“என்னை கொஞ்சுறத்துக்காக ரூம் சாத்தி வச்சிட்டான்னு வச்சுக்க அப்பயி?” என கோவத்தை கட்டுப்படுத்திக் கொண்டு, வழக்கமாக அவன் பாட்டியை கிண்டலாக பேசி சமாளிப்பது போல சமாளிக்கப் பார்த்தான்.
“அப்படியிருந்தாதான் மனசு சமாதானம் ஆகியிருக்குமே. இவ நான் அன்னைக்கு பேசினதை மனசுல வச்சுக்கிட்டு வேணும்னே என்னை காத்திருக்க வச்சிட்டா. இல்லைனா அவ்ளோ நேரம் கதவு சாத்த என்ன வேலை இங்க?” என பாட்டி விடாமல் பேசவும் நொந்து விட்டான் ரவி.
பாட்டி காத்திருக்கிறார் என்பதே மதிக்கு தெரியாது. கொஞ்சிக் கொள்ளும் நிலை இங்கு இல்லை என்பதைத்தான் பாட்டி மறைமுகமாக சொல்கிறார். அவன் நல்ல நிலையில் இருந்திருக்க, பாட்டி இப்படி யோசித்திருப்பாரா?
பாரதியின் அறிவுறுத்தலின் பெயரில் சீனு இங்கு வர, ஏதாவது செய்யுங்கள் என்பது போல ஆயாசமாக அப்பாவை பார்த்தான் ரவி.
சீனு போய் திருநீறு எடுத்து வந்து அம்மாவின் கையில் கொடுத்து, “இந்தா நல்லா ஆசீர்வாதம் பண்ணு, அவனை தொந்தரவு பண்ணாத” என்றார்.
“என்னடா தொந்தரவு செஞ்சேன்?” என பாட்டி மீண்டும் ஆரம்பிக்க, “என் கல்யாணம் அன்னிக்கு இவ்ளோ பேச்சு எதுக்கு அப்பயி? வா வந்து திருநீறு வச்சி விடு” என சமாதானமாக சொன்னான் ரவி.
அவர் வீம்பாக பார்க்க, “வாம்மா மதி, அம்மா கால்ல விழுந்து எந்திரி” என மதியிடம் சொன்னார் சீனு. ரவியும் போக சொல்லி பார்வையால் சொல்ல, மதியும் அவ்வாறே செய்தாள்.
“நல்லா இருடிமா!” என பெருந்தன்மை பாவத்திலேயே வாழ்த்தியவர் பேரனையும் வாழ்த்தினார். மதியிடம் ஐந்து தங்க காசுகளை கொடுத்தவர் ரவிக்கும் ஐந்து கொடுக்க, “வாங்கிக்க மதி” என்றான்.
பேரனின் கையை பிடித்து காசுகளை வலிந்து திணித்தவர், “வரவு செலவெல்லாம் உன் கைலதான் இருக்கணும் சொல்லிட்டேன், ஏமாந்தவனா இருக்காத” என அறிவுரை சொல்லி விட்டு நகர்ந்தார்.
“நீ பார்த்துக்கமா இவனை” என சொல்லி வெளியேறி விட்டார் சீனு.
ரவியின் கையிலிருந்த தங்க காசுகளை எடுத்தவள், “யார்கிட்டேயும் நாம ஆசி வாங்கல, எனக்கும் தோணல. அதை இவ்ளோ பிரச்சனை ஆக்குவாங்கன்னு நினைக்கல நான்” என்றாள்.
“என்கிட்டேயே இவ்ளோ பேச்சுன்னா வெளில பலமா இருந்திருக்குமே, உன்னை வேற ஏதும் திட்டி பேசிடுச்சா?” என கவலையாக கேட்டான்.
“இதைதான் அங்கேயும் பேசினாங்க” என மட்டும் சொன்னாள்.
“பாதி விஷயத்தை முழுங்கி சொல்ற மாதிரி இருக்கே” என அவன் சொல்லிக் கொண்டிருக்க, காசுகளை காப்போர்டில் பத்திர படுத்தினாள் மதி.
“அப்புறமா அம்மாகிட்ட கொடுத்திடு, இங்க வேணாம்” என அவன் சொல்ல, சரியென தலையாட்டிக் கொண்டாள்.
“ம்ம்… இப்ப முழுசையும் சொல்லு” என்றான்.
“சொல்ல ஒன்னுமில்ல, நீங்களா ஏதாவது நினைக்காதீங்க”
“ரிதியை அழைச்சிட்டு வா”
“அவங்கலாம் ரெஸ்ட் எடுக்க போயிட்டாங்க. ஈவ்னிங் அழைச்சிட்டு வர்றேன்” என அவள் சொல்லவுமே வேறு ஏதோ நடந்திருக்கிறது என்பதை உறுதி செய்து கொண்டான். ஆனால் சொல் என மீண்டும் கேட்டுக் கொள்ளவில்லை.
சற்று நேரத்தில் ஜோதி கிளம்பி விட, கணேசனும் குடும்பத்துடன் விடை பெற்றுக் கொண்டார்.
மாலையில் இவர்கள் குடும்பம் மட்டும்தான். பூர்ணிமா இன்னுமே மாமியாரின் பேச்சிலிருந்து தெளிந்திருக்கவில்லை. சும்மா அதையே பேசிக் கொண்டிருந்தால் சரி வராது என யாரும் அதைப் பற்றி பேசவில்லை.
ரிதியும் அண்ணனிடம் எதையும் சொல்லவில்லை. மாலையில் ரவிக்கு பிசியோ முடிந்ததும் அவனை வெளியில் அழைத்து வந்து அமர வைத்தாள் மதி. சீனு கடைக்கு சென்றிருக்க, மற்ற மூவரும் அவனுடனே அமர்ந்து தேநீர் பருகினார்கள். அவனுக்கு மருத்துவர் பரிந்துரைந்த ஹெல்த் டிரிங்.
எதிர் வீட்டு மாடியில் அந்த வீட்டு பெண்மணி நடமாடிக் கொண்டே இருந்தாள். சற்று நேரத்தில் அக்கம் பக்கத்தில் உள்ள இன்னும் இரண்டு பெண்மணிகளும் நடமாடினார்கள். ரிதிதான் கவனித்து விட்டு சொன்னாள். காலையிலிருந்தே அவர்கள் இங்குதான் நோட்டம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற தகவலையும் சொன்னாள்.
“இதுகளுக்கு வேற வேலை வெட்டியே கிடையாது, அடுத்தவங்க வீட்ட எட்டி பார்த்து கிசு கிசு பேச வேண்டியது” என அலுத்துக் கொண்டார் பூர்ணிமா.
உள்ளே போகலாமா என ரிதி கேட்டதற்கு, “நம்ம வீட்ல நாம இருக்கோம், அவங்களுக்கு பயந்து ஓட வேணாம். மேல பார்க்காதீங்க அண்ணி” என்றாள் மதி.
பொதுவாக பேசிக் கொண்டிருந்தனர். உடல்தான் தளர்ந்து போயிருக்கிறதே தவிர உள்ளம் நல்ல நிலையில்தான் உள்ளது, வீட்டு விஷயங்களை கேட்டு முடிவுகள் எடுக்கும் திறன் குறைந்து போய் விடவில்லை என தன் மீது வீட்டினருக்கு நம்பிக்கை வரும் வரை அமைதியாகவே இருப்போம் என முடிவு செய்து விட்டான் ரவி.
அந்நியர்களின் பார்வை அவனை அசௌகர்யமாக உணர வைக்க, அதிக நேரம் ரவியால் அங்கே இருக்க முடியவில்லை. உள்ளே போகலாம் என சொல்லி விட்டான்.
இரவு உணவுக்கு பின் அனைவரும் உறங்க சென்றனர். ரவிக்கு மாத்திரைகள் கொடுத்த மதி அவனுடனே படுத்துக் கொண்டாள்.
“மாமாங்கிற வார்த்தை எவ்ளோ அழகுன்னு நீ சொல்லும் போதுதான் தெரியுது” என்றான்.
“போதும் போதும்…” என்றவளுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
ரவியின் அருகில் நேராக படுத்திருந்தவள் அவனது கையை எடுத்து தன் மீது போட்டுக் கொண்டு அழுத்தி விட ஆரம்பித்தாள்.
அவன் அமைதியாக அவளை பார்த்திருந்தான்.
“உங்க அப்பயி சொன்னதை மனசுல போட்டு கஷ்ட படுத்திக்க கூடாது” என்றாள்.
அவன் வெறுமனே புன்னகைத்தான்.
“ப்ச், அவங்க புரியாம பேசிட்டாங்க” என்றாள்.
“அப்பயி பேச்சை விடு, ஆனா அதுல உண்மை இருக்கத்தான் செய்யுது மதி. சீக்கிரம் சரியாகியிடும்னு சொல்லாத. எப்போன்னு டாக்டரால கூட சொல்ல முடியலை. கல்யாணத்துக்கு நாம வெளிலேருந்து யாரையும் கூப்பிடலைன்னாலும் கொஞ்சம் கொஞ்சமா எல்லாருக்கும் தெரியத்தான் போகுது.
மனுஷ மனங்கள் எவ்ளோ வக்கிரமானதுன்னு உனக்கு தெரியல. அவங்க சொந்த பிரச்சனையை தள்ளி வச்சிட்டு அடுத்தவன் வாழ்க்கைய ஆராய்ச்சி பண்ணி அதுல அல்பமா சந்தோஷ பட்டுப்பாங்க. நம்மள பத்தி… நம்ம லைஃப் எப்படி போகுதுன்னு எல்லாருக்கும் நிறைய கற்பனை கதைகள் ஓடும், ஆளாளுக்கு இஷ்டத்துக்கு பேசி சிரிப்பாங்க. மேரேஜ் வேணாம்னு சொன்னதுக்கு இது கூட ஒரு காரணம். இப்போ என்னோட சேர்த்து உனக்கும் கஷ்டம்” என்றான் ரவி.
“நீங்க சொல்ற விஷயமெல்லாம் எனக்கு கஷ்டமே இல்லை மாமா. இப்ப உங்க மூச்சு காத்து எம்மேல படர அளவுக்கு உங்க பக்கத்துல இருக்கேன். கல்யாணம் பண்ணிக்காம இது சாத்தியம் இல்லைதானே? அடுத்தவங்க நினைப்ப நம்மாள மாத்த முடியாது. அதை பத்தி யோசிக்காம இருப்போம். இது நமக்கு டஃப் டைம், தனித்தனியா இல்லாம ஒன்னா இருக்கிறது நமக்கு பலம்” என்றாள்.
ஆமோதிப்பாக தலையசைத்தவன் அவளை தன்னிடம் இன்னும் நெருங்கி வரும்படி சொன்னான். அவனுக்கு சிரமம் ஆகுமோ என அவள் பயத்துடன் பார்த்தாள்.
“ஹேய், மஸில்ஸ் வீக்கா இருக்கு, அவ்ளோதான் எனக்கு. பூ மாதிரி இருக்க நீ என்னை ஹர்ட் பண்ணிடுவியா?” என்றான்.
மெல்ல அவனை தன் அணைப்புக்குள் கொண்டு வந்தாள். சில நிமிடங்கள் அவளின் அணைப்பிலேயே இருந்தவன், “இந்த சப்போர்ட் உன்னை தவிர யார் தர முடியும்? நம்ம கல்யாணம் சரிதான்” என அவளுக்கு சொல்வது போல தனக்கே சொன்னான்.
“நாலு வருஷத்துல எத்தன தடவ நீ இப்படி என்னை கட்டி பிடிச்சிருப்ப சொல்லு? நீதான் மக்கு”
“ஆசையெல்லாம் இருந்துச்சு, ஆனா அப்ப நான் படிச்சிட்டு இருந்தேன்ல மாமா?”
“வேலைக்கு போனப்புறமும் நீ இப்படித்தான். அன்னிக்கு டெரஸ்ல கூட நான்தான் உன்னை கிஸ் பண்ணினேன், நீ என்ன செஞ்ச?”
அன்றைய நாளை நினைவு கூர்ந்தவள், “ரொம்ப தைரியம் உங்களுக்கு, நானும் உங்களோட சேர்ந்து கெட்டு போயிட்டேன்” என்றாள்.
அன்று இவளின் அருகில் எப்படியெல்லாம் உணர்வுகளால் ஆக்கிரமிக்க பட்டிருந்தேன் என நினைத்தான் ரவி. உடனே இன்றைய நிலை உணர்ந்து, மனம் வாட, “தூங்கலாம்” என்றான்.
அவனை விடாதவள், “இதோ இப்படி உங்களை ஃபீல் பண்ணிட்டு இருக்கேனே, இது போதும் இந்த ஜென்மத்துக்கு. என்ன நடந்தாலும் சமாளிக்கிறவர்தான் என் ரவி மாமா, இப்படி சின்ன விஷயத்துக்கு சுணங்கி போற மாமாவை தூங்க வச்சிட்டு என் பழைய மாமாவை தட்டி எழுப்புங்க” என்றாள்.
அதன் பின் அவளிடமிருந்து விலகவில்லை அவன். அவளின் கதகதப்பிலேயே உறங்கிப் போனான். நடு இரவில் விழித்த மதிக்கு அடுத்த நொடியே ரவியின் நினைவுகள்தான். தன்னருகில் சீரான சுவாசத்துடன் அவன் உறங்குவதை கண்டு பெரும் நிம்மதியும் பேரமைதியும் கொண்டாள்.