ஒரு நாளுக்காக பெங்களூர் சென்று திரும்பி வர முடியாது என்பதால், வீட்டில் இருந்து வேலை பார்க்க கேட்டாள்.
நிச்சயம் கோவம் கொள்வார் என்று தெரியும். ஆனால் அவரோ எடுத்ததும் ஹைபிட்சில் ஆரம்பித்து வைத்தார்.
“என்ன சொல்றார்?” மகளின் பாவனையில் தந்தை முகம் மாறியது.
“ஒன்னுமில்லை. நீங்க கிளம்புங்க” என்று தந்தைக்கு கையசைத்தாள்.
“நீ பேசி முடி முதல்ல” அங்கேயே நின்றார் குருமூர்த்தி.
“இதுதான் லாஸ்ட் வார்னிங். நான் உங்களுக்கு கொடுத்த வேலை முடிச்சு எனக்கு ரிப்போர்ட் வந்தாகணும்” என்று போன் கட்டாக, சம்யுக்தா முகத்தை சாதாரணமாக வைத்தபடி, “சரி சொல்லிட்டார்ப்பா” என்றாள்.
“நாம இதைப்பத்தி திறப்பு விழா முடிச்சுட்டு பேசுறோம்” என்ற குருமூர்த்தி போன் வரவும் வெளியே கிளம்பிவிட்டார்.
திரும்ப வேலைக்கு போவேனா நான்? சம்யுக்தாவிற்கு சந்தேகமே.
“பாப்பா. நான் இந்த லிஸ்ட்ல இருக்க பொருள் எல்லாம் வாங்க போகணும். உன்னை வீட்ல விட்டுட்டு போகவா?” என்று மாசிலாமணி கேட்க,
அவர்கள் இடம், சுற்றிலும் அவர்கள் ஆட்கள் என்பதால் மணி அவள் பேச்சை ஏற்றுக்கொண்டு கிளம்பினார்.
ரோஹன் அந்த நேரம் அங்கு வந்தவன், “ஹாய்” என்றான்.
சம்யுக்தா அவன் திடீர் வருகையில் ஜெர்க் ஆனாலும், “ஹலோ சீனியர்” என்றாள்.
“தேங்க் காட். ஞாபகம் இருக்கு. நான் கூட மறந்திருப்பேன்னு நினைச்சேன்” அவன் பெரிதாக நிம்மதியை வெளிப்படுத்தியவன், “எப்படி இருக்க? எல்லாம் ஓகேவா?” என்று விசாரித்தான்.
சம்யுக்தா அவனுக்கு பதில் சொல்லி அவனையும் நலம் விசாரிக்க, “ம்ஹூம். நான் நல்லா இல்லை” என்றான் ரோஹன்.
சம்யுக்தா இதென்ன என்று பார்க்க, “செகண்ட் டைம்” என்றான்.
“என்ன?” பெண் புரியாமல் கேட்க,
“என்னை துரத்துறது”
குருமூர்த்தி ஊட்டியை விட்டு அவனை அனுப்பியது தெரியும். அதற்கான குற்ற உணர்ச்சியும் பெண்ணுக்கு உண்டு. ஆனால் இரண்டாவது முறை?
“சோ மேடம்க்கு தெரியாது” என்று தானே அவளின் கேள்வியான பார்வையில் புரிந்து கொண்டவன்,
“என் கம்பெனி அக்ரீமெண்டை எம்பையர் கேன்சல் பண்ணியிருக்கு. எம்பையர்ல இடம் இல்லைன்னு மெயில் வந்திருக்கு” என்றான் ரோஹன்.
சம்யுக்தாவிற்கு இந்த தகவல் புதிது. “உங்க கம்பெனி உள்ள வந்ததும் எனக்கு தெரியாது. வெளியே போனதும் எனக்கு தெரியாது” என்றாள்.
“இன்னும் எத்தனை வருஷத்துக்கு நான் இதை எல்லாம் பேஸ் பண்ணனும்?” ரோஹன் கேட்க, சம்யுக்தாவிடம் பதில் இல்லை.
குருமூர்த்தி சம்மந்தப்பட்ட விஷயம் ஆகிற்றே!
சம்யுக்தா மௌனம் காப்பது ரோஹனை பாதித்திருக்க வேண்டும். அவனிடம் சீறலான மூச்சு.
மெயில் வந்த நிமிடம் முதல் குருமூர்த்தியை தொடர்பு கொள்ள இந்த நொடி வரையிலும் முயல்கிறான்.
குருமூர்த்தி சிறிதும் இடம் கொடுக்க மாட்டேன்னு என்று நிற்க, ரோஹன் நேரே கிளம்பி வந்துவிட்டான்.
“உன் அப்பாவோட ரிஜெக்ஷனை என்னால ஹாண்டில் பண்ண முடியலை. ஒரு மாதிரி டெஸ்பேர்ட் ஆகுது சம்யுக்தா. ஏன் இதை உட்கார்ந்து நம்மால சார்ட் அவுட் பண்ண முடியாது. நல்ல முறையில முடிச்சுக்கலாம் தானே? நீ சொல்லு?” என்று இவளிடம் கேட்டான்.
லிங்கமும் அதுதான் கேட்கிறார். சண்முகத்துடன் நல்ல முறையில் போய்விடு என்று நெறுக்குகிறார்.
ரோஹனும் இப்போது அதையே சொல்ல, சம்யுக்தாவிற்கு தலை வலிக்க ஆரம்பித்தது.
அவளை பொறுத்தவரை சண்முகத்தின் மீதும், அவர் குடும்பத்தின் மீதும் அவளுக்கு எந்தவிதமான கோவமும் இல்லை.
“எனக்கு தெரியும் மன்னிக்கிற மாதிரி எந்த தப்பையும் என் தாத்தா பண்ணலை. பட் அவரோட தப்புகளுக்கு நானும், என் அப்பாவும் பரிகாரம் செஞ்சுட்டே தான் இருக்கோம். ஊட்டியை விட்டு உன் அப்பா என்னை துரத்தும் போதும் சண்டை போடலை நான். அப்படியாவது உன் அப்பா சமாதானம் ஆகட்டும்ன்னு நினைச்சேன். பட் அவர் அப்படியே தான் இருக்கார். இரண்டாவது முறையும் என் துரத்துறார். என்னால இதை அக்சப்ட் பண்ணிக்க முடியல சம்யுக்தா” என்றான் ரோஹன்.
“அப்பா விஷயத்துல நான் தலையிட முடியாது சீனியர்” சம்யுக்தா சொல்ல,
“நீ எங்களை மன்னிச்சுட்டியா?” என்று கேட்டான் ரோஹன்.
“எப்போவும் உங்க யார்மேலயும் எனக்கு கோவம் இருந்தது இல்லை”
“சீரியஸ்லி” ரோஹன் கேட்க,
“உண்மையை தான் சொல்றேன் சீனியர்.” என்றாள் சம்யுக்தா.
“காட். கோவம் இல்லையா?” ரோஹன் முகம் அப்படியே மத்தாப்பாய் மலர்ந்து போனது.
அவன் மகிழ்ச்சியின் அளவை, அவன் விரிந்த புன்னகை சொன்னது.
“இப்போதான் ரிலீஃபா இருக்கு, பெரிய பாரமே இறங்கி, லைட்டா பீல் பண்றேன். தேங்க் யூ, தேங்க் யூ சோ சோ மச்” என்று ரோஹன் பெண்ணின் கையை தானே பற்றி கொள்ள, சம்யுக்தா திகைத்து அவனிடம் இருந்து கையை உருவி கொண்டாள்.
சர்வாச்சார்யா பெரிய மாமா சத்தியன், “மருமகனே. சண்முகத்தை விட நாம தான் குருமூர்த்திக்கு எதிரியா என்ன?” என்று கேட்டார்.
“என்ன சொல்றீங்க மாமா?” என்று கேட்ட சர்வாச்சார்யா கண்கள் மொபைலையே பார்த்திருந்தது.
சம்யுக்தா கைப்பற்றிய ரோஹன் அவன் திரை முழுதும் நிறைந்திருந்தான்.
“இல்லை சண்முகத்தை திறப்பு விழாக்கு கூப்பிட்டிருக்கார் வளரும் தொழிலதிபர் குருமூர்த்தி. உன்னை கூப்பிடலையே. அதான் சண்முகத்தை விட நீதான் அவருக்கு பெரிய எதிரியான்னு கேட்டேன்” என்றார் சத்தியன்.
“ஓஹ்” என்ற சர்வாச்சார்யா புருவங்கள் சுருங்கியது. அவன் பதிலை எதிர்பார்த்து சத்தியன் நிற்க, சர்வாச்சார்யா மொபைலை பார்த்த வண்ணம் கிளம்பிவிட்டான்.
அங்கு எம்பையரில், “ஸாரி. ஸாரி. எக்ஸைட்மென்ட்ல பண்ணிட்டேன்” என்ற ரோஹன்,
“தாத்தா உனக்கு பண்ணது ரொம்ப அதிகம். தரம் தாழ்ந்து போய், ம்ம். குற்ற உணர்ச்சி மட்டுமில்லாமல் அசிங்கமா கூட பீல் பண்ணியிருக்கேன்” என்று உண்மையான வருத்தத்துடன் சொன்னான்.
“இல்லை. நீங்க அப்படி எல்லாம் நினைக்க தேவையில்லை. விட்டுடுங்க” என்றாள் சம்யுக்தா.