வைஷ்ணவி கல்லூரி சென்றதே தாமதமாகத்தான். வேகவேகமாக வகுப்பறைக்கு செல்ல… தாமதித்து வந்த காரணத்தால் அந்த ஆசிரியர் இவளை உள்ளே அனுமதிக்கவில்லை. ஒன்றிரண்டு வசவுகளும் கிடைத்தது.
“நினைச்ச நேரத்துக்கு வர வேண்டியது… படிப்பு மேல அக்கறையே இல்லை…” என்று அவர் தெலுங்கில் திட்டியது இவளுக்குத் தெளிவாகவே புரிந்தது.
இவள் கெஞ்சிக்கொண்டு எல்லாம் நிற்கவில்லை. எதுவும் பேசாமல் வந்து மரத்தில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள். புத்தகப்பையை அருகில் வைத்து அணைத்து பிடித்தபடி அமர்ந்தவளுக்கு சித்தார்த்தை முதன் முதலில் சந்தித்த நினைவுகள்.
அவள் கல்லூரி முதலாம் ஆண்டு சேர்ந்த சமயம் அது. அவளின் தந்தை நடராஜ் தான் குடும்பத்தின் அஸ்திவாரமே! லலிதாவும் சிறுசிறு வேலைகள் செய்து வந்தாலும் குடும்பத்தின் மூல வருமானம் நடராஜின் வேலையில் கிடைக்கும் வருமானம் தான்!
அளவான சம்பளம் என்றாலும் நிறைவான வாழ்க்கை! வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நல்லவிதமாக நடத்தி வந்தார்கள்.
என்ன நடந்தது எப்படி நடந்தது என்று தெரியவில்லை. தந்தையும் மகளும் வெளியில் கடைத்தெருவுக்குச் சென்று வந்து கொண்டிருந்த சமயம் கட்டுப்பாட்டை இழந்து வந்த லாரி ஒன்று மோதியதில் நடராஜ் சாலையோரம் தூக்கி வீசப்பட்டார்.
அத்தனை நேரமும் அருகில் நடந்து வந்து கொண்டிருந்த தந்தை தூர விழுந்திருப்பதைக் கண்டதும் வைஷுவிற்கு இதயமே நின்று விட்டது.
“ஐயோ… அப்பா…” என நெஞ்சில் அடித்துக் கொண்டு வேகமாக அவரிடம் ஓடினாள். அங்கே அவளின் தந்தையின் உயிர் துடித்துக் கொண்டிருந்தது.
சாலையோரத்தில் கேட்பாரற்று தன் தந்தையின் உயிர் துடிப்பதை எந்த மகளால் தான் பார்த்துக் கொண்டிருக்க முடியும்? அவளின் மொத்த சரீரமும் ஆட்டம் கண்டது.
“அப்பா… அப்பா…” என அழுதவளுக்கு அந்த சூழலில் என்ன செய்ய என்று கூட தெரியாதளவு அவள் மொத்தமாய் தன்னிலை மறந்து போயிருந்தாள்.
“ஏன்பா இப்படி ஆச்சு? எந்திரிங்க பா… உங்களுக்கு ஒன்னும் ஆகாது பா…” என கதறிக் கொண்டு இருந்தவள், தந்தையின் தலையிலிருந்து அதிகமாக ரத்தம் வழிவதை கண்டு பயந்து போனாள். வேகமாக தன் துப்பட்டாவை உருவி தந்தையின் தலைக்கு கட்டுப்போட்ட படி, “கடவுளே! பிளீஸ் அப்பாவுக்கு ஒன்னும் ஆகாம காப்பாத்துங்க…” என ஏதேதோ அரற்றிக் கொண்டே இருந்தாள்.
சுற்றிலும் கூட்டம் கூடிவிட்டது. ஆளாளுக்கு ஒன்று பேசிக் கொண்டிருந்தார்கள். எதுவும் அவள் காதில் ஏறவில்லை. யாரோ ஆம்புலன்ஸ் என்று சொன்னது மட்டும் காதில் விழுந்தது.
ஆம்புலன்ஸ் சீக்கிரம் வர வேண்டும் என்று அடிக்கடி சாலையைப் பார்த்துக் கொண்டாள். அப்பாவிற்கு என்ன ஆகுமோ என்ற அச்சம் மட்டுமே அவளுக்கு. வேறு எதையும் சிந்திக்கவே முடியவில்லை. அந்த சூழலில் என்ன செய்ய என்றும் புரியவில்லை.
ஆம்புலன்ஸ் வந்து நிற்க, அவளின் தந்தையை அதில் ஏற்றினர். இவளும் கூடவே ஏறினாள். தந்தையின் கையை பிடித்துக் கொண்டே அமர்ந்து வந்தவளுக்கு தந்தை எப்படியாவது மீண்டு விட வேண்டும் என்கிற பிரார்த்தனை தான்!
“உங்க வீட்டுல அம்மாகிட்ட சொல்லணுமே… நம்பர் கொடுங்க…” என்றொரு குரல். சித்தார்த் தான்! ஆனால், அவனை கவனிக்கும் நிலையில் அவள் இல்லை. அவனுமே தான்!
அழுதபடியே அம்மாவின் எண்ணை கொடுக்க, அவன் தான் அவளின் வீட்டிற்குத் தகவல் சொன்னான்.
அங்கு லலிதாவும் பதினைந்து வயதான பிரதீப்பை அழைத்துக் கொண்டு பதறித் துடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தார்.
தலையில் பட்டிருந்த பலத்த அடியின் காரணமாக வரும் வழியிலேயே நடராஜ் காலமாகியிருந்தார். ஆக்சிஜன் மானிட்டரில் அலைவரிசை எதுவுமின்றி இருக்க… வைஷ்ணவி ரொம்பவும் பதறிப் போனாள்.
ஆம்புலன்ஸில் இருந்த நர்ஸ் தான் முதலுதவி தந்தார். ஆனால், எந்த பிரயோஜனமும் இல்லை.
மகளால் அதனை ஏற்கவே முடியவில்லை. “அப்பா… அப்பா…” என கதறினாள்.
மருத்துவமனையை அடைந்ததும், எமெர்ஜென்ஸி டீம் பரிசோதித்து விட்டு நடராஜ் இறந்ததை உறுதிப் படுத்தினர்.
பையனும், பெண்ணும் சிறு வயதினர். லலிதா அம்மாவை பார்த்தாலும் சூழலை சமாளிப்பவர் போல தெரியவில்லை என்றதும், அங்கே மருத்துவமனை பார்மாலிட்டீஸ் மொத்தமும் பார்த்து, நடராஜின் இறந்த உடலை வீட்டுக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைப்பது வரை மொத்தமும் சித்தார்த் தான் பார்த்துக் கொண்டான்.
அவனுக்கு இயல்பாகவே யார் கஷ்டத்தில் இருந்தாலும் உதவி செய்யத் தோன்றிவிடும். பணம் தான் கணக்கில்லாமல் இருக்கிறதே! இப்படி இல்லாதவர்களுக்கும் கொடுப்பதால் என்ன ஆகிவிடும் என்ற எண்ணம் தான்! ஆனால், அதற்கு மனமும் இருக்க வேண்டுமே! அது அவனிடம் நிறையவே இருந்தது.
மருத்துவமனையில் நேரம் செல்ல செல்லத் தான் வைஷுவிற்கு சூழல் உரைத்தது. அன்னையும் தம்பியும் மிகவும் உடைந்திருக்க, தானும் அவர்களுக்கு இணையாய் அழுது கரைய… யாரோ ஒரு நபர் மொத்த உதவியும் செய்கிறாரே என்று தோன்றவும்… வைஷ்ணவி முன்னின்று என்ன ஏதென்று பார்க்கலாம் என்று எழுந்து வந்த நேரம், எல்லா பார்மாலிட்டீஸும் முடிந்து விட்டிருந்தது.
சித்தார்த்தைத் திரும்பி பார்த்தாள். அவனோ இங்கு எல்லாவற்றையும் முடித்த கையோடு கிளம்பி விட்டிருந்தான். எப்பொழுதும் தேவையறிந்து கேட்காமலேயே உதவி செய்பவன் அவர்கள் நன்றி சொல்லும் வரை எல்லாம் நின்றதே இல்லை.
செல்லும் அவனைத் தான் வைஷ்ணவி நன்றியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
இவன் இல்லாவிட்டால், நான் விபத்தை நேரில் பார்த்த அதிர்ச்சியில் செயலிழந்து நின்றதிற்கு சாலை ஓரத்தில் அல்லவா என் தந்தையின் உயிர் பிரிந்திருக்கும். அவரை காக்கச் சிறு முயற்சி எடுக்க முடிந்ததே! இப்பொழுதும் இங்கு உள்ள மொத்த பார்மாலிட்டீஸ்களையும் முடித்து உறுதுணையாக நின்றானே என எண்ணியவளின் உள்ளத்தில் அவன் உதவி மிகவும் உயர்ந்தது.
நடராஜின் இழப்பின் பிறகு குடும்பம் பட்ட கஷ்டம் மிகவும் கொடியது. இழப்பீடு, இன்சூரன்ஸ் என வந்திருந்த பணம் கடன் கொடுக்க வேண்டியவர்களுக்கே சரியாக போய்விட்டது.
லலிதா ஒரு புறம் முழு நேர வேலைக்குப் போக, வைஷ்ணவி காலையில் பேப்பர் போடுவது, பால் பாக்கெட் போடுவது போன்ற வேலைகளுக்குச் செல்ல… என குடும்ப வருமானத்திற்கு இருவரும் அவர்களால் ஆன வகையில் வழிவகை செய்தாலும், அது அடிப்படைத் தேவைகளைக் கூட முழுதாக தீர்க்கவில்லை.
பிள்ளைகளின் படிப்பு செலவு இருக்கிறதே என கொஞ்சம் சேமிக்கலாம் என நினைத்தால், மருத்துவ செலவு அல்லது வேறு ஏதாவது தவிர்க்க முடியாத செலவு என வந்துவிடும். லலிதா மிகவும் சோர்ந்து போனார். குடும்ப சூழலைச் சமாளிக்க முடியாமல் திணறினார். பல நேரங்களில் சாதத்தில் தண்ணீர் ஊற்றி சாப்பிடும் நிலை தான். ஒரு வேளை சாதத்தை மூன்று வேளைகள் வைத்து உண்டு கொண்டிருந்தனர்.
பிள்ளைகளுக்கும் வீட்டின் சூழல் புரிந்தது. அதற்கேற்ப நடந்து கொண்டனர். வயிறு நிறைய உண்பதை எல்லாம் விட்டுவிட்டுப் பசி தீர்வதற்காக அரை வயிறு உண்ணப் பழகிக் கொண்டனர். அது புரியவும் லலிதா இன்னும் துடித்துப் போனார்.
இந்த சூழலில் தான் வைஷ்ணவிக்கு அடுத்த செமஸ்டருக்கான கல்விக்கட்டணம் கட்ட வேண்டிய சர்க்குலர் வந்தது. என்ன செய்ய, ஏது செய்ய என ஒன்றும் புரியவில்லை. முடிந்த வரையிலும் தெரிந்த இடத்தில் எல்லாம் கடன் கேட்டுப் பார்த்தார்கள். எங்கும் பணம் ஏற்பாடாகவில்லை.
பணம் செலுத்த வேண்டிய கடைசி திகதி நெருங்கி விட்டது. நோட்டீஸ் போர்டில் பணம் கட்டாதவர்களின் பெயர்களை எல்லாம் போட்டு விட்டார்கள். இன்னும் ஒரு நாளில் பணம் கட்டவில்லை என்றால் அவளால் இனி கல்லூரி படிப்பைத் தொடர முடியாது.
வேறு வழியும் இல்லையே! அவளின் கல்வி தொடரும் என்ற நம்பிக்கை அவளுக்கு சுத்தமாக இல்லை. நெஞ்சம் நிறைந்து கிடக்கும் வேதனையைச் சொல்லி அழ கூட முடியாது. தாயும் தம்பியும் சேர்ந்து நொந்து போவார்களே!
அதோடு எதற்கென்று தான் அவளும் அழுவது? அழுது மட்டும் மாறப்போவது என்ன? அவர்களது நிலை இதுதான்! பேசாமல் படிக்கப் போகாமல் வேலைக்குச் சென்றால், தம்பியின் படிப்பிற்காகவாவது சேமிக்கலாம் என்றளவிற்கு அவளுக்கு யோசனை போய்விட்டது.
ஒரு மாதிரி தன் கல்வி கைவிட்டுப் போய்விடும் என்ற விரக்தி நிலை! இனி எதுவுமே செய்வதற்கில்லை என்று தன் மொத்த நம்பிக்கையையும் இழந்திருந்தாள்.
அந்த நேரத்தில் தான் சித்தார்த் கல்விக் கட்டணம் செலுத்த முடியாதவர்கள் அனைவருக்கும் அவனே கட்டணத்தைச் செலுத்தியிருந்தான்.
வைஷ்ணவிக்கு நோட்டீஸ் போர்ட்டில் அவள் பெயரோடு சேர்த்து கட்டணம் கட்டாதவர்கள் மீதம் ஐந்து பெயரின் பெயர்களும் நீக்கப் பட்டிருந்ததைப் பார்த்து பயங்கர அதிர்ச்சி.
எப்படி நாம் தான் இன்னும் பணமே கட்டவில்லையே என விசாரித்த போது தான் சித்தார்த் தான் கட்டினான் எனத் தெரிய வந்தது.
இதுவரை அந்த பெயரைக் கூட அவள் கேள்விப் பட்டதில்லை. முன்பின் தெரியாத யாரோ ஒருவன் இத்தனை பேருக்கும் கட்டணத்தைக் காட்டியிருக்கிறான் என்றால்?
ஆறு பேரும் அவனைத் தேடித் தான் சென்றார்கள். இந்த கல்லூரியில் அவன் கொஞ்சம் பிரபலம் போல… மற்ற ஐவருக்கும் அவனை நன்கு தெரிந்திருந்தது.
கட்டணம் கட்டாத சிலர் இந்த மாத இறுதிக்குள் அவன் கட்டிய பணத்தைத் திருப்பி தந்து விடுவதாகச் சொல்லி, அவனிடம் நன்றி சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
இவளுக்கு அப்படிக் குறிப்பிட்டு எந்த காலக்கெடுவும் சொல்ல முடியாதே! அனைவரும் கிளம்பியதும் அவனிடம் வெகுவாக தயங்கித் தயங்கி கொஞ்சம் கொஞ்சமாகப் பணத்தை திருப்பி தந்து விடுவதாகச் சொன்னாள்.
உண்மையில் அவசரத்திற்கு உதவி செய்தவரிடம் இப்படி தவணை கேட்பதற்கு அத்தனை சங்கடமாக இருந்தது. யாசகம் பெறுவது போல உடல் எல்லாம் கூசியது. இப்படி ஒருவரிடம் உதவி பெற்றுப் படிக்க வேண்டிய சூழலில் இருக்கிறோமே என மிகவும் குன்றிப் போனாள்.
இன்னும் கூட அவன் முகம் பார்க்கும் துணிவு அவளிடம் இல்லை. குனிந்தே தான் நின்றிருந்தாள்.
தன்னை ஏறிட்டுக் கூட பார்க்காமல், தயங்கித் தயங்கி பேசும் அந்த பெண்ணை சித்தார்த் வினோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். பணம் கட்டாதவர்களின் விவரங்களை எல்லாம் சேகரித்து, அவர்கள் உண்மையிலேயே இயலாதவர்கள் தானா என சரி பார்த்து விட்டுத் தான் அவர்களுக்கான கட்டணத்தைக் கட்டியிருந்தான். இவளுடைய தந்தை சமீபத்தில் விபத்தில் தவறிய தகவல் அவனுக்குத் தெரிந்து தான் இருந்தது.
இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவன் ஒருவனின் குடும்பச் சூழலும் கிட்டத்தட்ட இதே போலத்தான் என்பதால், இருவருக்கும் கட்டிய கட்டணத்தை சித்தார்த் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இப்பொழுது இவள் இத்தனை சங்கடப்படுவதைப் பார்த்ததும் பணம் வேண்டாம் என்று சொன்னால் இன்னும் குன்றி போவாளோ என்று தோன்றியதில், “அவசரம் எதுவும் இல்லை…” என்று மட்டும் சொன்னான்.
சட்டென்று கண்ணில் நீர் கோர்த்து விட்டது.
அவசரத்திற்கென்று அக்கம் பக்கம், உறவினர்கள் என யாரும் உதவி செய்யவில்லை. இவர்களின் குடும்ப சூழல் தெரிந்தவர்கள் என்பதால் பணம் திரும்பி வராது என்று எண்ணிக் கொண்டவர்கள் இவளின் கல்வி பொறுப்பை அது கடனாக என்றாலும் கூட ஏற்கத் தயாராக இல்லை.
அப்படியிருக்க யார் என்றே தெரியாத ஒருவன் உதவியும் செய்து விட்டு, பணம் திருப்பி தருவதற்கு அவகாசமும் தருகிறான். அவள் என்ன மாதிரி உணர்ந்தாள் என்றே சொல்ல முடியவில்லை.
சட்டென்று அவனை ஏறிட்டு பார்த்து, “தேங்க்ஸ்…” என்றாள் உணர்ச்சிவசப்பட்டவளாய்.
இதழ்கள் துடிக்க அவள் சொன்னதைப் பார்த்து மெலிதாக சிரித்துக் கொண்டவன், “நோ மென்ஸன்…” என கண் சிமிட்டி சொல்ல, அப்பொழுது தான் அவன் முகமே அவளுக்கு நினைவிற்கு வந்தது.
‘இவன்… இவன்… இவன் தானே தந்தையின் விபத்து சமயம் கூடவே நின்று வேண்டிய உதவி செய்தது’ அவள் அசைய மறுத்து அவனைப் பார்த்திருக்க,
“ஹே! இது எல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. இன்னைக்கு என்னால உனக்கு உதவி செய்ய முடியுது செய்யறேன். நாளைக்கு எனக்கு ஒரு கஷ்டம்ன்னா உனக்கு உதவி செய்ய முடியும்ன்னா நீ செய்ய மாட்டியா என்ன?” என்றான் இலகுவாக.
இத்தனை பேருக்கு உதவியிருக்கிறான் என்றாலே அவனின் பண செழுமை எவ்வளவு என நன்றாக தெரிகிறதே! அவனுக்கு தன்னால் அப்படி என்ன உதவி செய்துவிட முடியும்? இருந்தும் தன் தவிப்பை சங்கடத்தைப் போக்க இப்படி கேட்கிறான்… எவ்வளவு பெரிய மனிதத்தனம்?
“என்ன உன்னால எனக்கு என்ன உதவி செய்ய முடியும்ன்னு குறைச்சு எடை போடறியா?” என சிரித்தபடி கேட்க, யோசிப்பதை அப்படியே கண்டுபிடித்துக் கேட்டு விட்டானே என்ற அவஸ்தையில் கீழுதட்டை கடித்துக் கொண்டாள்.
“அப்படி எல்லாம் குறைச்சு எடை போடாத… நிறைய ஹெல்ப் பண்ணலாம்… எனக்கு ஒரு ஆக்சிடெண்ட்… நீ பிளட் தரணும்ன்னு வெச்சுக்க…” என அவன் பேச,
வேகமாக இடையிட்டவள், “ஏன் சீனியர் இப்படி எல்லாம் சொல்லறீங்க?” என்றாள் பதறிப் போனவளாக.
அவனுக்கு சிரிப்பு தான் வந்தது. பொதுவாக வீட்டில் இருக்கும்போது தான் இப்படி எல்லாம் பேச விட மாட்டார்கள். அம்மா முறைத்துக் கொண்டு நிற்பார். ஆனால், நண்பர்களிடம் இதை விட மோசமான எடுத்துக்காட்டு கூட சொல்லி பேசிக் கொள்வார்கள். இவளானால் ஒரு பேச்சுக்கு சொன்னதிற்கே வயதானவர்கள் போல பதறி துடிக்கிறாளே என்று எண்ணியவன், “ஹாஹா… எங்க அம்மாவே உனக்கு பரவாயில்லை போல…” என அவளைச் சீண்டி விட்டு, “சரி எனக்கு அசைன்மெண்ட் எழுதணும்ன்னு வெச்சுக்க… உன்கிட்ட கேட்டா எழுதி தர மாட்டியா என்ன?” என புருவம் உயர்த்தி கேட்க,
“கொஞ்சம் முன்னாடியே தந்துடுங்க சீனியர். உங்க கையெழுத்து மாதிரி எழுதணுமே… அப்ப தானே மாட்டிக்க மாட்டீங்க. கொஞ்சம் நேரம் எடுத்துக்கும்…” என்றாள் சின்சியராக. அவன் ஒரு பேச்சிற்கு சொல்கிறான் என்று கூட யோசிக்காதவளாய் மிகவும் பொறுப்பாய் பதில் சொன்னவளின் அறியாமை அவனை ஈர்த்தது.
ஒன்றும் பேசாமல் கண்களில் ரசனை மிக, அழகான சிரிப்புடன் அவளையே சித்தார்த் பார்த்திருக்க, அதில் திணறியவள், “என்னாச்சு சீனியர்?” என்றாள் குழப்பமாக.
“ம்ப்ச்… ஒன்னும் இல்லை… அசைன்மெண்ட் கொடுத்ததும் உங்கிட்ட கொடுக்கிறேன்… முடிச்சு கொடுப்பியாம்…”
“கண்டிப்பா சீனியர்… வீட்டுல கொஞ்சம் காசு சேர்த்து வெச்சிருக்கேன். நாளைக்கு வரும்போது கொண்டு வந்து தரேன்…” என்று விட்டு சென்றுவிட, செல்லும் அவளையே தான் பார்த்திருந்தது அவனது விழிகள்.
அவன் கடந்து வந்த பெண்களில் வைஷ்ணவி மிகவும் வித்தியாசமாக அவனுக்குத் தோன்றினாள். அவளின் சுயகௌரவத்தை மதித்தான். அறியாமையை ரசித்தான். எதையாவது பதிலுக்குச் செய்ய வேண்டுமே என்ற அவளின் தவிப்பு அவனுக்கு அத்தனை பிடித்திருந்தது.
அவளுக்காக கட்டிய கட்டணம் அவனுக்கு ஒரு பெரிய பணமே இல்லை. ஆனால், அவளின் இயலாத நிலையிலும் அதனைத் திருப்பி தந்தே ஆக வேண்டும் என்று நினைக்கிறாளே என்று அவனுக்கு வியப்பாக இருந்தது.
ஆக மொத்தம் அவன் மனதில் முதல் சந்திப்பிலேயே ஆழமாகத் தடம் பதித்திருந்தாள் பெண்ணவள்.