“மெஷின் கட்டிங் பண்ணி எடுக்க பாருங்க” என்று மணி திரும்ப கேட்க,

“சுவர் எல்லாம் அரைகுறையா நிக்கிறதோட வீட்டோட அழகும் போயிடும்”

“அப்போ மொத்த வீட்டையே இடிச்சு போடு” என்றார் குருமூர்த்தி.

“அண்ணா” என்று வந்தவர்கள் திகைக்க,

“ஏன் பண்ண முடியாதா? இல்லை அதுக்கும் எதாவது காரணம் சொல்ல போறியா?” குருமூர்த்தி பாய்ந்ததில்,

“ண்ணா. என்னண்ணா நீங்க சொன்னா நாங்க செய்ய போறோம், வீடு நல்லா இருக்கேன்னு தான்”

“டேய் சொல்றதை செய், இல்லை கிளம்பு”

“செய்றோம்ண்ணா. நீங்க எப்போ சொல்றீங்களோ அப்போவே வேலையை ஆரம்பிச்சிடுறோம்”

“நாளைக்கே ஆரம்பிங்க” என்றார் குருமூர்த்தி.

“ண்ணா நாள் பார்த்து”

“தேவையில்லை”

“ண்ணா. நாம, நாம எங்க தங்க?” மணி அதிர்ந்து கேட்க,

“நான் நம்ம ஆபிஸ்ல தங்கிக்கிறேன். நீ சென்னைக்கு கிளம்பு” குருமூர்த்தி உடனுக்கு உடனே முடிவெடுத்தார்.

“ண்ணா, நான் ஏன் சென்னை போகணும்? அதோட ஆபிஸில் எல்லாம் தங்க வேண்டாம். நான் வேற வீடு பார்க்கிறேன், இரண்டு நாள் டைம் கொடுங்க”

“டைம் எல்லாம் கிடையாது. ஹோட்டல்ல ரூம் போடு. நீங்க காலையில இருந்து வேலையை ஆரம்பிச்சிருக்கணும்” என்று வந்த ஆட்களிடம் கண்டிப்புடன் சொல்லிவிட்டார் குருமூர்த்தி.

“பாப்பா லீவுக்கு வந்தா என்ன பண்றதுன்னு யோசிச்சீங்களா?” மணி தாங்கலுடன் கேட்க,

“நான் எங்க இருக்கேனோ அங்க என் பொண்ணு தங்கிப்பா, நீ இவங்களோட இன்னும் ஆளுங்களை சேர்த்துவிடு” என்று முடித்துவிட்டார் குருமூர்த்தி.

மறுநாள் அதிகாலையில் குருமூர்த்தி அறைக்கதவை திறந்து வெளியே வர, புதிதான ஆட்கள் ஹாலுக்குள் நின்றிருந்தனர்.

“யார் நீங்க?” என்று குருமூர்த்தி கேட்க,

“சர்வாச்சார்யா சார் ஆளுங்க” என்றான் ஒருவன் முன் வந்து.

“உங்களுக்கு இங்கென்ன வேலை?” மனிதர் கோவமாக கேட்க,

“நீங்க வீட்டு வேலை பார்க்க கூடாதுன்னு எங்க சார் சொல்ல சொன்னாரு” என்றான் அவன்.

“அடிங்க” என்று குருமூர்த்தி அவன் மேல் கையே வைத்துவிட்டார்.

“என்னை வேலை பார்க்க கூடாதுன்னு சொல்ல அவன் யாரு?” என்று குருமூர்த்தி கத்த,

“அண்ணா” என்று மாசிலாமணி ஓடிவந்தவர், “வேலைக்கு வந்தவங்களை இவங்க போகச்சொல்லி வலுக்கட்டாயமா அனுப்பிட்டாங்கண்ணா” என்றார்.

“என் கோவம் அதிகம் ஆகறதுக்குள்ள பேசாம இங்கிருந்து கிளம்பிடுங்க” என்று குருமூர்த்தி வந்தவர்களை எச்சரிக்க,

“எங்க சார் சொல்லாம நாங்க இங்கிருந்து ஓர் இன்ச் கூட நகர மாட்டோம்” என்றான் அந்த பாதுகாப்பு அதிகாரி.

“மணி என்ன நடக்குது இங்க? இவனுங்களை வெளியே அனுப்பு உடனே” என்று குருமூர்த்தி ஆவேசமாக சத்தமிட,

“ண்ணா. நான் நீங்க வரதுக்கு முன்ன இருந்து சொல்லிட்டு இருக்கேன். கேட்க மாட்டேங்கிறாங்க” என்றார் மாசிலாமணி.

“அப்படியா சங்கதி! எத்தனை பேருடா இருக்கீங்க? வாங்கடா” என்று குருமூர்த்தி அந்த ஆட்களை பிடித்து வெளியே தள்ளியவர் அதிர்ந்து தான் போனார்.

கேட் வரையிலும் அவ்வளவு ஆட்கள் அந்த பனியிலும் விறைப்பாக நின்றிருந்தார்கள்.

“மணி அந்த துப்பாக்கியை எடு. இவனுங்களை இன்னைக்கு ஒரு கை பார்த்திடுறேன்” என்று குருமூர்த்தி சத்தமிட,

“சார் நீங்க எங்க அத்தனை பேரை சுட்டு போட்டாலும் புது ஆளுங்க வந்துட்டே தான் இருப்பாங்க” என்றான் அந்த அதிகாரி.

குருமூர்த்திக்கு அந்த பனி பொழியும் நேரத்திலும் கோவத்தில் உடல் சூடேறி வேர்த்து போனது.

“மணி. எனக்கு இந்த வீட்டை இடிச்சு தள்ளியே ஆகணும். வேற ஆளுங்களை இறக்கு. நான் கேட்டுல நிக்கிறேன். என்னை தாண்டி எவன் அவங்களை திருப்பி அனுப்புறான்னு நானும் பார்க்கிறேன்” என்று குருமூர்த்தி கர்ஜிக்க,

“இதோண்ணா” என்று மணி போனுடன் ஓடினார்.

நேரம் தான் சென்றது. ஒருவர் கூட எஸ்டேட் இருக்கும் பக்கமே வரவில்லை.

குணா தான் என்னவோ என்று தன் ஊர் ஆட்களுடன் வந்தான். அவர்களை எல்லாம் வீட்டுக்குள் அனுமதித்தார்கள். ஆனால் வீட்டின் மேல் மட்டும் யாரையும் கை வைக்க விட மாட்டோம் என்று ஆட்கள் இரும்பாக நின்றார்கள்.

“சென்னயில இருந்து நம்மாளுங்களை இறக்கு மணி” என்று குருமூர்த்தி சொல்ல, ஆட்களும் அங்கிருந்து கிளம்பினார்கள் தான். ஆனால் இடையிலே அத்தனை பேரும் மாயமாகி விட்டார்கள்.

“அண்ணா” என்று மாசிலாமணி தலை ஆட்டினார்.

“வசுந்தரா மேடம் இரண்டாவது முறை கூப்பிடுறாங்கண்ணா” என்று மாசிலாமணி சொன்னவர், குருமூர்த்தி அமைதியில் போன் அழைப்பை ஏற்றார்.

“மேடம் உங்காளுங்க இங்க இருந்து அசைய மாட்டேங்கிறாங்க. அண்ணா ரொம்ப கோவப்படுறார். அவங்களை கூப்பிட்டுக்கோங்க” என்று மணி சொல்ல,

“அதை பேசத்தான் நானே கூப்பிட்டேன். அவங்க முழுக்க என் மகன் கட்டுப்பாட்டுல இருக்காங்க. நாங்க சொன்னாலும் கேட்க மாட்டாங்க” என்றார் வசுந்தரா.

“இது நியாயமா மேடம்?” மணி கோவத்தை வெளிக்காட்டாமல் பேச முயன்றார்.

“அவன் என்ன பண்றான்னு எனக்கு புரியலை மணி. என்ன நடக்குதுன்னு எங்க யாருக்கும் ஐடியாவே இல்லை. நாங்க அவன்கிட்ட பேச முயற்சி பண்ணிட்டுதான் இருக்கோம். கொஞ்ச நேரம் பொறுத்துக்கோங்க” வசுந்தரா சங்கடத்துடன் சொல்ல,

“நாம ஏன் பொறுத்துக்கணும்ன்னு கேளு மணி?” குருமூர்த்தி கோவமாக கேட்க, வசுந்தரா என்ன சொல்வார்?

“நான் அவன்கிட்ட திரும்ப பேசுறேன்” என்று வசுந்தரா போனை வைக்க,

“அவங்களும் கஷ்டம் தான் படுறாங்கண்ணா” என்றார் மாசிலாமணி.

“அடங்காத புள்ளையை பெத்தா இப்படி தான்” என்று பொரிந்தார் குருமூர்த்தி.

“யார் அடங்காதவன்? நானா?” என்று சர்வாச்சார்யா குரல் வீட்டில் எதிரொலித்தது.

குருமூர்த்தி குரல் வந்த திசையை பார்க்க, ஸ்க்ரீனில் சர்வாச்சார்யா முகம்!

“எப்படி இருக்கீங்க?” நலம் விசாரித்தான் நல்லவன்.

“என்னடா இது?” என்று குருமூர்த்தி அவனை கண்டதும் பாய்ந்துவிட்டார்.

“என்ன கேட்டா? இதுக்கெல்லாம் நீங்க தான் காரணம். நைட் நான் உங்களை அத்தனை முறை கூப்பிட்டேன். நீங்க என் போனை எடுக்கலை” என்றான் அவன்.

“அதுக்காக ஆளுங்களை அனுப்புவியா? பெரிய ரௌடியா நீ? ஆளுங்களை அனுப்பி என்னை நிறுத்திடுவியா? இவங்களை பார்த்து பயப்பட நான் ஒன்னும் பச்சா இல்லை.” குருமூர்த்தி பொரிந்து தள்ள,

“அப்பனை, மகளை விட நான் ஒன்னும் பெரிய ரௌடி இல்லை தான். ஆனா உங்களுக்கு இந்த பாஷை தான் புரியுது! நான் என்ன செய்யட்டும்?” என்று தோள் குலுக்கினான் நாயகன்.

“என் மகளை பத்தி பேசாத” குருமூர்த்தி எச்சரிக்க,

“ஆமா. பெரிய உலக அழகியை பெத்து வைச்சிருக்கார். மணி அங்கிள். எனக்கு யாரை பத்தியும் பேச விருப்பம் இல்லைன்னு சொல்லி வைங்க”

“ஒழுங்கா உன் ஆளுங்களை திருப்பி கூப்பிடுற வழியை பாரு”

“மாட்டேன். நீங்க ஒரு செங்கல்லை கூட அசைக்க நான் விட மாட்டேன்”

“இது என் வீடு”

“அது பழைய கதை”

“நேரில் மட்டும் சிக்கினா உன்னை வெளுத்து விட்டுருவேன்”

“ஆஹ்ன். அதை நேர்ல பார்க்கிறப்போ பார்த்துக்கலாம். இப்போ போய் ரெஸ்ட் எடுங்க. என் ஆளுங்க அங்கதான் இருப்பாங்க. அவங்களுக்கு சாப்பாடு நீங்க தான் பார்த்துக்கணும்”

“டேய்”

“அப்புறம் உங்க சிசிடிவி கனெக்ஷன் எனக்கும் கனெக்ட் பண்ணிக்கிட்டேன். இனி என் பார்வையில இருந்து நீங்க தப்ப முடியாது ஹீரோ சார்”

குருமூர்த்தி விட்டால் ஸ்கீரினை கிழித்து கொண்டு போய் அவன் குரல் வளைய பிடித்து விடுவார் போல் மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க நின்றிருந்தார்.

“நான் இருந்த ரூம், அந்த வீடு எல்லாம் அப்படியே தான் இருக்கணும், மாத்த நினைக்காதீங்க. நான் விட மாட்டேன்” என்று சர்வாச்சார்யா அழுத்தமாக சொன்னான்.

“என்னை சீண்டாத” குருமூர்த்தி எச்சரிக்க,

“ஹாஹா. கடைசி நாள் ஹாஸ்பிடல்ல வைச்சு நீங்களும், உங்க மகளும் மட்டும் எனக்கு என்ன பண்ணுனீங்களாம்?”

“அது வேறடா!”

“ஆமா வேற தான். நீங்களும் நானும் வேற, வேறதான்”

“ம்ப்ச். இப்போ என்னடா பிரச்சனை உனக்கு?”

“வீட்டை கை வைக்காதீங்க. என் தடத்தை அழிக்க உங்களால இந்த ஜென்மத்துல முடியாது. வீணா முயற்சி பண்ணி, என்னை ட்ரிக்கர் ஆக்காதீங்க. எனக்கு ஆயிரம் வேலை இருக்கு. உங்களையும், உங்க மகளையும் மட்டும் பார்த்துட்டு இருக்க முடியாது. மீட்டிங் கிளம்புறேன். பை”

குருமூர்த்தி அவனை முறைத்திருக்கும் போதே, இணைப்பில் இருந்து வெளியேறிவிட்டான்.

“அண்ணனை இப்போ வரை வீடு மேல கைவைக்க விடல. இடையில நான் கேட்டதுக்கும் அண்ணா, நான் சொல்றேன்னு முடிச்சுட்டார்” என்று மாசிலாமணி முன்பு நடந்ததை சொன்னவர்,

“ஆனா இப்போ என்ன காரணத்துக்காக அண்ணனை பிடிச்சு வைச்சிருக்கார்ன்னு எனக்கும் தெரியலை. சர்வா தம்பி கோவம் வித்தியாசமா இருக்கு” என்று மாசிலாமணி சொல்லி கொண்டிருக்க, சம்யுக்தா அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள்.

இத்தனை நடந்ததா? பெண் மேல் உதட்டின் வேர்வையை துடைத்து கொண்டாள்.

‘நான் தான், நான் தான் அதுக்கு காரணம்’ அவளின் உள்ளம் முனகியது.

பெங்களூர் கிளம்புவதற்கு முன் தின இரவு சம்யுக்தா அந்த அறைக்கு சென்றிருந்தாள்.

சம்யுக்தா அந்த இரவு முழுவதும் அங்கேயே தூங்கியும்விட்டாள். என்னமோ அவன் நினைவு அதிகம் அன்று.

குருமூர்த்திக்கு இது தெரிந்திருக்கிறது! அதனை கொண்டே எல்லாம்!

சம்யுக்தா கண்களை இறுக்கமாக மூடி கொண்டாள்.