மகனுக்கு பருக என கொடுத்து சென்றார் பூர்ணிமா. சிரமப் பட்டுத்தான் பருகினான். தான் விழுந்து விட்டதை அம்மாவிடம் சொல்லக்கூடாது என ரவி கூறியும் சொல்லி விட்டாள் ரிதி. மீண்டுமொரு முறை மகனிடம் வந்தவர் அவன் கண்களை மூடிக் கொண்டு படுத்திருப்பது கண்டு திரும்பி விட்டார்.

கணவருக்கு அழைத்தவர், “நீங்க என்ன சண்டை போட்டீங்க அவன்கிட்ட, உங்களுக்குள்ள ஏதோ சரியில்லை, மனசு சரியில்லாமதான் உடம்பும் போட்டு படுத்துது அவனை” என சத்தம் போட்டார்.

“சாதாரண காய்ச்சலுக்கு இவ்ளோ சவுண்ட்டா?” என அலுத்துக் கொண்டார் சீனு.

“டயர்ட்ல சரியா நடக்க முடியாம விழுந்திட்டான் அவன்” என மனைவி சொல்லவும், சீனுவுக்கு ஒரு நொடி பேச்சே வரவில்லை.

“மன உளைச்சல்லதான் சரியா சாப்பிட மாட்டேங்குறான், தெம்பு இல்லாம போயிட்டான். இனியாவது அவனை ஏதும் சொல்லி படுத்தாம இருங்க” என சொல்லி பேச்சை முடித்துக் கொண்டார் பூர்ணிமா.

சீனுவுக்கு மனது கேட்கவில்லை, உடனே மகனை பார்க்க வீட்டுக்கு வந்து விட்டார்.

எதேச்சையாக விழித்த ரவி அருகிலிருந்த அப்பாவை பார்த்து விட்டு, “என்னப்பா, நைட் ஆகிடுச்சா?” எனக் கேட்டான்.

“நாலு மணிதான் இருக்கும்டா. உடம்பு லேசா சுடுதே, வேற டாக்டர் பார்க்கலாமா?” எனக் கேட்டார்.

“ஒரு நாள் வெயிட் பண்ணிட்டு நாளைக்கு பார்க்கலாம் ப்பா”

“ம்… நான் சொன்னதை எல்லாம் நினைச்சு அலட்டிக்காத, வயசு ஏற ஏற இப்படித்தான் புத்தி கெட்டு போகுது” என வருத்தமாக சொன்னார்.

“ப்பா! விடுங்க”  என்றான்.

குரலை செருமிக் கொண்டவர், “விழற அளவுக்கு முடியலையா?” எனக் கவலையோடு கேட்டார்.

“உங்க பொண்ணோட ரொம்ப கஷ்டம்! கால் இடறிடுச்சு” என சமாளித்தான்.

“என்னாலதான்னு சொல்றா உன் அம்மா”

“அப்படிலாம் இல்லை. என்னை என்னவும் பேசலாம் நீங்க” என்றவன் சற்று இடைவெளி விட்டு, “மதியை பத்தி தப்பா பேசாதீங்க ப்பா, அப்படி பேசினா அவ நம்ம வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறமா நீங்கதான் ஃபீல் பண்ணுவீங்க” என்றான்.

அதற்கு அவர் எதுவும் சொல்லவில்லை. வெளியில் வந்து அமர்கிறேன் என எழுந்தான் அவன். அவர் கை கொடுத்துதான் எழுப்பி விட வேண்டியதாக இருந்தது. தரையில் கால்கள் ஊன்றியவன், “பிடிச்சுக்கோங்க ப்பா, கால் மறத்து போன மாதிரி இருக்கு” என்றான்.

உடனே அவனை அமர வைத்து விட்டவர் சில நிமிடங்கள் கழித்து நடக்கலாம் என்றார். பத்து நிமிடங்கள் ஆகியும் மறத்துப் போயிருந்தது மாறவே இல்லை. அப்பாவிடம் அதை சொல்லாதவன், “டயர்டா இருக்குப்பா, படுத்துக்கிறேன்” என சொல்லி படுத்து விட்டான். சீனுவும் வெளியே வந்து விட்டார்.

தன் உடல்நிலையில் ஏதோ மாற்றம் என ரவிக்கு புரிந்தது. தான் இன்று பார்த்து வந்த மருத்துவருக்கு அழைத்து பேசினான். ஒன்றுமில்லை என அவர் சொல்லி விட, அவனும் சரிதான் என இருந்து விட்டான்.

மேலும் நான்கு நாட்கள் அருகில் உள்ள மருத்துவரை பார்ப்பதும் அவர் சொல்லும் மருந்துகளை எடுத்துக் கொள்வதுமாக ஓடியது. பேரனுக்கு முடியாததால் பாட்டி இங்குதான் அதிக நேரம் இருக்கிறார். இப்போது இன்னொரு பிரச்சனையை ஆரம்பித்து வைக்க அவன் தயாராக இல்லை. ஆகவே, அவனை பார்க்க வரத் துடித்த மதியிடம் கண்டிப்புடன் கூடாது என சொல்லி விட்டான்.

அன்று நடு இரவில் தங்கைக்கு அழைத்து அறைக்கு வரச் சொன்னான். அண்ணனுக்கு காய்ச்சல் பரிசோதித்து மாத்திரை கொடுத்தவள், “நானும் இங்கேயே இருக்கேன் ண்ணா” என்றாள்.

பதட்ட படுத்தாமல் அப்பாவை எழுப்பி  அழைத்து வரச் சொன்னவனை மிரட்சியோடு பார்த்துக் கொண்டே சென்றாள் ரிதி.

பெற்றோர் வரவும், “நைட் படுக்கும் போதே கால் வீக்கா இருந்தது, இப்ப கை கூட மறத்து போயிருக்கு, நல்ல உடம்பு வலி வேற, ஏதோ சரியில்லை ப்பா” என்றவன் வேறொரு பெரிய மருத்துவமனையின் பெயரை சொல்லி அங்கு போகலாம் என்றான்.

தொந்தரவு இல்லாமல் நடு இரவில் இப்படி சொல்ல மாட்டானே என வீட்டினருக்கு மிகுந்த பயமாகி விட்டது. பக்கத்து வீட்டில் விளக்கெறியவும் கோசலையும் பாட்டியும் வந்து விட்டனர்.

சீனு காரெடுக்க, ரிதிக்கு பாட்டியை துணை வைத்து விட்டு,  மகனை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு காரில் ஏறினார் பூர்ணிமா. மதிக்கு இதையெல்லாம் சொல்லி பயமுறுத்தக் கூடாது என தங்கைக்கு அறிவுறுத்தி விட்டுத்தான் புறப்பட்டான் ரவி.

மருத்துவமனையில் சிகிச்சை தரப் படவுமே ரவிக்கு காய்ச்சல் நின்று விட்டது. மகன் இப்போது நன்றாக இருக்கிறான் என வீட்டிற்கு தகவல் சொன்னார் சீனு. அவர்களும் நிம்மதியானார்கள்.

காலையில் பத்து மணிக்கு மேல் சீனியர் மருத்துவர் வந்தார். இது சாதாரண காய்ச்சல் இல்லை, என்னவென ஆராய வேண்டும் என சொல்லி ஐ சி யூ விற்கு அவனை மாற்றி விட்டார். அப்போதே கொஞ்சம் பயந்து விட்டனர் ரவியின் பெற்றோர். ஆனால் ரிதியிடம் பயப்படும் படி ஏதும் சொல்லவில்லை அவர்கள்.

மதிக்கு அவன் மருத்துவமனையில் இருக்கும் விஷயமே தெரிவிக்கப்படவில்லை. ரவியின் கைப்பேசி அணைத்து வைக்கப் பட்டிருந்ததால் பூர்ணிமாவுக்கு அழைத்து பார்த்தாள் மதி. சிக்னல் கிடைக்காததால் அழைப்பு செல்லவே இல்லை. ரிதியோ உளறி விடுவோம் என்ற பயத்தில் மதியின் அழைப்பை ஏற்கவே இல்லை.

அண்ணா உறங்கி கொண்டிருக்கிறார், அவரது கைப்பேசியில் தொடர் அழைப்புகள் வருவதால் அணைத்து வைத்து விட்டோம், அம்மா கைப்பேசியில் ஏதோ கோளாறு, பாட்டி வீட்டிலேயே இருப்பதால் உங்களுடன் பேச முடியவில்லை என செய்திகள் அனுப்பி வைத்து மதியை சமாளித்திருந்தாள் ரிதி.

‘ரவிக்கு சாதாரண காய்ச்சல்தான், இரண்டு நாட்களில் வீடு திரும்பி விடுவான்’ என்றே நினைத்தார் கோசலை. ஆதலால்  மகள்களை பயமுறுத்த வேண்டாம் என பாரதி, ஜோதி என்று யாருக்கும் அவர் தகவல் சொல்லியிருக்கவில்லை.

அடுத்த நாள் காலையில் ரவியின் பெற்றோரை தனியாக அழைத்த மருத்துவர், அவனுக்கு நரம்புகளை தாக்கக் கூடிய அரிய வகை தன்னுடல் தாங்குதிறன் நோய் (auto immune disease) வந்திருப்பதாக சொன்னார்.

நோய் பற்றி இன்னும் பல விளக்கங்கள் கொடுக்கப் படவும் அழ ஆரம்பித்து விட்டார் பூர்ணிமா. மனைவியை தைரிய படுத்தவா அல்லது தனக்கே தைரியம் கொடுக்கவா எனத் தெரியாமல் மனைவியின் கையை கெட்டியாக பிடித்துக்கொண்டார் சீனு.

கை கால்களில் தொடங்கும் இந்த பலஹீனம் கொஞ்சம் கொஞ்சமாக உடல் முழுதும் பரவும், இப்போது ரவியும் தீவிரமான கட்டத்தில்தான் இருக்கிறான், சிகிச்சை பலன் தந்து குணமாகி வந்தாலும் எந்தளவு பழைய படி செயல் பட முடியும் என உத்தரவாதம் இல்லை, ஒரு சில நேரத்தில் நோய் தீவிரமடைந்து இறப்பும் நேரிடலாம் என்றெல்லாம் சொல்லவும் மயங்கியே விட்டார் பூர்ணிமா.

மனைவி ஒரு பக்கம், மகன் இன்னொரு பக்கம் என அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்துப் போய் நின்றார் சீனு.

இனியும் ரவியை பார்க்காமல் இருக்க முடியாது என தோன்றி விட, அவனது வீட்டுக்கு போய் நின்றாள் தண்மதி. கணேசனும் பாரதியும் இல்லாமல் இவள் ஏன் இங்கு வந்திருக்கிறாள் என யோசித்துக் கொண்டே எரிச்சலுடன் எழுந்து வந்தார் சொர்ணம் பாட்டி.