எம்பையர் அப்ரூவலுக்காக வந்திருந்த குருமூர்த்தி, அங்கிருந்த சண்முகத்தை கண்டு கேள்வியாக லிங்கத்தை பார்த்தார்.
“நான் வேணாம்ன்னு தான் சொன்னேன் மூர்த்தி” என்று லிங்கம் சொல்ல,
“அப்பாயிண்ட்மெண்ட் என் பேர்ல தான் வாங்கியிருக்கேன்” என்றார் சண்முகம்.
மிகப்பெரிய பதவியில் அமர்ந்திருக்கும் அதிகாரியை சந்திக்க வந்திருக்கிறார்கள். அவர் இடத்தில் வைத்து அமைச்சர் பதவியில் இருக்கும் சண்முகத்தை நீ தேவையில்லை, கிளம்பு என்றா சொல்ல முடியும்?
இக்கட்டான சூழ்நிலையில் மனிதன் இப்படித்தான் சிக்கி கொள்கிறான். குருமூர்த்தியும் இன்று அப்படி ஒரு நிலையில் தான் இருந்தார்.
குறித்த நேரத்தில் அதிகாரி இவர்களை சந்தித்தவர், “அப்ரூவல் கேன்சல் எல்லாம் பண்ணலை சார். நீங்க உங்க வேலையை தொடர்ந்து பாருங்க” என்றார் அவர்.
கேன்சல் பண்ணலையா? குருமூர்த்தி கேள்வியாக பார்க்க,
“சார். கேன்சல் பண்ண சொல்லி ஹெவி ப்ரெஷர் வந்தது உண்மை. ஆனா க்கும். அமைச்சர் எல்லாம் உங்களுக்காக நிக்கும் போது அப்படியெப்படி நாங்க கேன்சல் பண்ணிட முடியும்?” என்றார் அதிகாரி.
“சார். கேன்சல் பண்ண மூலகாரணமே இல்லை. குருமூர்த்தி எல்லாத்தையும் சரியா பண்ணியிருக்கார். அதென்னமோ இங்க சில பேருக்கு தான் கண் உறுத்தி ஏதேதோ வேண்டாத வேலையெல்லாம் பார்க்கிறாங்க” என்று சண்முகம் பேச,
“தெரிய போய் தான் கோவம் வருது சார். இனி இப்படி நடந்தா அப்புறம் நாங்களும் எங்க வேலையை காட்ட வேண்டியிருக்கும். சொல்லிடுங்க” சண்முகம் எச்சரிக்க,
“சார் பவர்ல இருக்க நீங்க சப்போர்ட்டுக்கு இருக்கும் போது மூர்த்தி சாரை யார் என்ன பண்ணிட முடியும் சொல்லுங்க” என்று கேட்ட அதிகாரி,
“என்ன சார். நான் சொல்றது சரிதானே? அமைச்சர் இருக்கும் போது உங்களுக்கென்ன கவலை. திறப்பு விழாவை அசத்திடுங்க சார்” என்று குருமூர்த்தியிடமும் சொன்னார் அதிகாரி.
குருமூர்த்தி மெலிதாக புன்னகைத்தவர், “இந்த எம்பையர் என் பொண்ணுக்காக நான் பண்றது சார். அவளுக்கு நான் கொடுக்கிற பரிசா கூட சொல்லலாம், முதல் முறை என்கிட்ட கேட்டிருக்கா, நான் செய்வேன். குறுக்கா யார் வந்தாலும், என்னை நிறுத்த முடியாது சார்”
“இந்த பணம், பவர், பதவி எல்லாம் என்னை கட்டுப்படுத்திடுமா? முடியாது. என்னை தொழில் செய்ய விடலைன்னா, நான் யாரையும் செய்ய விட மாட்டேன். அது யாரா கூட இருக்கட்டும்”
“எதிரிங்க எனக்கு புதுசில்லை. சண்டையும் எனக்கு புதுசில்லை. ஆனா இந்த வேலை செய்றவங்க எனக்கு எதிரியா இருக்க தகுதி இல்லாதவங்க. முதுகுல குத்த நினைக்கிற எவனையும் நான் முதல்ல மனுஷனா கூட பார்க்க மாட்டேன். தைரியம் இருந்தா நேர்ல மோதி பார்க்க சொல்லுங்க. பதில் கொடுக்கிறேன், இல்லை நான் முதுகுல தான் குத்துவேன்னா நான் நெஞ்சுலே மிதிப்பேன். வாங்கிக்க சொல்லுங்க”
“உங்க பதவிக்கு நான் இதை உங்க முன்னாடி பேசியிருக்க கூடாது. ஆனா சேர வேண்டிய இடத்துல என்னோட எச்சரிக்கை போய் சேரணும்” என்று முடித்துவிட்ட குருமூர்த்தி,
“திறப்பு விழாக்கு குடும்பத்தோட வந்துடுங்க சார்” என்று அழைப்பிதழை நீட்டினார்.
அதிகாரி, வரேன் என்றபடி அழைப்பிதழை வாங்கிக்கொள்ள, “நீங்களும் வந்துடுங்க” என்று சண்முகத்திற்கு அங்கேயே வைத்து அழைப்பிதழை நீட்டி அழைத்தார்.
சண்முகம் மிதமான புன்னகையுடன் அழைப்பிதழை வாங்கி கொண்டவர், “குடும்பத்தோட வந்திடுறேன்” என்றார்.
“எங்களுக்காக நேரம் ஒதுக்கி சந்திச்சதுக்கு நன்றி சார்” என்று குருமூர்த்தி கைகுவித்து விடைபெற்று கொண்டார்.
“சார் என்ன சார் இப்போதான் உங்களை இன்வைட் பண்றாரா?” என்று அதிகாரி அதிர்ச்சியுடன் சண்முகத்திடம் கேட்க,
“உங்களால தான் சார்” என்றார் சண்முகம்.
“என்னாலவா?”
“ஆமா சார். நாங்க அப்படி எல்லாம் நெருக்கம் கிடையாது. உங்களை மாதிரி தான் நானும் அவருக்கு மூணாவது மனுஷன்னு காட்ட கொடுத்துட்டு போறார்”
“என்ன சார் அவருக்காக எங்களை எல்லாம் மிரட்டி விட்டுடீங்க? ஆனா அவர் இப்படி பண்ணிட்டு போறார். அட்லீஸ்ட் உங்க இடத்தில வைச்சாவது கூப்பிட்டிருக்கலாம்” என்றார் அதிகாரி.
“பத்திரிக்கையே எனக்கு வந்திருக்காது. நீங்க பேசினதால வந்துச்சு. விடுங்க சார். அது எங்களுக்குள்ள! உங்களுக்கு புரியாது” என்ற சண்முகத்தின் போன் ஒலித்தது.
“சண்முகம். உன் பையன் ஏன் இப்படி பண்ணிட்டு இருக்கான்?” என்று லிங்கம் அதிருப்தியுடன் கேட்டார்.
“என்னாச்சு?” என்று கேட்ட சண்முகம் அதிகாரியிடம் விடைபெற்று காருக்கு வந்தார்.
“ஆமா. அப்போ ஏதோ போன் பண்ணி சொன்னான். அவன் கம்பெனியை நீக்கிட்டிங்க. மூர்த்திக்கிட்ட பேச போறேன்னு” என்றார் சண்முகம்
“உன் பையன் நேர்மையா நடந்துக்கலை. மூர்த்தியை சந்திச்சு, என்னோட கம்பெனி தான் இது. எம்பையர்ல இடம் வேணும்ன்னு பேசியிருக்கணும். ஆனா அவன் அப்படி பண்ணல” என்றார் லிங்கம்.
“அவன் சொல்லியிருந்தா மூர்த்தி கொடுத்திருப்பாரா?” என்று சண்முகம் கேட்க,
“கொடுத்திருக்க மாட்டேன். ஆனா உன் அளவுக்காவது நேர்மையா இருப்பான்னு நினைச்சேன். ஆனா இல்லை அவன் தாத்தா மாதிரி தான் அவன் இருக்கான்” என்றார் குருமூர்த்தி.
“மூர்த்தி. நான் வரேன். எம்பையருக்கு வந்துட்டே இருக்கேன். நாம பேசலாம்” என்று சண்முகம் சொல்ல, குருமூர்த்தி போனை வைத்து காரின் வேகத்தை கூட்டினார்.
ரோஹன் வரவை சம்யுக்தா செய்தியாக அனுப்பியிருக்க, குருமூர்த்தி முதலில் சிசிடிவி இணைப்பை தான் திறந்து பார்த்தார்.
சம்யுக்தா மட்டும் அவனுடன் இருக்க, மாசிலாமணி, குணா யாரும் காணோம்.
“என் பொண்ணை தனியா விட்டுட்டு எங்க போன நீ? மணி. இந்த கதை எல்லாம் பேசாத. ஒன்னு அவளை வீட்ல விட்டுட்டு போயிருக்கணும், இல்லை வேற யாராவது அனுப்பி பொருளை வங்கியிருக்கணும். அப்படியென்ன என் மகளை விட உனக்கு வேலை முக்கியமா போச்சு? டேய் இன்னும் அஞ்சு நிமிஷத்துல நீ என் பொண்ணுகிட்ட போயிருக்கணும். இல்லை உன் தோளை உரிச்சிடுவேன்டா ராஸ்கல்” என்று மணியை போனில் அழைத்து கத்திவிட்டார் மனிதர்.
“மூர்த்தி ஏன் இவ்வளவு கோவம்? நம்ம இடத்துல தானே பாப்பா இருக்கு., சுத்தியும் நம்ம ஆளுங்களும் இருக்காங்க. அவன் என்ன பண்ணிட போறான்?”
“என்ன பண்ணிட போறானா? அஹ்ஹா. அவனுக்கு அவ்வளவு ஸீன் எல்லாம் கிடையாது. அவன் உயிர் அவனுக்கு வேணும்ன்ற அறிவு அவனுக்கும் இருக்கும் தானே?”
“அப்புறம் ஏண்டா இந்த குதி குதிக்கிற?”
“என் பொண்ணுகிட்ட அவனுக்கென்ன பேச்சு வேண்டிக்கிடக்கு? அவன் முதல்ல என் பொண்ணு இருக்க இடத்துல கூட இருக்க கூடாது. எனக்கு ஒவ்வாது. நான் ஏத்துக்க மாட்டேன்”
“மூர்த்தி. பையன் நல்ல பையன் தான். உன்கிட்ட பேச வந்திருப்பானா இருக்கும்”
“நல்ல பையனா? சரி அப்படியே இருக்கட்டும். நல்ல பையன் நான் அங்க இல்லைன்னு தெரிஞ்ச உடனே, அங்கிருந்து கிளம்பியிருக்க வேண்டியது தானே?
“மூர்த்தி. தெரிஞ்ச பிள்ளைங்க. ஏதோ பேசுவாங்க. எல்லாத்துக்கும் நீ அதிகமா ரியாக்ட் பண்ண வேண்டியதில்லை” லிங்கம் கண்டித்தார்.
“என் பொண்ணுன்னு வரும் போது நான் இன்னும் கூட அதிகமா போவேன் அய்யா. அவன் எங்க இடத்தில வேண்டாம்ன்னா வேண்டாம் தான்”
“வசுந்த்ரா மேடம் மகனுக்கும் இதே நியாயம் தானா?”
குருமூர்த்தி காரை நிறுத்தியே விட்டார். “யாருக்கு என்ன நியாயம்ன்னு நாந்தான் முடிவு பண்ணுவேன் அய்யா. நீங்க சண்முகம் பேமிலிக்கு அதிகமா சப்போர்ட் பண்றீங்க. உங்களுக்கு இப்போ என்னை விட சண்முகம் முக்கியமா போயிட்டார்ன்னு தெரியுது. இனி நாம சண்முகம் விஷயத்தை பேச வேண்டியிருக்காது” என்றார் கல்லான முகத்துடன்.
“மூர்த்தி. அந்த பையன் ரோஹனுக்கு உன் பொண்ணை கேட்கிறாங்க. ரொம்ப நாளுக்கு முன்னாடியில் இருந்து சண்முகம் என்கிட்ட பேச ஆரம்பிச்சுட்டான். சண்முகம் அப்பா பண்ணதுக்கு இவங்களை தண்டிக்கணுமான்னு இருக்கு. சண்முகம் உன் விஷயத்துல முதல்ல இருந்தே, தொழில் பண்ண காலத்துல இருந்தே நல்லாத்தான் நடந்துப்பான். சண்முகம் பொண்டாட்டி, பிள்ளைங்களையும் தெரியும். அவங்களோட சொத்து பத்தும் தெரியும். நம்ம புள்ளை அந்த குடும்பத்துல வாக்கப்பட்டு போனா சந்தோஷமா வாழும். யோசி மூர்த்தி” என்று லிங்கம் சொல்ல,
அழுத்தமான முகத்துடன் அமர்ந்திருந்த குருமூர்த்தி பதில் இல்லாமல் காரை எடுத்தார்.
சம்யுக்தா வார்த்தையில், அவளின் கோவத்தில் ரோஹன் முகம் மாறிப்போனது. பெண்ணின் நேரடி பதிலை அவன் எதிர்பார்த்திருக்கவில்லையோ?
“ஏன் இவ்வளவு கோவம் சம்யுக்தா?” ரோஹன் கேட்டும் விட்டவன்,
“இன்னொருத்தர் உன் லைஃப்ல இருக்கார்ன்னு சொல்ற. ம்ம். அது வசுந்தரா மேடம் மகன் இல்லை தானே?” என்று கேட்டான் ரோஹன்.
சம்யுக்தா அவனை புருவங்கள் சுருக்கி பார்க்க, “ஆபத்து இருக்குன்னு தெரிஞ்சும், அவனோட நீ கோயம்பத்தூர் வந்த! தெரியும்” என்றான் ரோஹன்.
“சோ. என்னை பாலோ பண்ணிட்டு தான் இருந்திருக்கீங்க?” சம்யுக்தா கேட்க,
“ஊட்டியை விட்டுத்தான் வந்தேன். உன்னை விட்டு இல்லை” என்றான் ரோஹன்.
“எம்பையருக்குள்ள வர நினைச்சதும் எனக்காகவா?”
“ஆமாம்”
“தப்பு சீனியர். நான் நீங்க லவ் சொன்ன முதல் நாளே என் மறுப்பை சொல்லிட்டேன். ஒரு இடத்துல கூட உங்களுக்கான நம்பிக்கையை நான் கொடுக்கலை. இத்தனை வருஷத்துல உங்களை ஒரு முறை கூட கான்டெக்ட் பண்ணதில்லை. நீங்களே என்னை புரிஞ்சுகிட்டு ஒதுங்கி இருந்திருக்கணும்” என்றாள் பெண்.
“நீ சொன்ன அத்தனையும் உண்மை. இந்த செகண்ட் வரை நீ எனக்கான ஹோப் கொடுக்கலை. ஆனாலும் காதல், நீ நினைக்கிற மாதிரி கிடையாது. குறைந்தபட்சம் என்னோட காதல்”
“என்ன பண்ணும் உங்க காதல்? என்னை கட்டாயப்படுத்துமா? இல்லை பயம் காட்டுமா?”
“பதிலுக்கு என்னை காதலிக்க வைக்க முடியும்”
“சீனியர். நான் உங்களுக்காக வருத்தப்படுறேன். நிச்சயமா நீங்க நினைக்கிறது நடக்காது”
“உன் காதல் எனக்கு தெரிஞ்ச வரை ஜெயிக்காது. எனக்கு ஒரு வாய்ப்பு இருக்கு” என்றான் ரோஹன்.
“சீனியர்” என்ற பெண் ஆயாசத்துடன் நெற்றியை நீவினாள்.