‘என் பேருக்கு என்ட்ரி பாஸ் போட்டு அனுப்பத் தெரியுது. கண்ணுக்கு முன்ன இவ்ளோ பெரிய உருவம் இருக்கிறது தெரியலையமாம். போடா போடா நீ பாக்காட்டி நிம்மதிதான் எனக்கு.’ என மனதிற்குள் அவனை வறுத்தெடுத்தாள் செண்பகா.

“வீட்டுக்கு வாப்பா ரத்தினம். எவ்ளோ நாளாச்சு நீ அங்க வந்து.” மகனிடம் முறையிட்ட அபிராமியின் வருத்தம் அவர் குரலிலேயே தெரிந்தது.

“இங்க இருக்குற வேலையை பாக்கவே நேரம் போதலை. சீக்கிரம் வரேன்.” என சமாதானமாய் சொல்ல, 

‘வந்துட்டாலும். ரத்தினமாம் ரத்தினம். செய்யுறதெல்லாம் ஒண்ணா நம்பர் பிராடுத்தனம்.’ இவர்களின் குடும்பப் படத்தை பார்த்து புகைந்தாள் செண்பகா.

“சரி இப்போ கிளம்புங்க. டிராபிக்கா இருக்கும் பாத்து வீட்டுக்கு போங்க. பக்கத்துல இருக்குற ஹோட்டல்ல எனக்கு மீட்டிங் அண்ட் லஞ்ச் இருக்கு.” என்றவனை அபிராமி தயக்கத்துடன் பார்க்க, கண்டுகொண்டாலும் கண்டுகொண்டது போல் காட்டிக்கொள்ளவில்லை ரத்னதீபன்.

“ஏன் ரத்தினம் அந்த வேலுசாமி எப்படி ஜெயிச்சான்? போன வருஷம் ஊழல் வழக்குல மாட்டி உங்க கட்சிக்கு தாவி வந்தவன். அவன்கிட்ட ஜாக்கிரதையா இருந்துக்க. அப்புறம் அந்த மதுரைக்காரன் அவன் எடக்கா பேசுவான்…” என அரசியல் அனுபவத்தில் அவர் தெரிந்துகொண்டவற்றை மகனுக்கு பகிர, அதில் ஆர்வம் காட்டாத ரத்னதீபன்,

“எல்லாம் நான் பாத்துக்குறேன். கிளம்புங்க.” அவர்களை கிளப்புவதிலேயே குறியாக இருந்தான்.

‘எப்படி வந்தோம் எப்படி போவோம்னு ஒன்னும் கேக்கல. கிளம்பு கிளம்புன்னு விரட்டியாவுது. அதையும் கேட்டுட்டு அவன் பின்னாடியே தொங்கிட்டு இருக்காங்க.’ என நினைத்துக்கொண்ட செண்பகா அவன் பார்வை வட்டத்தில் நிற்கப் பிடிக்காமல் நகரவும் முடியாமல் பல்லை கடித்து நிற்க,

“செண்பா வந்திருக்கு பாத்தீங்களா?” என கோர்த்துவிட்டான் விமல்.

‘ஏன்டா ஏன்?’ என செண்பகா பார்த்து வைக்க, அன்னிச்சையாக இவளைப் பார்த்த ரத்னதீபன் முகம் திருப்பிக்கொண்டான். 

‘நான்தாண்டா முகம் திருப்பனும்.’ என்று எண்ணிக்கொண்ட செண்பகா அதற்கு மேல் நிற்கவில்லை. விறுவிறுவென அங்கிருந்து வாயில் நோக்கி நடக்க, ‘திமிர் திமிர்.’ என பற்களை கடித்தவன் தாடை இறுகிப்போனது.

“அதுதான் மேடம் கிளம்பிட்டாங்கல்ல. கிளம்புங்க.” என்று தன் குடும்பத்தினரை பார்க்க அதிருப்தியுடன் நின்றனர் அவர்கள். 

தொண்டையை செருமிக்கொண்ட விமல், “கிளம்பலாம் வாங்க.” என அவர்களை கிளப்பிச் சென்றான்.

“ஏன்தான் இவ இப்படி இருக்காளோ. ஆம்பளைங்க அப்படி இப்படி இருப்பாங்க, இவதான் புரிஞ்சி வழிக்கு கொண்டு வரணும். அது புரியாம முகம் திருப்பிட்டு போறா.” என வரும் வழியெல்லாம் புலம்பிக்கொண்டு வந்தார் அபிராமி. திவ்யா அதற்கு ஒத்தூத அத்தனை நேரம் இருந்த அவர்களின் மகிழ்ச்சியில் சின்ன விரிசல்.

“என்னோட அனுபவம் அவன் வயசு. இந்த வயசுலேயே இப்படி எம்.எல்.ஏ ஆகுறது எல்லாம் எவ்ளோ பெரிய விஷயம். அவனை மதிக்காம முகம் திருப்பிட்டு போகுது.” என மருதுவும் வருத்தம் தெரிவித்தார்.

“மச்சானும்தான் செண்பாவை பார்த்து முகம் திருப்புனாரு.” என விமல் எடுத்துச் சொல்ல அது காதில் ஏற வேண்டுமே. 

“இப்போ எங்கன்னு போய் தேடுறது. இந்த வயசுக்கு இவ்ளோ வீம்பு ஆவாது.” பார்வையால் செண்பகாவை தேடிக்கொண்டே அபிராமி குற்றம் சுமத்த, 

“உங்களை கார்ல உக்கார வச்சிட்டு நான் போய் பாத்து கூட்டிட்டு வரேன்.” என்றான் விமல்.

“தொலைஞ்சு போக அவங்க என்ன சின்ன புள்ளையா? அதெல்லாம் காருக்கு கரெக்ட்டா வந்துருவாங்க. நீங்க அலையாதீங்க. போன் போட்டு பாக்கலாம்.” பொடுபொடுவேன சொன்னாள் திவ்யா.

விமல் மனைவியை கண்டிப்புடன் பார்க்க, அவள் சொன்னது போல உர்ரென்று கார் பார்க்கிங்கில் நின்றாள் செண்பகா. 

“நீ பாட்டுக்கு வர. தேடுவோம்னு யோசிக்க மாட்டியா?” என உரிமையுடன் சண்டையிட்டுக்கொண்டே அவளை நெருங்கினார் அபிராமி.

“இங்க வந்துட்டு போன் போடலாம்னு பாத்தேன் நீங்களே வந்துட்டீங்க.” சின்னக் குரலில் அவள் சொல்ல, விமல் சமாதானம் போல் அவர்களை வண்டியில் ஏற்றிவிட்டான்.

கார் சென்னையிலிருந்து செங்கல்பட்டு மாவட்டம் பரந்தூர் நோக்கி பயணப்பட்டது. அனைவருமே அசதியில் உறங்கிப் போக, செண்பகா மட்டும் கொட்ட கொட்ட விழித்திருந்தாள். வெகு நாள் கழித்து பார்த்த ரத்னதீபனை மனதில் கொண்டுவந்து நிறுத்தினாள். சென்ற முறை பார்த்ததற்கும் இந்த முறைக்கும் நிறைய வித்தியாசங்கள் காணமுடிந்தது. உடல் இளைத்து நிறம் கருத்து காணப்பட்டவன் உற்சாகமாக தெரிந்தான். தான்தான் நிம்மதி இழந்து தவிக்கிறோம். 

அவனுக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை, அவன் உண்டு அவன் அரசியல் உண்டு என இருக்கிறான். அவளை அடக்குவது போல் அவனை அடக்க, குடும்பம் என்ற கோட்பாடுகளுக்குள் அடைக்க எவராலும் முடியவில்லை. அடங்காத நாடோடியாய் சுற்றுபவனை தூக்கி வைத்து பேசுபவர்கள் எவரும் அவனது தவறுகளை தட்டிக்கேட்பது இல்லை. கேள்வி கேட்டவளை தலையில் தட்டி அடக்கி வைத்தார்கள். தவறுபவனை விட்டுவிட்டு தவறிழைக்காதவளை தழைந்து போக சொல்கிறார்கள். முடியாது என திமிறி நின்றாலும் ஒரு கட்டத்தில் குடும்பம் என அடங்கத்தான் வேண்டியிருக்கிறது. பெண்ணாய் பிறந்ததின் பரிசோ என இப்போதெல்லாம் நினைக்கத் தோன்றுகிறது. இதோ இன்றைய நிகழ்வுக்கு கூட வர மாட்டேன் என பிடிவாதம் பிடித்தவளை பிடித்து இழுக்காத குறையாக இழுத்து வந்திருக்கிறார்கள். 

“நீ வரணும்னுதான் பாஸ் ரெடி பண்ணி அனுப்பி இருக்கான். நீ வரணும் செண்பா. வேலை முடிச்சு கிளம்பி நேரா இங்க வந்துடு, சேர்ந்து போயிடலாம்.” என அபிராமி நேற்று காலையே அழைத்துவிட்டார். பார்க்கிறேன் என அவரிடம் சொல்லி தப்பித்தது போல் அவள் வீட்டினில் சொல்ல முடியவில்லை.

“உன்னை வர சொல்லி சொல்லியிருக்காங்க. எங்ககிட்ட ஒருவார்த்தைகூட சொல்லல. பரந்தூர்லேந்து போன் வந்துச்சு.” என மதியம் வையாபுரியிடமிருந்து அழைப்பு வந்தது. 

“ஏன்னா நான் போகப்போறது இல்லை.” என்றாள் நிர்தாட்சணியமாக.

“இது தப்பு பாப்பா. நானே உன்னை இன்னைக்கு அங்க போக சொல்லலாம்னு இருந்தேன். அவங்களே கூப்பிட்டாங்க, போகாம இருக்கிறது தப்பு.” என்றார் தந்தையும் கண்டிப்புடன்.

“நடக்குற எதுவும் உங்களுக்கு தப்பா தெரியல. நான் போகாம இருக்கிறதுதான் தப்பா அப்பா?” சீற்றமாய் இல்லையென்றாலும் சிதறி வந்தன கேள்விகள்.

“தப்பு சரின்னு பாத்துட்டு இருந்தா வாழ முடியாது. எத்தனை நாளுக்கு இப்படியே இருக்க முடியும் சொல்லு. இப்போவே எல்லாரும் கேக்க ஆரம்பிச்சிட்டாங்க.” 

“ஓ… அவங்களுக்கு பதில் சொல்ல முடியாம என்னை போக சொல்றீங்கல்ல.”

“ஏன் பாப்பா இப்படியெல்லாம் பேசுற?”

“ப்ச் விடுங்க… எனக்கு வேலை இருக்கு.” என அழைப்பை துண்டித்துவிட்டவளுக்கு தலை வலிப்பது போல் இருந்தது. அடுத்து அனைவரையும் சமாளிக்க வேண்டும். கேள்விகளுக்கு பதில் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் ஆளாளுக்கு அறிவுரை என்று வந்துவிடுவார். இதற்கு பேசாமல் சென்று வந்துவிடலாம் என்று அப்போதே எதிர்வரப்போகும் கேள்விகளுக்கும் சமாதானங்களுக்கும் பாச மிரட்டல்களுக்கு பயந்து நின்றாள். மாலை போல் அவளை அழைக்க வந்த வளவனை முடிந்தமட்டும் முறைத்தாள்.

“இப்போ என்ன ட்ரையின் ஏறணுமா நான்?” என பல்லை கடித்துக்கொண்டு அண்ணனை நோக்கி முன்னேறினாள்.

“அப்பப்போ நீ அங்க போய்ட்டு வர்றதால தான் அப்பாவும் அம்மாவும் கொஞ்சம் ஆசுவாசமா இருக்காங்க. இப்படி உனக்கும் அவங்களுக்கும் சம்மந்தமே இல்லைங்குற மாதிரி நீ முறிச்சிவிட பார்த்தா தாங்க மாட்டாங்கடா.” என எதிர்பார்த்தது போல அவளை மனம் இறங்க வைப்பது போல் பேசினான்.

“நான் எங்க அங்க போனேன். இப்படி பேசி பேசியே நீங்கதான் என்னை போக வைக்குறீங்க.” என்று இரைந்தவளை பாவமாக பார்த்தவன், “முடிச்சிக்குற உறவு இல்லையே இது. முள்ளை பாத்துட்டு முன்னேறாம தள்ளி நிக்குற. அப்புறம் எப்படி ரோஜாவை பறிக்க முடியும் சொல்லு.”

“ஐயா சாமி இன்னைக்கு உனக்கு கொடுத்திருக்கிற டாஸ்க் என்னை ஊருக்கு பேக் பண்றதுனு நல்லாவே புரிஞ்சிடுச்சு. அது இந்த முறை நடக்காது.” என அழுத்தமாக பேசியவளிடம் அலைபேசியை தூக்கிக்காட்டினான் வளவன். 

“நீ வரமாட்டேன்னு சொன்னா கால் பண்ண சொல்லி விமல் சொன்னார். என்ன பண்ண?”

விமல் எப்படி பேசி காரியம் சாதித்துக்கொள்வான் என்பது தெரிந்த விஷயமாதலால் முகத்தை அழுந்தத் துடைத்து பெருமூச்சு விட்டவள், “உங்க வார்த்தைஜாலத்தோட போராட தெம்பில்லை அண்ணா எனக்கு.” என சொல்லி தன் உணர்வுகளுடன் போராடிவிடலாம் என கிளம்பி வந்துவிட்டாள். ஒவ்வொரு முறையும் ஊர், உறவு, சொந்தம் என ஏதாவது காரணம் காட்டி தன்னை அவர்கள் இழுப்புக்கு இழுப்பதும் அவர்களுடன் போராட தெம்பில்லாமல் இவள் உடன்படுவதும் தொடர்கதையாகிவிட, மனம் வெறுத்துப்போனது. 

தன்னால் முன்தினம் அலைபேசியில் விமல் அனுப்பிய நுழைவுச்சீட்டை திறந்து பார்த்தாள். காகிதத்தின் அளவில் மட்டுமே ஒட்டிக்கொண்டிருக்கும் உறவாக அவளைத் தொடரும் உறவின் அடையாளமாய் நின்றது அந்த  பெயர், “செண்பகா ரத்னதீபன்.”