ரிதியின் திருமணம் நின்று போன செய்தி தெரிந்து, இரவு உறங்குவதற்கு முன் மகனை காண வந்து விட்டார் சொர்ணம். பெண்ணின் வாழ்க்கை பற்றிய அக்கறை இல்லாமல் நடந்து கொள்கிறாயே, உன் மனைவியும் சரியென்று சொன்னாளா? அந்த இடம் வேண்டாம் என நான் சொன்ன போது கேட்கவில்லை, இப்போது நிச்சயம் வரை வந்து விட்டு நிறுத்தியிருக்கிறாய், என்னிடம் யோசனை கேட்டாயா? என ஒரே சண்டை.
“அங்க வாழ போனா உன்னை மாதிரிதான் ஸ்ரீதர் அம்மாவும் மகனை போட்டு குடைஞ்சு மருமகளை டார்ச்சர் பண்ணுவாங்க. இங்க நீ மட்டும்தான், அங்க ஸ்ரீதர் அம்மாவோட அவர் அப்பாவும் சேர்ந்துக்குவார். ஸ்ரீதரும் என் அப்பா மாதிரியே வேடிக்கை பார்ப்பார், எனக்கு அப்படியொரு லைஃப் வேணாம்” என்றாள் ரிதி.
“என் பொண்ணுகிட்ட ரொம்ப நல்ல பேர் எடுத்திட்டேன் மா நான், உனக்கு எப்படி சொன்னா புரியும் மா? நீ எது சொல்றதா இருந்தாலும் என்கிட்ட தனியா சொல்லிக்க, வேற யார்கிட்டயும் பேசாம ஒதுங்கி இரு” என ஆதங்கத்தில் சொல்லி விட்டார் சீனு.
“அவ்ளோ ஆகி போச்சா உனக்கு? இனி இந்த வாச படிய மிதிச்சேனா என்னன்னு கேளுடா” என ஆத்திரத்தோடு சொல்லி சென்று விட்டார் பாட்டி.
அம்மா அப்படி சென்றதில் கவலையுற்றவராக அமர்ந்தார் சீனு. “ஸாரிப்பா, ஆனா நான் நிஜத்தைதான் சொன்னேன்” என சொல்லி அறைக்கு சென்று விட்டாள் ரிதி.
“ப்பா… இவ்ளோ டவுன் ஆகாதீங்க. நாலு நாள் கழிச்சு அப்பயி தானா இங்க வந்து நிக்கும். ரிதி பேசினதையும் தப்பான விதத்துல எடுக்காதீங்க, நைட் தூங்கும் போது ரிலாக்ஸா தூங்கணும், போங்க” என ரவிதான் அப்பாவை சமாதானம் செய்தான்.
அறைக்கு வந்தபின் மனைவி ஏதாவது சொல்வாளா என பூர்ணிமாவையே பார்த்து நின்றார் சீனு. “வாழ்க்கைல முதல் முறையா உங்கம்மாவை எதிர்த்து பேசிட்டீங்க போல, ஆனா அதை கூட தப்புன்னு நினைச்சிட்டு அதுக்கு நான் என்ன கருத்து சொல்வேன்னு என்னை பார்த்து நிக்கிறீங்க பாருங்க!” என சலித்தார் பூர்ணிமா.
அவர் பாவமாக பார்க்க, “செவனேன்னு படுங்க” என சொல்லி விளக்கை அணைத்து விட்டார் பூர்ணிமா.
இரண்டு நாட்கள் வீடு வாட்டமாகத்தான் இருந்தது. ஏற்கனவே ரவியை நினைத்து மன வருத்தம், இப்போது மகளையும் நினைத்து அழுதார் பூர்ணிமா. அவரது அம்மா வீட்டு பக்கம் யாரோ தூரத்து சொந்தத்தில் ஒரு பெண்ணுக்கு திருமணம் முடிவாகியிருப்பதாக செய்தி வந்தது. ரிதியை விட நான்கு வயது இளையவள்.
இரவில் எல்லாரும் சேர்ந்துதான் உணவருந்தினார்கள். பூர்ணிமா சரியாகவே சாப்பிடவில்லை. உணவுக்கு பின் அம்மாவை கடிந்து கொண்டான் ரவி. அப்போதும் அவருக்கு அழுகைதான் வந்தது.
“ரிதியை விட சின்ன பொண்ணுக்கெல்லாம் கல்யாணம் அமையுதுடா, உனக்கும் இப்படி, ரிதிக்கும் நேரத்துல வாழ்க்கை அமையல, என்னால ஏத்துக்கவே முடியலைடா. உன் அப்பயி சொன்ன மாதிரி என்னாலதான் உங்க ரெண்டு பேருக்கும் கஷ்டம் வருதா?” எனக் கேட்டு அழுதார்.
“நடக்கிற எல்லாத்துக்கும் இது அதனால, அது இதனாலன்னு காரணம் சொன்னா சொல்லிட்டே இருக்க வேண்டியதுதான். நான் சாவை பார்த்திட்டு உன்கிட்டேயே திரும்ப வந்திட்டேன், ரிதிக்கு கல்யாணத்துக்கு முன்னாடியே அவ லைஃப் சரியாகிடுச்சு. நீ செஞ்ச நல்லதுனால கூட எங்களுக்கு பெருசா கெடுதல் நடக்கலைன்னு எடுத்துக்கலாமே ம்மா. அப்படினா நீ சந்தோஷம்தான் படணும், எதுக்கு அழற?” என்றான் ரவி.
மகனை கலக்கமாக பார்த்தார் பூர்ணிமா.
“ரிதிக்குன்னு உள்ளவன் எப்பவோ பொறந்திட்டான், கண்டுபிடிச்சி இங்க கொண்டு வந்து நிறுத்தற பொறுப்பு என்னோடது. அவ கான்ஃபிடெண்ட்டா ஒரு முடிவு எடுத்திருக்கா, நாமெல்லாம் சப்போர்ட் பண்ணனும் மா” என்றான்.
ஆள்தான் பழையபடி மாறவில்லை, ஆனால் பேச்சு பழைய ரவியாக தெளிவாக தைரியமாக சொன்னான். அவனது தைரியம் அப்படியே அவனது அம்மாவையும் தொற்றிக் கொள்ள, கண்களை துடைத்துக் கொண்டார் பூர்ணிமா.
அமைதியாக அமர்ந்திருந்த அப்பாவிடம், “நான் என் கோச்சிங் ஸ்டார்ட் பண்ண போறேன் ப்பா. அண்ணாகிட்டேயே படிச்சுப்பேன். என் கல்யாணம் நின்னத நினைச்சு நீங்களும் ஃபீல் பண்ணக்கூடாது. இன்னொருத்தர்கிட்ட என்னை ஒப்படைக்கிறத விட என்னை நானே பார்த்துகிறது போல மாறணும்னு நினைங்கப்பா” என்றாள் ரிதி.
அவருக்கு ஏமாற்றமாவும் வருத்தமாகவும் இருந்ததுதான், ஆனால் மகளின் முடிவை அங்கீகரித்தார். தெளிந்து கொண்டவராக மகள் சொன்னதற்கு சம்மதமாக தலையாட்டினார்.
“என்கிட்ட கேட்காமலே என்னை இழுத்து விடுறா பாரும்மா உன் பொண்ணு. ஃபீஸ் வாங்காமல்லாம் சொல்லி தர மாட்டேன், சொல்லிடு அவகிட்ட” என்றான் ரவி.
ரிதி தன் அண்ணனை முறைக்க, “விடுங்க ண்ணி, உங்க கையால முருங்கை கீரை சூப் தினம் வச்சு கொடுங்க, அதுதான் ஃபீஸ்” என கணவனை வம்பிழுத்தாள் மதி.
“ஆமாம் அதை என் பொண்டாட்டி குடிப்பா, வாய் கூடிப் போச்சு அவளுக்கு, நிறைய பேசறத்துக்கு அவளுக்குத்தான் தெம்பு தேவைபடுது இப்போ” என்றான் ரவி.
“நல்லா புடிச்சு வச்சுக்கிட்டு வாய்ல ஊத்தி விடுவோம் நாங்க” என கணவனிடம் சொன்ன மதி, மாமனாரிடம், “வீட்டுக்கு வெளில ஷாடோ நெட் ஃபென்ஸிங் போடலாம் பெரிய மாமா, நமக்கு பிரைவசி கிடைக்கும்” என சொன்னாள்.
“ஏம்மா வெளில காத்தோட்டமா நல்லாத்தானே இருக்கு? பிரைவசிக்கு என்ன குறை, நம்ம வீட்டு ஆளுங்கதானே இருக்கோம்?” என்றார் சீனு.
“ஹையோ அப்பா! அங்க அண்ணா உட்கார்ந்தா எதிர் வீட்டு ஆன்ட்டீஸ் எல்லாம் அண்ணாவை ஸைட் அடிக்கிறாங்க, அண்ணிக்கு ஜெலஸ் ஆகுது” என ரிதி சொல்ல, என்ன பதில் சொல்ல என விழித்தார் சீனு.
“உன் பார்வைதான் எப்பவும் அண்ணியவே சுத்தி சுத்தி வருதே ண்ணா” என ரிதி சொல்ல, பெரியவர்கள் இருந்ததால் ரவியும் மதியும் லேசாக வெட்கம் கொண்டனர்.
இன்னும் சற்று நேரம் கல கலப்பாக பேசிக் கொண்டிருந்து விட்டுத்தான் தங்கள் வேலைகளை பார்க்க போனார்கள்.
தெளிவாக உறுதியாக தன் முடிவை சொல்லி விட்டாள்தான் ரிதி. ஆனால் பழையதை மறந்து வாழ்வது அத்தனை எளிதாக இல்லை. கணவனாக நினைத்து பழகிய ஒருவன், மனதில் பழைய இடம் இல்லா விட்டாலும், ஒருவித கசந்த உணர்வு அவளுள். அவ்வப்போது அழுகையும் வருகிறது.
கவனித்த ரவி தங்கையிடம் அதுபற்றி பேசவில்லை, ஆனால் காலை மாலை இரண்டு வேளையும் ஸ்ட்ரிக்ட் ஆஃபிஸராக மாறி அவளின் கவனத்தை படிப்பில் மட்டுமே நிலைக்க வைக்கிறான்.
முதல் இரண்டு வாரங்கள் என்னவோ போலதான் இருந்தாள், அதன்பின் அவளது உணர்வுகளின் தாக்கம் தானாக குறைய ஆரம்பித்து விட்டது.
காலை, மாலையில் அண்ணனிடம் படிக்கும் ரிதி, மதிய வேளையில் இணைய வழி பயிற்சி வகுப்பு வழியே கற்கிறாள். முன்னரெப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் தீவிரமாக படிக்கிறாள்.
மெல்ல மெல்ல அந்த வீட்டில் சோகத்தன்மை மறைந்து இயல்பு மீண்டது.
மருமகள் கேட்டுக் கொண்டதன் படியே, வீட்டிற்கு வெளியில் தனியுரிமையை பாதுகாக்கும் வகையில் நிழல் வலையை கொண்டு தடுப்பு போட்டு கொடுத்து விட்டார் சீனு. அக்கம் பக்கத்தினர் பற்றிய கவலை இல்லாமல் ரவியால் இலகுவாக வெளியில் அமர முடிந்தது. ரிதி பொறுப்பாக புத்தகத்தை கையில் எடுத்திருக்கிறாள். அண்ணனின் அறிவை விரயம் செய்யாமல் அவனிடமிருந்து கிரகிக்கிறாள்.
சொர்ணம் பாட்டி இந்தப் பக்கம் வருவதே இல்லை. தினம் ஒரு முறை மறக்காமல் அம்மாவை பார்த்து வந்து விடுகிறார் சீனு.
ரவிக்கு உடல்நிலையில் வேகமான முன்னேற்றம் ஏற்பட, அவனது மனநிலையும் நன்றாக இருந்தது. மனைவியுடன் சீண்டல் பேச்சுக்கள், முத்தங்கள், அணைப்புகள் என குறையில்லாமல் அவனது நாட்கள் நகர்ந்தன.
ஒரு நாள் மாலையில் ரவியின் அலுவலக நண்பர்கள் இருவர் அவனை காண வந்திருந்தனர். பூர்ணிமாவும் ரிதியும் கோயிலுக்கு சென்றிருக்க, ரவியுடன் மதி மட்டும்தான் இருந்தாள்.
சற்று நேரம் அவர்களுடன் பேசியிருந்தது ரவிக்கு நன்றாக இருந்தது. அவர்கள் விடை பெற்று செல்லும் போது வழியனுப்ப வாசல் வரை வந்தாள் மதி.
“ஹையோ கண்டிப்பா எல்லாரையும் கூப்பிட்டு பெரிய விருந்து வைக்கிறோம் அண்ணா” என மதியும் சிரித்த முகமாக சொன்னாள்.
பக்கத்து வீட்டில் சொர்ணம் பாட்டியை காண அவருக்கு நாத்தனார் முறையுள்ள இன்னொரு பாட்டி ஊரிலிருந்து வந்திருக்க, இருவரும் இங்குதான் பார்த்திருந்தனர்.
ரவியின் நண்பர்கள் புறப்பட்டு சென்றதும் உள்ளே போக போன மதி, மாடியில் காய்ந்து கொண்டிருந்த துணி வீட்டின் பக்கவாட்டில் விழுந்து கிடப்பதை கவனித்து விட்டு அதை எடுக்க சென்றாள்.
இரண்டு வீடுகளுக்கும் இடைப்பட்ட இடம் என்பதால் பாட்டிகள் இருவரும் பேசிக் கொள்வது அவளின் காதில் தெளிவாக விழுந்தது.
“அவன் வேற கை கால் விழுந்து போய் கெடக்கான், இவ என்னடான்னா வீட்டுக்கு வர்ற அந்நிய ஆம்பளைங்ககிட்ட சிரிக்க சிரிக்க பேசி பழகுறா. என்ன இருந்தாலும் அம்மா புத்திய கொண்டுதான் மவளும் இருப்பா. கொஞ்சம் கவனிச்சுக்க அண்ணி” என்றார் வெளியூர் பாட்டி.
“இந்தா என்னா பேச்சு இது? எனக்கு அவளை புடிக்காதுதான், அதுக்காவ என் பேரன் பொண்டாட்டிய பத்தி இப்படி சொல்லுவியா?” என சொர்ணம் பாட்டி அவரை கண்டித்துக் கொண்டிருக்கும் போதே, சத்தமில்லாமல் தன் வீட்டுக்கு வந்து விட்டாள் மதி.