அன்று இரவே அவள் அவனிடம் சொல்லி விட “எங்க அம்மா பேரப் பிள்ளைங்க வேணும்னு ஆசைப் படுறதை தப்புன்னு சொல்ல வரியா? இல்லை எங்க ரெண்டு பேருக்குள்ள சண்டை இழுத்து விடப் பாக்குறியா? எங்க அம்மா தான் எனக்கு எல்லாமே? மத்தவங்க எல்லாம் அம்மாவுக்கு அடுத்து தான். இனி அவங்களைப் பத்தி ஏதாவது சொன்ன நான் மனுசனா இருக்க மாட்டேன்”, என்று பதில் சொன்னவனை எந்த கணக்கில் எடுக்க என்று கூட அவளுக்கு புரிய வில்லை.

“நான் தப்பா சொல்லலைங்க. அத்தை கேட்டாங்கன்னு தான் சொன்னேன். நீங்க கோபப் படாதீங்க”, என்று சமாதானப் படுத்த முயன்றாள்.

“அவங்க சொன்னா சரியா தான் இருக்கும். இனி கவனமா இரு. எனக்கு மைண்ட் சரி இல்லை. தூக்கம் போச்சு”, என்று சொல்லி விட்டு அவளுக்கு முதுகு காட்டி படுத்துக் கொள்ள அவளுக்கு தான் கஷ்டமாக இருந்தது.

அடுத்து வந்த நாட்கள் மீனாவுக்கு போராட்டமாக இருந்தது. சரியாக அம்மா பிள்ளையாக இருந்தான் மகேஷ். அது நல்ல விஷயம் தான். ஆனால் அன்னை பேச்சு மட்டுமே சரி என்று முட்டாளாக இருந்ததை மட்டும் அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

அதே நேரம் கல்யாணி அவளை அடிமை போல நடத்துவதையும் அவளால் கணவனிடம் சொல்ல முடியவில்லை. சொன்னால் அவளைத் தான் வெறுத்து ஒதுக்குவான். அதனால் அமைதியாகிப் போனாள்.

ஒரு வழியாக மூன்று மாதம் கழித்து குழந்தை உண்டாகி இருந்தாள் மீனா. இவர்கள் வீட்டில் சந்தோஷப் படுவது போல தங்கள் வீட்டிலும் சந்தோஷப் படுவார்கள் என்று எண்ணி வடிவுக்கு தகவல் சொன்னாள்.

“சரி சரி, இங்க எதுவும் வந்து உக்காந்துறாத. உனக்கு வடிச்சு கொட்ட என்னால முடியாது. அப்புறம் உன் புருஷனை கைக்குள்ள போட்டுக்கோ. அப்ப தான் பொழைக்க முடியும், என்ன இருந்தாலும் என்னோட வசு சாமர்த்தியம் உனக்கு வராது”, என்று சொல்ல அன்னைக்கு அழைத்த தன்னுடைய மடத்தனத்தை தானே நொந்து கொண்டாள். இனி யாரிடமும் எதுவும் சொல்லக் கூடாது என்று முடிவு எடுத்தாள்.

வாழ்க்கை ஏதோ மாதிரி சென்று கொண்டிருந்தது. குழந்தை வயிற்றில் இருப்பதால் மகேஷ் அவள் மீது உயிராக இருப்பான் என்று அவள் தப்பு கணக்கு போட அவனோ இப்போது வரை அப்படியே தான் இருக்கிறான். அவளிடம் உடல் தேவைக்கு மட்டுமே வருவான். அதுவும் குழந்தை உண்டான பிறகு அதற்கும் இல்லை. முதல் மூன்று மாதம் கவனமாக இருக்க வேண்டும் என்று டாக்டர் சொன்னார் தான். ஆனால் அதற்கு பிறகும் அவன் அப்படி இருப்பது அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது. மொத்தத்தில் இருவருக்கும் ஒரு ஒற்றுதலே இல்லாமல் தான் இருந்தது.

செக்கப்க்கு மருத்துவமனைக்கு கூட அவன் துணைக்கு சென்றது கிடையாது. ஆனால் அன்னையிடம் மட்டும் அன்பாக இருப்பான். மற்றவர்களிடம் கூட கலகலப்பாக இருப்பான். ஆனால் அவளிடம் அளந்து தான் அதுவும் தேவைக்கு தான் பேசுவான்.

சில நேரம் கல்யாணி மீது கூட கோபமாக வரும். திட்டி விடலாமா என்று கூட தோன்றும். ஆனால் மகேஷ் அப்படி இருக்க கல்யாணியை அவள் என்ன செய்யவாம்.

அடுத்த இரண்டு மாதத்தில் மகேஷை திருவனந்தபுரம் கிளைக்கு போகச் சொன்னார்கள். சம்பளமும் அதிகரிக்க வீட்டினர் போகச் சொல்ல மீனாவுக்கு மட்டும் கஷ்டமாக இருந்தது.

இன்னுமே அந்த  வீட்டில் அவள் தனித்தீவாய் இருக்க அவனைத் தவிர வேறு யார் துணை? கணவரிடம் தனியாக பேசிப் பார்த்தாள் அவளையும் அழைத்துச் செல்ல சொல்லி.

அவளிடம் பார்ப்போம் என்று சொல்லி தட்டிக் கழித்தவன் அதை அப்படியே அன்னையிடம் ஓதி வைக்க அடுத்த நொடி கல்யாணியின் தாண்டவத்தை முதல் முறையாக பார்த்தாள் மீனா,

“வெக்கமா இல்லையா டி உனக்கு? வேலை விஷயமா போறவன் கூட நானும் போறேனு ஜோடி போட்டுட்டு நிக்குற? ஏன் கொஞ்ச நாள் அவன் இல்லாம இருக்க முடியாதோ? ஏன் நாங்க எல்லாம் இல்லை. இத்தனை வருஷம் வளத்த மகனை பிரியுறது எனக்கு எப்படி இருக்கும்? நேத்து வந்தவளுக்கு அவ்வளவு கஷ்டமோ?”, என்று கேட்க வாயை மூடிக் கொண்டாள்.

கல்யாணி அவளை திட்டும் போது  மகேஷ் பார்த்தானே தவிர. விடுங்க மா என்று கூட சொல்லாதது ஒரு மாதிரி தான் இருந்தது. ஆனால் அக்கறையைக் கூட கேட்டு வாங்க முடியாதே.

இதை ஒரு பெரிய குத்தமாக எண்ணி கல்யாணி அவளை திட்டிக் கொண்டே இருக்க “அத்தை நான் இப்ப என்ன தப்பா கேட்டுட்டேன்னு இப்படி எல்லாம் பேசுறீங்க?”, என்று கேட்டாள்.

“என்ன நீ அம்மாவை எதிர்த்து பேசுற?”, என்று அவசரமாக கேட்டான் மகேஷ்.

“அதானே என்ன மா கேள்வி எல்லாம் கேக்குற? அத்தை சொன்னா சரின்னு கேட்டுக்கோ?”, என்றார் சோமசுந்தரம்.

அவள் பட்டென்று வாயை மூடிக் கொள்ள அதற்கு பிறகு அந்த வீட்டில் கல்யாணி சத்தம் மட்டுமே கேட்டது. “எம்மாடி இந்த பொம்பளை என்ன பேச்சு பேசுது? இதுக்கு நம்ம வடிவு பரவால்ல போலயே? புருஷன் கூட இருக்கணும்னு ஆசை பட்டது குத்தமா?”, என்று மனதில் மட்டுமே எண்ணிக் கொண்டாள்.

அதே போல அவன் கிளம்பிச் செல்லும் நாள் வர கணவனுடன் போகும் முன் ஐந்து நிமிடமாவது தனியே பேச வேண்டும் என்ற ஆசையில் இருந்தாள் மீனா.

ஆனால் கடைசி வரை, அந்த தனிமை அவளுக்கு கிடைக்கவே இல்லை. போகும் போது “அங்க போய் ஒழுங்கா சாப்பிடு, தினமும் ஃபோன் பண்ணு”, என்று விதவிதமாக சொல்லிக் கொண்டே இருந்தாள் கல்யாணி. அதைக் கண்டு சிறு பொறாமையாக கூட இருந்தது மீனாவுக்கு.

போகும் வரைக்கும் அவனும் அவளிடம் பேச வில்லை. கிளம்பும் நேரம் வந்ததும் வந்த கண்ணீரை அடக்கிக் கொண்டு அவள் நிற்க அவளைப் பார்த்தான். அவன் கண்ணில் அவள் தன்னைப் போலவே ஏக்கத்தை எதிர் பார்க்க “அம்மா அப்பாவை நல்லா பாத்துக்கோ. அவங்க சொல் பேச்சு கேட்டு நடக்கணும். நேரம் கிடைகிறப்ப வரேன். ஃபோன் நானே பண்ணுறேன். நீயா பண்ணி தொந்தரவு பண்ணாத”, என்று சொல்ல அவனை வெறித்துப் பார்த்தாள் மீனா.

இதற்கு இவன் இதைக் கூட பேசாமல் சென்றிருக்கலாமோ என்று தான் தோன்றியது.

சொன்னது போலவே போனவன் போனவன் தான். நான்கு மாதங்களுக்கு வரவே இல்லை. மாதத்தில் ஒரு முறை அழைப்பான். ஆனால் அவனது அன்னைக்கு தினமும் பேசி விடுவான். அவன் தான் இப்படி என்றால் இங்கு வீட்டிலோ அதை விட கொடுமையாக தான் இருந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அவளைப் படுத்தி எடுத்தார்கள்.

மகேஷ் சென்றதும் இன்னும் தனிமையாக உணர்ந்தாள் மீனா. கல்யாணி தொட்டதுக்கு எல்லாம் குறை சொன்னாள் என்றால் அதற்கு சோமசுந்தரமும் தனியே திட்டுவார். கிஷோர் அவளை வேலைக்காரி போல தான் நடத்துவான். அவன் தின்று வைத்த எச்சில் தட்டைக் கூட சிங்கிள் எடுத்து போட மாட்டான்.

வினோதா அந்த அளவுக்கு செய்ய மாட்டாள். ஆனால் மீனா ஏதாவது கேட்டால் மட்டுமே பேசுவாளே தவிர வேறு எதுவுமே பேச மாட்டாள். அத்தனை பேருக்கும் அவள் பரவாயில்லை என்று சொல்லலாம்.

புகுந்த வீட்டில் இப்படி இருந்தால் பெண்கள் பிறந்த வீட்டிலோ இல்லை தோழிகளிடமோ உடன் பிறந்தவர்களிடமோ புலம்பி தீர்த்து ஆதங்கத்தை கொட்டி விடுவார்கள்.

அப்படி யாரும் இல்லாத துர்பாக்கியவதி அல்லவா மீனா. அப்படி இருந்தும் ஒரு முறை வசுந்தராவுக்கு அழைத்தாள்.  இப்போது திருமணமும் முடிந்ததால் அவள் மாறி இருக்கலாம் என்று எண்ணி தான் அழைத்தாள். ஆனால் அவளோ இவள் எப்படி இருக்கிறாள் என்று கேட்க கூட செய்யாமல் அவள் வீட்டுக் கதையை பெருமையாக பேச அதற்கு அமைதியே நல்லது என்று எண்ணிக் கொண்டாள் மீனா.