“எம்பையர்’க்கு ராஜா வராம எப்படி?” அவன் புருவம் தூக்கினான்.
“இது எங்க எம்பையர். நீங்க உங்க சாம்ராஜ்யத்துக்கு ராஜாவா இருந்தா மட்டும் போதும்”
“இதுவும் என்னோடது தான்”
“கோவத்தை அதிகப்படுத்தாத”
“எரிமலை என்னைக்கு அடங்கியிருக்கு?” தோள் குலுக்கியவன், “பசிக்குது. கற்பகம் பாட்டிகிட்ட இருந்து சாப்பாடு வாங்கிட்டு வர சொல்லுங்க” என்று சோபாவில் சென்று மல்லாக்க விழுந்தான்.
“அஞ்சு நிமிஷம் உனக்கு டைம். அதுக்குள்ள வந்த விஷயத்தை சொல்லிட்டு, உன் ஆளுங்களை கிளப்பிட்டு போயிட்டே இருக்கணும்” குருமூர்த்தி அவன் முன் நின்று உத்தரவாக சொன்னார்.
“ம்ப்ச். இருபது மணி நேரம் டிராவல் பண்ணிட்டு வந்திருக்கேன். ஜெட் லேக் வேற படுத்தி எடுக்குது, கற்பகம் பாட்டிகிட்ட இருந்து சுட சுட இட்லி வேணும். முதல்ல அதை போய் சொல்லுங்க” படுத்த வாக்கிலே பதில் சொன்னான் சுகவாசி.
“உன்னை இப்படியே தூக்கி இந்த கண்ணாடிக்கு வெளியே வீசிடுவேன்” குருமூர்த்தி பல்லை கடிக்க,
“இன்னும் பழைய எலும்பன்’னு நினைச்சீங்களா? என் வெய்ட் என்ன தெரியுமா? முதல்ல என் மஸில்க்கு பதில் சொல்லுங்க ஹீரோ சார்” என்று கையை மடக்கி காட்டி அவரை வம்பிழுத்தான் இளங்காளை.
“டேய் விஷயத்துக்கு வாடா”
“சாப்பிட்டா தான் பேச்சு வரும்”
“இவ்வளவு நேரம் என்ன தியானத்துலயா இருந்த”
“இப்போ தியானத்துக்கு போயிட்டேன்” என்று கண்களை மூடி கொண்டான்.
“ராஸ்கல். ஒழுங்கா எழுந்து உட்கார்ந்து பேசுடா” என்று அவனை பிடித்து தூக்கி அமர வைக்க, திரும்ப அப்படியே சாய்ந்தான்.
“என் ஆளுங்க ரொம்ப நேரம் வேளியே நிக்கிறாங்க. ஒழுங்கா எல்லாரையும் உள்ள வரவிடு”
“என்னை ரொம்ப சீண்டிட்டு இருக்க நீ”
“டேய்”
“உன் ஆளுங்களை மொத்தமா தூக்கி போட எனக்கு அஞ்சு நிமிஷம் ஆகாது. என் ஏரியால வந்து என்னையே டார்கெட் பண்ணிட்டிருக்க”
“தூக்கி போட வேண்டியது தானே” கண்களை மூடி கொண்டு வாய் மட்டும் வேலை பார்த்தது.
எதிர்த்து நிற்பவர்களை பந்தாடிடுவார். இவன் ஆட்களோ அத்தனை பலசாலிகளாக இருந்தும் இவருக்கு எதிராக சுண்டு விரலை கூட அசைக்க மாட்டேன் என்று நிற்கிறார்கள். அவர்களை போய் எப்படி அடிக்க முடியும்?
“மலைமாடா. இந்த வார்த்தையை சொல்லாதீங்க” கடுகடுத்தான் கோவக்காரன்.
“ஏன் சொல்ல கூடாது? நான் சொல்வேன், மலைமாடு”
“எனக்கென்ன? நீங்க அதை சொன்னா எனக்கு உங்க அருமை மக ஞாபகத்துக்கு வருவா. பார்த்துக்கோங்க”
“ராஸ்கல் என் மகளை பத்தி நீ நினைக்கவே கூடாது”
“நீங்கதான் நினைக்க வைக்கிறீங்க?”
“இப்போ பசிக்கலையா உனக்கு?”
“பசிக்குது தான். என்ன பண்ண? ஊட்டில பட்டினி போட்ட மாதிரி இங்கேயும் என்னை பட்டினி போடுறீங்க” பாவமாக முகத்தை வைத்தான் நடிகன்.
குருமூர்த்திக்கு சட்டென ஓர் குற்ற உணர்ச்சி. “ஒரு நாள் தாண்டா கொடுக்கலை. என்னமோ தினமும் பண்ண மாதிரி பேசுற?” மனிதரின் குரலில் கொஞ்சம் நெடி குறைந்தது.
“இப்போ பசிக்குதுன்னு கேட்டும் கொடுக்கலையே?”
“எடுத்துட்டு வர சொல்றேன். தின்னு தொலை”
“தின்னு தொலையா? எனக்கு ஒன்னும் உன் சாப்பாடு வேணாம் போயா”
“டேய் மரியாதையா பேசு. தோலை உரிச்சிடுவேன்”
“அதுக்கு பதிலா உசுரை எடுத்துடுங்க, நீங்க நன்றி கடனுக்காக காப்பாத்தி கொடுத்தது தானே? ம்ஹூம் அப்படி சொல்ல கூடாது, பிச்சை போட்டது தானே”
“நான் இப்படி எல்லாம் பேசவே கிடையாது” குருமூர்த்தி அவனை முறைத்தவர்,
“நான் டைவர்ட் பண்றேனா? உயிர் போற சூழ்நிலையிலும் என்னை டைவர்ட் பண்ணது நீங்க பெத்து வைச்சிருக்க உலக அழகி தான். தெரியுமா உங்களுக்கு?” என்று நியாயம் கேட்டு கொதித்தெழுந்தான் நல்லவன்.
ஆஹ். குருமூர்த்தி நொடி அதிர்ந்துதான் விட்டார்.
“ராஸ்கல். பெத்த அப்பன்கிட்ட என்னடா பேசிட்டு இருக்க நீ?” என்று கடுப்பாகி படுத்திருந்தவன் நெஞ்சு சட்டையை பிடித்துவிட்டார் மனிதர்.
“ம்ப்ச். பார்த்தேன். உங்க மகளை ஏர்போர்ட்ல பார்த்தேன். அதான்” என்றபடி அவரின் கைமேல் முகம் சாய்த்தவன்,
“பாருங்க இப்போக்கூட வந்த விஷயத்தை விட்டு அவளுக்கே தாவிட்டு இருக்கேன். இத்தனை வருஷம் கழிச்சும் என்னை டைவர்ட் பண்றா” என்று ஏகத்துக்கும் கோவம் வேறு கொண்டான்.
‘ஆஹ், போய்த்தொலை’ குருமூர்த்தி அவனை சோபாவில் தள்ளிவிட்டு தலையில் அடித்து கொண்டார்.
“நீ இப்போதைக்கு பேசி முடிக்க மாட்டேன்னு தெரிஞ்சு போச்சு. இந்த கருமத்தை எல்லாம் ரிலாக்ஸ் பண்ணிவிட்டு, என் போனை கொடு” என்றார்.
“ஆமா மணி அங்கிள் பாவம். அதோட எனக்கு இட்லியும் வேணும்” என்றவன், பாதுகாப்பு அதிகாரிகளை அழைத்து பேசினான்.
குருமூர்த்தி போன் அவர் கைக்கு வரவும் முதலில் மகளுக்கு தான் அழைத்தார்.
சம்யுக்தாவின் எண்ணுக்கு அழைப்பு செல்லவில்லை.
இரண்டு, மூன்று முறை முயன்று பார்த்தவர், ‘ஒருவேளை பிளைட்ல இருக்காளா?’ ம்ஹூம். விஷயம் தெரிஞ்ச பின்னாலே கண்டிப்பா என் பொண்ணு போயிருக்க மாட்டா’ தந்தை மனது அடித்து சொன்னது.
“அண்ணா. நான் கூப்பிட்டேன். எனக்கும் லைன் போகல, நம்ம பசங்களை என்னன்னு பார்க்க சொல்லியிருக்கேன்” என்றார் மணி.
நல்லவன் காரணம் தெரிந்தும் சொல்லாமல் உதடு சுளித்து கொண்டவன், சாவகாசமாக, “எப்படி இருக்கீங்க?” என்று மணி, குணாவை நலம் விசாரித்தான்.
“என்ன தம்பி இது? நீங்க பண்றது கொஞ்சம் கூட சரியில்லை. இன்னொரு முறை அண்ணனை இப்படி பண்ணாதீங்க. உங்க ஆளுங்க மேல பாவப்பட்டு கைவைக்காம இருக்கோம்.” என்று மணி படபடவென பொரிந்துவிட்டார்.
“உங்க அண்ணன் என்கிட்ட பேசினா நான் ஏன் இதை பண்ண போறேன் அங்கிள்?” என்று சாதாரணமாக முடித்துவிட்டவன், “கற்பகம் பாட்டிகிட்ட இருந்து இட்லி வாங்கிட்டு வர சொல்லுங்க அங்கிள்” என்றான்.
“அண்ணா. என்ன இது” என்று மணி கண்களை விரித்து குருமூர்த்தியை பார்க்க,
“வாங்கிட்டு வந்து கொடு. என்ன பண்ண?” என்றார் குருமூர்த்தி.
“இருந்தாலும் நீங்க இவருக்கு ஓவர் இடம் கொடுக்கிறீங்க? நான் எதாவது பண்ணா மட்டும் அந்தரத்தில் பறக்க விடுறீங்க?” என்று குணா பொறுக்க முடியாமல் கேட்டான்.
“இவன் வேற. பேசாம இருடா” என்று மணி அதட்ட,
“இன்னும் கூட முதலாளிகிட்ட சண்டைக்கு போறதை விடலை இல்லை நீ?” என்று சர்வாச்சார்யா அவனை சுவாரசியமாக பார்க்க,
“நான் சண்டை போடலை. ஜஸ்ட் நியாயம் கேட்கிறேன்” என்றான் குணா.
“கேட்கிறதே இந்த போர்ஸ்ன்னா சண்டை பயங்கரமா போடுவ போலயே” என்று சர்வாச்சார்யா மெச்சுவது போல் உதடு பிதுக்கினான்.
“நோ நோ எனக்கு அடிதடி அலர்ஜி. வன்முறைக்கு எல்லாம் போக கூடாது பாஸ். அது தப்பு. என்னவா இருந்தாலும் வாயால மட்டும் தான்” குணா சொல்ல,
“ரொம்ப ஆசைப்படாதீங்க. நான் போக மாட்டேன்” என்ற குணா,
“நீங்க வேற, அய்யா வேறயா? உங்க இரண்டு பேர்ல யார்கிட்ட வேலை பார்த்தா என்ன பாஸ்? நான் இங்கேயே இருந்துகிறேன்” என்ற குணா, குருமூர்த்தி முறைப்பில்,
“தப்பா சொல்லிட்டேனா என்ன?” என்று மணி காதை கடித்தான்.
“நீ என்னைக்கு சரியா பேசியிருக்க இப்போ தப்பா பேச” மணி கேலியாக சொன்னார்.
“சார்” என்று ஒருவன் வந்து கதவை தட்டி உள்ளே வந்தவன், “எங்களை வேலை பார்க்க கூடாதுன்னு சொல்றாங்க” என்றான்.
“நீங்க அந்த *** கம்பெனி ஆளுங்க தானே? யார் உங்களை வேலை பார்க்க கூடாதுன்னு சொன்னது?” குணா புரியாமல் கேட்க,
“நாந்தான்” என்ற சர்வாச்சார்யா கண் அசைவில் அவன் பாதுகாப்பு அதிகாரி உள்ளே வந்தவனை வெளியே அழைத்து சென்றுவிட்டார்.
“என் பிஸினஸ்ல தலையிடாத. அவனை வேலை பார்க்க கூடாதுன்னு நீ எப்படி சொல்வ?” குருமூர்த்திக்கு கோவம் வந்துவிட்டது.
“சொல்வேன். ஏன் சொல்ல கூடாது? எனக்கு தர மாட்டேன்னு சொல்லிட்டு அவனுக்கு மட்டும் கொடுத்திருக்கீங்க?” என்று அவருக்கு மேல் இவன் காய்ந்தான்.
“யாருக்கு தம்பி?” மணி இடையில் வர,
“அவன்தான். அந்த ரோஹன்” என்றான் நாயகன்.
“சண்முகம் மகனா? அவனுக்கு நாம எப்போ கொடுத்தோம்?” மணி திரும்பி குணாவை பார்க்க,
“அது வேற ஒருத்தரோட கம்பெனி ஆச்சே” என்றான் குணா.
“ரோஹனும் அதில ஒரு பார்ட்னர்” என்றான் நாயகன்.
“எங்களுக்கு இது தெரியாதுண்ணா. அந்த டீடைலை அவங்க சொல்லலை” என்று குருமூர்த்தி கோவத்தில் மாசிலாமணி வேகமாக விளக்கம் கொடுத்தார்.
“அவனுக்கென்ன எம்பையர்லே இடம் வேணும்ன்னு கட்டின கட்டிடத்தை விட்டுட்டு இங்க வரான். இன்னொரு முறை அவன் தலை இந்த பக்கம் திரும்பிச்சு அவ்வளவு தான் சொல்லி வைங்க” என்று சர்வாச்சார்யா கடுமையாக எச்சரிக்கை விடுத்தான்.
ஊட்டியில் வைத்து ரோஹன் நேர்கொண்டு பார்த்த பார்வை குருமூர்த்தியின் நினைவுக்குள் வெட்டி சென்றது.
அப்போ அவன் ஒதுங்கலை? குருமூர்த்திக்கு சரசரவென உள்ளுக்குள் தீப்பற்றியது.
“பீலிங் ஸ்லீப்பி. நான் தூங்குறேன். இட்லி வந்ததும் எழுப்புங்க” என்ற நல்லவன் சோபாவிலே படுத்து தூங்கியும்விட்டான்.
சம்யுக்தா அந்த அறைக்குள் பரபரப்புடன் நுழைந்தவள், “ப்பா. நீங்க ஓகே தானே?” என்று முதலில் தந்தை நலத்தை தான் ஆராய்ந்தாள்.
“எனக்கென்னமா? நீ ஏன் இவ்வளவு டென்சன் எடுத்துகிற?. முதல்ல தண்ணீர் குடி” தந்தை மகளை தண்ணீர் குடிக்க வைத்தவர், “உன் போனுக்கு என்னாச்சு?” என்று கேட்டார்.
“கீழே விழுந்திடுச்சுப்பா” என்று சம்யுக்தா போனை எடுத்து கொடுக்க,
“ரெடி பண்ண முடிஞ்சா பண்ணு, இல்லை புதுசா வாங்கிட்டு வா” என்று குணாவிடம் சொன்னார்.
‘ஸ்ஸ். அப்பா ரொம்ப கோவமா எல்லாம் இல்லை’ ஆசுவாசம் கொண்டவள், சோபாவில் படுத்திருந்தவனை கண்டு அதிர்ந்து போனாள்.
“அண்ணா இட்லி வந்துடுச்சு” என்று மணி வந்தவர்,
“வந்துட்டியா பாப்பா. இங்க எல்லாம் ஓகேதான்” என்றார்.
அப்புறம் இதென்ன? என்று சம்யுக்தா அவரிடம் நல்லவனை கண் காட்டி கேட்க,
சொல்றேன் இரு என்று கண்களை மூடி திறந்தார் மாசிலாமணி.
சம்யுக்தாவால் குருமூர்த்தியிடம் அவனை பற்றி விசாரித்துவிட முடியுமா?
‘இவர் ஹைட்டுக்கு இந்த சோபா எப்படி காணும். கழுத்து வலிக்க போகுது’ சம்யுக்தா முகத்தை திருப்பி கொண்டாள்.
மணி சென்று அவனை எழுப்ப, “டூ மினிட்ஸ்” என்று திரும்ப தூக்கத்திற்கு சென்றான்.
இவனோட! இங்கென்ன விருந்துக்கா வந்திருக்கான் மலைமாடு! குருமூர்த்தி அவனை பார்த்ததில் சம்யுக்தாவிற்கு தான் படபடத்தது.
மணி அவனை எழுப்பி கொண்டிருக்க, “நீ வீட்டுக்கு கிளம்புமா. நான் நைட் வந்து உன்கிட்ட பேசுறேன்” என்று குருமூர்த்தி மகளை கிளப்ப பார்க்க, படக்கென எழுந்து அமர்ந்தான் நாயகன்.
ராஸ்கல். குருமூர்த்தி பல்லை நறநறவென கடித்து கொண்டார்.
“சரிப்பா” என்று சம்யுக்தா தந்தையின் கோவத்தில் விடைபெற,
“நான் நாளைக்கு லடாக் கிளம்புறேன்” என்றான் சர்வாச்சார்யா.
“ஏன்? அங்க ஏன் போறீங்க நீங்க?” சம்யுக்தாவிடம் இருந்து மின்னலை விட அதிவேகமாக பாய்ந்தது வந்தது கேள்வி.
அந்த தளமே ஆழ்ந்த அமைதிக்கு சென்றுவிட, தன் தவறை உணர்ந்த சம்யுக்தா, ‘ஸ்ஸ்’ கண்களை மூடி முகத்தை திருப்பி கொண்டாள்.
நாயகன் பார்வை வட்டத்திலே அவள் படவில்லை என்பது போல, “ரிப்ரெஷ் பண்ணனும்” என்று மணியிடம் கேட்டு ஓய்வறைக்கு சென்றான்.
தந்தை, மகளுக்கு நிச்சயம் தெரிந்து போனது இவன் வில்லங்கத்தை கிளப்பதான் லடாக் செல்ல போகிறான் என்பது!
அதனாலே சம்யுக்தா சுத்தமாக நிதானத்தை இழந்து, திரும்ப தந்தையின் கோவப்பார்வைக்கு ஆளானாள்.
“முடிஞ்சு போனதை விட்டு தொலைய மாட்டியாடா நீ?” குருமூர்த்தி கேட்க,
“முடிஞ்சு போனதா? எப்போ முடிஞ்சது?” என்று இவரை திருப்பி கேட்டான்.
“நாந்தான் முடிச்சு வைச்சேன். என்னை மீறி செய்ய போறியா?”
“அப்போ நீங்களே திரும்ப ஆரம்பிச்சு வைங்க. வாங்க என்னோட பைக் ரைடிங். நீங்களும் வாங்க. போலாம்”
“என்னை ரொம்ப படுத்துறடா நீ”
“ஆயுசுக்கும் இந்த ஊர் எல்லைக்குள்ள உன் கால் படக்கூடாதுன்னு சொன்னான் அவன். விட்டுட சொல்றீங்களா அவனை?” அப்படி ஒரு ஆவேசத்துடன் கர்ஜித்தான்.
சம்யுக்தாவிற்கு அவன் கர்ஜனையில் தூக்கி போட்டுவிட்டது.
அவன் தோள்கள் எல்லாம் விறைத்து, சட்டையே கிழிந்து விடும் போல!
எத்தனை வருடத்து கோவம் இது! தீம்பிழம்பாக தகித்து நின்றான்!
“டேய் தம்பி. வேணாம்டா, நமக்கு அதெல்லாம் வேணாம். உன் லைப் நல்லா போய்ட்டு இருக்கு. அதை ஏன் மறுபடி சிக்கல் ஆக்கிக்க பார்க்கிற?” குருமூர்த்தி அவனை புரிந்து நிதானப்படுத்த பார்க்க,
“எனக்கு வேணும். நான் போவேன், பண்ணுவேன், நீங்க வாங்க இல்லை என்னை விடுங்க. என் அம்மா சொன்னாங்க, நன்றி கடன் அதுஇதுன்னு என் பின்னாடி வர கூடாது. சொல்லிட்டேன்” என்றான்.
“நான் ஏண்டா உன் பின்னாடி வர போறேன். போ எங்க போறியா போ. என்ன பண்ணணுமோ பண்ணு. அடங்காத ஆடிட்டு இரு. யார் கேட்பா உன்னை?” குருமூர்த்தி அவன் நெஞ்சில் கைவைத்து தள்ள,
“நல்லது. ரொம்ப நல்லது. அந்த ஆதாரத்தை எல்லாம் உங்க மகளை கொடுக்க சொல்லுங்க. நான் இப்போவே கிளம்புறேன்” என்றான்.
“தீரஜ் இன்னும் கூட ஸ்ட்ராங் ஆகிட்டான். நீ அவனுக்கு எதிரா ஓர் அடி எடுத்து வைச்சாலும் அவன் சும்மா இருக்க மாட்டான்” குருமூர்த்தி அவனுக்கு புரிய வைக்க முயல, திமிறி கொண்டு நின்றான் காயப்பட்டவன்.
சம்யுக்தா கலக்கத்துடன் அவன் பின் சட்டை நுனியை பற்றி இழுத்தாள்.
திரும்ப வேண்டுமே! நல்லவன் அவள் முகம் பார்க்க வேண்டுமே!