சித்தார்த்திற்கு வைஷ்ணவி தன்னுடன் வரமாட்டாள் என்று நன்கு தெரியும். செல்லும் வழியில் பாதியில் இறங்கி விடுவாள் என அவன் எண்ணியிருக்க, அவளோ அவன் வருவதற்கு முன்பு விழுந்தடித்துக் கொண்டு ஓடியது அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது.
‘ஓடு… ஓடு… இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே ஓடறேன்னு நானும் பார்க்கிறேன்…’ என எண்ணிக் கொண்டவன், மந்தகாச புன்னகையுடன் ஃபேக்டரிக்கு கிளம்பினான்.
பகவதிக்கு மகனைப் பார்க்கப் பார்க்க அப்படி ஒரு பூரிப்பு. இப்படி எல்லாம் ஒரு நாள் வரும் என்று அவர் கனவில் கூட எதிர்பார்க்கவில்லை. இன்று மாலை அவன் வந்ததும் மறக்காமல் அவனிடம் என்ன ஏது என்று விசாரிக்க வேண்டும் என்று குறித்துக் கொண்டார்.
வைஷ்ணவி என்னதான் அரக்கப் பறக்கக் கிளம்பி வந்திருந்தாலும், அவள் பிடிக்க வேண்டிய பஸ்ஸை தவறவிட்டிருந்தாள். இந்த கிராமத்தில் அதிக பேருந்து வசதி கிடையாது. அதனால் தான் பிரதீப் எப்பொழுதும் சைக்கிளில் போய்விடுவான்.
இன்று இவள் செல்ல வேண்டிய பேருந்து இவள் வந்து சேர்வதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு போய் விட்டிருக்க எப்படி செல்வது என தெரியாமல் கடுப்புடன் நின்று கொண்டிருந்தாள். அடுத்த பேருந்து வர இன்னும் அரை மணி நேரம் ஆகும். அதனைப் பிடித்துச் சென்றால் நிச்சயம் கல்லூரிக்குக் குறித்த நேரத்திற்குச் செல்ல முடியாது. இப்பொழுது வேறு வழியும் இல்லாததால் அந்த பேருந்திற்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.
அந்த நேரம் பார்த்து ஒரு கார் வந்து அவளிடம் நின்றது. எரிச்சலுடன் இவள் தன் போல இரண்டடி பின்னால் வைத்து அந்த காரினை பார்த்தாள். அது சித்தார்த்தின் கார் என்று புரிய முறைப்புடன் முகத்தை வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.
“சரி வா நான் ட்ராப் செய்றேன்” என்றான் உரிமையாக. அவளோ இங்கு ஒருவன் நின்று பேசுகிறான் என்ற எண்ணமே இல்லாதவள் போல அங்கிருந்த மரத்தை சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
சின்ன சிரிப்புடன், “ஹே! எனக்கு எந்த தப்பான இன்டென்ஷனும் இல்லைம்மா… சும்மா தெரிஞ்ச பொண்ணாச்சேன்னு தான் உதவி செய்ய வந்தேன். வேணும்ன்னா நீ பஸ்ஸுக்கு கொடுக்கும் காசை எனக்கு கொடுத்திடு…” என்று சொல்ல, அப்பொழுதும் அவளிடம் எந்தவித அசைவுமில்லை.
கொஞ்சமும் அசைய மறுத்து உதாசீனம் செய்தால் அவனும் எப்படி தான் அவளை அணுகுவது?
இலகுத் தன்மையைக் கைவிட்டு, “உன்னை இழுத்துட்டு போக முடியாதுன்னு நினைக்கறியா?” என்றான் கடுப்பாக.
திட்டுகிட்டவள் வேகமாகச் சுற்றும் முற்றும் பார்த்தாள். பேருந்து சென்று விட்டதால் பேருந்து நிலையத்தில் ஒருவரும் இல்லை. சற்று தள்ளியிருந்த டீக்கடையிலும் பெரிதாக ஆட்கள் இல்லை. கொஞ்சம் பயம் கூட வந்தது.
அதில் கடுப்பானவன், “என்கிட்ட என்னடி பயம் உனக்கு?” என எகிறிக்கொண்டு ஓரெட்டு முன்னே வந்தான்.
வைஷ்ணவி மிரண்டு விழித்தபடி பின்னால் நகர, “ம்ப்ச்…” என்று சலிப்புடன் நெற்றியை தேய்த்து விட்டுக் கொண்டவன், “வா வைஷு… நேரம் ஆகுது… நீயும் காலேஜ் போகனுமில்லை…” என்றான் இழுத்துப் பிடித்த நிதானத்துடன்.
இப்படி படுத்துகிறானே என அவளுக்கு எரிச்சலாக வந்தது. “நான் வரலை சார்… ப்ளீஸ் கிளம்புங்க…” என்றாள் ஒருவழியாகத் திருவாய் மலர்ந்து.
கிட்டத்தட்ட ஐந்து முழு ஆண்டுகள் கழித்து இப்பொழுது தான் பேசுகிறாள். ஆண் மகன் என்ற இறுக்கம் மறந்து கண்ணில் நீரே கோர்த்து விட்டது அவள் பேசியதும். ‘ஒருவழியாக என்னிடம் பேச தோன்றி விட்டதா இவளுக்கு!’ சட்டென்று மூச்சு அடைத்துக் கொண்டது.
வெகுவாக உணர்ச்சிவசப்பட்டு விட்டான். “வைஷு என்கிட்ட நீ பேசிட்ட…” என்றான் குரல் கரகரக்க. வைஷ்ணவி சட்டென்று அவனை ஏறிட்டுப் பார்க்க, நீர் கோர்த்த விழிகள்… அவன் அழுது அவள் இதுநாள் வரையிலும் பார்த்ததே இல்லை. அவன் கண்ணீரைப் பார்த்ததும் மனதை என்னவோ அழுத்தி பிசைந்தது. இதயம் வேகமாகத் துடிக்க, சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“என்கூட வா வைஷு பிளீஸ்…” என்றான் கெஞ்சல் குரலில்.
வைஷுவின் மனம் தடுமாறத் தொடங்கியது. அதில் அதிர்ந்து போனாள். நீ இத்தனை பலவீனமானவளா என அவள் மீதே அவளுக்கு கோபம் கோபமாக வந்தது.
முகம் கடுகடுக்க, “சார் பிளீஸ் இங்கே நின்னு ஸீன் கிரியேட் செய்யாதீங்க. யாரவது பார்த்தா என்ன நினைப்பாங்க” என அவன் முகத்தைக் கூட பார்க்காமல் கடித்த பற்களுக்கிடையே வார்த்தைகளைத் துப்பினாள்.
“உன்னை என்ன செஞ்சுடுவேன்னு உனக்கு பயம்?” என்று சித்தார்த் அவளை சீண்டிப் பார்த்தான். ஆனால், அவள் அசரவே இல்லை.
“நீங்க என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாதுங்கிறது எல்லாம் எனக்கு அனாவசியம். இப்ப இருந்து கிளம்பினா நிம்மதியா இருக்கும்…” என்றாள்.
“ஹான்… என்ன நிம்மதி அது இதுன்னு சொல்லி என்னை துரத்தி விடப் பாக்கிறியா? நோ வே… நான் இங்கே தான் நிப்பேன்” என்றான் அலட்சியமாக.
வைஷ்ணவி துளியும் அலட்டிக் கொள்ளவில்லை. “ஏஸ் யூ விஷ். இதென்ன என்னோட சொத்தா? பொது இடம் யாரு நிக்கிறதை பத்தியும் எனக்கு கவலை இல்லை. ரோடுன்னு இருந்தா கண்டதும் நிக்கத்தான் செய்யும். நம்மை பார்த்து குறைக்கத்தான் செய்யும், நாம ஒதுங்கி நின்னுக்க வேண்டியது தான்…” என்று வெகு அலட்சியமாக அவனை நாய் என்று சொன்னவள், சற்று தள்ளியும் நின்று கொள்ள அவன் அவளையே உறுத்து விழித்தான்.
அவள் திரும்பி பார்த்தால் தானே! சித்தார்த் கடுப்புடன் அவளின் அருகே சென்று, “ரொம்பத்தான்டி வாய் உனக்கு? ஆனா ஏற்கனவே உன்னை பிரிஞ்சு நிறைய கொடுமையை அனுபவிச்சுட்டேன்… என்னை உயிரோட மண்ணுக்குள்ள புதைச்சு, நான் மூச்சு காத்துக்கு ஏங்கி தவிச்சு, என்னோட கடைசி மூச்சு இருக்கும்போது என்னை வெளிய எடுத்தா எப்படி இருக்குமோ அந்தளவுக்கு வேதனையை அனுபவிச்சவன் நான்… உன்னை விட்டு பிரிஞ்ச பிறகு கிட்டத்தட்ட நடை பிணம் தான்… என்னையவா நீ நாய்ன்னு சொல்லறது கஷ்ட படுத்திட போகுது? இன்னும் கூட திட்டிக்க… அடிக்கணும்ன்னு தோணினா கூட அடிச்சுக்க. என்னை நம்பி வந்த உன்னை சரியா பார்த்துக்காத எனக்கு நீ என்ன தண்டனை தந்தாலும் வாங்கிப்பேன். ஆனா, இனியும் உன்னை விட்டுப் போக மாட்டேன். இனி என் கண்ணுல இருந்து எங்கேயும் உன்னால ஓடி ஒளிஞ்சுக்க முடியாது…” என்று ஆவேசமாக சொல்ல,
“அப்பறம் உங்க பொண்டாட்டிக்கு என்ன பதில் சொல்லுவீங்க சார்? சும்மா சினிமா டைலாக் எல்லாம் அடிக்காம இடத்தை காலி பண்ணுங்க…” என்றாள் அலட்சியமும் எரிச்சலுமாக.
அவளின் சிடுசிடுப்புக்குக் காரணம் புரிய சிரிப்பு பொங்கியது. புன்னகையுடன், “என் பொண்டாட்டியை எப்படி சமாளிக்கணும்ன்னு எனக்குத் தெரியும். இப்ப என் காதலியைத் தான் சரிக்கட்ட வேண்டியிருக்கு…” என்று சொன்னவனைக் கேவலமாகப் பார்த்தவள், “ச்சீ இப்படி சொல்ல உங்களுக்கு அசிங்கமா இல்லை…” என திட்டினாள்.
“எனக்கு கல்யாணம் ஆனது தெரிஞ்சு ரெண்டு நாளா விடிய விடிய அழறியே ஏன் வைஷு?” நிறுத்தி நிதானமாக அவன் வினவ, இப்படி ஒரு கேள்வியைக் கேட்பான் என எதிர்பார்க்காமல் அவள் திணறினாள்.
“உளறாதீங்க… உங்களுக்கு கல்யாணம் ஆனா எனக்கென்ன? ஆகாட்டி எனக்கென்ன? நீங்க எங்க அம்மாவோட முதலாளி மகன். அவ்வளவு தான் உங்களுக்கும் எனக்கும் இடையில… வேற எந்த நினைப்போடவும் என்னை தொல்லை செய்யாதீங்க…” என படபடத்தவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
“நான் உனக்கு யாருன்னு கேட்கவே இல்லையே… நீ என் கல்யாண விஷயம் தெரிஞ்சதுல இருந்து ஏன் அழுது கரையறன்னு தானே கேட்டேன்” என மீண்டும் அழுத்தம் திருத்தமாகக் கேள்வியைத் தெளிவாகக் கேட்க, அவளுக்கு வியர்த்தது.
“கத்தி பேசினா பொய் உண்மை ஆயிடாது வைஷு… சொல்லு என்மேல ஏன் இன்னும் அந்த சோ கால்ட் லவ்??? என்னை எல்லாம் ஏன் அப்படியே விட்டுட்டு வந்த வைஷு? பொய்யான பழியை என் கோபத்துக்காக உன் மேல போடறேன்… எனக்கு தான் அறிவில்லைன்னா நீ ஏன் என்னை அப்படியே விட்டுட்டு வந்த? அங்கேயே என்னை செருப்பை கழட்டி அடிச்சிருக்க வேண்டாமா? உன்னை எல்லாம் காதலிச்சதுக்கு என்னை இப்படி கேவலப் படுத்துறியேடான்னு என் முகத்துல காறித் துப்பி இருக்க வேண்டாமா? நம்பி வந்த பொண்ணோட மானத்தைப் பத்தி கவலைப்படாம அவமரியாதையா பேசறியே உனக்கெல்லாம் காதல் ஒரு கேடான்னு என்னை அறைஞ்சிருக்க வேண்டாமா?” என அவளின் தோள்கள் இரண்டையும் பற்றி உலுக்க, அவனை வெறித்துப் பார்த்தவளின் விழிகள் கண்ணீரை கொட்டியது.
அந்தளவிற்கு அவள் மனம் இறங்கியிருக்குமா? அவன்மீது அவள் கொண்ட நேசம் என்ன? அவன் என்றால் அவள் கொண்ட மரியாதை என்ன? அவனைப்போய் அந்தளவிற்கு அவமரியாதை செய்ய அவளால் முடியுமா என்ன?
“இதுதான்டி உன்னோட லவ்… பசும்பால் மாதிரி பரிசுத்தம்… உனக்கெல்லாம் நான் பொருத்தமே இல்லை… ஏன்டி என்னை போயி காதலிச்ச… உனக்கு இருக்க அறிவுக்கும் அழகுக்கும் குணத்துக்கும் என்னை ஏன்டி காதலிச்சு இத்தனை கஷ்டப்படற… ஒவ்வொரு நேரம் உனக்கு நான் வேணாம்ன்னு தோணுது… ஆனா என்னால உன்னை விட்டுக்கொடுக்கவும் முடியலை… நான் செஞ்ச தப்புக்கு இந்த அஞ்சு வருஷம் போதும் போதும்ங்கிற அளவுக்கு தண்டனை அனுபவிச்சுட்டேன். இன்னும் அனுபவிக்கத் தயாரா தான் இருக்கேன்… ஆனா அந்த தண்டனையை என் கூட இருந்து நீயே கொடு… இன்னொருமுறை என்னை விட்டுட்டு நீ போனா அதை தாங்கிட்டு உயிரோட இருக்க சக்தி எனக்கு இல்லைடி” என்று தவிப்பாக அவன் சொல்ல, அவள் மனதில் பாரம் ஏறியது.
அவனது கையை உதறி விட்டவள், “இது பஸ் ஸ்டாண்ட்… முதல்ல இங்க இருந்து போங்க… சும்மா எதையாவது உளறினா என் கோபம் போயிடாது. அதோட உங்களுக்கு கல்யாணம் முடிஞ்சது. அந்த வாழ்க்கையை பாருங்க… என்னை மறந்துட்டு ஜஸ்ட் மூவ் ஆன்…” என சொல்லியவள் அவன் முகத்தைப் பார்ப்பதைத் தவித்தாள். அவன் கலங்கித் தவிப்பதை அவளால் பார்க்க முடியவில்லை.
சித்தார்த் அவளின் முகம் பற்றி தன்னை நோக்கி பார்க்கச் செய்தான். “நான் வேதனை படறதை உன்னால பார்க்கக் கூட முடியலை என்ன? நான் மட்டும் ஏன்டி சேடிஸ்ட் மாதிரி உன்னை அழ வெச்சேன்…” என்றான் பாவமாக.
ஏன் இப்படி மறுகுகிறான் என அவளுக்கு அடித்துக் கொண்டது.
“எல்லாரும் பார்க்கிறாங்க… இப்ப இங்கிருந்து போக போறீங்களா இல்லையா?” என்று நலிந்த குரலில் பேசியவள், அவன் கையை மறுபடியும் தட்டிவிடப் பார்த்தாள்.
அவனுக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட முடியவில்லை. “எனக்கு உன்கூட பேசணும். உன்னை கட்டிப்பிடிச்சு அழணும் போல இருக்கு…” என்றான் பாவமாக.
“உங்க வைப் கிட்ட…” என மறுபடியும் அவள் தொடங்க, அவளின் வாயை வேகமாகக் கையை உயர்த்தி பொத்தினான்.
“எங்கே மறுபடி என்னை விட்டுடுட்டு நீ போயிடுவியோன்னு பயத்துல எனக்கு கல்யாணம் ஆனதா பொய் சொன்னேன்டி… அப்ப தானே நான் உன்னை தொல்லை செய்ய மாட்டேன்னு நம்பி நீ இங்கேயே இருப்ப… நீ இப்படி அழுவேன்னு தெரிஞ்சிருந்தா அப்படி சொல்லி இருக்கவே மாட்டேன்… எப்பவும் உன்னை அழ வெச்சிட்டே இருக்கேன் இல்ல…”
அவன் திருமணம் பொய் என்று சொன்னதும் வைஷ்ணவிக்கு ரொம்பவும் ஆசுவாசமாக இருந்தது. இரண்டு நாட்கள் அவள் கொண்ட வேதனை அவள் மட்டும் தானே அறிவாள். அழுகை, அழுகை, அழுகை! ஓயாது அழுது கொண்டே இருந்தாள். அதைத் தவிர அவளால் வேறு என்ன செய்துவிட முடியும்? உயிர் மொத்தமாக ஆவியாக அல்லவா போயிருந்தது…
இதுல எல்லாம் பொய் சொல்லறான் பாரு என்று இப்பொழுது கோபம் கூட வந்தது.
சலிப்பான குரலில், “ம்ப்ச்… நான் எங்கே அழுதேன்… சும்மா எதையாவது உளறாம இங்கே இருந்து போங்க முதல்ல…” வைஷு சொல்ல, அவனுக்கு சிரிப்பு தான் அவள் அடம் பிடிப்பதில்.
“ஓகே ஓகே நீ அழலை… நான் நம்பிட்டேன்… இப்ப கிளம்பறேன்… ஆனா நல்லா நியாபகம் வெச்சுக்க… என்கிட்டே இருந்து உன்னால ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது…” என்று அவன் சொன்னதைக் காதிலேயே வாங்காதவள் போல எங்கேயோ பார்த்துக்கொண்டு அலட்சியமாக நின்றிருந்தாள்.
ஐந்து ஆண்டுகள் கடந்த போதும்… அவனை நாடிச் செல்ல வேண்டும், அவனை மன்னிக்க வேண்டும் என்று ஒரு நாள் கூட இவளுக்குத் தோன்றியதே இல்லை. அப்படி வைராக்கியமாக இருந்தவளை இவன் வந்து கெஞ்சி, கூத்தாடி, அழுது, அடம்பிடித்து மெல்ல மெல்லக் கரைப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
ஆயிரம் நடந்த போதிலும் இன்னமும் அவனுக்காகத் துடிக்கிறாளே! அவளின் பலம் என இருந்தவன் இன்று பலவீனமென மாறி நிற்கிறான். காலத்தின் கோலத்தை எண்ணி சிரிப்பு தான் வந்தது.
இத்தனை நாட்களும் கண்டும் காணாமலும் இருந்த போது பெரிதாகத் தெரியவில்லை. இப்பொழுது சமாதானம் செய்கிறேன் என்கிற பெயரில் ஒரே ஒரு சந்திப்பில் அவளை தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டான்.
புயல் காற்றென அவன் சுழன்று அடிக்கையில் எங்கனம் அவளால் தாக்குப் பிடிக்க முடியுமோ என்று கவலையாக இருந்தது.