“தாரா” என்றவருக்கு மேற்கொண்டு வார்த்தைகள் வரவில்லை. அவள் இப்படி பட்டென்று பேசுவாள் என்று அவர் நினைக்கவில்லை.
“என்னம்மா இப்படி பேசுற?” என்றார் லட்சுமி இறங்கிய குரலில்.
“வேற எப்படி பாட்டி பேச சொல்றிங்க? இப்போ கூட உங்களுக்கு என்னைப் பத்தி கவலையில்லை. உங்க கவலையெல்லாம் ஆஸ்திரேலியா போற உங்க பேரனை தடுத்து நிறுத்தனும். அதுக்கு இந்த தாரா வேணும். கல்யாணம் முடிஞ்சு ரெண்டு நாள்ல கட்டுனவளை விட்டுட்டு போறோம்னு அவனுக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை. என்னோட லைப் இப்படி அந்தரத்துல ஆடுதேன்னு உங்களுக்கு கொஞ்சம் கூட கவலையில்லை. ஆனா உங்க தேவைக்கு மட்டும் நான் வேணும்.
இப்போ கூட போற அகனைத் தடுத்து, அவர் பண்றதுன்னு தப்புன்னு சொல்ல உங்க யாருக்கும் தைரியம் இல்லை. அவன் ஆஸ்திரேலியா போனா என்ன? ஆடு மேய்க்க போனா எனக்கென்ன? என்னைத் தேடி வராத வரைக்கும் இந்த தாரா அகனைத் தேடி வரமாட்டா. நான் வேணும்னு நினைக்கிற வரைக்கும் அகன் எனக்கு வேணாம்” என்றாள் கோபமாய்.
“அம்மாடி இது வாழ்க்கைமா. நீயா நானான்னு பார்க்க வேண்டிய நேரம் இது இல்லைடா” என்றார் லட்சுமி.
“இதே அறிவுரையை நான் கிளம்பி வந்தப்போ உங்க பேரனுக்கு சொல்லியிருக்க வேண்டியது தானே பாட்டி. இப்போ சொல்றேன் கேட்டுக்கங்க, அகனுக்கு நான் வேண்டாம்னா எனக்கும் அகன் வேண்டாம். இனி எதுக்காகவும் எனக்கு கால் பண்ணாதிங்க” என்றவள் போனை வைத்துவிட்டு நிமிர, எதிரே கவலை படிந்த முகத்துடன் நின்றிருந்தார் பூமிநாதன்.
தந்தையைக் கண்டதும் அடக்க மாட்டாமல் எழுந்தவள் தாவி அவரை அணைத்துக் கொண்டாள்.
“நான் பேசுனது தப்பா இருந்தா சாரி டாடி. ஆனா அகனைத் தேடி நான் போக மாட்டேன். ஐ கான்ட்” என்றாள் கண்ணீருடன்.
“வேண்டாம்டா, நீ போக வேண்டாம். இதே பதிலைத்தான் நான் லட்சுமி பெரியம்மாகிட்ட சொன்னேன். அதான் அவங்க உனக்கு கூப்பிட்டிருக்காங்க” என்றவரின் வார்த்தைகளைக் கேட்ட பிறகு தான் சற்று சரிந்திருந்த அவளின் தைரியம் மீண்டும் திரும்பியிருந்தது.
நாட்கள் அதன் போக்கில் நகர, என்ட்ரன்ஸில் நல்ல மதிப்பெண்கள் பெற்று மெரிட்டில் பாஸ் செய்திருந்தாள் யுகந்தாரா.
டெல்லி எயிம்ஸ் மருத்துவமனையில் அவளுக்கு இடம் கிடைத்திருந்தது. டெல்லி செல்ல வேண்டுமா என்று யோசித்த அவளை பூமிநாதன் தான் பேசி சம்மதிக்க வைத்திருந்தார். மகளின் மனதிற்கு ஒரு மாற்றமாய் இருக்கும் என்று அவர் நினைத்தார்.
இதற்கிடையில் சந்தான லட்சுமி தன் மொத்த குடும்பத்தினருடனும் ஒரு முறை தாராவை பார்க்க வந்திருந்தார். கூடுதல் அதிசயமே வசந்தியும் கூட வந்திருந்தது தான்.
தாரா அவர்கள் யாரிடமும் சரியாய் பேசவில்லை. எப்போதும் கலகலவென பேசிக் கொண்டிருக்கும் தாராவின் அமைதி அவர்கள் அனைவரையும் பாதித்தது.
“எப்படி இருந்த பொண்ணை உங்க பேரன் இப்படி ஆக்கி விட்டுட்டான் பாருங்க. நல்ல வேளை கார்த்திகா தப்பிச்சா. அவனுக்காக எல்லா இடத்துலையும் நின்னு பேசி சண்டை போட்ட பொண்ணையே அம்போன்னு விட்டுட்டு போய்ட்டான். இருந்தாலும் அவன் பண்ணது ரொம்ப தப்பு” என்று வசந்தியே தாராவிற்காக பேசும் நிலை வருமென்று சத்தியமாய் அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார்.
“தாரா சொல்றனேன்னு கோவிச்சுக்காதடா, கார்த்தியோட அட்ரஸ் தர்றேன்டா. ஒரு தடவை நீ ஆஸ்திரேலியா போயிட்டு வந்துடேன்” என்றார் தயங்கித் தயங்கி.
அதுவரை அமைதியாய் இருந்தவள்,
“யார் நீங்க?” என்ற ஒரே வார்த்தையில் அவரை ஒதுக்கி வைத்துவிட்டார்.
“தாராம்மா” என்று பூமிநாதன் அதட்ட,
“சாரி டாடி..! எனக்கு இவங்களையும் யாருன்னு தெரியலை. அவனையும் யாருன்னு தெரியலை. என் வாழ்க்கையில் நான் எடுத்த ஒரே முட்டாள் தனமான முடிவு என் கல்யாணம் மட்டும் தான். இனி அதைப் பத்தி பேசிகிட்டு யாரும் இங்க வராதிங்க” என்று முகத்தில் அடித்தார் போல் பேசி அனுப்பியிருந்தாள்.
“எதுக்குடா இவ்வளவு ஹார்ஷா பேசுன?” என்றார் பூமி.
“எனக்கு வேற வழி தெரியலை டாடி. மறக்கணும்னு நினைக்கிற ஒரு விஷயத்தை இவங்க வந்து மறுபடியும் ஆரம்பிச்சு வைக்கிறதை நிறுத்த எனக்கு வேற வழி தெரியலை” என்றவளிடம் மேற்கொண்டு பெற்றவர்களாலும் பேச முடியாமல் போனது.
அவன் போனிலாவது அழைத்துப் பேசுவான் என்று அவள் மனதின் ஒரு மூலையில் எதிர்பார்த்திருக்க, அதையும் பொய்யாக்கியிருந்தான் அகன். அவனிடமிருந்து அழைப்பும் இல்லை. செய்தியும் இல்லை. அவளின் மொத்த சந்தோஷத்தையும் தன்னுடையே எடுத்து சென்று விட்டான் அகன்.
அவளின் கவனம் முழுவதும் படிப்பு என்றாக, அதற்கடுத்து அந்த படிப்பே அவளை உள்ளிழுத்துக் கொண்டது. மயக்கவியலில் முதுகலை படித்துக் கொண்டிருந்தாள். ஊன் உறக்கமின்றி அவள் நேரத்தையும் பொழுதையும் படிப்பே எடுத்துக் கொண்டது.
உறங்கும் வேளைகளில் அனுமதின்றி அவளுள் வந்து உறவாடும் அவன் நினைவுகளை துறப்பதற்குள் அவளுக்கு போதும் போதுமென்றாகி விடும்.
கிடைத்த நேரத்தில் வீட்டிற்கு வந்து செல்லும் நேரங்களில் வேணி தான் மகளின் இந்த மாற்றம் கண்டு மனதிற்குள் வெம்பிப் போனார்.
பெற்றவர்கள் தங்கள் பழைய தாராவை முற்றிலும் இழந்து விட்டார்கள். இப்போது இருப்பவளிடம் இருக்கும் அமைதி இது வரை அவர்கள் கண்டிராதது. அவளின் துடுக்குத் தனம் எல்லாம் தூரப் போயிருந்தது. ஏற்கனவே தெளிவுடன் இருந்தவளுக்கு இப்போது படித்துக் கொண்டிருக்கும் படிப்பு அவள் முகத்தில் விளையாட்டுத் தனத்தை அகற்றி அறிவுக் கலையை ஏற்றி இருந்தது.
மயக்கவியல் முதுகலையை வெற்றிகரமாய் முடித்தவள், பொது மருத்துவத்தில் தங்கம் வாங்கியதைப் போல், இதிலும் சிறந்த மாணவியாய் தங்கப் பதக்கத்துடன் மிளிர்ந்தாள்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு…
மற்றவர்களுக்கு வேண்டுமானால் இந்த நான்கு ஆண்டுகள் கண் மூடி கண் திறப்பதற்குள் சென்று விட்டதைப் போல் தோன்றலாம். ஆனால் தாராவிற்கோ இது நான்கு யுகம். வெளியே சொல்லாவிட்டாலும் சொல்லப்படாத அவள் வலிகளின் தண்டனை காலம்.
கடந்த ஒரு வருடமாக வேலை செய்து கொண்டிருந்த மருத்துவனையில் இருந்து வேலையை விட்டு நின்றிருந்தாள் தாரா. இன்று வேறு ஒரு மருத்துவமனையில் வேலையில் சேர இருக்கிறாள். அதற்கான அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை முதல் நாளே வாங்கிக் கொண்டு வந்திருந்தாள்.
தாராவின் வேலையின் பொருட்டு பூமிநாதனும், வேணியும் கோயம்புத்தூருக்கு இடம் பெயர்ந்திருந்தனர். தாராவின் கட்டளைப் படி, பூமிநாதன் இப்போது எந்த சமையல் காண்ட்ராக்ட் வேலைகளையும் எடுத்து செய்வதில்லை.
அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து தயாராகி நின்றவளைப் பார்த்த வேணியின் மனம் உள்ளுக்குள் ஏங்கிப் போனது. புடவையை கையில் வைத்துக் கொண்டு கட்டி விட சொல்லி வேணியை வம்பிழுத்து வளைய வந்த தாராவை அவர் அதிகம் மிஸ் செய்தார்.
இதோ இப்போது சாப்ட் லினன் புடவையை அழகாய் உடுத்தி, ஒரு மருத்துவருக்குரிய கம்பீரத்துடன் கையில் கோட்டும் ஹேண்ட் பேக் சகிதம் வந்து நின்றவளைப் பார்த்த பெற்றவர்களுக்கு பெருமை ஒரு பக்கம் இருந்தாலும், தனியாய் இருக்கும் மகள் வாழ்க்கையும் அவர்கள் மனதில் வந்து சென்று கொண்டு தான் இருந்தது.
“அம்மாக்கு என்னாச்சு டாடி? ஏன் என்னைய இப்படி வச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டு இருக்காங்க?” என்றாள் தாரா.
“மக வந்து நிக்கிற அழகை ரசிக்கிறாளா இருக்கும்மா தாரா” என்ற பூமிநாதனும் மகளை ஆதுரமாய் பார்க்க,
“ரெண்டு பேருக்கும் தினமும் இதே வேலை தானா? உங்களுக்கு சலிக்கவே சலிக்காத? என்னை என்ன புதுசாவா பார்க்குறிங்க?” என்றாள் தாரா.
“இப்பல்லாம் எல்லா விஷயத்துலையும் நீ புதுசா தான்டா தெரியற. புடவை கட்ட சொன்னா பொம்பளை வேஷம் போடணுமான்னு கேட்ட தாரா, இப்போ எல்லா நாளும் பொம்பளை வேஷத்துல தான் இருக்க” என்றார் வேணி சிரிப்புடன்.
“எங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. எப்படியோ எங்க பழைய தாரா திரும்பி வந்தாளேன்னு சந்தோசம் தான் பட்டுக்குவோம், இல்லையாங்க?” என்றார் வேணி.
“காலையிலேயே பீலிங் ஓவர் லோட் ஆகுது டாடி வேணிக்கு. நான் வேற நியூ ஹாஸ்பிட்டல்க்கு பர்ஸ்ட் டே போறேன். அதனால என்ன ஏதுன்னு பார்த்து மம்மியை கவனிச்சு விடுங்க” என்றாள்.
“ஆல்ரெடி டைம் ஆச்சும்மா. பீக் டைம் ஹெவி ட்ராபிக் ஆகும்” என்றாள்.
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது” என்ற வேணி இட்லியை அவளுக்கு ஊட்ட ஆரம்பித்தார். அவசர அவசரமாய் சாப்பிட்டு முடித்தவள் கிளம்ப எத்தனிக்க,
“தாராம்மா நாளைக்கு உன் பர்த்டே. இன்னைக்கு ஈவ்னிங் ஷாப்பிங் போகணும்” என்றார் வேணி.
“டைம் இருக்குமான்னு தெரியலைம்மா. கால் பண்றேன்” என்றவள் அவசரமாய் கிளம்பி சென்றாள்.
செல்லும் அவளைத் தான் கவலையோடு பார்த்திருந்தனர்.
“ஏங்க இருபத்தி எட்டு வயசு நாளையோட முடிஞ்சுடும். ஒத்தப் பிள்ளையை பெத்துட்டு அவளுக்கு ஒரு நல்லது செஞ்சுப் பார்க்க முடியலையே? இவளும் எதுக்கும் பிடி குடுக்க மாட்டேங்குறா. நாமளாவது எதையாவது செய்யலாம்னு நினைச்சா அதுக்கும் விட மாட்டேங்குறா. என்னதான் பண்றது?” என்றார் ஆதங்கத்துடன்.
பூமிநாதனுக்கும் அதே யோசனை தான். மகளுக்கு துணையாய் இருக்கிறேன் என்று சொல்லி கடைசி வரை அவளும் அவர்களுக்கு துணையாகவே இருந்து விடுவாளோ என்ற பயம் அவருக்கு.
கோயம்புத்தூரின் பிரதான சாலையில் அமைந்திருந்தது புதிதாய் கட்டப்பட்ட ஏகே மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல். மருத்துவமனையின் உட்புற அமைப்பே மிக அழகாக இருந்தது. முதல் நாள் வந்த போதே கவனித்திருந்தாள் தாரா.
முதல் நாளே வேலையில் சேருவதற்கான ப்ரொசிஜர்ஸ் அனைத்தையும் முடிந்திருந்த படியால், தனது வருகையை பதிவு செய்துவிட்டு நேரடியாக தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்றாள்.
“குட் மார்னிங் டாக்டர்..! ஐ ஆம் சரிகா, உங்களுக்கு அசிஸ்டென்ட்டா என்னைத்தான் அப்பாயின்ட் பண்ணியிருக்காங்க டாக்டர்” என்றாள்.
“குட் மார்னிங் சரிகா” என்று சிரித்த முகமாய் கூறியவளை உடனே பிடித்துப் போனது சரிகாவிற்கு.
“இன்னைக்கு செட்யூல் என்னன்னு நோட் பண்ணி வச்சிருக்கிங்களா? இன்னைக்கு எத்தனை ஆபரேஷன் இருக்கு? அவங்க கேஸ் பைல் எல்லாம் ரெடியா இருக்கா?” என்று கேட்டபடி தன் வேலைகளை உடனே ஆரம்பித்தவளைப் பார்த்து சரிகா தான் அயர்ந்து போய் நின்றாள்.
“என்னாச்சு ஏன் அப்படி பாக்குறிங்க?” என்றாள்.
“இல்ல டாக்டர், இன்னைக்கு தான் உங்களுக்கு முதல் நாள். வந்த உடனே வேலையைப் பத்தி ஆரம்பிக்கிறிங்களேன்னு பார்த்தேன்” என்றாள் தயங்கி.
“இந்த ஹாஸ்பிட்டல்ல தான் எனக்கு பர்ஸ்ட் டே. மத்தபடி இது பழகின வேலை தான்” என்றாள்.
“டாக்டர் இன்னைக்கு நீங்க பர்ஸ்ட் டேன்றதால உங்களுக்கு ஒரு கேஸ் மட்டும் தான் அலார்ட் பண்ணியிருக்காங்க. ஒரு ஹார்ட் ஆபரேஷன் இருக்கு. பேஷண்டோட மொத்த டீட்டைல்ஸ் அண்ட் கேஸ் பைல் இதுல இருக்கு டாக்டர்” என்றாள்.
“ப்ரிவியஸா எடுக்க வேண்டியா எல்லா டெஸ்ட்டும் எடுத்தாச்சா? பேஷண்ட்டுக்கு ஹெல்த்ல வேற இஷ்யூஸ் எதுவும் இருக்கா? அனஸ்தீசியா குடுக்கும் போது எந்த ப்ராப்ளமும் வந்துடக் கூடாது. அன்ட் டெக்னிகல் அசிட்டன்ஸ வர சொல்லுங்க” என்றவள் கேஸ் ஹிஸ்டரியை படிக்க ஆரம்பித்தாள்.
இரண்டு மணி நேரங்கள் கடந்த பின்னர், தாரா ஐசியுவிற்குள் சென்று கிளவுஸ் மாஸ்க் என்று அணிந்து கொண்டிருக்க, சரிகா அவளுக்கு உதவிக் கொண்டிருந்தாள். ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்வதற்கான மருத்துவர்கள் குழு அங்கே இருக்க, இவளின் வேலை அனஸ்தீசியா கொடுப்பது. தனக்கான வேலையை கவனமுடன் செய்து கொண்டிருந்தவளை இரண்டு கண்கள் விடாமல் பார்த்துக் கொண்டிருந்ததை அவள் அறியவில்லை.