“என்னடா தாரா என்னாச்சு? ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு?” என்றபடி சந்தான லட்சுமி வர, சட்டென்று முகத்தை பழையபடி மாற்றிக் கொண்டாள் தாரா. அனைத்தையும் லட்சுமி மனதிற்குள் குறித்துக் கொண்டார்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லை பாட்டி” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, தயாளன் அவ்விடத்திற்கு வந்திருந்தார்.

“ஒண்ணுமில்லைன்னு உன் வாய் தான் சொல்லுது தாரா. ஆனா உன் முகம் ஏதோ இருக்குன்னு சொல்லுது” என்றார் லட்சுமி.

“அது பாட்டி” என்று தயங்கியவள், வருவது வரட்டும் என்று எண்ணியபடி,

“அகன் அம்மா எப்படி இறந்தாங்க பாட்டி?” என்றாள் கேள்வியாய். அவள் கேள்வி கேட்ட உடன் லட்சுமியின் முகம் கசங்கிப் போக, தயாளன் முகமோ பயத்தில் வெளுத்திருந்தது. அவருக்கு குப்பென்று வியர்க்க, படபடப்புடன் மயங்கப் போனவரை நொடியில் கண்டு கொண்டாள் தாரா.

“அங்கிள் என்னாச்சு உங்களுக்கு?” என்றவள் வேகமாய் அங்கிருந்த இருக்கையில் அமர வைத்தாள். தண்ணீரை எடுத்துக் கொடுக்க, அதைக் குடிக்கக் கூட முடியாமல் அவர் உடல் தள்ளாடியது. சில நிமிடங்களை விழுங்கிக் கொண்டே ஆசுவாசமானார்.

“ஆர் யு ஓகே அங்கிள்” என்றாள் தாரா யோசனையுடன்.

“ஓகே தாம்மா” என்றவரை லட்சுமி பாவமாய் பார்க்க,

“என்னாச்சு பாட்டி?” என்றாள் தாரா.

“அது எம் பொண்ணு அகல்யா மேல மாப்பிள்ளைக்கு ரொம்ப பிரியம் தாரா. அவ இறந்து போன சமயம் எங்களை விட தயாளன் தான் அதிகமா நொடிஞ்சு போனார். எல்லாரையும் விட அதிகமா பாதிக்கப்பட்டது கார்த்தி தான்” என்றார் லட்சுமி.

“அகல்யா ஆன்ட்டி எப்படி இறந்தாங்க பாட்டி? ஏதாவது ஹெல்த் இஷ்யூஸ் இருந்ததா?” என்றாள்.

“அது வந்து” என்று லட்சுமி வாயைத் திறக்கும் போதே “தாரா” என்று அகன் கோபமாய் கத்திய குரலில் வீட்டில் இருந்த அனைவரும் வெளியே வந்திருந்தனர்.

தயாளனைக் கண்ட அவன் முகமோ ரத்த சிவப்பில் இருக்க, கோபமாய் வந்தவன் தாராவை இழுத்துக் கொண்டு சென்றான் அறைக்கு.

“அகன் என்ன பண்றிங்க விடுங்க?” என்றவளின் குரல் எல்லாம் அவன் காதில் விழுந்தார் போலவே தெரியவில்லை.

அவளை அறைக்குள் தள்ளி அவன் கதவை அறைந்து சாற்ற,

“என்ன சித்தி? நைட்டு கத்துவான்னு சொன்னிங்க? அவன் என்னமோ காலையில கத்திட்டு இருக்கான்?” என்றாள் மகி.

“அது தான் எனக்கும் ஒன்னும் புரியலை மகி. இவனைச் சுத்தி இருக்குற எல்லாமே மர்மமாத்தான் இருக்குது” என்றார் வசந்தி.

“அகன் என்ன பண்றிங்க? இப்ப எதுக்கு இப்படி பிகேவ் பண்றிங்க? என்னதான் பிரச்சனை உங்களுக்கு?” என்றாள் தாரா கோபமாய்.

“உனக்கு தேவையில்லாத விஷயத்துல எல்லாம் ஏன் தலையிடுற? அந்த ஆள் கூட உனக்கென்ன பேச்சு?” என்றான் கோபமாய்.

“மரியாதையா பேசுங்க அகன். அவர் உங்களோட அப்பா. அது மட்டுமில்லாம நான் பாட்டி கிட்ட தான் பேசிட்டு இருந்தேன்” என்றாள் பொறுமையாக.

“யார்கிட்டயும் எதைப் பத்தியும் நீ பேசத் தேவையில்லை” என்றான் கோபமாய்.

அவனின் பேச்சில் பொறுமை இழந்தவள்,

“எதுவும் பேசக் கூடாது, எதுவும் கேட்கக் கூடாது. நீங்களும் எதுவும் சொல்ல மட்டிங்கன்னா, எப்படி தான் சரி பண்றது உங்க பிரச்சனையை?” என்றாள் கோபமாய்.

“நான் என்னோட பிரச்சனையை சரி பண்ணுன்னு உன்கிட்ட வந்து கேட்டேனா? சொல்லு கேட்டேனா?” என்றான்.

“சரி பண்ணனும்னு நினைக்கிறதுல என்ன தப்பிருக்கு அகன். இது இப்படியே போனா அது உங்க உயிருக்கே ஆபத்தா முடியும். தெரியுமா தெரியாதா?” என்றாள் கேள்வியாய்.

“அப்படி நடக்குறதுக்கு வாய்ப்பு ரொம்ப குறைவு தான். என்னைப் பார்த்துக்க எனக்குத் தெரியும். வீணா நீ கவலைப் பட வேண்டிய அவசியம் இல்லை தாரா” என்றான் வார்த்தைகளில் உறுதியுடன்.

“சோ உங்க சம்பந்தப்பட்ட எந்த விஷயத்துலையும் நான் தலையிடக் கூடாது அப்படித்தானே?” என்றாள் நிதானமாய்.

“நான் அப்படி சொல்லலை. இந்த ஒரு விஷயத்தை தவிர்த்து” என்றான்.

“அப்போ கடைசி வரைக்கும் இப்படி பைத்தியக்காரனாவே இருப்பிங்க” என்றவள் சட்டென்று நிதானிக்க,

“சோ, நான் பைத்தியம்னு நீயும் முடிவு பண்ணிட்ட இல்லையா?” என்றான் விரக்தியான குரலில்.

“நான் அந்த அர்த்ததுல சொல்லலை அகன்” என்றாள் இறங்கிய குரலில்.

“உன்னோட மனசுல நான் பைத்தியக்காரன்னு நீயும் நம்புற தாரா. அதனால தான் என்னை குணப்படுத்தனும்ங்கிற எண்ணம் உன் மனசுல ஆழமா பதிஞ்சுடுச்சு. அது தான்  உண்மை” என்றான் உணர்வற்ற குரலில்.

“ஒரு டாக்ட்டரா  நான் அப்படி நினைக்கிறது தப்பில்லையே அகன்” என்றாள் தாரா.

“டாக்டர்..டாக்டர்” என்று கத்தியவன்,

“ஒரு எம்பிபிஎஸ்ஸ முடிச்சுட்டு நீ பண்ற அக்கப் போரைத் தாங்க முடியலை. என்னமோ நீ மட்டும் தான் டாக்டர்ன்ற மாதிரி?” என்றவன் சட்டென்று வாயை மூடிக் கொண்டான்.

“நான் பண்ற எல்லாமே உங்களுக்கு அக்கப் போரா தெரியுதா அகன்?” என்றவளை நிதானமாய் பார்த்தவன்,

“உனக்குப் புரியுதா இல்லையா தாரா? நான் உன்கிட்ட மருந்து கேட்கலை. என் மருந்தே நீதான்னு சொல்றேன். அது ஏன் உனக்கு புரியவே மாட்டேங்குது. நிஜமாவே நீ டாக்டர் தானா? ஒரு பேஷண்ட்டுக்கு என்ன தேவைன்னு தெரியாதா உனக்கு? பர்ஸ்ட் அவங்களை பேஷன்ட் இல்லைன்னு நம்ப வைக்கணும். ஆனா நீ என்ன பண்ணிட்டு இருக்க, நானே மறந்தாலும் எனக்கு அதை ஞாபகப் படுத்திட்டே இருக்கே. அதாவது நீ பண்றது எல்லாம் “நீ பைத்தியம் தான்” அப்படின்னு ஸ்ட்ராங்கா சொல்ற மாதிரி பீல் ஆகுது எனக்கு” என்றான் எரிச்சல் கலந்த குரலில்.

“அகன்” என்றவள் கண் கலங்கி நிற்க, அதைப் பார்த்து மொத்தமும் வெறுத்துப் போனது அவனுக்கு.

“இதைத் தான் நான் வேணாம்னு சொல்றேன் தாரா. நேத்து வரைக்கும் தன்னோட உலகத்துல சந்தோஷமா இருந்த ஒரு பொண்ணை அவ இயல்புல இருந்து மாத்திட்டேனோன்னு  தோணுது எனக்கு? என்னால தான் நீ இப்படி பீல் பண்றன்னு தோணுது எனக்கு” என்றவன் எதுவும் பேசாமல் வெளியேறப் போக, சட்டென்று அவன் கைகளைப் பிடித்து தடுத்திருந்தாள் தாரா.

“என்ன?” என்றான் சலிப்பாய்.

“இப்ப என்ன? உங்களைப் பத்தி நான் எதுவும் கேட்கக் கூடாது. உங்களைப் பத்தி எதுவும் நான் தெரிஞ்சுக்கக் கூடாது. முக்கியமா உங்க பிரச்சனையை சரி பண்ணனும்னு நான் நினைக்கவே கூடாது. மொத்தத்துல உங்களுக்கு மருந்தும் வேணும், ஆனா நோய் குணமாகிடவும் கூடாது. யார் உங்களை என்ன பேசுனாலும் நான் பேசாம இருக்கணும்,அப்படித்தான?” என்றாள் தீவிரத்துடன்.

“பச்..தாரா நான் அந்த அர்த்ததுல சொல்ல வரலை. எல்லாம் ஒன்னு ரெண்டு வாரத்துக்குத்தானே. ஆஸ்திரேலியா போனதுக்கு அப்பறம் யாரும் எதுவும் பேசப் போறதில்லை” என்றான் அகன்.

“இவங்க வாய்க்கு பயந்து ஏன் தப்பிச்சு போகணும்னு நினைக்கிறிங்க?” என்றவள்,

“என்னால ஆஸ்திரேலியாவுக்கு எல்லாம் வர முடியாது அகன். நீங்க இனி சென்னைல இருக்கப் போறிங்கன்னு பாட்டி சொன்னாங்க. நானும் அதை நம்பித்தான் மேரேஜ் பண்ண கேட்டேன்” என்றாள் பொறுமையாக.

“சாரி தாரா என்னால இங்க இருக்கவே முடியாது. அதுக்கான வாய்ப்பே இல்லை” என்றான் அவனும் தீர்க்கமாக.

“ஒன்னும் பிரச்சனை இல்லை. நீங்க ஆஸ்திரேலியா போறதுன்னா தாராளமா போங்க. நான் என் அப்பா அம்மாவுக்கு ஒரே பொண்ணு. வயசான காலத்துல அவங்களை விட்டுட்டு அவ்வளவு தூரமெல்லாம் என்னால வர முடியாது. உங்களுக்கு டைம் கிடைக்கும் போது வந்துட்டு போங்க” என்றாள் பிடிவாதமாய்.

“அதுக்கு எதுக்கு நான் மேரேஜ் பண்ணனும்?” என்றான் எரிச்சல் கலந்த குரலில்.

“சாய்ஸ் இஸ் யுவர்ஸ் அகன். ஏன் அங்க மேய்க்கிற ஆட்டை இங்க மேய்க்க வேண்டியது தான?” என்றாள் அவளும் கடுப்பாய்.

‘விட்டா நான் ஆடு தான் மேய்கிறேன்னு கன்பார்ம் பண்ணிடுவா போலயே’ என்று எண்ணிக் கொண்டவன்,

“ஆடு கூட நான் ஆஸ்திரேலியா தான் மேய்ப்பேன். இங்க இந்தியன் ஆடு எல்லாம் அடங்குறதே இல்லை. குறிப்பா தமிழ்நாட்டு ஆட்டை இழுக்கவே முடியாதாம்” என்றான் நக்கலுடன்.

“ரொம்ப சந்தோசம், உங்களுக்கு அடங்குற ஆஸ்திரேலியா ஆட்டை அங்கயே மேய்ங்க. தமிழ்நாட்டு ஆடும் உங்களுக்கு செட்டாகாது, ஆளும் உங்களுக்கு செட்டாகாது” என்றாள் அவனை முறைத்தபடி.

“ஆடு செட்டாகாது சரி, ஆனா ஆளு தான் செட் ஆகிடுச்சே” என்றான் அவளை இழுத்தபடி.