அனல் 4

தூக்கம் கலைந்து, உடலை நெளித்தபடி எழுந்து அமர்ந்த ரூத் அருகில் ஸ்டெல்லா இல்லாததைக் கண்டு, சோம்பல் முறித்தபடி எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு நேரத்தைப் பார்த்தாள்.

“இன்னைக்கும் இவ்ளோ சீக்கரம் முழிப்பு வந்திருச்சா ச்சே… ஒரு நாளாவது பத்து மணி வரை தூங்கணும்” என்று முனகியபடி காலை ஆறு மணிக்கு சமையல் அறைக்குள் சென்றவள்.

ஒரு அடுப்பில் தண்ணீரையும் மற்றொரு அடுப்பில் பாலையும் சூடு செய்து, தண்ணீரில் லெமன் டீயைப் போட்டுக்கொண்டு மாடி ஏறினாள்.

மாடியில் ஸ்டெல்லா வேர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பதைப் பார்த்தவள்.

“நீ ஆபிஸ்ல வேலை பார்க்கிறியா இல்ல அடியால் கிட்ட வேலை பார்க்கிறியான்னு ஒன்னும் புரியல ஸ்டெல்லா.” என்றபடி கையில் டீயுடன் ஸ்டெல்லா அருகே செல்லவும்

“எப்பவும் எல்லாத்துக்கும் ரெடியா இருக்கணும் ஜோசப். இந்த பூமில பொண்ணா பிறந்துட்டா தைரியமும் உடம்புல பலமும் இருக்கணும்”

என்று பேசியபடி, வியர்வையைத் துடைத்தபடி அவள் அருகில் வந்தவள் லெமன் டீயை வாங்கி அருந்தினாள்.

“எனக்கு இதுலாம் தேவைப்படாது ஸ்டெல்லா, அதான் எனக்கு நீ இருக்கியே, நீ பார்த்துக்க மாட்ட?” என்றபடி காற்றில் கை மடக்கி குத்தி சொல்ல, அதற்கு அழகாகச் சிரித்த ஸ்டெல்லா.

“நான் உன் கூடவே இருந்தாலும் நீயும் இதெல்லாம் கத்துக்கணும் ஜோசப். ஒழுங்கா வா, நீ செல்ஃப் டிஃபன்ஸ் பிராக்டிஸ் பண்ணி ரொம்ப நாள் ஆச்சு, வந்து பிராக்டிஸ் பண்ணு.”

“ஸ்டெல்லா…. ப்ளீஸ் டி…. டுடே செம டயர்டா இருக்கு, இன்னைக்கு ஒரு நாள் மட்டும் வேனா…. நாளைக்கு கண்டிப்பா  நான் உன் கூட சேர்ந்து கத்துக்கிறேன்”

என்று கண்களை சிமிட்டி கேட்டவளுக்கு மறுப்பு சொல்லத் தோன்றவில்லை.

“சரி…. டயர்டா இருந்தா கொஞ்சம் நேரம் தூங்கிருக்கலாம் தானே, ஏன் இவ்ளோ சீக்கிரம் முழிச்ச?”

“நீ இல்லாம தூங்க முடியல ஸ்டெல்லா. நீ இல்லாம சீக்கிரம் முழிச்சிட்டேன்.”

“அது மார்னிங் ஒரு மீட்டிங் இருக்கு ஜோசப், அதுக்கு பிரப்பரேஷன் பண்ணனும், அதான் டா… சாரி “

“சரி அதை விடு! நீ போய் கிளம்பு, நான் நைட் பேலன்ஸ் இருக்கிற சப்பாத்தில முட்டை கொத்து செய்றன்” என்று கீழே இவள் ஓட, அதை பார்த்து சிரித்த படி ஸ்டெல்லா அவள் அறை சென்று கிளம்பி வந்தாள்.

பின் அவள் மட்டும் சிறிது உண்டுவிட்டு வெளியே போக, அவள் பின்னாலேயே ரூத்தும் சென்றாள்.

வெளியே வாசலில் இருவரும் கம்பெனி காருக்காகக் காத்திருக்க, ஸ்டெல்லா “நீ போய் காலேஜுக்கு கிளம்பு ஜோசப், டைம் ஆகப் போகுது”

“அட ஸ்டெல்லா, நைட் சொன்னத மறந்துட்டியா?”

“நைட்….. என்ன சொன்னா?” என்று கண்கள் மூடி யோசித்து நிற்க, அவள் கையில் பட் என்று அடி போட்ட ரூத்.

“வர வர ரொம்ப ஞாபக மறதி ஆகிடுச்சு ஸ்டெல்லா உனக்கு, நைட் தானே சொன்னேன், பைனல் இயர் செம் ஓட ப்ராஜெக்ட்  ஃபைல் போய் சப்மிட் பண்ணிட்டா  போதும்னு  சோ காலேஜ்கு லேட்டா தான் போவேன் ” என்று இடுப்பில் கை வைத்து முறைத்த ரூத்தின் கன்னத்தை கிள்ளிய ஸ்டெல்லா.

“என் சொல்ல ஜோசப்,  சாரி…. மீட்டிங் டென்ஷன்ல மறந்துட்டேன் டா…”

“சரி சரி, இனிமே மறக்காத,  பார்த்துப் போயிட்டு வா….” என்று முகத்தை உர் என்று வைத்துப் பேசும் ரூத்தின் தலையை வருடியவள்.

“காலேஜுக்குப் போயிட்டு மெசேஜ் பண்ணணும், ஸ்கூட்டில பார்த்துப் போருமையா போணும், வொர்க் முடிஞ்சு நேரத்துக்கு வீட்டுக்கு வந்துரணும் ஜோசப். ஏதாவது எமர்ஜென்சினா என்ன பண்ணணும்னு தெரியும் தானே?”

“மொதல்ல உனக்கு கால் பண்ணணும், நீ போன் எடுக்கலனா பாட்டிக்கு கால் பண்ணணும், ஒருவேளை போன் கையில இல்லனா கையில இருக்கிற வாட்ச்ல எமர்ஜென்சி பட்டனை பிரஸ் பண்ணிட்டே இருக்கணும், கரெக்டா?”

என்று கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் சேர்த்து காட்டி நின்றவளைச் சிரித்த முகத்துடன் பார்த்தவள்.

“கரெக்ட் டா தங்கம், சரி கார் வந்திருச்சு பாரு டா, பார்த்து நான் போய்டு வரேன் ”

என்று திரும்பித் திரும்பிப் பார்த்தும், ஆயிரம் பத்திரம் சொல்லியும்  ஸ்டெல்லா காரில் ஏறிச் செல்ல, ரூத்தும் வீட்டின் உள்ளே சென்றுவிட்டாள்.

“பாத்தியாடா, ஏதோ நாடு விட்டு நாடு போற மாதிரி இத்தன பத்திரம்! ஏதோ ஊரே…. அவ தங்கச்சிய கடத்திட்டுப் போக நிக்குற மாதிரி பேசிட்டு போறா!”

என்றபடி கோல டப்பாவுடன் வாணி எழுந்து ஆதிஷ் அருகே வர, அவன் வாணி சொல்லியதை கவனிக்காது காதில் ஹெட்செட் ஒன்றை அணிந்து கொண்டு மும்முரமாக போனில் ஏதோ பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.

“இங்க அம்மா உன் கிட்ட தானடா பேசிட்டு இருக்கேன்.  இங்க  கவனிக்காம, எப்பப் பாரு செவிட்டு மிஷினு கனக்க காதுல மாட்டிட்டுச் சுத்துற உன்ன….” என்று அவன் தோளில் ஒன்று வைக்கவும்.

“அம்மா…. இப்போ என்ன உனக்கு… எனக்கே எப்பவாது தான் இப்படி டைம் கிடைக்குது, அப்போ கூட இப்படி திட்டிட்டே இருந்த எப்படிம்மா?”

“ப்ச், இப்போ நான் எங்க உன்னத் திட்டுனேன்?”

“திட்டலனா இப்போ என்ன, எதுக்கு அடிச்ச?”

“அதுதான்டா இந்த பக்கத்து வீட்டு சிடுமூஞ்சி இருக்கால டா, அவ தங்கச்சிக்கு அத்தன பத்திரம் சொல்லிட்டு ஏதோ போலீஸ கூப்பிடற, வாட்சு லாம் வாங்கித் கொடுத்துட்டு போறா, அதைத்தான் சொல்லிட்டு இருந்தேன்.”

“அந்தப் பொண்ணு அவ தங்கச்சிக்கு ஏதோ வாங்கித் தர்றா, அதுல உனக்கு என்னப் பிரச்சனைம்மா?”

“டேய் ஆதிஷ், படிச்ச பையன் நீ, எனக்குத் தெரியிர அளவு கூட உனக்குத் தெரியலையா டா?”

“ப்பூ…. இப்போ எனக்கு என்னத் தெரியணும்னு நீ நினைக்கிறம்மா?” என்று கடுப்பாகி காதில் இருந்த ஹெட்செட்டை கலட்டி விட்டு வாணியை பார்க்க

“அதான்டா இந்த பொண்ணுங்களுக்குச் சொந்தம்னு போருஸா ஒன்னும் இல்ல, சொத்தும் அவ்வளவா எதுவும் இல்ல, இந்த வீடு மட்டும் தான் அப்படி இருக்க இந்த சிடுமூஞ்சி இருக்கல, அவ என்னமோ அவ தங்கச்சிய ஏதோ தங்கத்தைப் பார்க்குற மாதிரி தான் பொத்திப் பொத்தி வைக்குறா.”

“அட, தங்கச்சி  மேல அவ்ளோ பாசம் இருக்கும் ம்மா.”

“பாசம் இருக்கலாம் தான், அதுக்குன்னு இப்படியா? பக்கத்து வீட்டுக்காரங்க கிட்ட கூட பேச விடாம, அந்தப் பொண்ணு எங்க போனாலும் கூடவே வாலு மாதிரி போய்டு, ஏதோ இடிக்கல உனக்கு?”

“ம்ம்ம்… இடிக்கத்தான் செய்யுதும்மா.”

“உனக்கும் ஏதோ இடிக்குதா டா?”

“ஆமா, உங்க கோல டப்பா தான் ரொம்ப நேரமா என் வயித்துல இடிக்குது” என்றதும், ஆதிஷைப் பார்த்து வாணி தீயாக முறைக்கவும்.

“எம்மா, தாய்க்குலமே என்னன்னு  எனக்கு ஒன்னும் புரியல  நீங்களே உங்க திரு வாய் மலர  சொல்லிடுங்க. அதை விட்டுட்டு இப்படி முறைக்காதிங்க” என்று கைகூப்பி நின்றவனைத் தலையில் அடித்தபடி பார்த்தவர்.

“உன்ன வச்சிட்டு….. நான் சொல்றத நல்லா கேளு, நான் அந்தப் பொண்ணுங்களைச் சின்னப் பிள்ளைல இருந்து பார்க்கிறேன், அத வச்சிச் சொல்றேன், கேட்டுக்கோ” என்றவரை, அப்படி என்ன சொல்லப் போகிறார் என்று ஆதிஷ் கவனித்து நிற்க

“எனக்கென்னமோ அந்தச் சின்னப் பொண்ண எங்க இருந்தோ தூக்கிட்டு வந்திருப்பாங்களோன்னு தோணுது டா.” என்று பேசியவரை ஆ… என்று திகைத்து பார்த்தவன்.

“என்னம்மா உளறிட்டு இருக்க?”

“உண்மையத்தான்டா சொல்றேன், நீயே ரெண்டு பேரையும் பாரு, பெரியவ நல்லா உயரமா, கொஞ்சம் கலர் கம்மியா நாலும் நல்ல லட்சணமா இருக்கா, அன இந்த பொடுஸப் பாரு, குட்டச்சி கணக்கா வெள்ளையா இருக்கப் பாருடா!”

“அம்மா…. இதுலாம் ஒரு விஷயம்னு பேசாத.”

“ப்ச், இத வச்சி மட்டும் சொல்லல டா, நான் இங்க கல்யாணம் ஆகி வந்த புதுசுல, உங்க பாட்டி ஒரு முறை பேச்சு வார்த்தையில பக்கத்து வீட்டுல அவங்க பிரண்டுக்கு ரெண்டு பேத்தின்னு சொன்னாங்க டா.”

“அச்சோ… அம்மா சரியாத்தான சொல்லிருக்காங்க.”

“டேய் கிறுக்கா படிச்சவன் மாதிரி யோசி டா, நான் கல்யாணம் ஆன புதுசுல நீ பிறக்கவே இல்லடா, அப்படினா அந்தப் பொடுசுக்கு உன்னை விட வயசு கூடவாடா?” என்று அவர் கத்த, ஆதிஷ்

“அம்மா…. அடுத்த வீட்டு கதை நமக்கு எதுக்கு? அங்க எத்தனை பேர் பிறந்தா என்ன இறந்தா நமக்கு என்ன?”

“இறந்தனா அப்போ அந்த இரண்டு பிள்ளைல ஒன்று செத்துப்போச்சா.. அட பாவமே!” என்று அவர் கன்னத்தில் கை வைக்கவும்,

“அப்பா….. இங்க பாரு, அம்மா சமைக்காம என் கூட நின்னு கதை பேசிட்டு இருக்கு…” என்று கத்த, வாணி

 “அடேய்…. அவர ஏன்டா கூப்பிடுற …. ஒரு நிமிஷம் நம்மள நின்னு பேச விடுறானா இந்த பையன்…. அப்படியே அப்பாவுக்குத் தப்பாம பிறந்து வந்திருக்கான்”

என்று திட்டியவாறு சென்றுவிட, ஆதிஷ் அவரைப் பார்த்துச் சிரித்தபடி அங்கேயே நின்றவன்.

“இவங்கள சமாளிக்க என்னலாம் பண்ண வேண்டியதா இருக்கு?”

என்றபடி பக்கத்து வீட்டின் அருகே சென்று நிற்க, அங்கே ரூத் பாடும் சத்தம் கேட்க, அப்படியே காதில் ஹெட்செட்டை மாட்டிக்கொண்டு அதைத் கேட்கத் தொடங்கிவிட்டான்.

“ஆபிஸ்க்கு பேசாம லீவ் போட்டுருவோமா…” என்ற யோசனையுடன் அங்கேயே நின்றுவிட்டான்.

அவனுக்கு ரூத் என்றாள் உலக்கத்தையே மறந்து இருப்பவன், அவன் அம்மா சொல்ல வருவதை மட்டும் நினைவு வைத்திருப்பானா என்ன, அவர் பேச வருவதை கவணிக்காது அதை மறந்து போய் அங்கேயே  நின்றுவிட்டான்.

விடையில்லா கேள்வியாக அவள் நிற்க, அவளின் கேள்வியைப் படிக்க மறந்து அந்த கேள்வியிலேயே தடுமாறி நின்றுவிட்டான் இவன்.

இங்கு பத்து மணி போல ரூத் டாப் மற்றும் ஜீன்ஸ் போட்டு கிளம்பி, தனது ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு அவள் கல்லூரியை நோக்கிப் புறப்பட்டுச் சென்றாள். ரூத் கிளம்பியதை உறுதிப்படுத்திய பிறகே வேலைக்கு புறப்பட்டான் ஆதிஷ்.

ரூத் பைக்கில் பாதுகாப்பாக அந்தப் பஸ் ஸ்டாண்ட் முன்னே வந்து நின்றவள்.

அவள் ஜீன்ஸ் பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து, அவளது தொழியான இளபிறைக்கு அழைக்க, உடனே போன் மறுபுறத்திலிருந்து எடுக்கப்பட்டது.

“ஏ… பிறை எங்கடி இருக்க? பஸ் ஸ்டாப்லதான உன்னை நிக்கச் சொன்னேன்.”

“நீ ஏன்டி இவ்வளவு லேட்டா வந்த? நான் எவ்வளவு நேரம் வெயிட் பண்ணேன் தெரியுமா? அங்க இருந்த எல்லாரும் என்னைத் தான் ஒரு மாதிரி பார்த்துட்டுப் போனாங்க” என்றதை  கேட்டு தலையில் அடித்துக்கொண்ட ரூத்.

“ஏதோ ஐய்யாயிரம் வருஷம் உன்னை நிக்க வச்ச மாதிரியே பேசுறியேடி, அஞ்சு நிமிஷம் தானடி லேட்டா வந்தேன்.”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது, அவ்வளவு நேரம்லாம் தனியா ரோட்ல நிக்க முடியாது எனக்கு, அதான் பக்கத்து கடை வரைக்கும் நடந்து போயிடலாம்னு நடந்து வந்தேன்.”

“நீ தனியா கடைக்கு போயிருக்கியா? என்ன அதிசயம்!”

“கடைக்கு போலாம்னு தான் பார்த்தேன், வரிசையா எல்லா கடையும் கூட்டமாவே இருந்துச்சா…..”

“சரி….அதுக்கு என்ன பண்ண?”

“நான் ஒன்னும் பண்ணல, அப்படியே பக்கத்து கடை, பக்கத்து கடைன்னு நடந்து நெக்ஸ்ட் ஸ்டாப்பிங் வரை வந்துட்டேன்டி. இப்போ பஸ்க்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்” என்று சொன்னவளின் பதிலில் தலையை பைக்கில் முட்டிக்கொண்டவள்.

“உன்ன மாதிரி நீ மட்டும் தான்டி பிறை, சரி அங்கேயே இரு நான் அங்க வரேன்”

என்று பைக்குடன் அந்த பஸ் ஸ்டாண்ட் சென்று அவளை அழைத்துக்கொண்டு காலேஜுக்குச் இருவருமாக சென்றனர்.