய்யவில்லை. தூர நின்று ரசிப்பதோடு சரி.
இதுபோன்ற சூழலில் தான் ஒரு வம்பு சண்டை. அவன் சிறுவயதிலிருந்தே கொஞ்சம் அடாவடி தான்! என்ன பிரச்சினை வந்தாலும் ஒதுங்கிப் போகும் பழக்கமே அவனிடம் இல்லை. பிரச்சனையில் இருக்கும் நியாயத்தை ஆராய்ந்து அவர்கள் பக்கம் உறுதுணையாக நின்று கொள்வான். எதிராளியைப் பந்தாடுவதும் வழக்கம்.
அன்றும் ஒருவனுக்குப் பூஜை நடந்து கொண்டிருக்க, இதுவரை அவனின் இந்த பக்கத்தை வைஷ்ணவி பார்த்ததில்லை.
முதல்முறை பார்த்தவள் மிரண்டு போனாள். யாரோ இருவருக்கான சண்டை என்றால் அவளுக்கு என்ன என கடந்து போவது தான் அவளது வாடிக்கை. இப்பொழுது சண்டையில் பெரும் பங்கு அவளுடைய சீனியருடையது ஆயிற்றே!