எதற்கு எடுத்தாலும் அழுது மன பாரத்தை தீர்க்கும் பெண்ணும் அவள் கிடையாது என்பதால் மனதுக்குள்ளே எல்லா அழுத்தமும் சேர்ந்து கொண்டே இருந்தது.

அன்று அவள் கணவனே அவளை அழைக்க அதிக சத்தோஷத்தில் தான் அவனிடம் பேசினாள். “என்னங்க எப்ப வருவீங்க? எனக்கு உங்களைப் பாக்கணும் போல இருக்கு”, என்றாள்.

“நினைச்ச நேரம் வறதுக்கு இது என்ன உன்  அப்பன் வீட்டு ஆபீசா மீனா? ஃபோன் பண்ணாலே எப்ப வர வரன்னு நொச்சு நொச்சுன்னு பேசுற? எரிச்சலா இருக்கு”

“இல்லைங்க, நான் கேக்கலைங்க. சரி சாப்ட்டீங்களா? நல்லா இருக்கீங்களா?”, என்றாள்.

“ம்ம்”, என்ற முணுமுணுப்பு மட்டுமே. திருப்பி அவளைக் கேட்க கூட இல்லை.

“சரி அம்மா கிட்ட போனைக் கொடு. அவங்க போன் ரீச் ஆகலை”, என்று சொல்ல அந்த போனை வெறித்துப் பார்த்தவளுக்கு அதை தூக்கி எரியும் ஆத்திரம் வந்தது. அடக்கிக் கொண்டவள் கல்யாணியிடம் போனைக் கொடுத்து விட்டு அங்கேயே நின்றாள்.

அவள் போவாள் என்று பொறுத்து பொறுத்து பார்த்த கல்யாணி வேறு வழி இல்லாமல் வெளியே சென்று போன் பேச “அப்படி என்ன இவங்க ரெண்டு பேர் மட்டும் தினமும் பேசுறாங்க”, என்று எண்ணம் வந்தது.

“அதை யோசிச்சா நமக்கு தான் பைத்தியம் பிடிக்கும்”, என்று எண்ணிக் கொண்டு அவள் அங்கிருந்து செல்லப் பார்க்க மீன் விற்க வரும் சத்தம் கேட்டது.

மீன் வாங்கினால் நாளை காலை வரை அதை வைத்து சமாளித்து விடலாம் என்று எண்ணி அவள் விலை கேட்க வெளியே போக அவளைக் கண்ட கல்யாணி அவள் தலை முடியை பற்றி இழுத்த படி வீட்டுக்குள் தள்ளி கதவை அடைத்தாள்,

மீனா அதிர்ந்து விழிக்க “நாங்க என்ன பேசுறோம்னு ஒட்டுக் கேக்குறியா டி…”, என்று திட்ட “அத்தை, அப்படி இல்லை”, என்று சொல்லும் போதே அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்த கல்யாணி அவள் போனையும் தூக்கி கீழே போட அது நொருங்கிப் போனது.

“மகேஷ் என் பையன். எனக்கு தான் முதல்ல சொந்தம். சும்மா அவனை என்னை விட்டு பிரிக்க நினைச்ச சீரழிஞ்சு தான் போவ”, என்று சொல்லி விட்டு செல்ல தன்னைப் போலவே உடைந்து கிடந்த போனை வெறித்துப் பார்த்தாள்.

அழுகை வரப் பார்க்க “இதுக்கெல்லாம் அழுதா இந்த பொம்பளை ஜெயிச்சதா ஆகிரும் அழாத”, என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டாள்.

அந்த உடைந்த போனை எடுத்துக் கொண்டு அறைக்குள் சென்று அதை மாட்டிப் பார்க்க அது உயிரை விட்டிருந்தது.

உடனே ஒரு சுடிதாரை எடுத்து மாட்டியவள் மாமனாரிடம் மட்டும் சொல்லிக் கொண்டு கடைக்குச் செல்ல அதற்குள் அவள் காதலனைப் பார்க்க போயிருப்பதாக மகேஷ்க்கு சொல்லி விட்டாள் கல்யாணி.

அவள் வீட்டுக்குள் வந்ததும் “இந்தா மகேஷ் லைன்ல இருக்கான் பேசு”, என்று சொல்லி நீட்டினாள் கல்யாணி.

அவளும் சிறு குழப்பத்துடன் போனை வாங்கி காதில் வைக்க “எவனைப் பாக்க போய்ட்டு வர?”, என்ற கேள்வியில் இது வரை இருந்த ஒன்று அவளுக்குள் செத்தே போனது.

அவளிடம் பதிலைக் கூட கேட்காமல் “உன்னை நேர்ல வந்து வச்சிக்கிறேன் டி. நான் இல்லைன்னதம் திமிர் கூடி போயிருச்சா? அம்மாவைக் கூட மதிக்கிறது இல்லை”, என்று பேசி விட்டு வைத்து விட நடைபிணம் போல தான் வீட்டுக்குள் சென்றாள்.

அடுத்து வயிற்றுக்குள் இருக்கும் குழந்தைக்காக தன்னை சந்தோஷமாக வைத்துக் கொள்ள முயன்றாள். அதையும் மீறி நிறைய பிரச்சனைகள் வீட்டில்.

வளைகாப்பு வைப்பார்கள் தாய் வீட்டில் இருக்கலாம் என்று சந்தோஷப் படக் கூட அவளால் முடியாதே. திருமணம் முடிந்ததோடு சரி, அதற்கு பிறகு பிறந்த வீட்டில் இருந்து இங்கே வந்து அவளைப் பார்த்தது கூட கிடையாது. அப்படி இருக்க அங்கு செல்லவும் பிடிக்க வில்லை.

ஆனால் ஊருக்காக ஒன்பதாவது மாதம் வளைகாப்பு வைத்து அழைத்துச் சென்றாள் வடிவு. வளைக்காப்புக்கும் மகேஷ் வரவில்லை. அவளிடம் போனில் கூட பேச வில்லை.

அவள் அவனைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் மனதுக்கு கஷ்டமாக மட்டும் தான் இருந்தது.

குழந்தை பிறப்புக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தாள் மீனா. ஆப்பரேஷன் தான் செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். கல்யாணிக்கும் தகவல் கொடுத்து விட்டாள். ஆனால் யாரும் பார்க்க வர வில்லை. வெறுப்பாக இருந்தது வாழ்க்கையே. கணவனுக்கு அழைத்துப் பார்த்தாள். அவன் போனை எடுக்கவே இல்லை.

அடுத்த நாள் பெண் குழந்தை பிறந்தது. தன்னைப் போல ஆகி விடுமோ என்ற பயமும் வந்தது அவளுக்கு. துணையாக இருக்க வேண்டிய கணவன் ஒரு ஃபோன் செய்து கூட பேச வில்லை. ஆனால் அவனுடைய அன்னை தந்தை பார்க்க வந்தார்கள். அவர்களிடம் போனில் பேசும் மகேஷ் குழந்தையை வீடியோ காலில் பார்த்தான். அப்போதும் அவன் அவளை பார்க்கவும் இல்லை. அவளிடம் பேசவும் இல்லை.

அடுத்த ஒரு மாதம் வடிவு ஏதோ பேருக்கு அவளைப் பார்த்தாள். அதற்கு பிறகு புகுந்த வீட்டுக்கு போகச் சொல்லி நச்சரிப்பு செய்ய வேறு வழி இல்லாமல் கல்யாணிக்கு தான் அழைத்தாள். அவமானமாக தான் இருந்தது. தனக்கு என்று போக்கிடம் கூட இல்லையே என்று வேதனை.

அதை எடுத்த கல்யாணி ஒரு நலம் விசாரிப்பு கூட இல்லாமல் “என்ன?”, என்றாள்.

“நம்ம வீட்டுக்கு எப்ப வரட்டும் அத்தை? நீங்க கூப்பிட வறீங்களா? இல்லை அம்மா அப்பா கூட நான் வரட்டுமா?”, என்று கேட்டாள்.

“எங்களுக்கு வேலை கிடக்கு. நீயே கிளம்பி வா. பிள்ளை பத்திரம்”, என்று சொல்லி விட்டு போனை வைத்து விட்டாள்.

 மாமியார் பேசியதை அன்னையிடம் சொன்னதற்கு “எங்களால வர முடியாது. ஆட்டோ பிடிச்சு தரேன் போயிரு”, என்று சொல்லி விட்டாள்.

“இப்படியே பண்ணுங்க. எனக்கு கேக்க ஆள் இல்லைன்னு ஒரு நாள் அடிச்சு துரத்த போறாங்க”, என்றாள் எரிச்சலில்.

“உன் வாய்க்கு துரத்த தான் செய்வாங்க. அப்படியே தூரத்தினாலும் எங்களுக்கு பாரமா இங்க வந்துறாத”, என்று வடிவு சொல்ல அதற்கு மேல் மீனா பேசுவாளா என்ன? வேறு வழி இல்லாமல் அவளே குழந்தையை தூக்கிக் கொண்டு சென்றாள். அங்கே குழந்தைக்காக வரவேற்பு நடந்தது தான். ஆனால் அவளை கண்டு கொள்வார் தான் யாரும் இல்லை.

அதற்கு பிறகு வாழ்க்கை இன்னும் நரகம் தான் மீனாவுக்கு. முதுகு வலி வேறு, வீட்டு வேலை வேறு. பிள்ளையை கவனிப்பதும் சேர்ந்து கொள்ள சமாளிக்க முடியாமல் திணறினாள். ஒரே ஒரு ஆறுதல் அவள் வேலை செய்யும் போது குழந்தை தூங்க வில்லை என்றால் பெரியவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

அவளிடம் பாசமாக இல்லை என்றாலும் பிள்ளை மீது அனைவரும் அன்பாக தான் இருந்தார்கள். கிஷோர் தூக்கிக் கொள்வான். வினோதாவும் தான். அதுவே மீனாவுக்கு போதுமானதாக இருந்தது.

தொடரும்..