“இதுக்குத்தான் படிச்சு படிச்சு சொன்னேன், என் கண்ணுல படாத. என் பக்கத்துல வராதன்னு. இப்போ உன்னால நான் கொலைகாரன் ஆகப் போறேன்” என்றவனின் பிடியில் இருந்து யாராலும் அவரை விடுவிக்கவே முடியவில்லை. அவ்வளவு பலத்துடன் அவரைப் பிடித்திருந்தான்.
“அகன் பிளீஸ் அவரை விடுங்க” என்று தாரா அவனுடன் போராட,
“தாரா தள்ளிப் போ” என்று அவன் கத்திய கத்தலில் அவனைப் பிடித்திருந்தவள் விலகி நின்று அவனைப் பயத்துடன் பார்க்க,
“போடின்னு சொன்னேன்” என்றான் மீண்டும்.
“கார்த்தி அவர் நம்ம அப்பாடா. நீ என்னென்னமோ பேசுற. முதல்ல அவரை விடுடா” என்றான் நகுலன்.
“இவனை எல்லாம் அப்பான்னு சொன்னா, அது என் அம்மாவை நான் அசிங்கப் படுத்துற மாதிரி. எனக்கு அப்பான்னு ஒருத்தன் இல்லவே இல்லை. அம்மா மட்டும் தான், அவங்களும் என் கண் முன்னாடியே துடிதுடிக்க செத்துட்டாங்க. எல்லாம் இவனால இந்த ஆளால” என்று தயாளனை விட்டுவிட்டு தலையைப் பிடித்துக் கொண்டு கத்த, அகல்யா தூக்கில் துடித்ததே அவன் கண் முன்னால் வந்து சென்றது.
ஆத்திரத்தில் மீண்டும் அவன் கையை தரையில் தட்டப் போக, அதற்கு முன்பே வேகமாய் வந்து தடுத்து விட்டாள் தாரா.
“அகன் என்ன பண்றிங்க? கண்ட்ரோல் யுவர் மைன்ட் அன்ட் செல்ப். எனக்கு பயமா இருக்கு அகன் பிளீஸ்” என்றாள்.
அவளை ஆக்ரோஷமாய் பார்த்தவன்,
“தினமும் குடிச்சுட்டு வந்து, என் அம்மாவை சந்தேகப்பட்டு அடிச்சு, சித்திரவதை பண்ணி, அவங்களை தற்கொலை வரைக்கும் தூண்டுன இந்த ஆளை சும்மா விட சொல்றியா? இவரோட பிரண்டுன்னு ஒரு நாய் வீட்டுக்கு வந்து என் அம்மாகிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணானே..அதைத் தடுக்கப் போன என்னை அவன் தூக்கி அடிச்சதுல தான் இப்படி ஆனேன்னு தெரிஞ்சும் இத்தனை வருஷமும் வாயைத் திறக்காம நல்லவன் வேஷம் போட்டுட்டு, கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம என் அம்மா வீட்லயே வந்து உட்கார்ந்து அந்த வீட்டு சோத்தை குற்ற உணர்ச்சியே இல்லாம தின்னுட்டு இருக்கானே இவனை நான் சும்மா விடணுமா?
கட்டுன பொண்டாட்டி தன்னால தான் செத்தான்னு தெரிஞ்சும், பெத்த பையன் நிலைமைக்கு தான் தான் காரணம்னு தெரிஞ்சும், மனசாட்சியே இல்லாம அடுத்த வருஷமே புது மாப்பிள்ளையாகி நின்னானே இவனை சும்மா விட சொல்றியா?
இல்ல இப்போ இத்தனை வருஷம் கழிச்சும் என் அம்மாவை பத்தி தப்பா பேசும் போது இப்பவும் உண்மையை சொல்லாம வேடிக்கை பார்க்குறானே இவனை சும்மா விட சொல்றியா? மாட்டேன், இனி இந்த ஆளை சும்மா விடவே மாட்டேன். என் கையால இந்த ஆளைக் கொன்னாத்தான் என் ஆத்திரம் அடங்கும்” என்றவன் மீண்டும் அவளை உதறிவிட்டு வேகத்துடன் எழுந்து செல்ல,
அவன் பேசிய அனைத்தையும் கேட்டு திகைப்பில் இருந்தவர்களுக்கு அந்த நிமிடம் என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனையே இல்லை.
“கார்த்தி அப்பாவை மன்னிச்சுடுப்பா” என்று அவர் திக்கித் திணறி பேச, அவரின் பேச்சில் சுயத்திற்கு வந்தவர்கள்,
“கார்த்தி சொன்னதெல்லாம் உண்மையா?” என்று அவனுக்கு முன் தயாளனின் சட்டையைப் பிடித்திருந்தனர் சேதுவும், புவியரசுவும்.
“உ..உண்மைதான் மச்சான். ஆனா அது நான் தெரியாம செஞ்ச தப்பு. அதை சொல்லி நான் அகல்யாகிட்ட மன்னிப்பு கேட்டுட்டேன். அகல்யா சூசைட் பண்ணதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றார் தயாளன்.
“ஏய்..!” என்று அகன் மீண்டும் அவரை அடிக்க வர,
“நடந்த எல்லாத்தையும் சொல்லிடுறேன் கார்த்தி” என்றவர் அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்திருந்தார்.
“அகல்யாவை சந்தேகப்பட்டது என் தப்புத்தான் அத்தை. நான் எதையும் செய்யணும்னு செய்யலை. வருந்தி அவகிட்ட மன்னிப்பும் கேட்டுட்டேன். எங்க அந்த ரத்னா என்கிட்ட சொன்ன மாதிரி வெளிய சொல்லிடுவானோன்னு பயந்து தான், அகல்யாவுக்கு கெட்ட பேர் வந்துடக் கூடாதுன்னு தான் கார்த்தி மாடியில இருந்து விழுந்துட்டதா சொன்னேன். ஆனா அவ இப்படி பண்ணிட்டு போவான்னு நான் நினைக்கவே இல்லை அத்தை” என்றார் தயாளன் தளர்ந்து போனவராய்.
சந்தான லட்சுமி கேட்டதை ஜீரணிக்க முடியாமல் அதிர்ச்சியுடன் நிற்க,
“உங்களை அப்பான்னு சொல்லவே எனக்கு அசிங்கமா இருக்கு” என்றான் நகுலன் வேதனையுடன்.
“நகுலா”
“என் பேரை சொல்ற அருகதை கூட உங்களுக்கு இல்லை. கார்த்திக்கு மட்டுமில்ல, எனக்கும் அப்பான்னு ஒரு ஆள் இல்லவே இல்லை” என்றான் நகுலன்.
“நான் இந்த ஆளைக் கொல்லணும்னு சொல்லிட்டு இருக்கேன், நீ பேச்சு வார்த்தை நடத்திட்டு இருக்க? தள்ளு நகுலா” என்றவன் நகுலனை அசால்ட்டாய் தள்ளி விட்டு, மீண்டும் அவரைத் தாக்க முயற்சி செய்தான்.
“கார்த்தி வேண்டாம் விட்டுரு. இன்னும் ஒரு அடி விழுந்தாலும் அவர் தாங்க மாட்டார். எங்களுக்காக விட்ரு. எனக்காக இல்லைன்னாலும் இனியாவுக்காக விட்ரு” என்றார் ரேவதி கண்ணீருடன்.
“இத்தனை நாளும் அந்த ஒரு காரணத்துக்காகத் தான் அமைதியா இருந்தேங்க. ஆனா இனி விட முடியாது” என்றவனை இறுகப் பிடித்துக் கொண்டான் தாரா.
“அகன் கண்ட்ரோல் யுவர் செல்ப் பிளீஸ்” என்று என்று அவள் மன்றாடிப் பார்க்க, அவனோ அவன் நிலையிலேயே இல்லை. வேறு வழியின்றி அவனை ஓங்கி அறைந்திருந்தாள் தாரா.
“தாரா என்ன பண்ற?” என்று அனைவரும் கோபமாய் கேட்க,
“என் புருஷனை நான் அடிக்கிறேன். நீங்கல்லாம் யாருங்க கேட்குறதுக்கு? அப்பறம் அவரை எப்படித்தான் நான் கண்ட்ரோல் பண்றது?” என்றாள் கோபமாய்.
“அதுக்கு இப்படி அடிக்கனுமாம்மா” என்றார் தாமரை.
“ஏன் இதுக்கு முன்ன கூட அடிச்சிருக்கேன் சித்தி. அப்பல்லாம் அமைதியா தான இருந்திங்க. இப்ப என்ன திடீர்ன்னு? ஹோ, இப்ப உண்மை எல்லாம் தெரிஞ்சதால அகன் இப்போ பைத்தியம் இல்லைன்னு நினைக்கிறிங்க சரியா? அவரோட நிலைமையோ அதோட தீவிரமோ உங்க யாருக்கும் தெரியலை. உங்களைப் பொறுத்த வரைக்கும் உண்மை தெரியாத வரைக்கும் அவர் பைத்தியம். இப்போ பைத்தியம் இல்லை. ஆக, அவர் பாதிக்கப்பட்டது பெருசா தெரியலை” என்றாள்.
“இப்படி எல்லாம் நடந்திருக்கும்னு நாங்க கனவுல கூட நினைக்கலை தாரா. என் பேரன் எவ்வளவு கஷ்ட்டப்பட்டிருப்பான். என் பொண்ணு என்ன துடி துடிச்சிருப்பா. ஆனா இந்த ஆளை மாப்பிள்ளைன்னு இத்தனை நாள் நாங்க சீராட்டிக்கிட்டு இருந்திருக்கோம்” என்றார் லட்சுமி.
“உங்க பொண்ணு அப்போ செத்ததுல தப்பே இல்லை. அவங்கல்லாம் எதுக்கு பூமிக்கு பாரமா இருந்துகிட்டு?” என்றாள் வேண்டுமென்றே. வலியோடு வலியாக அகனின் அத்தனை காயத்தையும் கீறி விட்டு ஒரே மருந்தில் குணப்படுத்த வேண்டும் என்பது தான் அவளின் அப்போதைய நோக்கமாக இருந்தது. அதை அவன் சரியாக புரிந்து கொள்ள வேண்டுமே.
“தாரா என் அம்மாவைப் பத்தி பேசாத” என்றான் கோபமாய்.
“அப்படித்தான் பேசுவேன். ஏன் பேசக் கூடாது? உங்க அம்மா ஒன்னும் அவ்வளவு நல்லவங்க எல்லாம் இல்லை. சரியான சுயநலவாதி” என்றாள் கோபமாய்.
“ஏய்” என்று அவளின் கழுத்தை நெரித்தவனை கண் சிமிட்டாமல் நேர் பார்வையாக பார்த்திருந்தாள்.
அவள் பார்வையின் வீச்சைத் தாங்க முடியாமல் கைகளை தளர்த்தியிருந்தான் அகன்.
“என்ன கோபம் வருதா? புருஷன் குடிச்சுட்டு வந்து அடிக்கும் போதே திருப்பி அடிச்சிருக்கணும். இல்லையா போடான்னு சொல்லிட்டு கிளம்பி வந்திருக்கணும். தன்னோட சேர்த்து தன் பையனும் கொடுமையை அனுபவிக்கிறான்னு தெரிஞ்சும், பிறந்த வீட்ல புருஷன் கௌரவம் குறைஞ்சிடக் கூடாதுன்னு நினைச்ச உங்க அம்மாவை சுயநலவாதின்னு சொல்லாம என்னன்னு சொல்றது? அப்படி பிறந்த வீடும் ஒன்னும் கஷ்ட்டப்படுற வீடும் இல்லையே. எப்படி இருந்தாலும் புருஷன் இங்க ஜம்முன்னு இருக்கணும் அவங்களுக்கு. அத்தனை உண்மை தெரிஞ்சதுக்கு அப்பறமும் என்ன பண்ணாங்க உங்க அம்மா, உயிருக்கு போராடிகிட்டு இருந்த பையனோட மிச்ச உயிரையும் எடுக்குற மாதிரி ஒரு வேலையை பண்ணிட்டு போயிருக்காங்க. இதுல எந்த இடத்துலையும் உங்களைப் பத்தி உங்க அம்மாவுக்கு கவலை இருந்ததா தெரியலை.
உங்கம்மாவை சந்தேகப்பட்டு கொடுமைப் படுத்தின உங்கப்பா முதல் குற்றவாளின்னா, சந்தேகப்பட்ட அவரைக் கொல்லாம, உன்னோட வாழ்க்கையை நரகமாக்கி, தன்னோட உயிரை மாய்ச்சுகிட்ட உன் அம்மா இரண்டாவது குற்றவாளி. இதுல நீ அப்பான்னு அவர் மேல கொலைவெறில இருக்கவும் தேவையில்லை. அம்மான்னு உங்க அம்மா மேல பாசத்துல உருகவும் தேவையில்லை. என்னைப் பொறுத்தவரை அகன் கார்த்திகேயனுக்கு தாயும் சரியில்லை, தகப்பனும் சரியில்லை.
உயிரை மாய்ச்சுகிட்ட உன் அம்மா நிம்மதியா போய் சேர்ந்துட்டாங்க. ரெண்டாவது கல்யாணம் பண்ண உன் அப்பா இப்ப வரைக்கும் சந்தோஷமா இருக்கார். பாதிக்கப்பட்ட நீ இப்போ வரைக்கும் நரக வேதனையை அனுபவிச்சுக்கிட்டு இருக்க. ரெண்டு பேரும் சேர்ந்து உனக்கு மன நோயை பரிசா கொடுத்தது தான் மிச்சம்.
இப்ப வரைக்கும் இதோ இவருக்கு குற்ற உணர்ச்சிக்கு அர்த்தம் என்னன்னு தெரியுமான்னு கூடத் தெரியலை. மகனோட நிலைமைக்கு தான் தான் காரணமுன்னு தெரிஞ்சும், அதை குணப்படுத்த எந்த ஸ்டெப்பும் எடுத்ததா தெரியலை. அதை அதிகப் படுத்தத்தான் பார்த்திருக்காரு.
இந்த வீட்ல யாருக்குமே அகன் மேல அக்கறை எல்லாம் இல்லை. அப்படி இருந்திருந்தா அவர் முன்னாடி எதை செய்ய வேண்டாம்னு நான் சொன்னேனோ அதையே திரும்ப திரும்ப செய்திருக்க மாட்டிங்க” என்றாள் தெளிவாய் தீர்க்கமாய்.
“தாராம்மா..” என்றார் லட்சுமி. அகனோ அவள் பேசிய பேச்சில் பேச்சற்று நின்றிருந்தான்.
“இந்த வீட்டுக்கு முதன் முதல்ல நான் வந்தப்போ, உங்களை நினைச்சு பெருமைப் பட்டேன் பாட்டி. தன் பேரனோட கல்யாணத்தை எப்படி இப்படி வீட்லயே கிராண்டா பண்றாங்கன்னு. இப்போத்தான் தெரியுது உங்க பகட்டைக் காட்ட அதையெல்லாம் பண்ணியிருக்கிங்க. லட்சுமி தன்னோட மக இல்லைன்னாலும் பேரன் கல்யாணத்தை ஜாம்ஜாம்னு நடத்திட்டாங்கன்னு நாலு பேர் உங்களை சொல்லணும். அதனால தான வரதட்சணை நீங்க கொடுத்து அவருக்கு பொண்ணைப் பார்த்திருந்திங்க. அதாவது என் பேரன் பைத்தியம் தான். அதுக்கு நான் கொடுக்குற விலை இதுன்ற மாதிரி” என்றாள்.
“அப்படியெல்லாம் இல்லைடா” என்றார்.
“அது தான் உண்மை..! உங்க எல்லாருக்கும் உண்மையாவே அவர் மேல பாசம் இருந்திருந்தா அவரோட பிரச்சனை இத்தனை தூரம் வளர்ந்திருக்காது. நீங்க நினைச்சிருந்தா இதை எப்பவோ சரி பண்ணியிருக்கலாம். ஆனா பண்ணலை” என்றவள்,
“அவரே தன்னோட பிரச்சனையை சரி பண்ணிக்கனும்னு நினைக்காதப்போ உங்களை சொல்லி என்ன ஆகப் போகுது?” என்றாள் விரக்தியாய்.
“தாரா” என்றவன் அவள் கையைப் பிடிக்கப் போக,
“தொடாதிங்க அகன்? நீங்க எப்போ யாரை அடிப்பிங்க? யாரைக் கத்துவிங்கன்னு பார்த்துட்டே,யோசிச்சுட்டே என்னால இருக்க முடியாது” என்று மனதை கடினமாக்கிக் கொண்டவள்,
“உங்களுக்கு உங்க பிரச்சனையில இருந்து வெளி வர இஷ்ட்டம் இல்லை. எனக்கு இந்த பிரச்சனையோட இருக்குற அகனோட வாழ விருப்பமில்லை. சுயநலமா யோசிச்சு உங்களை இந்த நிலமைக்கு ஆளாக்கின உங்க அம்மாவோட நினைவு வேணுமா? இல்லை, உங்களை மட்டுமே யோசிக்கிற இந்த தாராவோட வாழ்ற வாழ்க்கை வேணுமா? நீங்க தான் முடிவு பண்ணனும். எதுவா இருந்தாலும் யோசிச்சு சொல்லுங்க. நான் அது வரைக்கும் எங்க வீட்ல இருக்கேன். எனக்கு இங்க இருக்குற யாரையும் பார்க்கவே பிடிக்கலை” என்றவள் அவனைத் திரும்பிப் பார்க்க ஏங்கிய மனதை அடக்கிக் கொண்டு அங்கிருந்து வெளியேறி விட்டாள்.
ஆம், அவன் மனதில் இருந்த அனைத்து கசடுகளையும் வெளியே எடுத்தவள் அவள் நினைவுகளை மட்டும் அவன் சிந்தை முழுவதும் பரப்பி, அவளை பற்றி மட்டுமே அவன் சிந்திக்கும் படி செய்து விட்டு சென்று விட்டாள்.
அந்த வீட்டில் இருந்த அனைவரும் அவள் செல்லும் திசையைத் தான் பார்த்திருந்தனர். அவளைத் தடுக்க யாருக்கும் தைரியமும் வரவில்லை. தெரிந்து கொண்ட உண்மைகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் வரவில்லை.