சொர்ணம் பாட்டியை காணவுமே தண்மதிக்கு கலக்கம் ஏற்பட்டது என்னவோ உண்மைதான், ஆனால் ஓரடி கூட பின்னால் நகர்ந்து விடாமல் நிமிர்ந்து பாட்டியை பார்த்தாள்.
“என்ன… எதுக்கு இங்க வந்திருக்க?” என அலட்சியமும் எரிச்சலுமாக கேட்டார் பாட்டி.
“லாஸ்ட் டைம் இங்க வந்தப்போ அவங்க செயின் விட்டுட்டு போயிட்டாங்க அப்பயி, எடுத்திட்டு போக வந்திருக்காங்க” என அவசரமாக பொய் ஒன்றை சொல்லிக் கொண்டே வந்த ரிதி, “உள்ள வாங்க” என மதியை அழைத்தாள்.
“தங்கமா?” என பாட்டி கேட்க, “ஆமாம், இல்லைனா இவ்ளோ தூரம் தேடி வருவாங்களா?” என்றாள் ரிதி.
தன் மனைவி, பிள்ளைகள் என்று பாராமல் கணேசன்தான் மதிக்கு தங்கம் தங்கமாக வாங்கிக் குவிப்பது போலவும் ஓசியில் வருவதால் கவனம் இல்லாமல் காணாடித்து விட்டாள் என்பது போலவும் சொல்லிக் கொண்டே கோசலையின் வீட்டுக்கு சென்று விட்டார் பாட்டி.
மதியின் வருத்தம் படர்ந்த முகத்தை கவலையாக பார்த்த ரிதி, “மனசுல வச்சுக்காதீங்க அண்ணி, உள்ள வாங்க” என்றாள்.
ரவியின் நலனை பற்றி கேட்டுக் கொண்டேதான் உள்ளே வந்தாள் மதி. பின்னர்தான் அவன் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்த விவரம் அவளுக்கு தெரிய வந்தது.
கேட்ட செய்தியில் மதியின் முகம் வெளிறிப் போயிருந்தது.
எந்த மருத்துவமனை என கேட்டறிந்து கொண்ட மதி, அங்கே புறப்பட ஆயுத்தமானாள். தானும் உடன் வருவதாக சொன்னாள் ரிதி.
அதற்குள் பர பரப்புடன் இங்கு ஓடி வந்த கோசலை, “ரவிக்கு ரொம்ப சீரியஸ் கண்டிஷனாம், பூர்ணிமாவுக்கும் முடியாம போய் அட்மிட் பண்ணிருக்காங்களாம், இப்பதான் உன் அப்பா கால் பண்ணினார்” என்றார்.
மற்ற இரு இளம் பெண்களுக்கும் உடலும் உள்ளமும் வெட வெடக்க ஆரம்பித்து விட்டது. கோசலைக்கும் என்ன செய்வதென தெரியவில்லை. பக்கத்து வீட்டில் சொர்ணம் பாட்டி பெருங்குரல் எடுத்து அழுவது காதில் விழுந்தது.
கால் மணி நேரம் ஒன்றும் புரியாத நிலைதான். முகத்தை அழுந்த துடைத்து ஸ்தம்பித்திருந்த மூளையை உயிர்ப்பித்துக் கொண்டாள் தண்மதி. உடனடியாக ரவியின் அப்பாவை தொடர்பு கொள்ளுமாறு சொன்னாள்.
கோசலையே சீனுவின் எண்ணுக்கு அழைத்து மதியிடம் கொடுத்தார்.
தான் யார் என்பதை சொன்ன தண்மதி, “என்னாச்சுன்னு கொஞ்சம் விவரமா சொல்றீங்களா? இங்க எல்லாரும் அழறாங்க, யாருக்கும் ஒன்னும் புரியலை” என அழுகையை அடக்கிக் கொண்ட குரலில் கேட்டாள்.
சீனுவும் ஓரளவு தன்னை சமாளித்து நிலவரத்தை சொன்னார். கேட்க கேட்க அவளுக்கு கண்ணீர் வழிந்ததுதான், ஆனால் சத்தமிடவில்லை. மிச்ச அழுகையை தொண்டை வழியே விழுங்கிக் கொண்டவள், “டாக்டர்ஸ் அப்படித்தான் பயமுறுத்துற மாதிரி சொல்லுவாங்க, மாமா நல்லாகிடுவாங்க” என்றாள்.
அந்த வார்த்தையை யாராவது சொல்ல மாட்டார்களா என காத்திருந்த சீனு, “ஆமாம்மா எம்பையனுக்கு ஏதும் ஆகாது” என சற்றே உறுதி படர சொன்னார்.
பூர்ணிமா பற்றியும் கேட்டறிந்து கொண்டவள், சற்று நேரத்தில் அங்கு வருவதாக சொல்லி வைத்தாள்.
அழும் ரிதியின் கைப் பிடித்து எழுப்பி விட்டவள், “நாமெல்லாம் இப்படி அழுதோம்னு தெரிஞ்சா மாமா கோச்சுப்பாங்க, நீங்க போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வாங்க, ஹாஸ்பிடல் போலாம்” என்றாள்.
மதி அவளை தைரியமாக காட்டிக் கொண்டிருக்க, ரிதியும் சற்று திடப் பட்டாள். கோசலையும் அதிர்ச்சியை விலக்கி நடப்புக்கு வந்தார்.
பாட்டியையும் சேர்த்து நான்கு பேரும் அங்கிருந்து புறப்பட்டனர். செல்லும் வழியில் சித்தப்பாவுக்கு தகவல் சொன்னாள் மதி.
செய்வதறியாது தனியாக நின்றிருந்த சீனு இவர்களை காணவும் ஓடி வந்தார். பூர்ணிமா இன்னுமே மயக்கத்தில்தான் இருப்பதாக சொன்னார். மதி போய் என்னவென விசாரித்தாள். இரத்த அழுத்தம் உயர்ந்ததால் மருத்துவரின் அறிவுரைப் படி தூக்க மருந்து செலுத்தப் பட்டிருப்பதாக சொன்னார்கள்.
“அத்தை எந்திரிக்க ஈவ்னிங் ஆகிடும், அவங்களுக்கு பயப்படற மாதிரி இல்லைன்னுதான் சொல்றாங்க” என மதி சொல்லவும், உண்மைதானே என இரண்டு மூன்று முறை கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டார் சீனு.
பூர்ணிமா எமர்ஜென்சி வார்டில் இருக்க, அட்மிஷன் போட்டு அறைக்கு மாற்ற வேண்டும் என்றனர். மதிதான் அதற்கான நடைமுறைகளை பார்த்தாள்.
பூர்ணிமா அறைக்கு மாற்றப் படவும், அனைவரும் அங்கே வந்திருந்தனர். ஐ சி யூ உள்ளே செல்ல மாலைதான் அனுமதி வழங்கப்படும். ரவிக்கு ஏதோ மருந்துகள் செலுத்த பட்டு கொண்டிருக்கிறது, சுய நினைவோடுதான் இருக்கிறார் என மட்டும் செவிலியர்கள் சொன்னார்கள்.
தண்மதி தன்னுடைய நண்பர்கள் வட்டாரம் மூலமாக நரம்பியல் துறையில் அனுபவசாலியான மருத்துவர் ஒருவரிடம் அப்போதே பேசினாள். இங்கு என்ன சொல்லப் பட்டதோ அதையேதான் அவரும் சொன்னார். இருப்பினும் நம்பிக்கை தரும் விதமாக இந்த வகை நோயில் இறப்பு விகிதம் குறைவுதான் என்றார். காலத்தோடு கவனிக்க பட்டிருந்தால் இந்தளவு தீவிரமாகியிருக்காது என்றாலும் இப்போதும் குணமாகாது என்றில்லை என நேர்மறையாகவே பேசினார்.
ரவியின் அனைத்து ரிப்போர்ட்களையும் இப்போதைய நிலை பற்றிய குறிப்பையும் அனுப்பி வைத்தால் மேலும் விவரங்கள் சொல்வதாக சொன்னார். அதற்காக மெனெக்கெட்டாள் மதி.
மருத்துவமனை நிர்வாகம் ஏன் எதற்கு என ஒரே கேள்விகள், அங்கு போ, இவரை பார் என அழைக்கழிக்க வேறு செய்தார்கள். ஒன்றும் சாப்பிடாமல் சோர்ந்து போய் விட்டாள் மதி. பார்த்திருந்த சீனு பழச்சாறு வாங்கி வந்து அவளுக்கு கொடுத்தார். கணேசனும் வந்து சேர தெம்பாக உணர்ந்தாள் அவள்.
எந்த மருத்துவர் ரவியை பார்க்கிறாரோ அவரது அறைக்கே சித்தப்பாவையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டாள். அவள் பேசியிருந்த மருத்துவரிடம் அவரே பேசினார். முன்பு எப்போதோ அவர்களுக்குள் பழக்கம் போலும். நல்ல விதமாகவே பேசினார்.
நரம்பியல் சிகிச்சையில் சிறப்பு வாய்ந்த மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் அவர், ரவியை தன்னிடம் அழைத்து வரும் படி தண்மதியிடம் சொல்லியிருந்தார். இந்த மருத்துவரும் ஈகோ பாராமல் ரவியின் டிஸ்சார்ஜ்க்கு சம்மதித்து, நடைமுறைகளை சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார்.
ஐ சி யூ வில் பார்வையாளர் நேரம் வரவும் முதலில் கணேசன் போய் மகனை பார்த்து வந்தார். தீவிரமான நிலைதான் என்றாலும் பேசவெல்லாம் செய்தான் ரவி, அதில் அவருக்கு ஓரளவு நிம்மதி. வெளியில் வந்தவர் அவராகவே தண்மதியை போய் பார்த்து வரச் சொன்னார்.
“என்னடா அவ எதுக்கு? நான் அவனை பார்க்கணும்” என குழப்பமும் கோவமுமாக சொன்னார் சொர்ணம்.
“இரும்மா நீ அப்புறம் போலாம், விஷயம் என்னன்னு நான் உனக்கு சொல்றேன், இப்ப அவன் மதியை பார்த்து பேசினா அவனுக்கும் தைரியமா இருக்கும்” என்ற சீனு, அதற்கு மேல் அம்மாவின் பேச்சுக்களை காதில் வாங்காமல் மதியை உள்ளே அனுப்பி வைத்து விட்டார்.
அவன் முன் அழுது விடக்கூடாது என்ற உறுதியுடன்தான் வந்தாள் மதி, ஆனால் முடியவில்லை. அவனது கையை பற்றிக் கொண்டு உதடுகளை அழுத்திக் கொண்டு கன்னங்களும் மூக்கும் துடிக்க மௌனமாக அழுதாள்.
ரவியே மருத்துவரிடம் தனது நிலை பற்றி கேட்டறிந்திருந்தான். நோயின் தீவிரம் அவனுக்கும் தெரிந்துதான் இருந்தது.
“மதி…” என கண்டிப்புடன் அழைத்தான்.
“உங்களுக்கு ஒன்னுமில்ல” என்றாள். வருத்தமான சிரிப்புடன் தலையாட்டிக் கொண்டான்.