கடந்து செல் காதலுடன்! 26

குருமூர்த்தி அமைதியாக கண்களை மூடியபடி இருக்கையில் சாய்ந்திருந்தார்.

அந்த நான்காம் தளத்தில் அவர் ஒருவர் மட்டுமே!

கண்ணாடி கதவுகளுக்கு பின் பாதுகாப்பு அதிகாரிகள் காவலுக்கு இருந்தார்கள்.

“சார் டீ” என்று ஒருவன் வந்து பணிவுடன் வைத்து சென்றான்.

தொடர்ந்து அவருக்கான பலகாரமும் சுட சுட வந்தது. குடிக்க தண்ணீர் சில்லென, சாதாரணமாக, சூடாக என்று மூன்றும் இருந்தது.

குருமூர்த்தி சில்லென்ற நீரை குடித்து தன் சூட்டை குறைக்க முயன்றார்.

ம்ஹூம். எங்கு குறைவது?

அவர் இடத்தில் வைத்து அவரையே அடைத்து வைத்திருக்கிறானே நாயகன்!

இது முதல் முறை இல்லை என்பது தான் கவனிக்கபட வேண்டிய விஷயம்!

இப்போ என்ன பண்ணிட்டேனாம் நான்? அவருக்கே தெரியவில்லை.

இரண்டு நாளில் வரும் திறப்பு விழா வேலையில் தானே இருக்கிறேன். காலையில் இருந்து அசையக்கூட முடியலை. என் மகளை டிராப் பண்ண ஏர்போர்ட் கூட போகலை நான்.

என் பொண்ணு பிளைட் ஏறிட்டாளான்னு கூட தெரியலை. என் போனை என்ன இதுக்கு புடுங்கி வைக்கிறான்!

ராஸ்கல் நேர்ல சிக்கட்டும் அவன் கை, காலை உடைச்சுடுறேன்! மனிதர் கருவி கொண்டார்.

ஹாலுக்குள் வேகமாக நடக்க ஆரம்பித்தார். பெரிய தளம் என்பதால் வேகநடை நடக்க தடையேது?

சத்தத்தை காணோம். வேலை நடக்குதா இல்லையா?

குருமூர்த்தி அனுமதி கொடுத்த கம்பெனி ஆட்கள் தங்களுக்கான அலுவலகங்களை அமைத்து கொள்ளும் பணியை மும்முரமாக செய்து கொண்டிருந்தனர்.

இவ்வளவு அமைதியா இருக்கிறத பார்த்தா, அவங்களையும் வெளியே அனுப்பி வைச்சுட்டான் போலயே!

குருமூர்த்தி கேமரா பார்க்கலாம் என்றால் போன் இல்லை. கண்ணாடி வழியே பார்க்க, அந்த கட்டிடத்திற்கு வெளியே அத்தனை ஆட்கள் குவிந்திருந்தனர்.

குணா அங்கும், இங்கும் போன் பேசிய படி பரபரப்பாக ஓடி கொண்டிருந்தான்.

லிங்கம், மாசிலாமணி அழைப்பிதழ் பணிக்காக சென்றவர்கள் இன்னும் திரும்ப காணோம்.

பாதுகாப்பு அதிகாரி ஒருவனிடம் குணா சண்டையிட்டு கொண்டிருந்தான்.

“அதெப்படி எங்க முதலாளியை நீங்க உள்ள பிடிச்சு வைக்கலாம். போலீசுக்கு போன் பண்ணிட்டேன். அவங்க வந்துட்டே இருக்காங்க. இது எங்க ஸ்டேட். உங்க பவர் எல்லாம் இங்க செல்லாது” என்று அவரை மிரட்டினான் குணா.

“எங்களுக்கும் இந்த ஸ்டேட் தான் தம்பி” என்று அவர் தமிழில் பதில் சொல்ல,

“யோவ். அப்புறம் எதுக்குயா இவ்வளவு நேரம் பாஷை தெரியாதவனாட்டம் நின்னு என்னை வெறுப்பேத்தின?” குணா கடுப்பாகிவிட்டான்.

“ஹேய். எங்க சீப்கிட்ட மரியாதையா பேசு” என்று ஒருவன் குணாவின் கையை பிடித்து முறுக்க,

“அடிங்க. எங்க இடத்துல வந்து என் மேலயே கை வைக்கிறியா உன்னை என்ன பண்றேன்னு பாரு” என்று கையை இழுக்க பார்க்க, அவன் விட்டால் தானே?

குணா வானத்துக்கும், பூமிக்கும் எகிறி, எகிறி குதித்தான். ம்ஹூம். “டேய். கைய விட்டு சண்டைக்கு வாடா. உன்னை இங்கேயே அடிச்சு சாய்க்கிறேன்” என்றான் சவாலாக.

“முதல்ல அவன்கிட்ட இருந்து உன் கையை இழு. அப்புறம் சாய்க்கிறதை பார்க்கலாம்” என்று சீப் சொல்ல, குணா பட்டென குனிந்து கடித்து வைத்தான்.

“ஆஹ்” என்று அவன் கையை உதற,

“யார்கிட்ட” என்று காலரை தூக்கி விட்டு கொண்ட குணாவை கண்ட குருமூர்த்தி தலையில் அடித்து கொண்டார்.

சண்டை கத்துக்கோடான்னு சொன்னா எங்க கேட்டான்? வாயில சண்டை போட்டே காலத்தை ஓட்டுறான்.

மாசிலாமணி கார் வேகமாக எம்பையர் வளாகத்திற்குள் நுழைந்தது.

“எங்க மணி அண்ணா வந்துட்டார், சின்ன பையன்னு தானே என் கையை உடைக்க பார்த்த! இரு உன் கையை அவரை வைச்சே உடைக்கிறேன்” என்று அந்த பாதுகாப்பு அதிகாரியை மிரட்டி கொண்டிருந்த குணாவிடம் வந்த மணி,

“இங்க என்ன நடக்குது?” என்று கேட்டார் கோவமாக.

“அண்ணே. முதலாளி அய்யாவை உள்ள பிடிச்சு வைச்சிருக்காங்க. யாரும் உள்ள போக கூடாதாம். அண்ணாவும் வெளியே வர முடியாதாம்” என்று குணா வேகமாக சொல்ல,

“யார் வேலை இது?” என்று மணி அந்த பாதுகாப்பு அதிகாரியிடம் கேட்க,

“அவங்க சொல்ல மாட்டாங்க, எனக்கு தெரியும், சர்வா சார் வேலை தான் இது”

“இப்போ என்னவாம் அவருக்கு?” மாசிலாமணி நெற்றியை நீவி விட்டு கொண்டவர்,

“உங்க முதலாளிகிட்ட பேசணும்” என்றார்.

“பெர்மிஷன் இல்லை”

“உள்ள இருக்கிறது எங்க அண்ணன், நான் பேசணும்”

எதிர் தரப்பிடம் இருந்து பதிலே இல்லை.

மாசிலாமணி நிமிர்ந்து கட்டிடத்தை பார்க்க, குருமூர்த்தி தென்பட்டார்.

“அண்ணா” என்று இவர் கத்த,

“விடு” என்று கையசைத்தார் குருமூர்த்தி.

“அதெப்படி? எவ்வளவு நேரத்துக்கு நீங்க உள்ள இருக்கிறது?” மணி சைகையில் கேட்க,

“பார்த்துக்கலாம்” என்று அவர் பதிலுக்கு கையசைத்தவர்,

“என் பொண்ணு பிளைட் ஏறிட்டாளா?” என்று தன் நெஞ்சில் கைவைத்து பறப்பது போல் கேட்டார்.

“பாப்பாகிட்ட பேசலையே” மணி முழிக்க, குருமூர்த்தி கோவப்பார்வை இங்கு வரை சுட்டது.

“நான் பேசினேன். அவங்க பிளைட் ஏறலை” என்றான் குணா.

“ஏன்? நீ சொல்லிட்டியாடா?” மணி பதட்டத்துடன் கேட்க,

“ஆமா பின்ன? நீங்க போன் எடுக்கலை. போலீசுக்கு போன் பண்ணிட்டு, அவங்களுக்கும் போன் பண்ணி சொன்னேன்” என்று தோளை குலுக்கினான் குணா.

“ஆஹ் உன்னோட” மணி அவன் முதுகில் ஒன்று வைத்து போன் எடுத்து சம்யுக்தாவிற்கு அழைத்தார்.

“அங்கிள் எங்க போனீங்க? ஏன் என் போன் எடுக்கலை. அப்பா எப்படி இருக்கார்? அவரை பார்த்துட்டீங்களா?” என்று சம்யுக்தா படபடவென கேள்விகளை அடுக்கினாள்.

“பாப்பா. முதல்ல நிதானத்துக்கு வாங்க. அப்பா என் கண் முன்னாடி தான் இருக்கார். நல்லா இருக்கார்” என்று மணி சொல்ல,

“குணா வேற சொன்னாங்க. சரி நீங்க அப்பாகிட்ட போனை கொடுங்க” என்று சம்யுக்தா சொல்ல,

“இப்போ பேச முடியாது. நீங்க பெங்களூர் போய் இறங்கினதும் கூப்பிட்டு பேசுங்க” என்றார் மணி.

“நான் போகலை. ஏர்போர்ட்ல தான் இருக்கேன். எனக்கு அப்பாகிட்ட பேசணும்”

“அண்ணா தள்ளி இருக்கார் பாப்பா”

“உண்மையை சொல்லுங்க அங்கிள்”

“அண்ணா எம்பையருக்குள்ள தான் இருக்கார். சின்ன பிரச்சனை. சரியாகிடும், நீங்க கிளம்புங்க. அந்த பிளைட் போயிருக்கும். குணா அவங்களுக்கு அடுத்த பிளைட்ல டிக்கெட் பாரு” என்று சொல்ல,

“அங்கிள். அப்பா என்கிட்ட பேசாம நான் பிளைட் ஏற மாட்டேன்” சம்யுக்தா முடிவாக சொன்னாள்.

“புரிஞ்சுக்கோங்க பாப்பா. நீங்க பயப்படுற அளவு இது கிடையாது”

“நான் பயப்படலை அங்கிள். எனக்கு அப்பாகிட்ட பேசணும் அவ்வளவு தான்”

“பாப்பா. நான் சொன்னா கேட்க மாட்டிங்களா? அவங்க இரண்டு பேருக்கும் இது  பழக்கம் தான். முன்ன கூட ஊட்டில வைச்சே அண்ணனை ஒருமுறை இப்படி பண்ணிட்டார்” என்று மணி உளறிவிட,

“அங்கிள்” என்று அதிர்ந்தாள் சம்யுக்தா.

“இது எப்போ? ஏன் எனக்கு சொல்லலை?” கோவமாக கேட்டாள் பெண்.

“ம்ப்ச்” மணி நடந்ததை சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார்.

சம்யுக்தாவை பெங்களூரில் வீடு பார்த்து செட்டில் செய்துவிட்ட வந்த அன்றே நடந்த சம்பவம்!

“மணி. வீட்டை ஆல்டர் பண்ணனும். நம்பிக்கையான நம்மாளுங்களை கூப்பிடு” என்றார் குருமூர்த்தி.

“என்ன’ண்ணா திடீர்ன்னு?” என்று நன்றாக இருந்த வீட்டை சுற்றி பார்த்து கேட்டார்.

ஊட்டி எஸ்டேட் வீடு மிகவும் பழமையான கட்டிடம் என்றாலும் இப்போது வரையிலும் உறுதியாக நிற்கிறது. இதிலென்ன வேலை பார்க்க போகிறார்?

“காரணம் சொன்னாதான் கூப்பிடுவியா?” குருமூர்த்தி சுள்ளென விழுந்தார்.

“ண்ணா” என்ற மணி அவரின் கோவத்தில் புரியாமல் பார்த்து உடனே போன் எடுத்து கொண்டு நகர்ந்தார்.

அன்று மாலையே ஆட்கள் வந்துவிட, குருமூர்த்தி நேரே அந்த சுரங்க அறைக்கு அழைத்து சென்றவர், “இது மொத்தத்தையும் இடிச்சு போடுங்க. எனக்கு இது வேண்டாம்” என்றுவிட்டார்.

சம்யுக்தா அறை வரை போகும் சுரங்க வழியையும் அடைத்து விட சொன்னார்.

“அந்த காலத்து வீடுல்ல. அதான் ரகசிய ரூம் எல்லாம் வைச்சிருக்காங்க” என்ற எஞ்சினியர்,

“ஆனா இது நம்ம வீட்டோட முக்கியமான இடத்துல எல்லாம் கனெக்ட்ல இருந்தா இடிக்கிறது தப்பா போயிடும்ண்ணா” என்றார்.

“நீ முதல்ல பாரு. பார்த்துட்டு சொல்லு. இடிக்க முடியலைன்னா வீட்டையே நாம இடிச்சு போட்டு புதுசா கட்டிடலாம்” என்றார் குருமூர்த்தி.

வந்த ஆட்கள் முழுதும் ஆராய்ந்து பார்த்து, “நாம இதை வாசல் கதவோட இணைச்சு, ஒரு ரூமா மாத்திடலாம்ண்ணா” என்றார்.

“நான் இந்த ரூமே வேண்டாம்ன்னு சொல்றேன்”

“அது கஷ்டம்ண்ணா. நம்ம பேஸ் கூட ரொம்ப நெருக்கமான தூண்களை இணைச்சு கட்டியிருக்காங்க”

“இடிக்க முடியாதுன்னு சொல்றீங்களா?” என்று மணி கேட்டார்.

“ஆமா. இடிச்சா நம்ம கட்டிடத்தோட உறுதி போயிடும். இப்படியே விட்டா வீடு இன்னும் ஒரு தலைமுறைக்கு வரும். நல்ல கட்டிடம்” என்று அவர் மெச்சி கொள்ள, மணி பார்வை குருமூர்த்தியிடம் சென்றது.

அவர் முகம் தகதகவென சிவந்து போய் இருந்தது.