“ம. ரத்னதீபன் எனும் நான்…” என ஆளுநர் முன்னிலையில் கணீரென துவங்கியவன் இந்திய அரசியல் அமைப்பின்பால் அறுதியிட்டு உறுதிமொழி ஏற்று மாநில சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டான். உறுதிமொழி வாசித்ததும் கையொப்பமிட ஆவணங்கள் நீட்டப்பட பிறக்கத் துடித்த வெற்றிப் புன்னகையை இருக்கும் இடம் கருதி அடக்கியவன் அரசியல் மரபுகள் வழி அனைத்தையும் முடித்து அவையில் கூடியிருந்தவர்களுக்கு வணக்கம் வைத்து தன் இடத்திற்கு சென்று அமர்ந்தான்.
மெலிதான கரகோஷம் எழும்பி அடங்க அவன் காதுகளும் கண்களும் கூர்மையாகி எந்த பக்கத்திலிருந்து அதிக வரவேற்பு வருகிறது, தன் ஆதரவாளர்கள் தன் பெயரை உரக்கச் சொல்கிறார்களா என்றெல்லாம் கவனித்தான். அருகில் இருப்பவர்கள், எதிரே அமர்ந்திருப்பவர்கள் என அனைவரும் விழாவில் ஒன்றிப்போய்விட இவனது அறிவு எதையோ கணக்கிட்டபடி இருந்தது. இவனைத் தொடர்ந்து வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வரிசையாக பதவியேற்றனர்.
அவன் கண்கள் அனைவரையும் எடை போட, அவனையே எடைபோட்டது இரு ஜோடி கண்கள். பார்வையாளர்கள் பகுதியில் மேடையில் இருக்கும் அவனையே வெறித்தவண்ணம் அமர்ந்திருந்த செண்பகாவின் பார்வை அவன் பதவியேற்ற சமயம் மருந்துக்கும் அவனை விட்டு இங்கு அங்கு நகரவில்லை. ஆனால் அவன் சென்று இருக்கையில் அமர்ந்த பின் சட்டென பக்கவாட்டில் பார்த்தாள். அவளின் இடப்பக்கம் ஆனந்தமே உருவாக அபிராமி, அவரைத் தொடர்ந்து பெருமிதத்துடன் மருதுவும் இருந்தனர். மறுபக்கம் குழந்தையுடன் இன்பக்களிப்பில் திவ்யா அருகில் கர்வத்துடன் விமல். உடனே பார்வை முன் வரிசைக்குச் சென்றது. இவள் கொடுக்க வேண்டிய அதீத மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வண்ணம் இருந்தாள் வேறொருவள். மனம் கனத்துவிட, சட்டென முகம் இருண்டு போனது. அழ வேண்டும் போல் இருக்க, நான் எதற்கு அழ வேண்டும் என்ற வீம்பு ஒருபுறம் அவளை இழுத்துப்பிடித்தது. இருக்கும் இடம் கருதி தன் உணர்வுகளை பிரயத்தனப்பட்டு அடக்கிக்கொண்டாள். சுற்றத்தினர் சிலர் வேறு இவளை பார்ப்பதும் தங்களுக்குள் ஏதோ பேசுவது போலும் இவளுக்குத் தோன்ற இரத்த அழுத்தம் எகிறியது.
அவளின் தத்தளிக்கும் மனதினை கண்டுகொண்டது போல் திவ்யாவின் மகன் கையை நீட்டிக்கொண்டு இவள் புறம் சாய்ந்தான். அதில் யோசனையை கலைந்தவள் தன்னிடம் தாவிய பிள்ளையை தூக்கிக்கொண்டாள்.
கிளுக்கிச் சிரித்த பிள்ளை அவள் முகத்தில் மோதி, புரியாத மழலையில் ஏதோ பிதற்றி, கொஞ்சுகிறேன் என முகத்தை எச்சிலில் குளிப்பாட்டி செய்த சேட்டையில் சுற்றம் மறந்து போனது செண்பகாவிற்கு. குழந்தையுடன் குழந்தையாக கொஞ்சி விளையாடியவளை மீறிக்கொண்டு கீழே இறங்க முயன்றான் இரண்டு வயது கமல்.
“அப்புறம் இறங்கி விளையாடலாம் குட்டி. அங்க மேடையை பாருங்க பெரிய லைட் இருக்கு.” என எங்கெங்கோ போக்கு காட்டிப் பார்த்தாள். ம்கூம் கீழே இறங்கி ஓடத் துடிக்கும் பிள்ளையை மடியில் அமர்த்த முடியவில்லை. இவள் படும் சிரமத்தை கவனித்த திவ்யா மகனின் முகத்தை மேடை நோக்கி திருப்பி, “மாமா பாரு குட்டி. ஹாய் சொல்லு மாமாவுக்கு. கங்ராட்ஸ் சொல்லு.” என விளையாட்டு காட்டினாள். அதில் பிள்ளை கொஞ்சம் திசை திரும்பினான். செண்பகாவின் கவனமும் மீண்டும் மேடையில் இருப்பவன் புறம் சென்றது.
எப்போதும் வெள்ளை மேல்சட்டை கருப்புநிற கால்சட்டை அணிபவன் இன்று வெளிர் நீல நிற பார்மல் சட்டையும் வெள்ளை நிற கால்சட்டையும் உடுத்தி வெள்ளை வேஷ்டி உடைகளுக்கு நடுவே தனித்துத் தெரிந்தான். அப்படி தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக தன் வழக்கமான உடையை மாற்றிக்கொண்டானோ என்னவோ. மேடையை நோக்கும் பார்வைகள் ஒரு முறையேனும் அவனை கடந்துதான் மற்றவர்கள் மீது படியும். அந்த அளவிற்கு உடை முதல் சிகை வரை நேர்த்தியாக பார்த்து பார்த்து தயாராகி இருப்பது போல் இருந்தது. அவனுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும் என உதட்டை சுழித்தவள் அறிவோ இது போன்று தயாராவதற்கு அவனுக்கு சொல்லிக்கொடுக்கவென ஒரு ஆள் இருக்கிறதே என இடித்துரைக்க, சோர்வும் கோபமும் இயலாமையும் போட்டி போட்டுக்கொண்டு அவளை ஆக்கிரமித்தது. ஒரு நொடி தான் என்ன உணர்கிறோம் அந்த உணர்வை விரட்டியடிப்பதா இல்லை இதிலிருந்து மீள்வதா என எதுவும் விளங்கவில்லை.
“செண்பா தண்ணி கொடு. மாமாக்கு தாகமா இருக்காம்.” என அபிராமி அவள் கை சுரண்டவும் நிகழ்வுக்கு வந்தவள் தன் காலடியில் வைத்திருந்த பையை அப்படியே எடுத்துக் கொடுத்தாள்.
“தண்ணி பாட்டில் மட்டும் கொடுக்காம எதுக்கு பையே கொடுக்குற?” என கேட்டுக்கொண்டே பையிலிருந்து பாட்டிலை எடுத்து கணவரிடம் கொடுத்துவிட்டு பையை மீண்டும் அவளிடமே கொடுத்தார்.
உச்சி கொட்டி வாங்கி வைத்துக்கொண்டவள் எப்போது இங்கிருந்து கிளம்புவோம் என நுனி இருக்கைக்கு வந்துவிட்டாள். ஆனால் உடன் வந்த குடும்பத்தினருக்கு அந்த எண்ணம் இல்லை. விடிய விடிய என்றாலும் இந்த நிகழ்ச்சியை பார்ப்போம் என்பது போல் இருந்தனர். பொறுத்துப் பார்த்தவள் திவ்யா புறம் சாய்ந்து, “கமலை தூக்கிட்டு வெளில போய் நிக்கவா? அவனும் இறங்கி ஓடணும்னு ரொம்ப நேரமா சிணுங்கிட்டு இருக்கான்.” என திவ்யா மடியில் இருக்க மாட்டேன் என வளைந்து நெளியும் பிள்ளையை காரணம் காட்ட, மகனை குனிந்து பார்த்த திவ்யா,
“நாம உள்ள வந்த வழியை அடைச்சிட்டாங்க. போலீஸ் எல்லாம் இருக்காங்க. வெளில போக முடியுமோ என்னவோ…” என சொல்லிக்கொண்டே கணவனிடம் திரும்பியவள் விஷயத்தை சொன்னாள்.
மேடையை பார்த்துவிட்டு தங்கள் சுற்றத்தினை பார்த்த விமல் இவர்களை நோக்கி குனிந்து, “இருக்குற கூட்டத்துல புள்ளைய கூட்டிட்டு வெளில போனா கண்டுபிடிக்க முடியாது. பேசாம இங்கேயே வச்சி சமாளிங்க.” என சற்று அழுத்தமாக சொல்ல, முகம் திருப்பிக்கொண்டாள் செண்பகா.
“ரொம்பத்தான்…” என சடைத்த விமல் மனைவியிடம் பாய்ந்தான், “புள்ளையை கொஞ்ச நேரம் வச்சிக்கிட்டு உக்கார முடியாதா உன்னால? வெளில போறேன்னு எங்கேயும் தொலைஞ்சிட்டா எங்கன்னு தேட…”
“நீங்க உக்காந்து பாருங்க கொஞ்ச நேரம்.” பட்டென்று பிள்ளையை தூக்கி விமலின் மடியில் அமர்த்தியவள் மேடையில் இருக்கும் அண்ணனை பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.
தன் மடியிலிருந்து நழுவி இறங்கும் பிள்ளையை குண்டுகட்டாக தூக்கி மடியில் அமர்த்திக்கொண்டவன் மனைவியை முறைக்க, அதை கூட முழுதாக செய்ய விடாமல் மகன் மீண்டும் சிணுங்கி நெளிந்தான்.
“சும்மான்னு இரேண்டா…” என மீண்டும் கமலை தூக்கி நிறுத்த, அப்பனின் முகத்தில் அடித்து கீழே இறக்கிவிடச் சொன்னது பிள்ளை. என்னென்னவோ குட்டிக்கரணம் அடித்து மகனை கீழே இறங்க விடாமல் செய்ய முயற்சித்தான் விமல்.
அவன் அல்லல்படுவதை பார்த்த செண்பகா நமட்டு சிரிப்பு சிரித்தாள்.
‘இந்த ஆம்பளைங்களுக்கு வாய் தான்… அதுவும் பொம்பளைங்ககிட்டதான். அதுவும் கட்டுனவளை அடக்க திமிறிட்டு வருவானுங்க. மத்தவங்ககிட்ட மூடிட்டு இருப்பானுங்க.’ உதட்டுக்குள் முணுமுணுத்தவள் இடவலமாய் எச்சரிக்கை பார்வை பார்த்துக்கொண்டாள். எங்கே தான் பேசியது மற்றவர்களுக்கு கேட்டுவிடவில்லையே என உறுதிப்படுத்தும் நோக்கில்.
மேலும் சில நிமிடங்கள் கரைய நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. தேசிய கீதம் பாடப்பட அப்பாடா என முதல் ஆளாய் எழுந்து நின்றுவிட்டாள் செண்பகா. பாடி முடித்ததும், “கிளம்பலாமா?” என பார்க்க,
“அதுக்குள்ளவா? இன்னும் ரத்தினத்துக்கிட்ட பேசவே இல்லை. நாம வந்ததை பார்த்தானா என்னனு தெரியல.” என்றார் அபிராமி யோசனையாய். பேச்சு இவளிடம் இருந்தாலும் பார்வை மேடையில் இருப்பவனிடம் இருந்தது.
“அவங்களுக்கு நிறைய வேலை இருக்கும். வேணும்னா மாமாவை, அண்ணனை கேட்டுப் பாருங்க.” என விமலையும் மருதுவையும் அவள் கை காண்பிக்க,
“இவ்ளோ தூரம் வந்துட்டு மச்சானை பாக்காம போறதா? நாம வரணும்னுதான என்ட்ரி பாஸ் எல்லாம் மச்சான் அனுப்பிவிட்டிருக்காரு. இதுவரைக்கும் இருந்தது பெருசில்லை இனிதான் அவர் கூட இருக்கணும்.” என்றான் விமல். அதில் உள்ளர்த்தம் இருக்குமோ என செண்பகா கூர்ந்து பார்க்க, மருது இந்த உரையாடலில் கலக்கவே இல்லை. கலைந்து செல்ல தயாராய் இருக்கும் மற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் குடும்பத்தினரிடம் பேச்சு கொடுத்து தன் அரசியல் வாழ்வு பற்றியும் தன் மகன் புகழையும் பாடிக்கொண்டிருந்தார்.
அவள் தலையில் லேசாக தட்டிய விமல், “நமக்கெல்லாம் சாப்பாடு கிடையாது. மச்சானுக்கு மட்டும் கொடுப்பாங்களா இருக்கும்.” என்றவன் பிள்ளையை மனைவியிடம் கொடுத்துவிட்டு நைச்சியமாக மாமனாருடன் சேர்ந்துகொண்டான்.
ஆயாசமாக இவர்களை பார்த்த செண்பகாவின் பார்வை மீண்டும் முன்னிருக்கைக்கு சென்றது. இரண்டு காவல் அதிகாரிகள் அவளிடம் எதுவோ சொல்ல, அதற்கு இவள் ஏதோ சொல்லி மேடையை கை காண்பிக்க என இருந்தவள் சட்டென எழுந்து கிளம்ப ஆயத்தமானாள். அவள் எழவும் அதிர்வுடன் அவளை பார்த்த திவ்யா, ‘எப்படி இவங்களை பாக்காம விட்டோம்?’ என நினைத்துக்கொண்டே தன் அருகில் இருந்த செண்பகாவை பார்க்க, அவள் முகத்தில் இருந்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. முன்னே மினுமினுக்கும் புடவையில் ஜொலித்தவள் மீது செண்பகாவின் பார்வை இருப்பது போலவும் தெரியவில்லை.
‘ஒருவேளை இவங்கள பாக்கலையோ?’ என நினைத்துக்கொண்டே அபிராமியை பார்த்து கண்ணசைக்க,
“என்ன திவ்யா?” புரியாமல் கேட்டார் அவர்.
“ம்மா…” பல்லைக் கடித்தவள், “கமலுக்கு எடுத்துட்டு வந்த ஜுஸ் எங்க?” சிரமப்பட்டு பேச்சை மாற்றியவள் பார்வை என்னவோ அங்கிருந்து காவல்துறை பாதுகாப்புடன் வெளியேறியவளிடம் இருந்தது. செண்பகாவின் ஓரப்பார்வையும் அங்குதான் இருந்தது.
“செண்பா அந்த பையில இருக்கும் பாரேன்.” என அபிராமி செண்பகாவைதான் ஏவினார்.
அலுப்புடன் பையிலிருந்து ஜுஸ் பாட்டிலை எடுத்துக்கொடுத்தாள். திவ்யா இருக்கையில் அமர்ந்துகொண்டு கமலுக்கு அதை புகட்ட, மீண்டும் செண்பகா பார்வை மேடையில்.
அத்தனை நேரம் கரகோஷமும் ஆரவாரமாகவும் என ஒருவித நேர்மறை எண்ணம் தாங்கியிருந்த இடம் இப்போது சலசலவென சந்தை போல் இருந்தது. காது வலியே வந்துவிடும் போல, சுண்டுவிரலால் காதை நன்றாக தேய்த்துக்கொண்டாள் செண்பகா.
பதவியேற்ற அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். அவன் அத்தனை உயரமில்லை என்றாலும் உடை அவனை காட்டிக்கொடுத்தது. விழா நடந்த போது விறைப்பாக இருந்தவன் முகம் இப்போது அத்தனை வெளிச்சமாக இருந்தது. சிரித்து சிரித்து உடன் இருப்பவர்களுக்கு வாழ்த்து கூறி அவர்களின் வாழ்த்தை ஏற்றுக்கொண்டான். உத்தமன் போல புகைப்படத்திற்கு நிற்கிறான் என எரிச்சல் கொண்டாள் பெண்.
பார்வையாளர் பகுதியில் ஒரு சிலரே இருக்க, மேடையிலிருந்து கீழே இறங்கி இவர்களை நோக்கி வந்தான் வேளச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினன். அவன் வரவும் முகத்தை திருப்பிக்கொண்டு நகர்ந்துவிட்டாள் செண்பகா. விட்டால் அங்கிருந்தே நகர்ந்து சென்றிருப்பாள். ஒருபக்கம் திவ்யாவும் மறுபக்கம் அபிராமியும் வழி மறித்து நின்றிருந்தனர்.
“ரத்தினம்…” மகன் அருகில் வரவும் வேகமாக சென்று அவன் கையை பிடித்துக்கொண்டார் அபிராமி.
“என்னம்மா சந்தோஷமா?” என தாயை பார்த்து அவன் புன்னகைக்க, மருதுவும் விமலும் அவனிடம் வந்துவிட்டனர்.
“வாழ்த்துக்கள் மச்சான்… ஜெயிச்சிட்டீங்க மாறான்னு உங்களை தூக்கி சுத்தணும் போல இருக்கு.” என அவனை இறுக்கமாக கட்டி விடுவித்தான் விமல். ஏதோ அவனே வென்றது போல் அத்தனை மகிழ்வு அவனிடத்தில்.
“ஊர்ல உங்களுக்கு பேனர் வச்சி அசத்திட்டோம். போட்டோ பாத்தீங்களா?” விளம்பர பேனர் வைத்தபின் அதன் புகைப்படத்தை ரத்னதீபனுக்கு அனுப்பி வைத்திருந்தான். அதை நினைவுப்படுத்தும் விதமாய் விமல் பேச, கண்ணமர்த்தி ஏற்றான் ரத்னதீபன்.
“அமைச்சராக வாய்ப்பிருக்கா மச்சான்?” என்று மீண்டும் இடைபுகுந்த விமலிடம் உதட்டை பிதுக்கினான் ரத்னதீபன்.
“ஏன் ஏன்? அமைச்சராக எல்லா தகுதியும் உங்களுக்கு இருக்கு மச்சான். விடாதீங்க கேளுங்க. ப்ரஷர் போடுங்க. முதல் எலெக்ஷன்லேயே பெரிய வாக்கு வித்தியாசத்துல ஜெயிச்சிருக்கீங்க. இப்போல்லாம் நம்மளை மாதிரி யூத் அரசியலுக்கு வர்றததான் எல்லாரும் விரும்புறாங்க. ரத்தினம் சரித்திரம் படைக்க வேண்டாமா…” என அளந்துவிட்டான் விமல்.
“கேட்டுட்டு இருக்கேன் மச்சான். சீனியர்ஸ் இருக்காங்க அவங்களுக்கு தான் முன்னுரிமைன்னு கட்சி மேலிடத்துல ஸ்டார்ங்கா இருக்காங்க.” என பதில் சொன்னவன் பார்வை மருந்துக்கும் சற்று தள்ளி நிற்பவள் மேல் விழவில்லை. திவ்யாவிடமிருந்த மருமகனை தூக்கிக் கொஞ்சினான்.