அவர் பேச வந்ததே மகனுக்கு தெரியாதாம், அவனுக்கு இதில் எல்லாம் விருப்பமில்லையாம், இன்னும் இரண்டு வருடங்கள் போனால் ஸ்ரீதரே வாங்கிக் கொள்ளும் அளவுக்கு உயர்ந்து விடுவானாம், அதுவரை இந்த வீடு விற்பனையாகாமல் காத்துக் கொண்டு இருக்காதே என பேசியிருக்கிறார்.
அதிர்ந்து போன பூர்ணிமா, “நீங்க என்ன சொன்னீங்க?”என விசாரித்தார்.
“எதுவும் சொல்லலை நான், எல்லாம் சிறப்பா செஞ்சிடுங்கன்னு அவரே சொல்லி முடிச்சிட்டு போயிட்டார்” என்ற சீனு, நாளைக்கு மகனையும் வைத்துக் கொண்டு ஆலோசனை செய்யலாம் என்றார். பூர்ணிமாவும் கவலையோடே படுத்து விட்டார்.
காலையில் கணவருக்கு முன் மகனிடம் விஷயத்தை சொல்லி விட்டார் பூர்ணிமா. தன் காதல் விவகாரம் பற்றி அப்பா என்ன சொல்லப் போகிறார் என காத்திருந்த ரவிக்கு இந்த செய்தி கோவத்தை வரவழைத்தது.
அப்போதுதான் எழுந்து வந்த ரிதி, அம்மாவின் பக்கத்தில் அமர்ந்து கொள்ள, அவளிடமும் உள்ளதை சொல்லி விட்டான் ரவி.
ரிதிக்கும் அதிர்ச்சி கலந்த கோவம். இப்போதே ஸ்ரீதரிடம் பேசுகிறேன் என்றவளை அதற்கு அனுமதிக்கவில்லை பூர்ணிமா.
“அப்பா எந்திரிச்சு வர்ற வரை அமைதியா இரு” என அம்மா சொல்ல, அண்ணனை பார்த்தாள்.
அவனும் அம்மா சொன்னதையே சொல்ல, அமைதியாக அறைக்கு சென்று விட்டாள். ஆனால் உடனே ஸ்ரீதருக்கு அழைத்து கோவப்பட்டாள்.
“சத்தியமா சொல்றேன் ரிதி, அப்பா வந்து மாமாகிட்ட பேசின விஷயம் எனக்கு தெரியவே தெரியாது” என்றான் ஸ்ரீதர்.
“இப்பதான் தெரிஞ்சு போச்சே, போங்க போய் கேளுங்க”
“கேட்க ஒரு நிமிஷம் போதும், அதுக்கப்புறம் நீ எனக்கு சொல்லி கொடுத்து பேச வைக்கிறேன்னு உன்னை பத்தித்தான் தப்பா நினைப்பாங்க”
“நினைச்சா நினைக்கட்டும்”
“இந்த செய்முறையெல்லாம் பெரியவங்களே பேசி முடிவுக்கு வரட்டுமே, முடியாதுன்னா மாமாவே என் அப்பாகிட்ட சொல்லட்டுமே”
“ரிதி! நான் நிம்மதியா வாழணும்னு நினைக்கிறேன், சண்டை சச்சரவு இல்லாம எப்படி இதை சரி செய்யலாம்னு பேசுவோம்”
“நான் பேச என்னங்க இருக்கு, டௌரி கொடுத்து கல்யாணம் பண்ணிக்க நான் ரெடியா இல்லை”
“டௌரி வாங்கி கல்யாணம் பண்ணிக்க நானும் ரெடியில்லை” என அவனும் சீற, அவள் அமைதியானாள்.
“என் பேரெண்ட்ஸ் அவங்க சொந்தக்காரங்ககிட்ட பெருமை பட்டுக்க இப்படி கேட்ருக்கலாம். செய்ய முடியாதுன்னா வெளிப்படையா சொல்ல சொல்லு, இல்லை செய்ய விருப்பம் ஆனா பணத்துக்கு கஷ்டம்னா நான் லோன் அரேஞ் பண்ணி தர்றேன்”
“உங்க லோன்ல மெயின் சிட்டில வீடு வாங்கிட முடியுமா? இல்லை தெரியாமதான் கேட்கிறேன், அப்படி ஏன் உங்கப்பா கேட்டதை எங்கப்பா செய்யணும்? உங்க வீட்ல பேசி அவங்க செய்ற தப்பை சரி பண்ணுங்க”
“உனக்கு சொன்னா புரியாது, நான் மாமாகிட்டயே பேசிக்கிறேன்” என ஸ்ரீதர் சொல்ல, இன்னும் கொஞ்சம் கோவப் பட்டவள் அழைப்பை துண்டித்து விட்டாள்.
சீனு எழுந்து வரவும் அப்பாவின் வாய்மொழியாக நேற்று நடந்ததை கேட்டறிந்து கொண்டான் ரவி. ரிதியும் ஹால் வந்து விட்டாள்.
அவர்கள் கேட்பதை செய்து விடலாம் என்ற முடிவைதான் அப்பா எடுப்பார் என ரவி கணித்ததை போலவேதான் சீனுவும் சொன்னார்.
“ஸ்ரீதரே லோன் போட்டு பணம் ஏற்பாடு பண்ணி தர்றதா சொன்னார்” என சின்னக் குரலில் சொன்னாள் ரிதி.
“ஓ கோடிக் கணக்குல அவருக்கு லோன் கொடுப்பாங்களாமாம்? இல்லை இது பொறுப்பான பதில்னு நீ நினைக்கிறியா?” என அழுத்தமாக கேட்டான் ரவி.
வருங்கால கணவன் மீது ரிதிக்கும் கோவம்தான், ஆனால் விட்டுத் தர முடியாமல் அமைதியாக நின்றாள்.
“அவகிட்ட கோவமா பேசாதடா, மாப்ளகிட்ட பணம் வாங்கி செய்றதெல்லாம் சரியா வராது, மாப்ளயா ஏதும் டிமாண்ட் பண்ணலையேடா, சில மனுஷங்க இன்னும் இப்படித்தான் இருக்காங்க, என்ன பண்ண? நிச்சயம் முன்னாடியே இப்படின்னா நாம யோசிச்சிருக்கலாம், இப்ப என்ன செய்றது?” என்றார் சீனு.
“ப்பா! இன்னும் கூட ரிதிக்கு செய்வோம், அது நம்ம இஷ்டம், எதுவா இருந்தாலும் நாமளா செய்றதா இருக்கணும், அந்த வீட்ல அவங்களோட ரிதி நல்லா வாழ முடியுமான்னு சந்தேகமா இருக்கு” என ரவி சொல்லவுமே, அதே கவலையிலிருந்த பூர்ணிமா அழுது விட்டார். ரிதிக்கும் மனம் கலங்கிப் போனது.
“எல்லாம் விசாரிச்சுதானே ரவி எங்கேஜ்மெண்ட் வரை போனோம்? இப்ப இப்படி சொன்னா எப்படி?” கோவமாக கேட்டார் சீனு.
“பெருசு பண்ணாத ரவி, மாப்ளக்கு டிரான்ஸ்ஃபர் கிடைச்சா அங்கேயே ரிதியும் போயிடுவா, இவங்கள வச்சு மாப்ளய பத்தி யோசிக்காம இருக்காத. கெட்ட பழக்கம் இல்லாத நல்ல பையன், அதை விட ரிதி விருப்ப பட்ட பையன்டா” என சீனு சொல்லவும், தங்கையையே பார்த்திருந்த ரவியும் மேலும் வாதிடாமல் அமைதியாகி விட்டான்.
பேச்சு முடிவுக்கு வராமலே முற்று பெற்றது. ரவி வங்கிக்கும் சீனு கடைக்கும் கிளம்பி விட்டனர்.
மாமா என்ன சொன்னார் எனக் கேட்டு ரவிக்கு செய்தி அனுப்பியிருந்தாள் தண்மதி.
அவளை கவலையடைய வைக்க விரும்பாத ரவி, மற்றதை மறைத்து, ‘அவருக்கும் சம்மதம்’ என்றே பதில் அனுப்பி வைத்தான். அவளும் நிம்மதியாக தன் வேலையை பார்த்தாள்.
ரிதியின் திருமண விவகாரமாக இரண்டு நாட்கள் ஆலோசித்துக் கொண்டே இருந்தனர். ஸ்ரீதர் சீனுவிடம் பேசியிருந்தான். முக்கால்வாசி பணத்தை தயார் செய்து தருவதாக சொன்னான். ஆனால் சீனு ஒத்துக் கொள்ளவில்லை. தான் பார்த்துக் கொள்வதாக சொல்லி விட்டார்.
“மாப்ளயே இவ்ளோ தூரம் கேட்கும் போது அவர் வீட்டு ஆளுங்கள பத்தி ரொம்ப யோசிக்க வேணாம். எல்லாத்தையும் நிறைவா செய்திடுவோம்” என மகனிடம் தீர்மானமாக சொல்லி விட்டார் சீனு.
ரவிக்கு உறுத்தலாக இருந்தது, தங்கை விருப்ப பட்டு விட்டாள் என்பதற்காக தவறான வாழ்க்கையை அவளுக்கு அமைத்து கொடுக்கிறோமோ என தோன்றவும் தலையை உலுக்கிக் கொண்டான்.
மேலும் இரண்டு நாட்கள் எதுவுமே சொல்லாமல் இருந்தான் ரவி. சீனு மகனை மீறிக் கொண்டு பணம் புரட்டி வீட்டை வாங்க முன் தொகை கொடுத்து விட்டார் என்பது தெரியவும் அப்பாவிடம் கோவப் பட்டான்.
சீனு தனது நிலைப் பாட்டில் மிகவும் உறுதியாக இருந்தார். ரிதியும் சோகமாகவே சுற்றிக் கொண்டிருந்தாள். தங்கையின் பெயரில்தான் வீடு வாங்கப் பட வேண்டும் என்ற கண்டிஷனுடன் ரவியும் இறங்கி வந்தான்.
ரவி அவனது சேமிப்புகளை கொண்டு சில முதலீடுகள் செய்திருந்தான், நிலங்களாக வாங்கிப் போட்டிருந்தான். அதை வைத்து பணம் தயார் செய்வதாக சொன்னான்.
“நாம மைசூர் விட்டு வந்தாச்சு, அங்க உன் அம்மா பேர்ல இடம் இருக்கே, அதை வித்திடலாம், இடத்தை வித்தா அது போதுமா இருக்கும் வீடு வாங்க” என்றார் சீனு. அது பூர்ணிமாவின் பூர்வீக இடம், கைமாறிப் போயிருந்ததை மனைவிக்காக மீட்டு எடுத்திருந்தார் சீனு.
“யோசிக்காத ரவி, இனி எதுக்காக அங்க போக போறோம்? இங்க உள்ளது எல்லாம் யூஸ் ஆகும், அதையே வித்திடலாம்” எனதான் பூர்ணிமாவும் சொன்னார்.
ரவி அங்குள்ள அவனது நண்பனுடன் பேசினான். இடம் பராமரிக்காமல் கிடப்பதாக தகவல் சொன்னான் அவன். அதற்கென ஆள் ஒருவரிடம் பேசி நியமித்திருந்தார்தான் சீனு. அவர் சரியாக கவனித்துக் கொள்ளவில்லை போலும்.
இந்த வார இறுதியில் தன்னை பார்க்க வருவான் என தண்மதி காத்திருக்க, மைசூருக்கு பயணப் பட்டு விட்டான் ரவி.