காலையில் தலையணையில் முகம் புதைத்து உறங்கிக் கொண்டிருந்த ரவி, சில்லிப்பை உணர்ந்து மெல்ல கண்களை திறந்தான். ஈர முடிகள் நெற்றியில் புரள, இரவில் நடந்ததற்கு சாட்சி சொல்கிறேன் என கன்னங்களின் செம்மை பறைசாற்ற, அவனது கை பிடித்துக்கொண்டு அவனையே பார்த்து அமர்ந்திருந்தாள் மதி.
அவளை பார்க்க நேராக படுத்துக் கொண்டான். அத்தனை நேரம் அவனையே பார்த்திருந்தவளுக்கு இப்போது அவனை எதிர் கொள்ள முடியவில்லை. இழுத்து தன் மார்பில் போட்டுக் கொண்டவன், “எல்லா பயமும் போச்சா?” எனக் கேட்டான்.
“ம்…” என்றாள்.
இருவரையும் எப்படியெல்லாம் புரட்டி போட்டு அடித்திருக்கிறது இந்த வாழ்க்கை. இப்போது இருவரும் தங்கள் துணையின் அருகாமையில் நிறைவாக உணர்ந்தனர். எதுவுமே பேசிக் கொள்ளாமல் வெகு நேரம் அப்படியே இருந்தனர்.
தாமதமாக எழுந்து வந்த மகன் மருமகளிடம் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை பூர்ணிமா. ரிதி கூட அறையிலிருக்க, மதிக்கு ‘அப்பாடா’ என இருந்தது. ஏன் லேட் என கேட்டால் என்ன பதில் சொல்வாள்?
அவளின் அந்த வெட்கத்தையும் தடுமாற்றத்தையும் கூட மிச்சம் வைக்காமல் ரசித்துக் கொண்டான் ரவி.
அன்று மதியத்திற்கு மேல் கணவனுடன் வெளியில் சென்று அவனுக்காக நிறைய ஆடைகள் எடுத்தாள் மதி. வேண்டாம் என அவன் சொல்லியும் கேட்கவில்லை.
“இப்ப கொஞ்சம் நீங்க இளைச்சு போயிருக்கீங்க, பழசெல்லாம் போட்டா லைட்டா லூசா இருக்கு” என காரணம் சொன்னாள் அவள்.
அப்படியொன்றும் இளைத்திருக்கவில்லை அவன். உணவுக் கட்டுப்பாடு, யோகா, நடைப் பயிற்சி, நேரத்துக்கு உறக்கம் போன்றவற்றை கடுமையாக பின்பற்றுகிறான். அதன் விளைவாக முன்னர் இருந்ததை விட இன்னும் கட்டுக் கோப்பாக இருக்கிறது அவனது உடல்.
அவளுக்கே அது தெரியும், பின் என்ன விளக்கம் சொல்வது என அவனும் அவளது விருப்ப படியே விட்டு விட்டான்.
கைக்கடிகாரம், வாலட், பெல்ட், ஷூ என வகை வகையாக வாங்கினாள். எவ்வளவு… என மனதில் தோன்றினாலும் அவள் ஆசை ஆசையாக வாங்குவதை கவனித்தவன் எதையும் தடுக்கவில்லை.
அவளுக்கென இரவு உடைகள் வாங்க சென்றாள். “நைட் ட்ரெஸ்லாம் இனி அவசியமா என்ன?” என தீவிர முக பாவத்தில் ரகசியமாக அவன் கேட்க, “மாமா…” என பல்லை கடித்தாள் அவள். அனைத்தும் அவள் வாங்கி முடிக்கும் வரை பொறுமையாக அவளுடன் இருந்தான்.
ரிதி ஏதோ புத்தகம் கேட்டிருக்க அதை வாங்க சென்றனர். அதன் பின் வழியிலிருந்த ரேஸ் கோர்ஸ் சாலையில் காரை நிறுத்தி விட்டு சற்று நேரம் நடந்தனர், பின்னர் ஓரிடம் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே பேசியிருந்தனர்.
இருட்டத் தொடங்கும் முன் புறப்பட்டு விட்டனர். இன்னும் இவர்களை காணவில்லையே என வெளியிலேயே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் பூர்ணிமா.
மகனும் மருமகளும் பேசி சிரித்துக்கொண்டு வருவதை காணவும் அவரையும் அந்த மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது. மகளை பற்றியெல்லாம் இப்போது அவருக்கு கவலைகளே இல்லை, ரவி பழைய படி ஆனதுமே எல்லாம் மகன் பார்த்துக் கொள்வான் என்ற தைரியம் வந்து விட்டது.
வாங்கியவற்றை மாமியாரிடம் கடை பரப்பினாள் மதி. வாங்கிய புத்தகத்தை கொடுக்க தங்கையின் அறைக்கு போனான் ரவி. அவள் அறையை கலைத்து போட்டிருக்க, கண்களால் சுட்டிக் காண்பித்து முறைத்தான்.
“ஷ் படிக்கிற பொண்ணோட ரூம் இப்படித்தான் இருக்கும். இந்த ப்ராப்ளம் ரொம்ப சேலன்ஞ் பண்ணுது என்னை, எப்படி சால்வ் பண்றதுன்னு சொல்லு” என நோட்டை எடுத்து காண்பித்தாள். அவன் நின்ற படியே அந்த கணக்கை தீர்த்துக் கொடுத்தான்.
“உன்கிட்ட மட்டும் இந்த ப்ராப்லம்ஸ் பிரச்சனை பண்ண மாட்டேங்குது பாரு” என சொல்லிக் கொண்டே எப்படி தீர்வை கண்டு பிடித்தான் என ஆராய ஆரம்பித்தாள்.
ரவி ஆங்காங்கே கிடந்த புத்தகங்கள் மற்றும் நோட், பேனா ஆகியவற்றை எடுத்து ஒழுங்காக அடுக்க ஆரம்பித்தான்.
“அண்ணா… வை அத, எனக்கு ரெஃபரன்ஸ்க்கு வேணும், எதையும் கலைக்காத நீ” என்றாள்.
“எது நான் கலைக்கிறேனா? ஹ்ம்ம்… நாளைக்கு வருவேன் செக் பண்ண, இப்படியே போட்டு வச்சிருந்த… அப்புறம் நான் சூப் வச்சு தருவேன், வேப்பங்காய் சூப்” என மிரட்டி விட்டு சென்றான்.
சீனு வரவும் நேரத்தோடு இரவு உணவை முடித்துக் கொண்டனர். ரவி அறையிலேயே நடந்து கொண்டிருந்தான். மாமியாருக்கு உதவி விட்டு, மதியும் கணவனிடம் வந்தாள்.
மனைவியை காணவுமே ஒற்றைக் கையை அவளை நோக்கி நீட்டினான் ரவி. வேகமாக வந்து அவனது கைப் பிடித்துக்கொண்டு சிரித்தாள் மதி.
தன்னிடம் நெருக்கமாக அவளை சுண்டியிழுத்துக் கொண்டவன், “என்ன சிரிப்பு? அஞ்சு வருஷ காத்திருப்பு ஒன்னுமே இல்லை, இந்த ஒரு மாசம் நீ பண்ணின அலும்பு இருக்கே…. நீ வர்றதுக்குள்ள தூங்கிடலாம்னு நினைச்சேன், சிரிக்காத, போய் படு போ” என்றான்.
“இந்த மாமா வருஷ கணக்கா எனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தாரே… இனிமே எதுக்காகவும் எப்பவுமே வெயிட் பண்ண வைக்க கூடாதுன்னு முடிவோட வந்தா… இப்படி சொல்லலாமா?” என்றாள்.
அவள் பேசிக் கொண்டிருக்க, அவனோ அவளின் முகத்தை கையால் தாங்கி, விரல் கொண்டு அவளின் இதழ்களை வருடிக் கொண்டிருந்தான்.
அவனுடனான நெருக்கத்தை இன்னும் கூட்டி, தன் இதழ் தொட்டிருந்த அவனது கையை விலக்கி விட்டு, அவனது விழிகளை ஊடுருவி பார்த்தாள்.
புருவங்களை உயர்த்தி, “என்ன… பார்வை பலமா இருக்கு?” எனக் கேட்டான்.
தன்னிதழ்கள் கொண்டு அவனிதழ்களை வருடினாள்.
“இதென்ன விளையாட்டு மதி?”
“ம்ம்… இது ஒன்னும் விளையாட்டு இல்லை, என் ரவி மாமாவை எவ்ளோ பிடிக்கும்னு சொல்லிட்டு இருக்கேன்” என்றாள்.
அவள் பேச பேச இருவரின் இதழ்களும் தீண்டி தீண்டி அறையின் வெப்பத்தை அதிகரிக்க செய்தன.
நேற்றெல்லாம் கணவனிடம் தன்னை ஒப்பு கொடுத்திருந்தாள். இன்று அவனது மனமறிந்து நடந்தவள், தான் அவன் மீது கொண்டிருந்த ஆசையின் அளவையும் அவனுக்கு தெரியப் படுத்தினாள்.
அதிகாலையில் விழித்துக் கொண்டான் ரவி. தள்ளிப் படுத்திருந்தவளை இழுத்து அணைத்துக் கொண்டான். உறக்கம் வரும் போல தெரியவில்லை. அவளருகில் இருந்தால் அவளது உறக்கத்தையும் கலைத்து விடும் அபாயம் இருந்ததால் எழுந்து விட்டான்.
ஜன்னலை திறந்து விட்டவன் வெளிக் காற்றை அனுபவிக்க ஆரம்பித்தான். சில நிமிடங்களில் அவனை பின்னாலிருந்து அணைத்துக் கொண்டாள் மதி.
“ஹேய் ஏன் எழுந்த, தூக்கம் வரலை?” எனக் கேட்டான்.
“ஹ்ம்ம்… நீங்க என்ன பண்றீங்க?” என அரைத் தூக்கத்திலேயே கேட்டாள்.
பின்னாலிருந்த அவளை பக்கவாட்டில் இருக்கும் படி இழுத்து நிறுத்தி அணைத்துக் கொண்டான். “ஜஸ்ட் காத்து வாங்கிட்டு இருக்கேன்… என் பொண்டாட்டி கூட சேர்ந்து…” என சொல்லி அணைப்பை இறுக்கிக் கொண்டான்.
வாழ்க்கை தொடர்ந்து இனிமையாகவே யாருக்கும் செல்வதில்லை, அப்படி சென்றால் அந்த இனிமையின் மகோன்னதத்தை அவர்களால் அறியவோ உணரவோ முடியாது.
ரவிக்கும் மதிக்கும் கூட அப்படித்தான். மீள முடியாதோ என பயம் காட்டிய நிகழ்வை, அன்பை கொண்டே கடந்து வந்தார்கள். இப்போது கிடைத்திருக்கும் இந்த இனிமையை உளமார உணர்ந்து ஆழ்ந்து அனுபவிக்கிறார்கள்.
ரவி பிரகாஷின் ஒளி அவள்தான், தண்மதியின் நிழல் அவன்தான். என்றும் சிறப்புடன் வாழட்டும் இருவரும்!