மீண்டும் திரண்டு விட்ட கண்ணீரை திடத்துடன் சுண்டி விட்டவள், “சும்மா வாய் வார்த்தையா ஒன்னும் சொல்லலை, நிஜமா உங்களுக்கு ஒன்னுமில்ல, சரியாகிடுவீங்க” என்றாள்.

அவனது கண்கள் கலங்கி கலங்கி சரியாகின, பெரிய மூச்சுக்களுடன் தன்னை சமாளித்தான். அடைத்த தொண்டையை சரி செய்து கொண்டவன், “சாப்பிட்டியா?” எனக் கேட்டான்.

பேச முடியாமல் தலையசைத்தாள். ரவிக்கு சுத்தமாக நடக்க முடியவில்லை, கைகளிலும் பலம் குறைந்து விட்டது. கால் விரல்களை அவ்வப்போது அசைத்து பார்த்து, அசைத்து பார்த்து ‘சரியாகி விடுவேன்’ என தனக்கு தானே நம்பிக்கை சொல்லிக் கொண்டேதான் இருக்கிறான். ஆனாலும் மதியை கண்டதும் உணர்ச்சிவயப் படுவதை அவனால் கட்டுப் படுத்த முடியவில்லை.

“அப்பா ஷாக்ல இருக்கார் மதி” என்றான்.

“நான் பார்த்துக்கிறேன் மாமா” என வேகமாக சொன்னாள்.

அவளை ஏறிட்டவன், “அம்மா…” என்றான். அம்மா மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருப்பது அவனுக்கு தெரியாது என்றாலும் அவரின் மனநிலை மோசமாக இருக்கும் என்பதை அறிவான்.

“இந்த வியாதிக்கு சரியான ட்ரீட்மெண்ட் கொடுத்தா குணமாகிடுவாங்க மாமா” என்றவள் வேறொரு மருத்துவரிடம் ஆலோசனை செய்தது, இன்றே இவனை வேறு மருத்துவமனைக்கு மாற்றப் போவது என எல்லாம் சொன்னாள்.

“இங்க நல்லா பார்க்கலையா?” எனக் கேட்டான்.

“ஹாஸ்பிடல் ஃபெஸிலிட்டி கம்மி மாமா, நியூரோக்கு அங்கதான் பெஸ்ட்ன்னு சொன்னாங்க”

“யாரு?”

“நான் விசாரிச்சேன். அத்தை, அண்ணி ரெண்டு பேருக்கும் இதையெல்லாம் எக்ஸ்பிளைன் பண்ணினா தைரியம் ஆகிடுவாங்க” என்றாள்.

சோர்வும் சின்ன சிரிப்புமாக சரியென்றான். அவளை வெளியேறச் சொன்னார்கள். அவனது தோள் தொட்டு போய் வருவதாக தலையாட்டி விட்டு வெளியேறினாள்.

அதற்கு மேல் ரவியின் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்க பட்டதால் என்னை பார்க்க நீதான் விடவில்லை என மகனிடம் கோவித்துக் கொண்டார் சொர்ணம். மதியை அனுப்பி வைத்ததில் எதுவோ அவருக்கு புரிய, அதையும் மனதில் வைத்து மகனுடன் சேர்த்து மதியையும் சாடையாக திட்டிக் கொண்டிருந்தார்.

எரிச்சலடைந்த கணேசன் தன் மாமியாரை பார்த்தார். பாட்டியை கட்டாயப் படுத்தி அழைத்துக் கொண்டு கேண்டீன் பக்கமாக சென்று விட்டார் கோசலை.

ரவியின் டிஸ்சார்ஜ் நடைமுறைகளை கணேசனும் சீனுவும் பார்த்தார்கள். ஆம்புலன்ஸில் ரவியை ஏற்றுவதற்காக ஸ்ட்ரெச்சரில் அழைத்து வரப் பட்டான். அந்த சமயத்தில் பூர்ணிமாவை தவிர மற்றவர்கள் அவனை பார்த்தனர். பாட்டி கொஞ்சம் சத்தம் போட்டு அழுதார்.

“மிஸஸ் கோல்டம்மா நீயும் எதையாவது இழுத்து விட்டுக்காத” என கிண்டலாக சொன்னான்.

“நல்லாகி திரும்பி வாடா” என நா தழு தழுக்க சொன்னார் பாட்டி. அவரின் கையை பிடிக்க முயன்றான், அவனுக்கு முடியவில்லை. தானே அவனது கையை பற்றிக் கொண்டு, “என்னடா?” என்றார்.

“நான்  ஒன்னு சொன்னா கேட்பியா?” எனக் கேட்டான்.

“சொல்லுடா” என அழுது கொண்டேதான் சொன்னார்.

விழிகளால் மதியை சுட்டிக் காண்பித்தவன், “அவளை ஏதும் சொல்லக்கூடாது!” என கட்டளையாகவே சொன்னான்.

அவர் ஒன்றும் சொல்லாமல் இருக்க, “என் பேச்சு கேட்கலைன்னா பிச்சிடுவேன்” என்றான். திரும்பி நின்று அழுகையை உள் இழுத்துக் கொண்டாள் மதி.

“வீட்டுக்கு வாடா உன்னை பேசிக்கிறேன்” என்றார் பாட்டி.

“ம்ம்… வந்தப்புறமும் என்கிட்ட பேசு, அவகிட்ட இல்லை. அழுவாத, ஒழுங்கா சாப்டு” என்றான்.

அதற்கு மேல் சொர்ணம் பாட்டியை அமைதியாக இருக்க வைக்க வேறேதும் தேவையாக இருக்கவில்லை. இங்கே பூர்ணிமாவுடன் சீனுவும் ரிதியும் இருப்பதாக முடிவானது. மதியும் கணேசனும் ரவியுடன் சென்றனர்.

இப்படியாக நரம்பியல் துறையில் அனுபவம் வாய்ந்த மருத்துவரின் கண்காணிப்பின் கீழ் வந்து சேர்ந்தான் ரவி. உடனடியாக அவனுக்கு உயர்தர சிகிச்சை ஆரம்பிக்கப் பட்டது.

பாரதியும் ஜோதியும் வந்தனர். மதியை காணவே பாரதிக்கு மனது பிசைந்தது. “நல்லாகி வந்திடுவான் தைரியமா இரு” என்றாள். கண்ணீருடன் தலையாட்டிக் கொண்டாள் தண்மதி.

ஜோதி குழப்பமாக பார்க்க, பிறகு சொல்வதாக பார்வையால் சொன்னாள் பாரதி.

கண் விழித்து விட்ட பூர்ணிமாவும் மகனை உடனே பார்க்க வேண்டும் என ஒரே அடம். காலையில் டிஸ்சார்ஜ் ஆன பின்புதான் விடுவோம் என சொல்லி விட்டனர். மதிதான் அலைபேசி வாயிலாக அவரிடம் பேசி அமைதியாக இருக்க செய்தாள்.

 ரவியை ஒரு முறை நேரில் பார்த்து விட்டு கனத்த மனதுடன்தான் அவனது மூத்த சகோதரிகள் அங்கிருந்து கிளம்பினார்கள்.

மதியும் கணேசனும் அங்கேயே இருந்து விட்டனர். மறுநாள் மகனை நேரில் பார்த்து அவனிடம் பேசிய பிறகுதான் பூர்ணிமா ஓரளவு சமாதானம் கொண்டார்.

இது அதிர்ச்சியான விஷயம் என்றாலும் அதற்காக மற்றவர்களின் ஓட்டத்தை நிறுத்த முடியாதே, பாரதியால் விசாகனை வைத்துக்கொண்டு சமாளிக்க முடியவில்லை. எதுவென்றாலும் சொல்லுங்கள் என சீனுவிடம் சொல்லி கிளம்பி விட்டார் கணேசன்.

வேலை நிமித்தமாக வெளி மாநிலம் சென்றிருந்த ஜோதியின் கணவர் கைப்பேசியில் விசாரித்து அறிந்து கொண்டார்.

தன் வீடு இந்த மருத்துவமனையிலிருந்து நல்ல தூரம் என்பதால் அங்கேயே தனியாக அறை எடுத்து விட்டார் சீனு. மதி ஒரு வாரத்திற்கு விடுப்பு எடுத்துக் கொண்டாள்.

ரிதி இங்கிருக்க வேண்டாம் என வீட்டுக்கு அனுப்பி விட்டனர், ஆனாலும் தினமும்  காலை மருத்துவமனை வந்து விடுபவள் மாலையில்தான் வீட்டுக்கு புறப்படுவாள்.

ரவியின் அப்பா, அம்மா, தங்கை அல்லது மதி யாராவது ஒருவர் ஐ சி யூ வின் வெளியில் உட்கார்ந்து கொள்வார்கள்.

ரவிக்கு  நோயின் தாக்கம் குறைவதாக இல்லை. அதற்கான சிகிச்சையில் ஆளும் மிகவும் நலிந்து போய் விட்டான், அவனது நடக்கும் திறன் இன்னும் மோசமாகி விட்டது.

அந்த நாட்கள் அவர்களின் வாழ்க்கையில் மிகவும் கொடிய நாட்கள் எனதான் சொல்ல வேண்டும். என்ன சாப்பிட்டோம், எப்போது தூங்கினோம், உலகத்தில் என்ன நடக்கிறது என எதையும் கருத்தில் கொள்ளாமல் ரவியின் நலனை மட்டுமே எதிர்நோக்கி நொடிகளை கடத்தினார்கள்.

 நோயின் தாக்குதல் மட்டுப் பட ஆரம்பித்திருக்கிறது என நேர்மறையாக மருத்துவர் சொல்லவே பத்து நாட்களாகி விட்டன.

ரிதியின் திருமண வேலைகள் எல்லாம் கிடப்பில் போடப் பட்டு விட்டன. அண்ணன் குணமடைந்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என உறுதியாக சொல்லி விட்டாள் ரிதி. ஸ்ரீதரும் அவனது வீட்டினரும் அப்போது ஒன்றும் சொல்லவில்லை, சீனுவும் பிறகு பேசலாம் என இருந்து விட்டார்.

குறைந்த பட்சம் ரவி அறைக்கு மாற்றப் பட்டால்தான் வேறு எதைப் பற்றியுமே அவரால் யோசிக்க இயலும்.

இந்த நாட்களில் தண்மதி இங்கு இருந்தது சீனுவுக்கு எவ்வளவோ உதவியாக இருந்தது. பூர்ணிமா, ரிதி இருவருக்கும் சற்றும் குறையாத அளவுக்கு வேதனையும் பயமும் மதிக்கும் கண்டிப்பாக இருக்கும் என்பது அவருக்கு தெரியும்.

இருந்த போதிலும் ‘எந்த கெட்ட பழக்கமும் இல்லாத யாருக்கும் கெடுதல் நினைக்காத என் மகனுக்கு ஏன் இந்த நிலைமை?’ என புலம்பலும் அழுகையுமாக இருக்கும் பூர்ணிமாவை மதியில்லாமல் அவரால் சமாளித்திருக்கவே முடியாது.

மதியை விட இரண்டு வயது பெரியவள் என்ற போதிலும் ரிதியால் அவளை போல உணர்வுகளை கட்டுக்குள் வைக்க முடியவில்லை, அவள் மனதளவில் மோசமாக உடைந்திருப்பது வெளிப்படையாக தெரிந்தது.

அவர்களுக்கு தைரியம் சொல்லி, நேரத்துக்கு சாப்பிட வைத்து, மற்றைய மருத்துவமனை விவகாரங்களிலும் சீனுவுக்கு உதவி என உறுதுணையாக நின்றவள் மதிதான்.

அவ்வப்போது கணேசன் வந்து பார்த்து செல்வார். விஷயம் தெரிந்ததுமே இதை மதி எப்படி தாங்குவாள் எனதான் அவருக்கு பயமாக இருந்தது. ஆனால் மற்றவரை சார்ந்து இருந்த பயந்த சுபாவமுடைய பெண், கடினமானதொரு தருணத்தை இத்தனை மனவலிமையோடு எதிர்கொள்கிறாளே என அவருக்கு ஆச்சர்யமாகத்தான் இருந்தது.