தண்மதி, ரவி, பூர்ணிமா, நவ்ரிதி நால்வருமாக மட்டும் காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். கோசலையின் வீட்டில் காலையிலேயே அசைவ சமையல், ஆகவே சீனுவை அங்கே சாப்பிட அழைத்திருந்தனர்.
“நீ நினைக்கிற அளவுக்கு சைலன்ட் இல்லை அவ, ஒரு வாசகம்னாலும் மண்டைல அடிச்சு சொல்லுவா” என ரவி சொல்ல, “அப்படியா அண்ணி!” என நம்ப இயலாமல் கேட்டாள் ரிதி.
“அச்சோ! மாமா வேணும்னே சொல்றாங்க, நான் அமைதிதான்” என்றாள் தண்மதி.
“தனியா மாட்டினா என்னை அடிக்க கூட செய்வா” என வம்பிழுத்துக் கொண்டிருந்தான் ரவி. அவள் கண்களால் அவனை உருட்டி மிரட்ட, கவனித்து விட்ட ரிதி அதைச் சொல்லி ஓட்ட என உற்சாகமாக இருந்தனர்.
விசாகனை தூக்கிக் கொண்டு இங்கே வந்தாள் ரேஷ்மி. அவளையும் சாப்பிட அழைத்தார் பூர்ணிமா.
மதியை கண்டதும் அவளிடம் செல்ல முயன்றான் விசாகன்.
“என் அண்ணனை மாதிரியே என் அக்கா பையனும் உங்க ஃபேன் போல” என மதியிடம் சின்னக் குரலில் சொன்னாள் ரிதி.
விசாகனை வாங்கி மடியில் வைத்துக் கொண்டு அவனுக்கும் ஊட்டி விட்டு, தானும் சாப்பிட்டாள் தண்மதி. குழந்தையை அவள் கவனிக்கும் பாங்கை ரசித்துப் பார்த்தார் பூர்ணிமா.
“அங்க உன் ஐட்டம்லாம் சட்டி சட்டியா இருக்குமே, அதை விட்டுட்டு இங்க வந்திருக்கியே என்னடி சேதி?” என ரேஷ்மியுடம் கேட்டாள் ரிதி.
“ரவி மாமா மாதிரியே நானும் ப்யூர் வெஜ் ஆகிட்டேன்” என ரவியின் தோளை தன் தோளால் இடித்துக் கொண்டே கூறினாள் ரேஷ்மி.
“இங்க ரவி மாமா மட்டுமில்லை நானும் அம்மாவும் கூட அப்படித்தான், சரி சொல்லு எவ்ளோ நாளைக்கு இந்த வாய்க் கட்டுப்பாடு?” எனக் கேட்டாள் ரிதி.
“லைஃப் லாங்” என ரேஷ்மி சொல்ல, உண்மையாகவே சொல்கிறாளா என வியப்பாக பார்த்தாள் ரிதி.
“சும்மா… நம்பாத நீ, அங்கேயும் போய் ஒரு கை பார்ப்பாடா இவ” என தங்கையிடம் சொன்னான் ரவி.
“அப்படிலாம் இல்லை, நிஜமா மாமா” என்றாள் ரேஷ்மி.
“வயிறு சரியில்லையா ரேஷ்மி” என கிண்டல் தொனியிலேயேதான் கேட்டான் ரவி.
“அத்தம்மா!” என ரேஷ்மி சிணுங்க, “அவளை சாப்பிட விடுடா” என மகனை அடக்கினார் பூர்ணிமா.
சிறிது நேரத்தில் கணேசன் மகளுடன் வந்தார். மதி இங்கே இயல்பாக இருப்பதை கண்டவர் மன நிம்மதியுடன் மாடி அறைக்கு சென்று விட்டார்.
சீனு அவரது கடைக்கு சென்று விட, பூர்ணிமா மதிய சமையல் தயார் செய்ய ஆரம்பித்தார். அரசு பணியிலிருக்கும் ஸ்ரீதருக்கும் இன்று விடுமுறை என்பதால் ரிதி அவனுடன் கைப்பேசி அழைப்பில் பிஸியாகி விட்டாள்.
ரவி, மதி, ரேஷ்மி, ஷஷ்டி நான்கு பேரும் கேரம் விளையாடிக் கொண்டிருந்தனர். விசாகன் உறங்கிப் போயிருந்தான்.
சற்று நேரத்தில் எனக்கு போர் அடிக்கிறது என சொல்லி நழுவப் பார்த்தாள் மதி, அவளுக்கு விளையாட வரவில்லை, அதுதான் விஷயம். ரவி வற்புறுத்தி அழைக்க, அத்தைக்கு சமையலில் உதவி செய்ய போகிறேன் என காரணம் சொல்லி ஓடிச் சென்று விட்டாள். சொன்னது போலவே பூர்ணிமாவுக்கு இயல்பாக உதவவும் ஆரம்பித்து விட்டாள்.
“இப்ப விட்டுட்டான், கல்யாணம் அப்புறம்லாம் விட மாட்டான், விளையாட விளையாட உனக்கும் நல்லா வரும்” என்றார் பூர்ணிமா.
“அது அப்ப பார்க்கலாம் அத்தை, சும்மா குறி பார்த்து அடிக்க சொன்னா கூட பரவாயில்லை, ரூல்ஸ் போட்டா செம கடியாகுது” என அலுத்துக் கொண்டாள்.
“கேரம்னா உனக்கும் மேல நான், இதுக ரெண்டும் விட்டாதானே, இன்ட்ரெஸ்ட்டே இல்லாம விளையாட ஆரம்பிச்சு இப்ப சூப்பரா விளையாடுவேன், ஆமாம் இந்த பய உங்க ஊர்ல வேலை பார்த்தானே, அப்பவே பழக்கம்னான், உன் சித்தப்பா எப்படி ஒத்துக்கிட்டார்?” என அவர் கேட்க, அவளும் எல்லாம் சொன்னாள்.
அவரும் அவரது காதல் கதையை பகிர்ந்து கொண்டார்.
இப்படியாக வருங்கால மாமியார், மருமகள் இருவரும் சமையலை முடித்த போது மற்றவரை பற்றி நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டிருந்தனர்.
விசாகன் விழித்துக் கொள்ள, மதி அவனுக்கு சாப்பாடு கொடுக்க, மற்றவர்கள் அவனுக்கு விளையாட்டு காண்பிக்கிறோம் என கோமாளித் தனமாக ஏதோ செய்ய என வீடே கல கலப்பாக இருந்தது.
ஒரு முறை இங்கே எட்டிப் பார்த்த பாரதி, மகன் சமத்தாக இருக்கவும் அப்படியே சென்று விட்டாள்.
மதி இங்கே இருப்பது தாமதமாகத்தான் சொர்ணம் பாட்டிக்கு தெரிய வந்தது. எதற்கு அவளை எல்லாம் இந்த வீட்டில் சேர்க்கிறாய் என பாரதியை கடிந்தார்.
“ஷ்ஷ்ஷ் அப்பயி! இவ வீட்டுக்காரர் காதுல விழ போகுது, அவ பாவம் என்ன பண்ணினா உன்னை, அவளால என்ன பிரச்சனை உனக்கு?” என பாரதிக்கு முன் கேட்டு விட்டார் ஜோதி.
“எனக்கு வயசாகி போகவும் எல்லாம் உங்க சட்டம்னு ஆகிப் போச்சு, நாளைக்கு பிரச்சனைனு வரும் போது தெரியும்” என இடக்காக சொல்லி சீரியல் பார்க்க ஆரம்பித்து விட்டார்.
பாரதியின் முகம் சுணங்க, “அந்த பொண்ணு பாட்டுக்கும் இருக்கு, என்ன பிரச்சனை வரப் போவுது, அப்பயி சொல்றத எல்லாம் கணக்குல எடுத்து உன் வீட்டுக்காரர்கிட்ட ஏதாவது சொல்லி நீ பிரச்சனைய இழுத்து விட்டுக்காத” என அவளுக்கு அறிவுரை சொன்னார் ஜோதி.
“வகை வகையா செஞ்சிருக்கும் போது ஒன்னும் திங்காம விரத நாளா பார்த்து ஏதாவது கேட்டு தொல்லை பண்ணலாம்னு இருக்கியா? வா உன் ஸ்பெஷல் இறால் தொக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கு” என அவர் சொல்லவும், உடனே எழுந்து விட்டாள் ரேஷ்மி.
ரவியும் ரிதியும் வாயை மூடிக் கொண்டு சிரிக்க, “அது… எனக்காக ஆசையா பண்ணிருக்க அம்மாச்சி வருத்த பட கூடாதுல்ல” என காரணம் சொல்லி அசடு வழிய சிரித்தாள் ரேஷ்மி.
மதியையும் அங்கே சாப்பிட அழைத்தார் ஜோதி, அவளுக்கு முன் ‘வேண்டாம்’ என்றான் ரவி.
“ஏன் டா, மதி நான் வெஜ் சால்பிடுற பொண்ணுதானே, பாரதி கூட்டிட்டு வர சொன்னா. அப்பயி கூட முன்னாடியே சாப்பிட்டு தூங்க போயிடுச்சுடா, பயப்படாம அனுப்பு” என்றார் ஜோதி.
“இன்னிக்கு விரதமாம் அண்ணி” என வேகத்தில் சொல்லி விட்ட ரிதி, ஜோதியின் குழப்ப பார்வையில் அண்ணனை பார்த்தாள்.
தங்கையை முறைத்துக் கொண்டே, “ஸ்ரீதர்கிட்ட வாய் ஓயாம பேசி பேசி டங் சரியா வேலை செய்ய மாட்டேங்குதா உனக்கு” எனக் கேட்டான் ரவி.
“அதானே, அக்கா அண்ணி ஆகிட்டேன், சித்திய சித்தப்பான்னு சொல்ற அளவுக்கு முத்த போகுது, பார்த்துக்கடா இவளை” என கிண்டலாக சொல்லி, ஷஷ்டி மற்றும் விசாகனையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டார் ஜோதி.
ரவி ரிதியை கொட்ட வர, அவள் மதியின் பின்னால் ஒளிந்து கொள்ள என ஒரே ரகளைதான்.
சீனு ஓய்வெடுத்துக் கொண்டு மாலைக்குத்தான் கடைக்கு செல்வார், ஆகவே அவரது அறைக்கு சென்று விட்டார்.
பூர்ணிமா கட்டாயப் படுத்தி மதியை தன்னுடன் அமர வைத்து கேரம் விளையாட வைத்தார். காயின் பாக்கெட் ஆகும் போதெல்லாம் கைத்தட்டி, விசில் அடித்து என கொண்டாட்டமாக விளையாடினார்கள்.