சமைத்து வைத்திருந்த காலை உணவை அமைதியாக உண்டு முடித்தவள் நிதி நிறுவனத்திற்குச் செல்ல ஆயத்தமானாள். அமுதா அவளை பார்ப்பதும் ஏதோ வேலை செய்வதுமாய் இருந்தார். மகனின் திருமணம் தள்ளிப்போகிறது என பேசியதிலிருந்து ஒதுக்கம் காட்டும் மகளை காணக் காண உள்ளம் வெதும்பியது. மகளின் மனது இளகிவிடாதா என்ற எதிர்பார்ப்பில் அவர் எய்த அம்பு அதன் இலக்கை அடைந்திருந்தாலும் வெளிப்படையாக அதன் பலன் தெரியவில்லை. கணவர் வேறு குடைய ஆரம்பித்துவிட்டார், என்ன பேசினாய், மகள் ஏன் வாட்டமாக இருக்கிறாள், வார்த்தைகளால் அவளை வாட்டிவிட்டாயா என தினம் கேள்விகள் வருகிறது. என்னதான் சமாளித்துவிட்டாலும் கூடிய விரைவில் மகளிடம் அவரே நேரடியாக கேட்கக்கூடும். மகள் தான் பேசியதை சொல்லிவிட்டால் அதற்கு வேறு ஆடுவாரே என்ற ஐயம்.
“பாப்பா வர்றப்போ பூ வாங்கிட்டு வா. நாளைக்கு பிரதோஷம் கோவிலுக்கு போகணும்.” என்று சொல்ல, அமைதியாக தலையாட்டினாள். ஏதாவது சொன்னால் கேட்டுக்கொள்வாள் மீறி ஏதாவது கேட்டால் சுருக்கமாக பதில் கூறுவதை வாடிக்கையாக வைத்திருந்தாள்.
“நீ இப்படி இருக்காத பாப்பா… எப்போதும் போல இரேன். என்னைக்கும் நீ எங்க பொண்ணுங்குறது மாறாது. இந்த வீட்ல உனக்கு எல்லா உரிமையும் இருக்கு.” மனது கேளாமல் சொல்லிவிட்டவர் தொலைந்துவிட்ட மலர்ச்சி மகளின் முகத்தில் மீண்டு வருகிறதா என்று பார்த்தார்.
“எப்போதும் போலதான்மா இருக்கேன். உனக்கு ஏன் அப்படி தெரியலைனு தெரியல. எனக்கு லேட் ஆகுது வரேன்.” என்று பேச்சை வளர்க்காமல் கிளம்பிவிட்டாள்.
எங்கே பேசினால் அம்மாவும் அண்ணனை போல் முறித்துவிடு என்று சொல்லிவிடுவாரோ இல்லை இறங்கிப் போ என்று ரத்னதீபனிடம் அனுப்பிவிடுவாரோ இல்லை பேசி பேசியே தானே அவனிடம் செல்வது போல் செய்துவிடுவாரோ என்றெல்லாம் அஞ்சிக்கொண்டு பேச்சை குறைத்துவிட்டாள் செண்பகா. அவளுக்கு கணவனுடன் செல்ல வேண்டாம் அதற்காக கணவனே வேண்டாம் என்றில்லை. அவன் வேண்டாம் என்ற எண்ணம்தானே ஒழிய அவனை தாண்டிக்கொண்டு வேறொருவனை பார்க்கும் எண்ணமில்லை. இப்படி சிக்கலான தன் வாழ்வை எண்ணிக்கொண்டே பேருந்தில் பயணித்து நிதி நிறுவனம் வந்தவள் தன் வேலையைத் தொடங்க வாடிக்கையாளர்கள் சிலர் வந்திருந்தனர். அவர்களுக்கு வேண்டியவற்றை பார்த்து செய்துகொடுக்க, இரு காவலர்கள் உள்ளே நுழைந்தார்கள்.
செண்பகா புருவம் சுருக்கி சுமிதாவை பார்க்க அவளும் என்னவாக இருக்கும் என்பது போல் புருவம் உயர்த்தி இவளைப் பார்த்தாள். செண்பகா உதட்டை பிதுக்க, காவலர்கள் மேலாளர் அறைக்குள் நுழைந்தார்கள். பத்து நிமிடங்கள் என்ன பேசினார்களோ மேலாளர் செண்பகாவை உள்ளே அழைத்தார். என்னவோ என்று யோசித்துச் சென்றவள் அங்கு கேட்கட்பட்ட கேள்விகளுக்கு பதில் கூறவும் அதனைத் தொடர்ந்து அவளை நோக்கி வைக்கப்பட்ட குற்றச்சாட்டை சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை.
“என்குவைரிக்கு ஸ்டேஷனுக்கு வரணும் நீங்க.” என்று காவலர்கள் இவளைப் பார்த்ததும் எழுந்து நிற்க,
“சார் சார் இருங்க சார் பேசலாம். இப்படி ஒர்கிங் அவர்ஸ்ல எங்களை கூட்டிட்டு போனா எங்க நிறுவனத்துக்கு பிளாக் மார்க் ஆகிடும் சார். அதோட எங்க ஹெட்கிட்ட பேசணும் அவங்க பெர்மிஷன் இல்லாம வரமுடியாது.” என மேலாளர் தன்மையாக வேண்ட, நடப்பவற்றை அதிர்ந்து பார்த்தாள் செண்பகா.
“எங்க ஸ்டேஷனுக்கு கேஸ் வந்திருக்கு சார். உங்க ஹெட் ஆபீஸ்ல பர்மிஷன் குடுக்கலைனாலும் நீங்க வந்துதான் ஆகணும், வரலைனா எங்க ஆக்ஷன் வேற மாதிரி இருக்கும்.” என காவலர்கள் கண்டிப்பாக பேச, அதிர்வு நீங்கி கலங்கிவிட்டாள் செண்பகா.
மேலாளர் உடனடியாக மேலிடத்தை தொடர்பு கொண்டு பேசியவர், “நான் வரேன் சார். இந்த பொண்ணு வேணாமே. ப்ராப்லம் ஆகிடும்.” என கேட்டுப்பார்த்தார்.
“இந்த பொண்ணை தான் கைகாட்டுறாங்க. லேடி போலீஸ் வந்துட்டு இருக்காங்க. நீங்களா வந்துடுங்க பெருசாகாம பாத்து முடிச்சிக்கலாம்.” என காவலர்கள் பேச, வேறு வழி இல்லாதவராய் செண்பகாவை பார்த்த மேலாளர், “நீங்க பண்ண மிஸ்டேக்குக்கு நானும் அலைய வேண்டியிருக்கு. வாங்க.” என கடுப்படித்து வாசல் நோக்கி நகர்ந்து அவளுக்கு கைகாண்பிக்க, விக்கித்து நின்றாள் செண்பகா.
“எம்மா எங்களுக்கு வேற இல்லைனு நினைச்சியா? மசமசன்னு நிக்காம சீக்கிரம் வாமா…” என்று காவலர்கள் முன்னே செல்ல, சுற்றி முற்றி பார்த்துக்கொண்டே சென்றாள்.
நிதி நிறுவனத்திற்கு வந்திருந்தவர்கள், உடன் பணிபுரிபவர்கள் ஆர்வமும் குழப்பமுமாய் நோக்க, அந்த கட்டடம் விட்டு வெளியே வந்ததும் அக்கம்பக்கத்தினரின் முணுமுணுப்புகள், அவர்களின் கடைக்கண் பார்வைகள், சுவாரசிய பேச்சுக்கள் என அனைத்தையும் கடந்து காவலர்களுடன் செல்வது அவமானமாய் இருந்தது செண்பகாவிற்கு. இவள் காரில் ஏறவும் பெண் போலீஸ் ஒருவர் துணைக்கு வந்துவிட்டார்.
“கவனமா இருக்க வேணாமா’மா இப்போ பாரு யாருக்கு தலைவலின்னு.” அந்த பெண் காவலர் அவளிடம் பேச்சுக்கொடுக்க, வாயே திறக்கவில்லை செண்பகா. அகம் முழுதும் பதட்டம் அப்பிக்கிடக்க அதனை வெளிக்காட்டாமல் பின்னால் இருந்த மேலாளரை திரும்பிப் பார்த்தாள். உடன் வந்த காவலரிடம் ஏதோ பேசிக்கொண்டு வந்தவர் இவளின் பார்வையில் தானும் நிமிர்ந்து இவளை உறுத்து விழித்தார். அவர் உடல்மொழியே அவளை அத்தனை குற்றம்சாட்டியது. துறை சார்ந்த நடவடிக்கை தன்மீது பாயும் என அக்கணமே புரிந்துபோக, தன் பெயரில் ஒரு கரும்புள்ளி விழுவதை ஏற்கவே முடியவில்லை அவளால். வேலையில் நேர்த்தியும் வாடிக்கையாளர்களிடம் மரியாதையும் காட்டும் தனக்கு இப்படியொரு அவப்பெயரா என்று எண்ணி நொந்து போனவள் தன் பதட்டத்தை தணிக்க முயன்றாள்.
சிறிது நேரத்தில் காவல் நிலையம் அடைந்துவிட்டவர்களை மரியாதைக் குறைவாய் நடத்தவில்லை எனினும் காவல் நிலையத்தில் இருந்தவர்கள் பார்வை தவறு செய்துவிட்டதாய் அவளை உணர வைத்தது. அந்த சூழலே ஒவ்வாமை கொடுக்க, அசவுகரியமும் இப்படி வரவேண்டிய நிலையாகிவிட்டதே என்ற பரிதவிப்பும் ஒருசேர அவளை நிலையின்றி படபடக்க வைக்க,
“இதோ இந்த பொண்ணுகிட்டதான் என் நகையை போய் கேட்டேன். கேட்டா நான் ஏமாத்துறேன்னு சொல்லுது. எனக்கு என் நகை வேணும்.” என நாற்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இவளை கைகாட்டி குற்றம்சாட்டியபடி குரலை உயர்த்த, அங்கிருந்தவர்கள் பார்வை மொத்தமும் இவள்புறம் திரும்பியது.
“செத்த நேரம் அமைதியா உக்காருங்க. இன்ஸ்பெக்டர் வந்ததும் பேசுவாரு.”
“கொஞ்சம் சீக்கிரம் க்ளியர் பண்ணிவிடுங்க சார்.” மேலாளர் சற்று தணிய,
“அங்க போய் பெஞ்ச்ல உக்காருங்க சார். சார் வருவாரு.” என்று நகர்ந்த அந்த காவலர், ‘எங்களுக்கு இது ஒண்ணுதான் கேஸுன்னு நினைப்பு. உடனே பாக்கணுமாம். அவங்க ஒழுங்கா இருந்திருந்தா எங்களுக்கும் தலைவலி இல்லாம போயிருக்கும்.’ என்று முணுமுணுத்துக்கொண்டே செல்வது இவர்கள் காதில் தெளிவாக விழுந்தது.
“எங்க வந்து என்னை பேச்சு வாங்க வச்சிருக்கீங்க பாருங்க. ஒழுங்கா வேலை பாக்க முடியலைன்னா எதுக்கு வேலைக்கு வர்றீங்க? வீட்ல உக்காந்து புருஷன் புள்ளைக்குட்டியை பாக்க வேண்டியதுதான. எங்க கழுத்தறுக்கவே வந்து வாச்சிருக்கீங்க. மேலிடத்துல கம்பளைண்ட் பண்ணப் போறேன். டிபார்ட்மென்ட் ஆக்ஷனுக்கு ரெடியா இருங்க.” என்று மேலாளர் செண்பகாவிடம் காய்ந்துவிட, அவரின் வார்த்தைகள் அவள் சுயத்தை தாக்கி கிளர்ந்தெழச் செய்தது.
“தப்பு என் மேல மட்டுங்குற மாதிரி பேசிட்டே போறீங்க. மேனேஜர் அப்ரூவல் இல்லாம என் இஷ்டத்துக்கு நான் எல்லாத்தையும் எடுத்து குடுத்துற முடியுமா? உங்களுக்கு முன்னாடி இருந்த மேனேஜர் சைன் பண்ணி க்ளியர் பண்ணதுக்கு அப்புறம்தான் இதை க்ளோஸ் பண்ணோம். அதோட என் மேல தப்பே இருந்தாலும் என்னோட தனிப்பட்டதை பேசுறது தப்பு சார். உங்களுக்கு அதுக்கு ரைட்ஸ் கிடையாது.” என்று நன்றாக திருப்பி கொடுத்துவிட்டாள்.
எதிர்த்து பேசுபவளை பல்லைக்கடித்து பார்த்தார் அவளின் மேலாளர்.
“படிச்சவங்க விவரமா இருப்பீங்கனு பாத்தா இப்படி என் நகையை தொலைச்சிட்டு சண்டை போடுறீங்களே. இது நியாயமா? வாயை கட்டி வயித்தை கட்டி சேர்த்தது.” புகார் கொடுத்த பெண்மணி இவர்களிடம் வந்து சத்தம் போட,
“கம்முனு இருக்குறதுனா இருமா. இல்லையா போயிட்டே இரு. நாங்க விசாரிச்சிட்டு சொல்றோம்.” என அந்த பெண்ணை அதட்டி அமர வைத்தனர் அங்கிருந்த அதிகாரிகள்.
செண்பகாவை உறுத்து விழித்து நகர்ந்து சென்று அங்கு போடப்பட்டிருந்த நீள்இருக்கையில் அமர்ந்தார் மேலாளர். தன் அனுபவத்திற்கும் பதவிக்கும் இருக்கும் மரியாதையை குலைக்கும் வண்ணம் தன்னை எங்கு வந்து நிறுத்திவிட்டாள் என செண்பகாவை பார்த்து பார்த்து கோபம் வளர்த்துக்கொண்டார்.
மேலாளரை என்னவோ எதிர்த்து பேசிவிட்டாள்தான். ஆனால் பேசியபின் செண்பகாவிற்கு பதட்டமாகிவிட்டது. என்ன இருந்தாலும் அவளின் உயர்அதிகாரி. அவர் மாற்றலாகி வருவதற்கு முன்பு நடந்த ஒரு நிகழ்விற்கு அவர் பொறுப்பெடுத்து இங்கு வரவேண்டிய சூழல். அவர் கோபம் புரிந்தாலும் அதற்காக தன்னை பேசுவாரா என்று குமைந்தாள். அவர் வயதிற்கே இங்கு வந்தது மரியாதை குறைச்சல் என்பதை தாண்டி ஒருவித அசுவுகரியமும் பதட்டமும் கொடுக்க இவளுக்கு எப்படி இருக்குமாம்? ஒன்றாய் வேலை பார்ப்பவர்கள் இக்கட்டு வரும் நேரம் துணையாய் இல்லாமல் இப்படி குற்றம் சாட்டுவது எவ்வகையில் நியாயம். இப்படி நடக்கும் என முன்னமே தெரியுமா என்ன? என்னவோ அவள் மீதுதான் தவறு என்பது போல் குற்றம்சாட்டப்பட்டு முன்னிறுத்தப்பட நெஞ்சம் பதறியது. முந்தைய மேலாளர் அனுமதி கொடுத்த பின்தானே இவள் செயல்பட்டது, என்னவோ தனித்து செயல்பட்டது போல் இப்படி வந்து நிறுத்தியிருக்கிறார்கள் என தனக்குள்ளேயே அலசி ஆராய்ந்து குற்றம் சுமத்தி பின் தெளிவுபடுத்திக்கொண்டு என மனதிற்குள் போராடிக்கொண்டிருந்தாள்.
“செண்பா.” என திடுமென பதறிக்கொண்டு வளவன் வரவும் சட்டென எழுந்தவள் அவனை பாதியில் எதிர்கொண்டு அவனை ஏறிட்டு பார்க்கையில் லேசாக கலங்கும் போலானது அவள் கண்கள். அதுவரை ஊசலாடிக்கொண்டிருந்த தைரியம் தன் அண்ணனை பார்த்ததும் உடைபட்டு ஆறுதல் தேடியது.
“சார் சார் யார் நீங்க? அமைதியா இருங்க… இங்க இப்படியெல்லாம் நிக்க கூடாது. வெளில இருங்க விசாரிச்சிட்டு நாங்களே அனுப்பிடுவோம்.” என வளவனிடம் வந்து அவனை வெளியே நிற்க சொன்னார் ஏட்டு.
“என் தங்கச்சி சார். சின்ன பொண்ணு பயந்திருக்கும். என்ன பிரச்சனை சார் ஏன் இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க?” என விசாரித்தான்.
“நான் எதுவும் சொல்ல முடியாது. எதுவா இருந்தாலும் இன்ஸ்பெக்டர் வரவும் பேசிக்கோங்க. இப்போ வெளில வெயிட் பண்ணுங்க. சார் பாத்தா எங்களைத்தான் சத்தம் போடுவாரு.” வளவனை நகர்த்தப்பார்த்தார்.
“நகையை தொலைச்சிட்டு இங்க நான் தவிச்சிட்டு இருக்கேன். பாதிக்கப்பட்ட என்னை விட்டுட்டு அவங்களுக்கு மட்டும் சலுகை கொடுக்குறீங்க.” என புகார் கொடுத்த பெண்மணி மீண்டும் சண்டை கூட்ட, அண்ணனை தவிப்பாய் பார்த்தாள் செண்பகா.
“வக்கீல் கூட்டிட்டு வரவா சார்?” தங்கையை அணைத்தார் போல் பிடித்த வளவன் அந்த காவல் ஏட்டிடம் கேட்க, அவரோ,
“வெயிட் பண்ணுங்க. இன்ஸ்பெக்டர் சொல்லுவார்.” என்று அதையே திரும்பத் திரும்ப சொன்னார்.
“கம்பெனில சொல்லி இருக்கேன். லீகல் எல்லாம் அவங்க பாத்துப்பாங்க. இது விசாரணைதான்.” என்று எழுந்து வந்து சொன்னார் மேலாளர்.
வளவன் அவரை யார் என்று பார்க்க செண்பகா அறிமுகப்படுத்தினாள். வளவன் மரியாதையாக வணக்கம் வைக்க, லேசாக தலையசைத்துவிட்டு மீண்டும் சென்று அமர்ந்துகொண்டார்.
“ரொம்பதான் பண்றாரு…” செண்பகா சிடுசிடுக்க, அவளை அமைதியாக அமர சொல்லிவிட்டு அருகில் நின்றுகொண்டான்.
பிரச்சனை இதுதான். தன் தம்பியுடன் சேர்ந்து அவள் வேலை செய்யும் நிதி நிறுவனத்தில் குறிப்பிட்ட தங்க நகைகளை பிணையாய் வைத்து கடன் பெற்றிருந்தார் அந்த பெண்மணி. ஒருவருடத்திற்குள் வட்டியுடன் சேர்த்து கடனை முடித்து தங்கத்தை மீட்டுக்கொள்ள வேண்டும் என்பது விதிமுறை. அப்படி ஒருவருடம் முடியும் தருவாயில் மூன்று மாதங்களுக்கு முன்னர் அந்த பெண்மணி வாங்கிய நகைக்கடனை முடித்து தங்கத்தை பெற்றுக்கொள்ள வந்திருந்தார் அப்பெண்ணுடன் சேர்ந்து கடன் வாங்கியிருந்த அவர் தம்பி. இதுபோன்று கூட்டாக கடன் வாங்கும் பொழுது முதல் நபரிடம்தான் கடன்தொகை மற்றும் நகைகள் என அனைத்தையும் ஒப்படைப்பார்கள். இவர்கள் விஷயத்தில் அந்த பெண்மணி முதல் நபராகவும் அவர் தம்பி இரண்டாம் நபராவாகவும் சேர்க்கப்பட்டிருந்தனர்.
முறையாக நகைக்கடனை நிறைவு செய்து தங்கத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள முதல் நபர்தான் வரவேண்டும். இங்கு இந்த பெண்மணி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவர் தம்பி வந்து முறையிட, வேறு யோசனைகள் வழங்கப்பட்டது. அதனை பின்பற்றி அப்பெண்ணிடம் கையொப்பத்துடனான அனுமதி கடிதம் வாங்கி, மருத்துவரிடமும் அந்த பெண்மணி தீவிர சிகிச்சையில் இருக்கிறார் உடனே எழுந்து நடமாட முடியாது என்று மருத்துவ அறிக்கை வாங்கி வந்து கொடுத்தார் இரண்டாம் நபர். சிறப்பு காரணங்கள் இருக்கும் பட்சத்தில் முறையான ஆவணங்கள் இருந்தால் சற்று விதிகளை தளர்த்துவதற்கு அனுமதி உண்டு. அதனைக்கொண்டு மருத்துவ அறிக்கையை ஆராய்ந்து அப்பெண்மணியின் கையெழுத்தையும் கணக்கு தொடங்கும் போது அவர் கொடுத்ததோடு ஒப்பிட்டுப் பார்த்து நகையை கொடுக்கச் சொல்லிவிட்டார் அப்போது இருந்த மேலாளர். செண்பாகவும் ஆவணங்களை பெற்றுக்கொண்டு நகைகளை அவர் தம்பியிடம் ஒப்படைத்துவிட்டார்.
திடுமென ஒருவாரம் முன் அப்பெண்மணி வந்து நகையைக் கேட்க, உங்கள் தம்பியிடம் கொடுத்துவிட்டோம் என்றாள் செண்பகா. யாரைக்கேட்டு என் நகைகளை என் தம்பியிடம் கொடுத்தீர்கள். நான் கடனை அடைக்கச்சொல்லி எந்த கையெழுத்தும் போடவில்லை, நான்தானே முதல் நபர் என்னிடம்தானே நீங்கள் நகையை கொடுத்திருக்க வேண்டும் என்று சண்டையிட ஆரம்பித்துவிட்டார். செண்பகா அவர் கையொப்பமிட்ட கடிதத்தையும் மருத்துவ அறிக்கையையும் காட்ட அது என் கையெழுத்தே இல்லை என்றார். செண்பகா தங்கள் பக்கம் எந்த தவறும் இல்லை ஆவணங்கள் சரியாக இருக்கிறது என்று சொல்ல அப்போதே சத்தமிட்டு சென்றார் அப்பெண். தற்சமயம் இருக்கும் மேலாளர் அன்று விடுமுறை என்பதால் அவருக்கு இந்த விஷயங்கள் தெரியவில்லை. இனி நிதி நிறுவனத்திடம் பேசி பிரயோசனம் இல்லை என்று முடிவெடுத்துவிட்ட அப்பெண் காவல் நிலையம் வந்து தன் தம்பியுடன் சேர்ந்துகொண்டு நிதி நிறுவனத்தினர் தன் நகைகளை வைத்துக்கொண்டு ஏமாற்றுகின்றனர் என்று புகார் அளித்துவிட்டார்.
செண்பகா அண்ணனிடம் பிரச்சனையை சொல்லி முடிக்க,
“இங்க எல்லாம் நிக்ககூடாது சார். கிளம்புங்க.”
“பயந்துக்குவா சார். நான் தொந்தரவு பண்ண மாட்டேன்.” என்ற வளவனை அங்கு இருக்க விடவில்லை. வெளியே கூட நில்லுங்கள் இங்கு இருக்கக்கூடாது என்று அனுப்பிவிட்டனர்.
தங்கையிடம் ஆயிரம் பத்திரம் சொல்லிவிட்டு காவல் நிலைய வாயிலில் வந்து நின்றுகொண்டான். அங்கு அவனைப் போலவே இன்னும் சிலரும் இருந்தனர். அவர்களிடம் பேச்சுக்கொடுத்தவனுக்கு ஐயம் இல்லையென்றாலும் தங்கை காவல் நிலையம் வரை வந்துவிட்டாள் என்பதை எளிதாக எடுக்கமுடியவில்லை. மேலாளர் சொன்னது போல் அவர்கள் நிதி நிறுவனம் பார்த்துக்கொள்ளட்டும் என நம்பியும் இருக்க முடியவில்லை. தானும் ஏதாவது முயற்சி செய்ய வேண்டும் ஆனால் யாரை தொடர்பு கொண்டு எப்படி இதிலிருந்து வெளியே வருவது என்று புரியவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே அலைபேசியை கையில் வைத்து சுற்றியவன் பார்வையும் அங்குமிங்குமாய் அலைபாய்ந்தது. மதிய இடைவெளி நேரம் வரவும் தயக்கத்துடன் உள்ளே சென்றவன் அங்கிருந்த ஏட்டிடம் எப்போது இன்ஸ்பெக்டர் வருவார் என்று விசாரித்தான்.
“என்ன சார் பிரச்சனை உங்களுக்கு? உங்களை மாதிரி தினம் பத்து கேஸ் வருது. எல்லாத்தையும் பாக்க வேண்டாமா? வெளில ஒரு கேஸ் விஷயமா போயிருக்கார், அது முடிஞ்சதும் வருவார்.”
“லன்ச் டைம் ஆகிடுச்சு சார்.” தங்கை உண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் அவன் கேட்க, அந்த ஏட்டு அங்கிருங்க காவலர்களை காண்பித்து, “எல்லாருக்கும் ஒரு பிரியாணி வாங்கிடுபா.” என்றதோடு எந்த கடையில் வாங்க வேண்டும் என்றும் சொல்ல, இவனுக்கு மலைப்பாக்கியது. தவறே செய்யாமல் விசாரணைக்கென்று வந்ததற்கு கூட இந்த ஊழியம் செய்ய வேண்டுமா என்று அலுத்துக்கொண்டே கடைக்குச் சென்று வாங்கி வந்துக்கொடுத்தான். உடன் தங்கைக்கும் அவள் மேலாளருக்கு சேர்த்துக் கொடுக்க,
“எதுக்கு எல்லாருக்கும்?” முகம் சுருக்கினாள் செண்பகா.
“ஸ்ஸ்… சும்மான்னு இரு பாப்பா. நீ சாப்பிடு. அதுக்குதான் எல்லாம்.”
“ப்ச். இதெல்லாம் நீ செய்யணும்னு அவசியமே இல்லை.”
“அவசியமோ அவசரமோ நீ சாப்பிடு முத.” என்று தங்கையை முயன்றளவு சமாதானம் செய்து உண்ண வைக்க, இவனுக்கு பாதியை கொடுத்துவிட்ட உண்டாள் செண்பகா.
உணவு வேளை முடிந்ததும் மீண்டும் இவன் வெளியே வந்து நின்றுகொள்ள, “வாண்ட்டடா போய் மாட்டிக்கிட்டியே சார். எல்லாருக்கும் பிரியாணி வாங்கியார சொல்லி இருப்பாங்களே… அடுத்து பன்னும் டீயும் கேப்பாங்க பாரு… எல்லாம் நம்மகிட்ட தான் கறக்கப் பாப்பானுங்க. மொள்ளமாரித்தனம் பண்ற எவனாவது கவுன்சலர் தெரியும் எம்.எல்.ஏ தெரியம்னு வருவான் அவனை முதல்ல விட்டிருவானுங்க…” என புலம்ப, அட நம்ம எம்.எல்.ஏ’வ எப்படி மறந்தேன் என்று தலையில் தட்டிக்கொண்டவன் உடனே மச்சானுக்கு அழைப்பு விடுக்க அவன் எடுக்கவில்லை.
‘என்னத்துக்கு இவர் போன் வச்சிருக்காருன்னே தெரியல. எந்த போன் வந்தாலும் எடுக்க மாட்டாரா இல்லை நம்ம பேரை பாத்தாலே எடுக்க மாட்டாரா?’ என புலம்பிக்கொண்டே அவனது ஆபத்பாந்தவனுக்கு அழைப்பு தட்டிவிட்டான்.
“என்ன வளா கடையில கூட்டமில்லையா இந்த நேரம் கூப்பிட்டிருக்கீங்க?”
“உங்க மச்சான் எதுக்கு போன் வச்சிருக்காரு?” என்றான் இவன் கடுப்பாய்.
“என் மச்சானா? சரி சரி… அவர் எதுக்கு வச்சிருக்காருனு உங்களுக்கு ஏன் தெரியணும்?” என வளவனை ஒத்தே பேச, சலித்துக்கொண்ட வளவன் அழைப்பு விடுத்த காரணத்தை சொல்ல,
“அச்சோ… எவ்ளோ நேரமா தங்கச்சி அங்க இருக்கு?” என கேட்டு தெரிந்துகொண்டவன், “உங்க மச்சான் போன் போட்டா எல்லாம் எடுக்க மாட்டாரு. அவரை தட்டுற இடத்துல தட்டணும். இன்னும் கொஞ்ச நேரத்துல பதறி அடிச்சு அவரே கூப்பிடுவார். வைங்க போனை.” என்று இணைப்பை துண்டித்த விமல் அலைபேசியில் ஏதோ செய்ய, அரைமணி நேரம் சென்றிருக்கும் வளவனுக்கு ஒரு புகைப்படம் வந்து விழுந்தது.
‘ஆளுங்கட்சியின் இளம் எம்.எல்.ஏ ரத்னதீபனின் மனைவி மோசடி வழக்கில் விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். பிரபல நிதி நிறுவனத்தில் வேலை செய்யும் அவர் வாடிக்கையாளரின் நகைகளை முறையான ஆவணமின்றி சில சதவிகிதம் கமிஷன் பெற்றுக்கொண்டு வேறு ஒருவருக்கு கொடுத்துவிட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு. தனக்கு நியாயம் வாங்கித்தர வேண்டும் என்று புகார் கொடுத்திருக்கும் பெண்மணி கண்ணீர் மல்க கோரிக்கை.’ என்று இருந்தது.
பதறிப்போன வளவன் விமலுக்கு அழைக்க,
“வொய் டென்சன்? நான் ரெடி பண்ணதுதான், உங்க மச்சானோட பி.ஏவுக்கு மட்டும்தான் அனுப்பியிருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்துல விழுந்தடுச்சி வருவாரு உங்க மச்சான் அவரையும் புடிச்சி அவர் பொண்டாட்டியோட ஜெயில்ல போடுங்க சார். ரொம்ப பண்றாரு.” என்று விளையாட்டாய் சொல்ல,
“இது வேற மாதிரி ஆகிடப்போகுது. பாப்பாவுக்கு தெரிஞ்சா தாங்கமாட்டா…” வளவன் பதற,
“வேற என்ன பண்ணாலும் அவரை புடிக்க முடியாது. இது வெளில போகாம உங்க மச்சான் பாத்துப்பாரு. இனி அவருக்குதான் இது டென்சன் உங்களுக்கு இல்லை புரியுதா… ஜாலியா போய் வெயிலுக்கு இதமா ஒரு இளநீரோ ரோஸ் மில்க்கோ குடிச்சி சில் பண்ணுங்க வளவன்.” என சொல்லி வைத்துவிட்டான். இவனுக்குத்தான் அடுத்து என்ன நடக்குமோ என்று பதைபதைப்புடன் கலக்கமானது. விமலிடம் சொல்லியிருக்ககூடாதோ என்றுகூட தோன்றியது.
இந்த விசாரணையிலிருந்து தங்கை எப்படியும் வெளியே வந்துவிடுவாள் ஆனால் இதனால் அவளுக்கும் அவள் கணவனுக்கும் பிரச்சனை ஆகிவிடக்கூடாதே என்ற கவலை பிரதானமாகியது. எப்போது அழைப்பு வருமோ என பதறி இவன் இங்குமங்கும் நடைபோட, சாவுகாசமாக மூன்று மணிநேரம் கழித்து நேரிலே வந்து நின்றான் ரத்னதீபன்.