ஏழு வருடங்கள் காக்க வைத்து, தன் பொன் வயிற்றில் வரமாய் வந்து பிறந்த ஜெயக்கிருஷ்ணன் மீது, கனகாவிற்கு அத்தனை பிரியம்.
கனகாவின் எல்லாமும் அவரின் மகன் தான் என்று சொன்னால் மிகையாகது!! அப்படி அவரின் உலகமாய் இருந்தவன், ஒருநாள் இந்த உலகத்தில் இனி இல்லவே இல்லை எனும் நிலை வந்த பொழுது கனகாவால் அந்த உண்மையை சிறிதும் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.
அன்று அத்தனை சந்தோஷத்துடன் தனக்கு முத்தம் பதித்துவிட்டு போனவனை அடுத்து உயிரற்ற பிணமாகத் தான் பார்ப்போம் என அவர் கனவிலும் நினைத்திராதலால், மிகுந்த அதிர்ச்சியில் ஒரு வித மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்தார்.
ஜெய்யின் தந்தைக்கும் தம்பிக்கும் அதே அளவு வருத்தமும் அதிர்ச்சியும் இருந்தபோதும், காலங்கள் செல்லச்செல்ல நிதர்சனத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொள்ளத் துவங்கி, ஜெய்யின் மறைவு தந்த துயரில் இருந்து தாங்கள் வெளிவந்து விட்டதாக அவர்களை அவர்களே நம்ப வைத்துக் கொண்டு வாழ்க்கையை கடத்திக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் அவர்களைப் போல் அவ்வளவு எளிதில் அதைக் கடந்து வர முடியாத கனகாவோ, சுத்தமாகத் தன் பேச்சைக் குறைத்துக்கொண்டு எந்நேரமும் ஜெய்யுடனான நினைவுகளிலே வாழ்ந்து கொண்டிருந்தார்.
சொந்த பந்தங்களும் ஊராரும், நிலா வந்த நேரம் தான் இப்படி ஆகிவிட்டது என மனசாட்சி இல்லாமல் இயற்கையாக நடந்த அசம்பாவிதத்திற்கு அவள் மீது பழியைத் தூக்கி போட்ட போதும், ஜெய்யின் குடும்பம் இன்றுவரையிலும் அவளைக் காயப்படுத்தும்படி சிறு சொல்லும் உதிர்த்ததில்லை.
ஜெய் என்பவன் இருந்தாலும் மறைந்தாலும், அவனுக்குண்டான அன்பும் உரிமையும் அவனின் மனைவிக்கு என்றும் அவ்வீட்டில் உண்டு என்பதை ஜெய்யின் வீட்டார் இத்தனை வருடங்களாக அவர்களுக்கு உணர்த்திக் கொண்டு தான் இருக்கின்றனர்.
விஷ்வாவுடன் சேர்ந்து ஜெய் தொடங்கிய கல்லூரி என்பதால், இன்று வரையிலுமே கல்லூரியில் இருந்து வரும் லாபப் பணத்தை ஜெய்யின் குடும்பத்தாருக்கு அவன் முறையாக அனுப்பிவிட, அவர்களும் அதில் பாதி பகுதியை ஜெய்யின் மனைவியான நிலாவிற்கு மறக்காமல் அனுப்பிவிடுவர்.
இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் அவள் இன்னும் தங்கள் மருமகள் என நிலன்யாவிற்கு அவர்கள் உணர்த்திக் கொண்டே இருக்க, அவளால் எப்படி அவ்வளவு எளிதில் நடந்ததை மறந்துவிட்டு இன்னொரு வாழ்க்கையில் அடி எடுத்து வைக்க முடியும் என அவர்களுக்குப் புரியவே இல்லை.
நிலாவிற்கு இன்னொரு திருமணம் செய்ய விரும்புகிறோம், அவள் தான் பிடிக்கொடுக்கவில்லை என முறையாக இவர்களிடம் முன்பே குணா தம்பதிகள் தகவல் சொல்லியிருக்கிறார்கள் தான்.
மகனின் இடத்தில் வேறொருவனா என பெற்றவர்களின் நெஞ்சம் கனத்தாலும், வாழவேண்டிய வயதில் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு நிற்கும் நிலாவின் நிலை அவர்களை மேற்கொண்டு எதுவும் பேசவிடவில்லை.
“நல்ல மாப்பிள்ளையா பாருங்க சம்பந்தி!!! நிலா எங்களுக்கு மருமகளா இருக்கத்தான் கொடுத்து வைக்கலை!!! ஆனா அவளும் எங்க பொண்ணு மாதிரி தான்.. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைச்சா சந்தோஷம் தானே???” என நிலாவின் மறுமணத்தில் தங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்பதை அப்போதே தெரிவித்திருந்தனர்.
வருடங்கள் கடந்தும், நிலா இன்னும் மறுமணத்திற்கு மனமிறங்கி வராதது இவர்களுக்கும் தெரியும் என்றாலும், இதில் தாங்கள் செய்ய என்ன இருக்கிறது என அமைதியாகவே கடந்துவிட்டனர்.
ஆனால் இனியும் இப்படி அமைதியாகவே இருக்க முடியாது என அந்த ஒற்றை அழைப்பு கனகாவிற்கு உணர்த்திவிட்டுச் சென்றது.
அன்று அவரின் இளைய மகனுக்கு உணவு எடுத்து வைத்துக்கொண்டிருந்த சமயம், கனகாவிற்கு சுமதியின் எண்ணிலிருந்து அழைப்பு வர,
“இந்நேரத்துக்கு இவங்க எதுக்கு கூப்பிடுறாங்க???” என யோசனையுடனே அந்த அழைப்பை ஏற்றவர்,
பொதுவான விசாரிப்புகளுக்குப் பின், குணசீலனின் நிலையைச் சொன்னவர்,
“எல்லாம் நிலாவைப் பத்தின கவலை தான் சம்பந்தி அந்த மனுஷனுக்கு!!! காலம் முழுக்க மக தனி மரமாவே நின்னுடுவாளோன்னு பயமே அவரை இப்படி படுக்க வச்சிருச்சு.. “
“அச்சோ!!! இப்போ எப்படி இருக்காங்க?? பரவாயில்லையா சம்பந்தி??” என உண்மையான அக்கறையில் கனகா பதற்றப்பட,
“இப்போதைக்கு உயிரைக்காப்பாத்த முடிஞ்சிருக்கு சம்பந்தி!!! ஆனா நிலாவோட முடிவுல தான் அவரோட சந்தோஷம் இருக்கு!!! அந்த நிம்மதி எங்களுக்கு கிடைக்க உங்களோட உதவி வேணும் சம்பந்தி!!”
இதில் தான் என்ன உதவி செய்துவிட முடியும் என்று புரியாவிட்டாலும்,
“சொல்லுங்க சம்பந்தி!!! நாங்க என்ன செய்யணும்??? என் மகன் வாழ்க்கை தான் இப்படி ஆகிடுச்சு… நிலா வாழ்க்கையாச்சும் சந்தோஷமா இருக்கணும்!!!” என மனதிலிருந்து அவர் கூற,
“ரொம்ப நன்றி சம்பந்தி!!!!”
“இத்தனை வருஷமா நாங்க சொல்லி சொல்லி ஓஞ்சுட்டோம்!!! அவ கொஞ்சமும் மனசு இறங்கலை.. மாப்பிள்ளையை மறக்காதது ஒரு காரணமா இருந்தாலும், இன்னும் அவளை மருமகளா நடத்துற நீங்க, எங்க அவளை தப்பா நினைச்சுடுவீங்களோன்னு சின்னதா ஒரு எண்ணமும் அவ மனசுல இருக்குன்னு நான் நினைக்கிறேன்.. அதுனால எனக்காக ஒரே ஒரு தடவை அவகிட்ட வந்து பேசிப்பார்க்க முடியுமா சம்பந்தி!!! நிச்சயம் நீங்க பேசுனா அவ மனசு மாறுவான்னு எனக்கு தோணிட்டே இருக்கு.. எங்களுக்காக இந்த ஒரே ஒரு உதவியை மட்டும் பண்ணுங்க!!!” என இறைஞ்சுதலாய் சுமதி கேட்கவும் கனகாவுக்கு பதறிவிட்டது.
“அட என்ன சம்பந்தி!! நாங்க வந்து பேசுறோம் கண்டிப்பா.. நீங்க ஒன்னும் சங்கடப்படாதீங்க.. மாப்பிள்ளை ஏதும் பார்த்து வச்சிருக்கீங்களா??” என்று விசாரிக்க,
“எங்க சம்பந்தி, கொஞ்சம் நல்ல இடமா கேட்டு வந்தப்போ எல்லாம் இவ முடியவே முடியாதுன்னு சொல்லிட்டா.. ரெண்டாவது கல்யாணம் தானன்னு வயசு கூடுனவங்க, கொஞ்சம் குணம் சரியில்லாத வரனா வராங்க.. நல்லதா தேடிகிட்டே இருக்கோம் சம்பந்தி!!!” என்று பெருமூச்சுடன் அவர் சொல்ல,
இன்னும் சற்று நேரம் சுமதிக்கு ஆறுதலாக பேசிவிட்டு வைத்த கனகாவிற்கு மனமெங்கும் குற்ற உணர்ச்சி!!!
தன்னுடைய வருத்தம் என அதற்குள்ளே உழன்று கொண்டு, வாழவேண்டிய பெண்ணைப் பற்றி சிறிதும் யோசிக்காமல் போனேனே என தன்னைக்குறித்தே ஆதங்கம் கொண்டார் அவர்.
ஜெய், நிலாவை எந்தளவு விரும்பி திருமணம் செய்துகொண்டான் என்பது அவர் அறிந்ததே!!! அப்படியிருக்க, மகனுக்கு பிடித்த பெண்ணுக்கு நல்லதொரு வாழ்க்கை அமைத்துக் கொடுத்தால் தான் அவனின் ஆன்மா சாந்தி அடையும் என முழுமையாக நம்பியவர், விரைவில் நிலாவிற்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என எண்ணிக் கொண்டவருக்கு, அவரின் தங்கையான மாலாவின் முகம் மனக்கண்ணில் தோன்றியது.
மாலா மிகவும் தீவிரமாக விஷ்வாவிற்குப் பெண் தேடுவது கனகாவிற்குத் தெரியும்!!! எனவே அவளிடம் சொல்லியே, நிலாவிற்கும் ஒரு நல்ல மாப்பிள்ளையைத் தேடச் சொல்ல வேண்டும் என முடிவெடுத்துக்கொண்டவர், நாட்களைக் கடத்தாமல் அன்றே தன் கணவரிடமும் கூறிவிட்டு மாலாவைப் பார்க்க நாமக்கல் கிளம்பிவிட்டார்.
மூன்று நாட்கள் கடந்திருந்தது…
குணசீலனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதால், பலப்பல அறிவுரைகளுடனும் பை நிறைய மருந்துகளோடும், அவரை அன்று வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
வீட்டிற்கு வந்ததும், அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களின் வருகை என வீட்டினருக்கு நேரம் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தது.
இரவு வரையிலுமே உறவினர்களின் வருகை இருந்தபடியே இருக்க, எட்டு மணிக்கு மேல் தான் சற்று ஆசுவாசமாக அமர்ந்தனர்.
இந்த மூன்று நாட்களும் சுமதி நிலாவுடன் முகம் கொடுத்துப் பேசாததை கவனித்து வந்த குணசீலன்,
“ஏன் சுமதி? எதுக்கு நிலாவை முறைச்சிட்டே இருக்க?? நானும் இந்த ரெண்டு மூணு நாளா பார்க்குறேன்.. அவ கூட பேசவும் மாட்டேங்குற.. சரி எனக்கு இப்படி ஆனதுல வருத்ததுல இப்படி அமைதியா இருக்க போலன்னு நினைச்சிட்டு இருந்தா இன்னைக்கு உன் நடவடிக்கை அப்படி இல்லையே!!! நீ தெரிஞ்சே நிலாவை மட்டும் ஒதுக்கி வைக்கிற?? ஏன் என் பொண்ணு என்ன பண்ணா உன்னை??”
சுமதி முதலில் அதிர்ந்தாலும், பின் மகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு மனதைக் கல்லாக்கிக் கொண்டவர்,
“எதுக்குன்னு உங்களுக்குத் தெரியாதா??? அவளோட பிடிவாதத்துனால தான் உங்களுக்கு இன்னைக்கு இந்த நிலைமை.. அப்பவும் கல்லு மாதிரி கொஞ்சமும் கரையாம இருக்கவளைக் கண்டு கொஞ்ச சொல்றீங்களா???”
இன்னும் சூடாகப் பேசி நிலாவைத் தூண்டிவிட சுமதிக்கு தோன்றினாலும், குணசீலனின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு வார்த்தைகளை அளந்தே பேசினார்.
ஆனால் அதற்கே குணசீலனுக்கு கோபம் வந்துவிட,
“எப்போ இருந்து சுமதி இப்படி மாறுன??? வயசான எல்லாருக்கும் ஏதோ ஒரு நோய் வர்றது தான்.. அதுக்காக என் பொண்ணை பேசுவியா நீ?? எதை எதோட முடிச்சு போடுற??? அவ இத்தனை வருஷமா அனுபவிச்சிட்டு இருக்க கஷ்டம் பத்தாதுன்னு உன் பங்குக்கு அவளை அழுக வைப்பியா நீ?? இனி இன்னொரு முறை அவகிட்ட மூஞ்சியைத் திருப்பிட்டு போறதை நான் பார்த்தேன்.. அப்பறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்” என சுட்டுவிரல் நீட்டி எச்சரிக்கை விடுத்தார் அந்த அன்புத்தந்தை.
மூன்று நாட்களாகத் தொடர்ந்த சுமதியின் பாராமுகம், கமலியின் வார்த்தைகள், வெளியே சொல்லாவிட்டாலும் மனைவிக்கான திவாகரின் தேடல், அதுவுமில்லாமல், இரண்டு நாட்களுக்கு முன்பு குணசீலனைப் பார்க்க வந்த ஜெய்யின் பெற்றோரும் அவளை மறுமணம் செய்துகொள்ளச் சொல்லி சில மணி நேரம் அறிவுரை சொன்னது என அனைத்தும் சேர்ந்து நிலாவின் மன நிம்மதியை மொத்தமாய் கலைத்துவிட்டுப் போயிருக்க,
என்ன முடிவு எடுப்பது என்று ஊசலாடிக் கொண்டிருந்த பெண்ணின் மனம், இன்று தந்தையின் வார்த்தைகளைக் கேட்ட பின்பு தெளிவாக சிந்திக்க, தீர்க்கமான ஒரு முடிவை எடுத்திருந்தாள்.
விழியோரம் வழியக் காத்திருந்த கண்ணீரை, முயன்று கட்டுப்படுத்திக் கொண்டவள், தந்தையின் அருகே சென்று அவரின் கரங்களை அழுத்தமாக பற்றிக்கொண்டாள்.
மகளின் ஸ்பரிசத்தில் கோபம் தணிந்த குணசீலன், தன் இன்னொரு கரம் கொண்டு மகளின் கைகளை பாதுகாப்பாய் தனக்குள் பொத்தி வைத்துக்கொண்டார்.
அத்தனை நேரம் இருந்த அலைப்புறுதல், நிலாவிற்கு தந்தையின் அருகாமையில் அடங்கியிருக்க,
“தேங்க்ஸ் ப்பா!!!!” என்று மெல்லிய குரலில் நன்றி கூறினாள்.
“ம்ப்ச்!! என்ன டா அப்பாகிட்ட போய் தேங்க்ஸ் எல்லாம்!!” என பரிவாய் மகளின் கேசம் கோதியவர்,
“அம்மா ஏதும் பேசிருந்தா மனசுல வச்சுக்காத நிலா.. எனக்கு இப்படி ஆனதுல அவளுக்கு ஏதோ கிறுக்கு பிடிச்சுப்போச்சு.. நீ அதெல்லாம் மனசுல வச்சு உன்னை வருத்திக்காத டா.. அப்பாக்கு உன்னால எல்லாம் ஒன்னும் முடியாம போகலை.. நான் நல்லா இருக்கேன்.. சரியா??”
இத்தனைக்குப் பிறகும், தன் நலனை மட்டுமே யோசித்து தனக்காகவே வாழும் குணசீலனை கண்ணெடுக்காமல் பார்த்திருந்த நிலா,
“நான் .. நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிறது தான் உங்களுக்கு நிம்மதின்னா, நான் பண்ணிக்கிறேன் ப்பா… உங்களுக்காக!!!!”
இந்த வார்த்தையைத் தடுமாறாமல் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே, அவளின் மனம் எரிதழலுக்குள் சிக்கிக்கொண்டதைப் போல் ஜெய்யின் நினைவுகளால் பற்றி எரிந்து அவளைச் சுட்ட போதிலும், தன் மீது எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தூய்மையான அன்பை மட்டுமே வாரி வழங்கும் பெற்றவர்களுக்காக தெரிந்தே வேள்வியில் விழுகத் தயாரானாள் நிலா.
நிலாவின் கூற்றைக் கேட்டு சுமதி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
அத்தனை நாட்கள் இருந்த கோபம் மறைந்து போக,
“நிலாக்கண்ணு!!! நிஜமாத்தான் சொல்றியா டா தங்கம்???” என மீண்டும் மீண்டும் கேட்டு உறுதிபடுத்திக்கொண்டவர்,
“இப்போவே போய் காசு முடிஞ்சு வச்சிட்டு வரேன்.. கண்டிப்பா இந்த முறை என் பொண்ணு நல்லா இருப்பா.. என் உள்மனசு சொல்லுது!!! ” என சந்தோஷப் பரபரப்புடன் பூஜையறை ஓடிய அன்னையைத் தொடர்ந்தது நிலாவின் பார்வை.
மகளை உள்ளும் புறமும் அறிந்த மனிதருக்கு, இந்த வார்த்தையைச் சொல்வதற்கே அவள் தனக்குள்ளாகவே எவ்வளவு போராடியிருப்பாள் என்பது புரிய,
“ஏன்டா ம்மா???” என அவளின் முடிவில் முழுதாய் மகிழ முடியாமல் அவர் தவிப்புடன் கேட்க,
அவரை நோக்கி வெற்றுப் புன்னகை சிந்திய நிலாவோ,
“என் சந்தோஷம் தான் என்கிட்ட இல்லைன்னு ஆகிடுச்சு.. போனதை நினைச்சு இருக்கவங்க நிம்மதியைக் கெடுக்கிறதும் தப்பு தானேப்பா… இனிமேலாச்சும் உங்க நிம்மதியைக் கெடுக்க வேண்டாமேன்னு தோணுச்சு .. அதான்ப்பா!!!” என உணர்வுகளற்ற குரலில் மொழிந்தவள், அதற்கு மேல் யாரின் கேள்விகளையும் எதிர்கொள்ள திராணி அற்றவளாக, அங்கிருந்து எழுந்து தன்னுடைய அறைக்குள் சென்று மறைந்தாள்.
வலிக்கு பயந்தால் வைத்தியம் பார்க்க முடியாது என்றுணர்ந்த குணசீலனும், மேலும் இதைப்பற்றி பேசாமல் நல்லதே நடக்கும் என கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, காலம் என் மகளின் காயங்களை ஆற்றும் எனும் நம்பிக்கையுடன் கண்ணயர்ந்தார்.