“உன் அண்ணன் விஷயத்துல அம்மா அப்படி சொன்னது கூட ஒரு சஜ்ஜஷன். அவங்க மூனாவது மனுஷரா வெளில இருந்து ஃப்யூச்சர் யோசிச்சு சொல்லிருக்காங்க, அதை ஏன் குத்தமா பார்க்கிற? கல்யாணத்துக்கு முன்னாடியே அவங்கள பத்தி தப்பு தப்பா என்கிட்ட ப்ரஜக்ட் பண்ணினா பின்னாடி இன்னும் மோசமா இருப்ப போலையே” என சொல்லியிருக்கிறான்.

இப்படி பேச உங்களுக்கு வெட்கமாக இல்லையா என ஆரம்பித்து எவ்வளவு கடுமையாக பேச முடியுமோ அவ்வளவு தூரம் பேசி விட்டாள் ரிதி.

“அம்மாக்கு முழுசா விஷயம் தெரியாது. ஆனா கல்யாணம் நிக்க கூடாதுன்னு பயப்படறாங்க, ஸ்ரீதரும் நானும் பேசிக்கிறது இல்லை. ஆனா அவர் பேரெண்ட்ஸ் அப்பாகிட்ட நல்ல விதமாதான் பேசிட்டு இருக்காங்க. ஸ்ரீதருக்கு என்ன நினைப்புன்னா நானா இறங்கி போகணும்னு, எம்மேல தப்பு இருக்கிறதா எனக்கு தோணல அண்ணி, நானா போய் பேசவும் பிடிக்கல அண்ணி” என்றாள் ரிதி.

“என்னதான் முடிவு இதுக்கு?” எனக் கேட்டாள் மதி.

“குழப்பமா இருக்கு, ஸ்ரீதரை கல்யாணம் பண்ணிக்க பயமா இருக்கு. ரெண்டு வருஷ பழக்கம், எங்கேஜ்மெண்ட் ஆகிடுச்சு” என்ற ரிதி, தொடர்ந்து, “ஸ்ரீதரை மறக்க முடியுமா என்னால?” எனக் கேட்டாள்.

“ஹையோ மறக்குறத பத்திலாம் ஏன் பேசுறீங்க? கோவத்தை விட்டுட்டு இன்னொரு முறை நேர்ல பேசுங்க ரெண்டு பேரும்”என யோசனை சொன்னாள் மதி.

ரிதி ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள். வீட்டில் செல்லமாக வளர்ந்த பெண், அதிலும் சீனு இவள் எது கேட்டாலும் நிறைவேற்றி கொடுத்து விடுவார். ரவிக்கு  உடம்பு முடியாமல் போவதற்கு முன்பு வரை கஷ்டம் என எதையும் பார்த்திராத பெண்.

தங்கை என்ன படிக்க வேண்டும் என்பதெல்லாம் ரவியின் யோசனை படிதான் நடந்தது. அவளின் மேற்படிப்பு முடிந்த பின் அவன் சொன்னது படிதான் அரசாங்க உத்தியோகத்துக்கு போட்டித் தேர்வுகள் எழுத அதற்கான பயிற்சி மையத்தில் சேர்ந்தாள். அங்கு அறிமுகமானவன்தான் ஸ்ரீதர். போட்டித் தேர்வில் வெற்றி பெற்று வேலைக்கான உத்தரவுக்காக அவன் காத்துக் கொண்டிருந்த நேரம், அந்த மையத்தில் பயிற்சி கொடுக்கவென அவ்வப்போது வருவான்.

ஸ்ரீதர் வீட்டிலும் நல்ல வசதிதான், பொழுது போக்காகத்தான் அந்த மையத்திற்கு வந்தான். ரிதியுடன் காதல் என்றான பிறகு அவளது எண்ணம் முழுதும் தானே இருக்கும் படி பார்த்துக் கொண்டான். பயிற்சி மையம் செல்வதாக வீட்டினர் நினைத்துக் கொண்டிருக்க, ஸ்ரீதருடன்தான் பொழுதை கழித்தாள் ரிதி.

எழுதிய தேர்விலும் வெற்றி கிட்டவில்லை. அதற்காக ரிதி அலட்டிக் கொள்ளவும் இல்லை. ஸ்ரீதரும் ஏன் சிரம படுகிறாய் விடு எனதான் சொன்னான். ஆனால் அவனுடனான பொழுதுகள் இனிமையாகவே சென்றது.

ஸ்ரீதருடன் பழகிய காலங்கள் அவளுக்கு நினைவிலாட அவளின் கண்கள் கசிந்தன.

“அண்ணி…” என அழைத்தாள் மதி.

வேதனையாக சிரித்த ரிதி, “என்ன நடக்குதுன்னு பார்க்கலாம் அண்ணி” என சொல்லி எழுந்து கொண்டாள்.

மதியிடம் இதை பகிர்ந்த பிறகு ரிதிக்கு ஓரளவு நன்றாக இருந்தது, மதிக்குதான் பாரம் ஏறிக் கொண்டது.  தூறலாக மட்டும் மழை இருக்க, கீழே வந்து விட்டனர்.

“மழைல நனைஞ்சிட்டு இருக்கீங்கன்னு நினைச்சேன், இப்படி வர்றீங்க?” ஹாலில் அம்மாவுடன்  அமர்ந்திருந்த ரவி கேட்டான்.

அவன் கேட்டதையே கவனிக்காத ரிதி அவள் பாட்டுக்கும் அறைக்கு சென்று விட்டாள். கேள்வியாக மனைவியை பார்த்தான் ரவி. ஒன்றுமில்லை என மறுப்பாக தலையசைத்த மதி, அதன் பின்னம் கூட எதுவும் சொல்லவில்லை.

வெகு நேரம் யோசித்த ரவி, “ஸ்ரீதரோட அப்பாக்கு கால் பண்ணி என்கிட்ட கொடும்மா” என அம்மாவிடம் சொன்னான்.

“நீ என்ன பேசப் போற, அப்பா வரட்டும்” என்றார் பூர்ணிமா. அவன் ஒத்துக் கொள்ளவில்லை. இந்த வாரத்தில் ஒரு நாள் குடும்பத்துடன் வாருங்கள், திருமணம் பற்றி பேசி விடலாம் என ஸ்ரீதரின் அப்பாவிடம்  சொல்லி விட்டுத்தான் ஓய்ந்தான். அவரும் வார இறுதியில் வருவதாக ஒப்புக் கொண்டு விட்டார்.

இரவு வீடு திரும்பிய சீனுவுக்கு ஸ்ரீதரின் அப்பா மூலமாக விஷயம் தெரிந்திருந்தது. பேசியே அப்பாவை சரி கட்டி விட்டான் ரவி.

உறங்கும் முன் ரிதி தன்னிடம் சொன்னவற்றை கணவனிடம் பகிர்ந்த மதி, “அவங்க ரெண்டு பேருக்குள்ள சரியாகாம குடும்பத்தோட எதுக்கு வர சொன்னீங்க?” என குறையாக கேட்டாள்.

“ப்ச், இவ ஏன் எதையும் என்கிட்ட சொல்லல? நான் எவ்ளோ தூரம் எஜென்சி வச்செல்லாம் அவனை பத்தி விசாரிச்சேன்?” என ஆதங்கப் பட்டான் ரவி.

“ஒருத்தர் பழக்கவழக்கம், வேலை செய்ற இடத்துல எப்படி இதைத்தானே ஏஜென்சில மானிட்டர் பண்ணி சொல்வாங்க? இது மாதிரி குணத்தை நெருங்கி பழகறவங்களுக்குத்தான் தெரியும்” என்றாள் மதி.

“ரிதி ஏமாந்து போயிருக்கான்னு சொல்ல வர்றியா?”

“ஹையோ அப்படியில்லை மாமா” என  பதறினாள்.

“ஏய் பேசத்தானே செய்றோம் மதி? உன்னை தப்பாலாம் நினைக்கல”

“பொதுவா கல்யாணத்துக்கு முன்னாடி பழகும் போது நெகடிவ் ஸைட் காட்ட மாட்டாங்க, அண்ணிக்கு அவரோட  இன்னொரு ஸைட் இப்பதான் தெரிய வருது போல” என்றாள்.

“ரிதி முடிவா என்ன சொல்றா?”

“அப்படி முடிவா ஏதும் சொல்லலை, அவரை மறக்க முடியுமான்னு கேட்டாங்க, கன்ஃப்யூஸ்டா இருக்காங்க” என்றாள்.

“ஹ்ம்ம்… நான் பேசிக்கிறேன் அவகிட்ட”

“உங்கள்ட்ட சொல்லிட்டேன்னு கோச்சுக்கிட்டாங்கன்னா?”

“அவ லைஃப் முக்கியமா, உன்கிட்ட கோச்சுக்கிறது முக்கியமா?”

“சுள்ளு சுள்ளுன்னு பேசாதீங்க மாமா”

“ரொம்ப ஃப்ரஸ்ட்ரேட் ஆகுறேன் மதி. ஹாலையும் ரூமையும் மாறி மாறி பார்த்து மைண்ட் டயர்ட் ஆகிடுச்சு” என்றான்.

“என்னை பாருங்க” என்றாள்.

சிரித்து விட்டவன், “உன்னை பார்த்திட்டு இருந்தா வேற மாதிரி தோணுது. அது இன்னும் கொடுமையாகுது” என்றான்.

“அவ்ளோ மோசமாவா இருக்கேன்?”

“கிட்ட வா எவ்ளோ மோசமா நான் ஆகுறேன்னு சொல்றேன்” என குறும்பான சிரிப்பை அடக்கியபடி சொன்னான். அவளும் குறும்பாக பார்த்துக் கொண்டே, “ஒன்னும் வேணாம்” என சொல்லி அவனை அணைத்துக் கொண்டாள்.

அடுத்த நாள் பரிசோதனைக்காக மருத்துவரிடம் சென்று வந்தான் ரவி. தான் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் ஏற்படுவதாக சொல்லியிருந்தார் மருத்துவர்.

ரவிக்கு இப்போது கைகளில் பலம் கூடியிருந்தது. வாக்கர் பிடித்துக்கொண்டு சில அடி தூரங்கள் நடக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளான். மகனுக்கு சரியாகி விடும் என பூர்ணிமாவுக்கும் இப்போதுதான் பயம் தெளிந்திருக்கிறது.

இரண்டு நாட்களுக்கு பின் மதி வேலையில் அமர்ந்த பின் ரிதியும் ரவியும் ஹாலில் இருந்தனர். நாளை ஸ்ரீதர் குடும்பம் இங்கு வரப் போவதை அவன் அவளுக்கு தெரிய படுத்த, கலக்கம் கொண்டாள் அவள்.

“இதை இன்னும் இழுத்துகிட்டு இருக்காத, உண்டு இல்லைனு முடிவு பண்ணு. வீடு வாங்கறது ஒன்னும் பிரச்சனை இல்லை, என்னால ரெடி பண்ண முடியும். நீ வேற முடிவு எடுத்தாலும் வீட்ல யாரும் எதுவும் சொல்லாம நான் பார்த்துப்பேன். ஆனா நாள் கடத்துறதுல எனக்கு இஷ்டம் இல்லை” என்றான் ரவி.

பயந்தவளாக அண்ணனை பார்த்தாள். “இருபத்தஞ்சு வயசு பொண்ணு நீ, உன்னை நாங்க நல்லா வளர்த்திருக்கோம், நீ எடுக்கிற முடிவு சரியா இருக்கும், ஆனா அதுக்கு காதல் மயக்கத்திலிருந்து வெளில வந்து யோசிக்கணும் நீ” என அவன் சொல்ல சரியென தலையாட்டிக் கொண்டாள்.

“உன் லவ்வையும் ஸ்ரீதரையும் உன்னை தவிர யார் பெட்டரா அனலைஸ் பண்ண முடியும் சொல்லு?” எனக் கேட்டான்.

அண்ணன் பக்கத்தில் வந்து அவனது தோளில் முகம் பதித்து, “எனக்கு ஸ்ரீதர் வேணாம் ண்ணா” என்றாள்.

“நான் கேட்டதும் சொல்லாத, நல்லா யோசிச்சு சொல்லுடா” என்றான்.

“ரொம்ப யோசிச்சிட்டேன் நான், இதை சொல்ல தைரியம் இல்லை. இப்ப நீ சப்போர்ட் பண்ணுவேங்கிற நம்பிக்கைல தைரியமா சொல்லிட்டேன். நாளைக்கு ஸ்ரீதர்கிட்டேயும் சொல்ல போறேன்” என்றாள்.

“ரிதி?”

“ஊரறிய எங்கேஜமெண்ட் ஆகிடுச்சு, அப்பா இந்த மேரேஜ் ஸ்டாப் பண்ற ஐடியால இல்லை. இப்ப இருக்க நிலைல எப்படியும் என் மேரேஜை நிறுத்தவே மாட்டாங்க. இப்படிலாம் நினைச்சுதான் என்னை உதாசீன படுத்தறார் ஸ்ரீதர், நான் கால்ல விழுவேன்னு நினைக்கிறார்” என்றாள்.

ரவி கவலையாக பார்க்க, “அண்ணா?” என்றாள்.

“ஒன்னுமில்ல, நாளைக்கு எல்லார் முன்னாடியும் நீயே உன் முடிவை சொல்லு, தெளிவா பேசி கன்வின்ஸ் பண்ணனும் நீ, உன்னால முடியலைனா அப்புறம் பார்த்துக்கலாம், அண்ணா இருக்கேன்” என சொல்லி சிரித்தான்.