பெருங்காதல் கூடுதடி! – 6

 

 

நதிக்கரைகளும், நதியோர மரங்களும்

வற்றிய நதி எங்கே என்று தேடாமல் போகுமா???

மேகக்கூட்டங்களும், நட்சத்திரங்களும்

தேய்ந்த நிலவு எங்கே என்று தேடாமல் போகுமா???

பொன்ராமிற்கு மகன் பேசியதிலிருந்து பெரும் மனவுளைச்சல்.

பெண்களை மதிக்கத் தெரியாதவர் நீங்கள், உங்கள் புத்தி கீழ்த்தரமானது, அம்மாவை வேலைக்காரியைப் போல நடத்துகிறீர்கள், இத்தனை சம்பாதித்தும் உங்களால் அம்மாவை சந்தோஷமாக வைத்திருக்க முடிந்ததா என்றெல்லாம் மகன் வீசிய கேள்வி அம்புகள் குறி தவறாமல் அவரை தாக்கி வெகுவாக நிலைகுலையச் செய்திருந்தது.

தான் என்ன வாழ்க்கை வாழ்ந்திருக்கிறோம் என்று யோசிக்கும் நிலைக்கு மகன் தள்ளி விட்டிருந்தான்.

மகனிடம் பேசிய கையோடு அலுவலகத்திலிருந்து வெளியேறியவர் பாரில் தான் தஞ்சம் புகுந்திருந்தார். குடி, குடி, குடி! போதையின் ஒவ்வொரு நிலையிலும் சாட்டை அடியாய் மகனின் கேள்விகள் நினைவு வந்து அவரை வதைத்தது.

அன்று இரவு வீட்டிற்கும் தாமதமாகத்தான் வந்தார். முழு போதையில் வந்தவரைக் கண்டதும் பகவதி அதிர்ந்து போனார். திடீரென்று ஏன் இப்படி என்று அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை. கணவர் குடிக்கு அடிமையானவர் என்று சொல்லும் நிலையில் எல்லாம் ஒரு நாளும் இருந்ததில்லை. குடியின் அளவு அவர் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். இன்று இவ்வளவு குடித்திருக்கிறாரே என இயல்பாய் பதறியது.

இன்று என்னவெல்லாம் பேச்சு கேட்க வேண்டியிருக்குமோ என்றொரு நடுக்கம் உள்ளுக்குள் எழுவதையும் தடுக்க முடியவில்லை.

பொன்ராம் தடுமாறியபடி உள்ளே வந்து கொண்டிருக்க, பகவதி வேகமாகச் சென்று கணவரைத் தாங்கி பிடித்துக் கொண்டார்.

“நீ இன்னும் தூங்கலையா?” குழறலான குரலில் மனைவியிடம் கேட்டார். எந்த ஏச்சுக்களும் இல்லாத வெகு சாதாரண கேள்வி. ஆனால், அவரின் துணைவியோ அதை உணரும் நிலையில் இல்லை.

கணவர் வரும்வரை காத்திருக்காவிட்டால் என்னவெல்லாம் பேச்சு கேட்க வேண்டியிருக்கும் என்று அவர் அறியாததா? “நீங்க வரட்டுமேன்னு தாங்க வெயிட் பண்ணினேன்…” என்று சொன்னபடி அவரை உணவுக்கூடம் நோக்கி நடக்க வைத்தார்.

“எனக்கு சாப்பாடு வேணாம் பாகி… ஒரு மாதிரி இருக்கு…” என்றார் உளறலாக.

கணவரின் பாகி என்ற அழைப்பு பகவதியை கொஞ்சம் தடுமாற வைத்தது. இது போல கணவன் அழைத்தது எல்லாம் திருமணமான ஆரம்ப காலகட்டத்தில் தான்! அதன்பிறகு இதுபோன்று அழைப்பே இருந்ததில்லை. எப்பொழுதும் வசவு சொற்கள் தான்!

சிறு அதிர்வுடன் கணவரைத் திரும்பிப் பார்த்தவர், எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டு, “கொஞ்சம் சாப்பிட்டுக்கங்க… வெறும் வயித்தோட தூங்கக் கூடாது…” என்று மட்டும் சொல்ல,

“ம்ப்ச் எதுவும் வேணாம்… எனக்கு மனசே சரியில்லை. நான் தூங்கணும்” என்று அடமாக சொல்ல, பகவதிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கணவர் இருக்கும் நிலையில் கட்டாயப்படுத்தியும் உணவு தர முடியும் போலவும் தெரியவில்லை.

வேறு வழியின்றி படுக்கைக்கு அழைத்துச் செல்ல, பொன்ராம் அப்படியே சரிந்து கொண்டார்.

கணவரின் நடவடிக்கைகள் அந்த பேரிளம் பெண்ணிற்கு வினோதமாக இருந்தது. அவரையே சில நொடிகள் ஊன்றிப் பார்த்திருந்து விட்டு ஒரு பெருமூச்சுடன் உறங்கச் சென்றார்.

நந்தியல் செல்ல வேண்டும் என்று கணவர் வீட்டிற்கு வந்தபிறகு தான் கேட்க நினைத்திருந்தார். அவரோ இப்பொழுது கேட்கும் நிலையில் இல்லை. இனி காலையில் பயணத்தின் போது தான் சொல்ல முடியும்.

ஒருவேளை மறுத்து விடுவாரோ என்று தோன்றிய கணமே, அவர் ஏன் மறுக்கப் போகிறார், தொல்லை விட்டது என்று இருந்து கொள்வார் என எண்ணிக் கொண்டு மனபாரத்துடன் படுத்திருந்தவருக்கு, கணவனின் பாகி என்ற அழைப்பு ஒரு மாதிரி மனதைத் தொல்லை செய்து கொண்டே இருந்தது.

‘ஏன் திடீரென்று இவ்வாறு அழைக்க வேண்டும்?’ என புரியாமல் மனம் அலைபாய கணவரைப் பக்கவாட்டாகத் திரும்பிப் பார்த்தவர், அவரின் புறம் திரும்பி அவரை பார்த்தபடியே உறங்கிப் போயிருந்தார்.

மறுநாள் அதிகாலையில் தன் அறையிலிருந்து இறங்கி வந்த சித்தார்த் தாயிடம், “ரெடியா இருக்கீங்களாம்மா…” என்று கேட்க,

“பேக்கிங் எல்லாம் பண்ணிட்டேன் கண்ணா. இன்னும்…” என தயக்கமாக இழுக்க, புருவம் சுருக்கியவன், “இன்னும் என்ன?” என்றான் யோசனையாக.

“இன்னும் உங்க அப்பாகிட்ட தான்பா சொல்லலை…” என்று சொல்ல, அவனுக்கு காரணம் புரியவில்லை. நேற்று மதியம் எடுத்த முடிவு. கைப்பேசியில் அழைத்து சொல்லியிருக்கலாம். இல்லை இரவு வீட்டிற்கு வந்ததும் நேரில் சொல்லியிருக்கலாம். இன்னும் சொல்லவில்லை என்றால்? அவனுக்கு விளங்கவில்லை.

அன்னையை கேள்வியாக நோக்க, அவருக்கு இதை எப்படி மகனிடம் சொல்வது என்கிற தடுமாற்றம். என்னவோ இந்த பாழும் மனம் இன்னமும் கணவனை விட்டுக்கொடுக்க முடியாமல் தவித்தது. அது பெற்ற மகனிடம் என்றாலும் கூட!

அவரின் தடுமாற்றம் பார்த்து, “ம்ப்ச்… சரி விடுங்க நானே சொல்லிக்கிறேன்” என்று முடித்து விட்டான்.

பொன்ராம் தலைவலியுடனும், கண் எரிச்சலுடனும், பசியுடனும் எழுந்து அறையை விட்டு வெளியில் வரும்பொழுது பயணப்பை சகிதம் நின்றிருந்த மனைவியைக் கண்டு யோசனையானார். மனைவியை ஏறிட, “மகனோட…” என அவர் தடுமாறியபடி தொடங்கியபோதே, “அம்மாவும் என்கூட வராங்கப்பா…” என்று முடித்திருந்தான் மைந்தன்.

என்னவோ மகன் தன்னை பழி வாங்க இப்படி செய்வது போல பொன்ராமிற்குத் தோன்றிட, அவனை நன்கு முறைத்தார். தந்தையின் எண்ணவோட்டம் அவனுக்கும் புரிந்தது. ஆனால், இதில் அவன் செய்ய என்ன இருக்கிறது? அமைதியாக அவர் பார்வையைத் தவிர்த்து நின்று கொண்டான்.

பொன்ராம் சொல்ல முடியாத தவிப்புடனும் ஏக்கத்துடனும் மனையாளைத் திரும்பிப் பார்த்தார்.

அவரின் துணைவியோ கணவர் என்ன பதில் சொல்வார் என்று பதற்றமும் பயமுமாகக் கையை பிசைந்தபடி நின்றிருக்க, அந்த தோற்றமே அவரின் மனதைப் பிசைந்தது.

இன்னது வேண்டும் என்று வாய் திறந்து கேட்கும் உரிமை கூட அவளுக்கு இத்தனை ஆண்டுகளாகத் தரவில்லையோ என்று எண்ணுகையிலேயே மனதில் சுரீர் என்ற வலி. கண்களை அழுந்த மூடி திறந்து கொண்டவர், “பார்த்து போயிட்டு வா…” என சுரத்தே இல்லாத குரலில் மனைவியைப் பார்த்துச் சொன்னார்.

மனைவியின் ஏக்கத்திற்காகச் சொல்லி விட்டாலும் மனதில் பெரும் வலி. தன்னை பிரிந்து இருக்க மனைவி துணிந்து விட்டாள் என்பது அவர் வாழ்வில் வாங்கிய பெரிய அடி. கடைசியில் மகனின் சாபம் தான் பலிக்கப் போகிறது. அவளைப் பிரிந்த பிறகு தான் கஷ்டப்பட நேரிடும் என்று ஆணித்தரமாகச் சொன்னானே! அது இனி நடக்கப்போகிறது என யோசிக்கையிலேயே பைத்தியம் பிடிப்பது போல இருந்தது.

தன்னிடம் மட்டுமே இருக்கும் என்று தோன்றும் போது தெரியாத பொருளின் அருமை, தன்னை விட்டுப் பிரிந்து போய்விடும் என்று தெரிந்த பிறகு பல மடங்காகத் தெரியுமே! அது போன்ற அவஸ்தை தான் பொன்ராமிற்கும்.

“பாகி…” என்ற அழைப்பு தொண்டைக்குழி வரை வந்து நின்றது. “என்னை விட்டுப் போகாதே…” என்று கர்வம் விட்டுக் கேட்க வேண்டும் போல இருந்தது. ஆனால், எதுவும் முடியவில்லை.

இரண்டு நாட்கள் முன்பு கூட, “கொஞ்ச நாளைக்கு உங்க அண்ணன் வீட்டுக்கோ இல்லை கோயில், குளம்ன்னு எங்கேயாவதோ போயிட்டு வர வேண்டியது தானே… நானாச்சும் கொஞ்ச நாள் நிம்மதியா இருப்பேன்…” என்று மனைவியிடம் கடினமாகப் பேசிய சொற்கள் தான் நினைவிற்கு வந்தது.

இந்த வீட்டின் மனுஷியை வேண்டாத விருந்தாளியைப் போலத்தானே நடத்தியிருக்கிறார்?

அப்படி பேசி அவளை நோகடித்து விட்டு, இப்பொழுது அவள் கிளம்பி நிற்கையில் தடுத்து என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டது மனசாட்சி.

வேறு வழியின்றி மகனுக்கும் மனைவிக்கும் விடை கொடுத்தார். அவரின் கர்வம் மொத்தமும் அப்பொழுதே சீட்டுக்கட்டு மாளிகை போன்று சரிந்து விழுந்திருந்தது.

பகவதியும் சித்தார்த்தும் சென்னை விமான நிலையத்திலிருந்து நந்தியல் விமான நிலையம் வந்து இறங்கியபோதே அவர்களுக்கான வாகனம் காத்திருந்தது.

தங்களை அழைத்துப் போக வந்திருக்கும் அந்த முதிய மனிதரைப் பார்த்ததும் சித்தார்த்துக்கு இரக்கம் வந்தது. எழுபதைக் கடந்த வயதிலும் ஓய்வின்றி உழைக்கிறாரே என ஆச்சரியமாக எண்ணினான்.

“பாக உன்னார?” என்று தங்களிடம் நீண்ட காலமாக வேலை பார்க்கும் ராஜூலுவிடம் நலம் விசாரித்தபடி வாகனத்தில் ஏறிக்கொண்டவனிடம் பதிலுக்கு அவரும் நலம் விசாரித்தார்.

பகவதி அம்மாவிடமும், “நமஸ்காரம் அம்மகாரு… பாக உன்னாரா?” என ராஜூலு விசாரிக்க, மொழி புரியாததால் நலம் விசாரிப்பதாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்தில் சின்ன சிரிப்புடன் தலையசைத்தார்.

ஊரைச் சுற்றி தொழில் பார்க்கும் தந்தை, மகன் இருவருக்கும் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, மராத்தி எல்லாம் அத்துப்படி. பகவதி அம்மாவிற்கோ தமிழ் தவிர எதுவும் தெரியாது.

அவரின் நிலை புரிந்து கொண்ட ராஜூலுவோ தெலுங்கில் சித்தார்த்திடம் எதுவோ சொல்ல, அவன் சிறு புன்னகையுடன் தலையசைத்தவன்… அன்னையின் புறம் திரும்பி, “அம்மா நம்ம தோப்புல தமிழ் பேமிலி ஒன்னும் மூணு வருஷமா தங்கி இருக்காங்களாம். அதனால உங்களுக்கு கம்பெனிக்கு ஆள் இருக்கும் கவலை படாதீங்கன்னு சொல்லறாரு…” என்றான்.

மகன் சொன்ன செய்தியைக் காட்டிலும் அவன் தன் இறுக்கம் தளர்ந்து புன்னகை முகமாகப் பேசுவது தான் அன்னைக்கு நிம்மதியைத் தந்தது.

சித்துவுக்கும் அன்னையை நோகடித்த உறுத்தல்… அதனால் தான் அவரிடம் இன்று இணக்கமாக இருக்கிறான். கூடவே இந்த மண்ணும் ஏதோ மாயம் செய்து அவனின் இறுக்கத்தை தளர்த்தியிருந்தது போலும்.

அதிகாலை விமானப்பயணம் மேகப்பொதியினுள் மிதந்து வந்த உணர்வைத் தந்திருக்க, கூடவே தன்னவளின் சுகமான நினைவுகளும்… அவளை முதன்முதலில் பார்த்தது, அவளில் காரணமே இல்லாமல் விழுந்தது, அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று மனதை எந்த சமாதானம் செய்தாலும் எடுபடாமல், அவளை மட்டுமே மனம் மீண்டும் மீண்டும் நாடிச் சென்றது, ஒரு மழை நாளில் அதட்டி உருட்டி அவளிடம் பெற்ற மென் முத்தம் என முழுக்க முழுக்க தன்னவளின் சுகமான நினைவுகள் தான்!

அது தந்த இதமோ என்னவோ அவனை இன்னமும் மலையேறாமல் வைத்திருந்தது.

நீ மலையேற வேண்டிய அவசியமே இனி இல்லை என்று சொல்லும் விதமாக அவர்களின் தோப்பில் அவன் தொலைத்த சொர்க்கம் அவன் கண் முன்னே வந்து நின்றபோது அவன் நிலையைச் சொல்லவும் வேண்டுமா?

அவர்களின் வாகனம் கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் பயணித்து ஒரு மாந்தோப்பை அடைந்திருந்தது. ஆரம்பத்தில் நகரப்பகுதிகளைக் கடந்திருந்தாலும், பயணிக்கப் பயணிக்க விவசாயத்தைப் பிரதானமாக கொண்டிருக்கும் கிராமங்களைக் கடந்து தான் அவர்களது பயணம்.

இவர்கள் வாகனம் சென்றதுமே தோப்பில் வேலை செய்யும் அத்தனை நபர்களும் கூடி விட்டார்கள். அதில் வைஷ்ணவியும் அடக்கம்.

வைஷ்ணவியை அங்குப் பார்த்ததும் சித்தார்த் மலைத்துப் போனான். நிச்சயம் அவளை இங்கு அவன் எதிர்பார்க்கவில்லை. ஒரு மாதிரி கடவுளைக் கண்ட பக்தனின் நிலை தான் அவனுக்கு.

புதுவெள்ளம் பொங்கி பிரவாகமெடுக்கும் நேரம்

நதிக்கரைகளும், நதியோர மரங்களும்…

முழு நிலவு பிரகாசிக்கும் நேரம்

மேகக்கூட்டங்களும், நட்சத்திரங்களும்

கொண்ட கொண்டாட்டம் தான்

இங்கே தலைவனுக்கும் தன்

தேடல் முழுமைப்பெற்ற மகிழ்ச்சியில்…

அங்குத் தோப்பினுள் வேலை பார்க்கும் அத்தனை பேரும் நின்றிருந்தாலும் அவன் விழிகள் அவளிலிருந்து விலக மறுத்தது. எங்கே கண்ணைச் சிமிட்டினால் கூட காணாமல் போய் விடுவாளோ என்று கண்ணைச் சிமிட்டக் கூட மறந்து பே வென பார்த்திருந்தான். நல்லவேளையாக அவனின் கூலர்ஸ் அவன் பார்வையின் ஜொள்ளை மற்றவர்களுக்கு மறைத்து விட்டிருந்தது.

‘எலும்பி…’ அவன் இதழ்கள் சத்தமின்றி முணுமுணுக்க, மீண்டுமொருமுறை அவளிடம் அதட்டிப் பெற்ற மென்முத்தம் நினைவில் எழ, அவள் உதட்டில் சில நொடிகள் நிலைபெற்றது அவனது பார்வை. அவன் உடலெங்கும் உஷ்ண அலைகள் சுழன்று அடித்தது. அதில் வேகமாகத் தலையை உலுக்கி தன்னை சமன்படுத்திக் கொண்டவன், இம்முறை ‘மோகினி…’ என்று மெல்ல உச்சரித்துக் கொண்டான் கிறக்கமாக.

பலகாரத்தில் மொய்க்கும் ஈயென அவன் பார்வை அவளிடமிருந்து அசைய மறுத்தது. வலுக்கட்டாயமாக அதனைப் பிரித்து எடுத்து மென்புன்னகை உதட்டில் தவழ அனைவரிடமும் பேசிக் கொண்டிருந்தான்.

பகவதிக்கு மகனின் இந்த பரிமாணத்தில் பலத்த ஆச்சரியம். அனைவரிடமும் எரிந்து விழுந்து தானே சில ஆண்டுகளாகப் பார்க்கிறார். இன்று அவன் இத்தனை நிதானமாக, அனுசரணையாக அனைவரிடமும் பேசுவதை நெகிழ்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தார்.

வைஷ்ணவியின் நிலையோ ரொம்பவும் மோசம். யாரை இனி தன் வாழ்நாளில் பார்க்கவே கூடாது என்று எண்ணித் தவித்தாளோ… யாருக்காக ஊரை விட்டு ஓடி ஒழிந்து வாழ்கிறாளோ… இன்று அவன் பார்வையிலேயே விழுந்து தொலைத்திருக்கிறாள். இந்த விதியை என்னவென்று நோவது?

அவனை மறக்கவும் முடியாமல், அவன் நினைவைத் துரத்தவும் முடியாமல் தினம் தினம் அவள் தனக்குள்ளே போராடித் தோற்றுக் கொண்டிருக்க, இந்த நேரத்தில் இவனின் வரவு… மனம் ரொம்பவும் பாடுபட்டது.

இந்த சூழலை எதிர்கொள்ள அவளுக்கு நிறைய வலிமை தேவைப்படும். எப்படி கடக்கப் போகிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை.

உடனே இங்கிருந்து கிளம்பவும் வழியில்லாமல் அவளும் அவள் தம்பி பிரதீப்பும் கல்லூரியில் வேறு படித்துக் கொண்டிருக்க, எப்படி சமாளிக்கப் போகிறோமோ என்ற அச்சம் இப்பொழுதே அவளை ஆட்டிப்படைக்கத் தொடங்கியிருந்தது.

அதற்குள் சுதாரித்திருந்த சித்தார்த் வைஷ்ணவியின் முகத்தைப் பார்த்தே அவளின் எண்ணவோட்டத்தை ஓரளவு கணித்துக் கொண்டான். இங்கு இருக்க நிச்சயம் விரும்ப மாட்டாள் என அவளின் எண்ணத்தைக் கச்சிதமாகக் கண்டு கொண்டவன், அவளை இங்கேயே இருக்கச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான்.

என்ன செய்யலாம் என்று அவன் யோசிக்க, அவளுக்கு தன்னால் எந்த தொந்தரவும் வராது என அவள் உறுதியாக நம்பும்படி எதையாவது உருப்படியாகச் செய்தால் இங்கிருந்து செல்வதற்கு அவள் யோசிக்க மாட்டாள் என்று தோன்றியது.

தோப்பினையும், தோப்பில் இருக்கும் வீட்டினையும் வைஷ்ணவியின் அம்மா லலிதா தான் நிர்வாகம் செய்கிறார்கள் என்று ராஜூலு அறிமுகம் செய்து வைத்தார். அவருக்கு உதவியாக அவருடைய மகனும், மகளும் தான் இருக்கிறார்கள் என்றும் சொல்ல,

“வணக்கம் ஐயா…” என்றார் லலிதா அம்மா. அவரை தொடர்ந்து பிரதீப்பும், “குட் மார்னிங் சார்…” என்று பள்ளி மாணவனின் தோரணையில் சொல்ல, வைஷ்ணவியும் வேறு வழியில்லாமல், “நமஸ்காரம் சார்…” என்றாள் இதழ்கள் நடுங்க.

வைஷ்ணவிக்கு வெறும் தலையசைப்பை மட்டும் கொடுத்தவன், “எப்ப இருந்து இங்க வேலை செய்யறீங்க மா… தெலுங்கு எல்லாம் புரிஞ்சுக்க முடிஞ்சுதா?” என லலிதாவிடம் பேசத் தொடங்கி விட்டான்.

“மூணு வருஷமா இங்க தான் இருக்கோங்க ஐயா. முதல்ல கன்னியாகுமரியில இருந்தோம். அப்பறம் அங்க இருக்க எங்க முதலாளி தன் பசங்களோட வெளிநாடு போகறதால எங்களை பெரிய ஐயாகிட்ட அறிமுகம் செஞ்சு வெச்சாங்க. அவரு இங்கே வேலை போட்டு கொடுத்தாரு. ஆரம்பத்துல மொழி தகராறு இருந்துச்சு தாங்க ஐயா. அப்ப இங்க காவலுக்கு ஒரு தமிழ் ஆள் இருந்தாங்க. அவங்க உதவியில ஓடுச்சு. நாளாக நாளாக எங்களுக்கே தெலுங்கு புரிய ஆரம்பிச்சுடுச்சு…” என்று அவர் விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார்.

“சரி… நான் அப்பறம் நிதானமா உங்களை எல்லாம் பார்க்கிறேன். நீங்க உங்க வேலைகளை கவனிங்க…” என்று அனைவரையும் கலைந்து போகச் சொன்னவன், தாயுடன் வீட்டிற்குள் நுழைந்தான்.

வைஷ்ணவியை இங்கேயே தங்க வைக்க என்ன முயற்சி எடுக்கப் போகிறானோ? அவள் அதற்கு உடன்படுவாளா இல்லை தப்பி ஓடத் தான் நினைப்பாளா? பொறுத்திருந்து பார்ப்போம்.