மணி இப்பொழுதே ஒன்பதை தாண்டி விட்டது. இன்னும் பிள்ளைகள் சாப்பிடவில்லை.. முதலில் பிள்ளைகளுக்கு போட்டு ஊட்டி விடலாம் என்றாலோ
” ஏன் கொஞ்ச நேரம் கூட உன் பிள்ளைங்க பசி பொறுக்காதா? பெரியவங்க சாப்பிட்டு போனதுக்கு அப்புறம் தான் சின்னவங்க சாப்பிடணும். இதலாம் எங்க உனக்கு புரிய போது.. நல்ல குடும்பத்தில இருந்து வந்திருந்தா தானே நல்லது தெரியறதுக்கு..” சுருக்கென்ற வார்த்தைகள் அவளுக்கு வேண்டுமானால் பழகிருக்கலாம்..
ஓரிருமுறை பசி பொறுக்க முடியாமல் மற்றவர்கள் சாப்பிடும் முன்பே அம்மாவை நச்சரித்து உணவை ஊட்டச் சொல்ல, தன்னுடைய தீச்சொற்களால் குழந்தை மனதை பெரிதும் பாதிப்படைய வைத்திருந்தார் விசாலாட்சி.
அன்றிலிருந்து விசாலாட்சியே சொன்னாலும் குழலி முதல் ஆளாக சாப்பிட மாட்டாள்.. பசிக்கிறது என்று அழும் தங்கையையும் சமாதானப்படுத்தி சாப்பிட விடவும் மாட்டாள்.. இவ்வளவு சிறிய வயதில் தன்னுடைய குழந்தைகள் பக்குவப்பட்டு இருப்பதை எண்ணி வேதனையோடு சந்தோஷப்பட்டுக் கொள்வாள் தென்றல்.
வெளியே கார் நிறுத்தும் சத்தம் கேட்டது.. அதனைத் தொடர்ந்து விசாலாட்சியின் இளைய மகன் தேவாவும் மருமகள் தர்ஷினியும் அவர்களின் நான்கு வயது மகன் வருணோடு உள்ளே வந்தார்கள்..
வேகமாக ஓடி வந்த வருண் பாட்டி மீது தாவினான். அவனை வாரி அணைத்துக் கொண்டார் விசாலாட்சி.
“வருணு குட்டி.. படம் பாத்துட்டு வந்தாச்சா..”.. பேரனின் கன்னத்தில் முத்தமிட்டார். ஹாலின் ஒரு மூளையில் அமர்ந்து தென்றல் வாங்கித் தந்திருந்த வர்ண புத்தகத்தில் வர்ணம் தீட்டிக் கொண்டிருந்த குழலி மற்றும் கொடி கண்ணில் இக்காட்சி விழ இருவரின் பார்வையும் வருண் மீது ஏக்கத்துடன் கூடிய பொறாமையோடு பதிந்தன.
“அம்மா நீ சாப்டியா.. தர்ஷி அம்மாவுக்கு வாங்கிட்டு வந்த பார்சல் கொடு..”தேவா சொன்னதும் தாங்கள் வாங்கி வந்த பார்சல் கொடுக்க அதில் கேஃசி சிக்கன்ஸ் இருந்தன..
“என்னது அந்த பொரிச்ச கோழியா? எதுக்குடா வீண் செலவு?”அங்கலாய்தார் விசாலாட்சி.
“எல்லோருக்கும் இருக்கு அத்தை..தினமுமா வாங்குறோம்.. எப்பையாவது தானே?”தர்ஷினி சொல்லிக் கொண்டிருக்கும் போதே வருண் அக்காமார் பக்கம் ஓடி விட்டான்..
“க்கா என்ன பண்ற.. டிரைவிங்கா”.. கண்கள் விரிய பார்த்தான் வருண்..
“எனக்கு”அக்காக்கள் இருவரும் புது வர்ண பென்சில்கள் கொண்டு வர்ணம் தீட்ட தனக்கு இல்லையே என்று ஏக்கம் கொண்டது பிஞ்சு மனம்.. அவனின் ஸ்டடி டேபிள் உடைந்து விடும் அளவுக்கு தர்ஷினி வாங்கி அடுக்கி வைத்திருப்பது வசதியாக மறந்து போக அவனின் ஏக்கம் கண்டு
“அம்மா உனக்கும் தான் வாங்கிட்டு வந்துருக்காங்க வருணு”சொன்ன குழலி வருணுக்கு தென்றல் வாங்கி வந்திருந்த புது வர்ண பென்சில்களை கொடுக்க அவனுக்கு ஒரே குஷி.
அதனிடையே மாமியாரோடு பேசிக் கொண்டிருந்த தர்ஷினியின் விழிகள் குழலி மற்றும் கொடி மீது விழ
” அத்தை சிக்கன் ஆறி போயிட போகுது. அப்படியே பசங்களுக்கும் நீங்களே வச்சு கொடுத்துடுங்க. ஆளுக்கு ஒன்னு ஒன்னு வச்சு கொடுங்க. சாப்பிடாம வேஸ்ட் பண்ணிடுவாங்க. ஒரு பீஸ் சிக்கன் என்ன விலை தெரியுமா? ” தென்றலை ஓரக்கண்ணில் பார்த்தபடி தர்ஷினி கூறினாள்.
” நீயே வச்சு கொடுத்துடு மா.. எனக்கு ரொம்ப வேணாம் சின்ன பீஸ் போதும்.. ” விசாலாட்சிக்கு நல்ல கட்டம் சீரியலில் போகிறதே என்கிற வருத்தம்.
தென்றலை தாண்டி டைனிங் டேபிள் பக்கம் சென்ற தர்ஷினி வேண்டுமென்றே மிகச்சிறிய கேஎஃப்சி கோழிதுண்டினை தேடி எடுத்து தட்டில் வைத்தாள்.. அதனை எடுத்துச் சென்று குழலி மற்றும் கொடியிடம் நீட்ட பூங்கொடியின் கைகள் வேகமாக நீண்டது தட்டை வாங்க.
குழலிக்கு தர்ஷினியின் உள்நோக்கம் முழுதாக புரியாவிட்டாலும் இருப்பதிலேயே ஆக சிறிய கோழி துண்டாக சித்தி வைத்து கொடுப்பது அவளுக்கு புரிந்தது.. அவளின் குழந்தை மனம் அதில் அடி வாங்கியது.
கொடியின் கையை இறுக்கமாய் பிடித்துக் கொண்ட குழலி ” எங்களுக்கு வேணாம் சித்தி அம்மா சப்பாத்தி செஞ்சிருக்காங்க நாங்க அதுவே சாப்பிடுறோம்.. ” தர்ஷினியின் முகம் கறுத்து சுருங்கியது..
” பாத்தீங்களா அத்தை.. நான் என்ன விஷத்தை வச்சு நீட்டுறேன்.. நான் எது வாங்கி கொடுத்தாலும் சாப்பிடக்கூடாதுன்னு உங்க மகன் சொல்லி இருப்பாரு.. சம்பாதிக்க துப்பு இல்லாட்டியும் இந்த ரோஷத்துக்கு மட்டும் உங்க பெரிய மகனுக்கு கொறச்சல் இல்லை” தர்ஷினியின் குரல் அந்த வீட்டில் ஓங்கி உயர்ந்தது.
வலுக்கட்டாயமாக பார்வையை சீரியலில் இருந்து பிடுங்கி தர்ஷினி மீது செலுத்தினார் விசாலாட்சி. நடப்பதை நொடியில் கணித்து விட்டார். அனைவரது பார்வையும் இப்பொழுது தென்றல் முகத்தில் நிலைத்திருந்தது.
அத்தனை பேர் கூடி இருக்க பிள்ளைகள் முன்பு தர்ஷினி தன்னுடைய கணவனைப் பற்றி பேசியது தென்றலுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
” தர்ஷினி நீங்க என்ன வாங்கிட்டு வந்து கொடுத்தாலும் உடனே சாப்பிடணும்னு சட்டம் ஏதாச்சும் இருக்கா? சிக்கன் சாப்பிட்டா எப்படி பிள்ளைங்க சப்பாத்தி சாப்பிடும்? இல்ல நீங்க வாங்கிட்டு வர போறீங்கன்னு முன்கூட்டியே சொன்னீங்களா.. ஏற்கனவே பசியில இருக்குற பிள்ளைங்களுக்கு பெரிய மனசு பண்ணி கொடுக்கிற ஒரு துண்டு கோழி எம்மாத்திரம்? என் பிள்ளைகளுக்கு சப்பாத்தி போதும் தர்ஷினி..
இன்னொரு விஷயம் என் புருஷன் வேலைக்கு போறாரு போகல அத பத்தி கவலைப்பட வேண்டியது நான்..நீங்க கிடையாது.” நறுக்கு தெறித்தார் போல பதில் வந்தது தென்றலிடமிருந்து.
தர்ஷினிக்கு வந்த கோபத்தில் கையில் இருந்த தட்டை விசிறி அடித்தாள் தரையில்.. பிள்ளைகள் மூவருமே அரண்டு போயினர். வருணின் கையில் இருந்த வர்ணப் பென்சிலை வலு கட்டாயமாக பிடுங்கி தென்றலின் காலடியில் விசிறி எறிந்தாள்.
” தர்ஷினி என்னம்மா இது? யாராச்சும் விளக்கு வச்சதுக்கு அப்புறம் இப்படி சாப்பாட வேஸ்ட் பண்ணுவாங்களா? உன் மாமா பார்த்து இருந்தா என்ன ஆயிருக்கும்.. எல்லாம் உன்னால தான்.. வாங்கியும் கொடுக்க மாட்ட. அடுத்தவங்க வாங்கி கொடுத்தாலும் பிள்ளைகளை சாப்பிட விடமாட்ட. என்ன கேடுகெட்ட புத்தியோ தெரியல.
இதெல்லாம் உன்னால வாங்கி கொடுக்க முடியுமா.. அவ யாரு சித்தி தானே.. அவ பிள்ளைக்கு வாங்கி கொடுத்த மாதிரி நல்ல மனசோட உன் பிள்ளைகளுக்கும் வாங்கிட்டு வந்தா அவள அவமானப் படுத்துற.. எங்க இருக்கணுமோ அங்க இரு.. எல்லாம் என் தலையெழுத்து.. உன்ன சொல்லி என்ன இருக்கு.. அவசரத்துக்கு கைய நனச்சோமா அப்படியே கழுவிட்டு வந்தமான்னு இல்லாம தாலி கட்டி நடு வீட்டுக்கு கூட்டிட்டு வந்து வெச்சா இப்படித்தான் நாட்டாமை பண்ண சொல்லும்.. ” விசாலாட்சியின் வார்த்தைகள் அம்பாய் தென்றலின் மனதை குத்தி கிழித்தன.
தேவா யார் பக்கமும் பேசாமல் அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்..
“ஹேய்.. ஒழுங்கா ரெண்டு பேரும் அந்த சிக்கனை எடுத்துட்டு வந்து சாப்பிடுறீங்க.. காசு என்ன உங்களுக்கு மரத்துலயா காய்குது..போங்கடி இல்லனா சூடு வெச்சிருவேன்” விசாலாட்சியின் அதிகாரத்தில் பூங்குழலியும் பூங்கொடியும் செய்வதறியாமல் நிற்க அவரின் கூற்றைக் கேட்டு தென்றலுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது.
” அத்தை நான் உயிரோடு இருக்கிற வரைக்கும் என் பிள்ளைங்க கீழே கிடக்கிறது பொறுக்கி திங்கிற அளவுக்கு விட்ர மாட்டேன்..”
” என் பிள்ளைங்களா தட்ட தூக்கி வீசுச்சுங்க.. உங்க ஆசை மருமக தானே அப்படி பண்ணா அவளை கேளுங்க..” கேட்டு விடுவாரா விசாலாட்சி. கோடீஸ்வர சம்பந்தம் அல்லவா. அதனால் வாயை இறுக்கமாக மூடிக்கொண்டார்..
விசாலாட்சியின் கோபம் எல்லை கடந்தது. தர்ஷினியை எதுவும் செய்ய முடியாது. வாய் தவறி ஒரு வார்த்தையை தவற விட்டாலும் அடுத்த கணம் அவளது சொந்தபந்தம் அத்தனையும் வீட்டு முன்பு கூடி விடும். எனவே கேட்பதற்கு நாதி இல்லாத மூத்த மருமகள் அவரது கோபத்திற்கு இறையானாள்.
” என்னடி நானும் பாக்குறேன் வாய் நீளுது… இழுத்து வச்சு அறுத்துருவேன் பாத்துக்கோ. இந்த வேலையெல்லாம் வேற யார் கிட்டயாச்சும் வச்சுக்கோ. இந்த வீட்ட பொருத்தவரைக்கும் நீ வேலைக்காரி. நாங்க போடறத திங்கிற வேலைக்காரி. ஏதோ பிள்ளைங்க இருக்கே அதுங்கள வளக்கணுமேனு தான் உன்னை வேலைக்கு அனுப்புறோம்.. ரொம்ப நேரம் ஆகாது உன்னை வேலையை விட்டு நிறுத்த.. உன் பிள்ளைங்க என்ன ராஜா வீட்டு பிள்ளைங்களா?
எத்தனை தடவை வருண் சாப்பிட்டு போட்ட முட்டாய் சாக்லேட் எடுத்து தின்னுருக்குங்க.. வேலைக்கு போய் நாலு காச கண்ணுல பார்த்ததும் தன்மானம் தல தூக்குதோ.. ஒழுங்கு மரியாதையா நான் சொல்றதை கேட்டு இருக்கிறதுனா இரு. இல்லன்னா இப்பவே வீட்டை விட்டு வெளியே போ உன் பிள்ளைகளை கூட்டிட்டு..” தென்றலால் அது முடியாதே. முடிந்திருந்தால் அவள் எப்போதும் அந்த நல்ல விஷயத்தை செய்திருப்பாளே. எதற்கு இவர்களிடம் இப்படி அவமானப்பட்டு கூனி குறுக வேண்டும்?
” என்ன சில மாதிரி நிக்கிற.. விளக்கு வச்ச வீட்டில சாப்பாட வீணாக்க கூடாது.. போயி அந்த கோழி துண்டை எடுத்து நீயாவது தின்னு. உன் மாமா வந்தா பெரிய பிரச்சனை ஆயிடும். ” விசாலாட்சியின் அதிகார குரல் அந்த வீடு முழுவதும் எதிரொலித்தது..
ஆடாமல் அசையாமல் சிலை போல் நின்று கொண்டிருந்தாள் தென்றல். அவளுக்குள் பெரும் பிரளயமே ஏற்பட்டுக் கொண்டிருந்தது.
” என்னடி மசமாசன்னு.. சீக்கிரம்.. காலா காலத்துக்கு வயசானவங்க சாப்பிட்டு படுக்க வேண்டாமா.. பொழுது போய் பொழுது வந்தா தினம் ஏதாவது ஒரு பிரச்சனை இந்த வீட்டில. எந்த நேரத்துல நீ மூதேவி மாதிரி இந்த வீட்டுக்குள்ள கால் எடுத்து வச்சியோ அப்ப போனுச்சு இந்த வீட்டோட நிம்மதி.. சீக்கிரம் போடி.. ” தென்றல் நிமிர்ந்து தர்ஷினியை பார்த்தாள்.. கண்கள் பளபளப்பாக செருக்கோடு நின்று கொண்டிருந்தாள் தர்ஷினி.
கொடியும் குழலியும் கண்ணீரோடு தென்றலை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.ஒரு முடிவுக்கு வந்த தென்றல்
” குழலி பாப்பாவ கூட்டிட்டு ரூம்ல போய் இரு.. அம்மா சாப்பாடு போட்டு எடுத்துட்டு வரேன்.. ” குழலி கொடியை அழைத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.
தென்றல் கீழே துண்டுகளை எடுத்து குப்பை தொட்டியில் வீசினாள்.. கையோடு அந்த இரண்டு கோழி துண்டுகளுக்கான பணம் எவ்வளவு என்று புரியாமல் குத்து மதிப்பாக ஒரு தொகையை மேஜை மீது வைத்தாள்.. வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி அவள் எவ்வளவு சேமிக்க முயன்றாலும் விதி அவளோடு விளையாடுவதை விருப்பமாய் கொண்டிருந்தது..
அவள் அழவில்லை. யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை.. தர்ஷினியின் முகத்தில் இப்பொழுது மகிழ்ச்சி தென்பட்டது. குரூரமாக தென்றலின் அவமானத்தை ரசித்தவள் தேவாவுக்கு கண் காட்ட குட்டி நாயாக மனைவியின் பின்னே அவனும் மறைக்கும் நுழைந்தான் வருணை தூக்கிக்கொண்டு..
பணக்கார மருமகளுக்காக முதல் மருமகளை அவமானப்படுத்திய குற்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லாமல் மீண்டும் சீரியலில் கவனம் செலுத்தினார் விசாலாட்சி.
அந்த நேரம் வாசல் பக்கம் யாரோ வாந்தி எடுக்கும் சத்தம்.
“ம்க்கும் வந்துட்டான் உன் அருமை புருஷன். எப்படி எல்லாம் வளர்த்தேன் என் பையனை.. பிடிவாதமா உன்ன கட்டி சீரழிஞ்சு போயிட்டான்..” வாந்தி எடுத்து தரையில் விழுந்து கிடந்த மகனை சட்டை செய்யாமல் சீரியலில் கவனமாய் இருந்தபடி விசாலாட்சி கூற வேகமாய் வாசலுக்கு விரைந்த தென்றலின் மனம் கசங்கி போனது.
அங்கே அவளின் காதல் கணவன் சசி என்கிற சசி மித்ரன் முழு போதையில் வாந்தி எடுத்து அதனில் விழுந்து புரண்டு கொண்டிருந்தான்.