“நீங்க அம்மாவை ட்ரீட் செய்யறதை பார்த்துத் தான் நான் வளர்ந்தேன். என் பார்வையில அம்மா உங்களுக்கு எப்படி ஒரு பொம்மை மாதிரி உங்களை சுத்தியே இருக்காங்களோ… எனக்கும் அப்படி ஒரு பொண்ணு வேணும்ன்னு எண்ணம். ச்சே! எவ்வளவு மட்டமான புத்தி… நீங்க எப்படி வேணா இருந்திருக்கலாம். நான் படிச்சவன் தானே? எனக்கு சுயபுத்தி வேணாம்… எப்படி அவ்வளவு கீழ்த்தரமா நினைச்சேன்” என்று சொன்னவனின் முகத்தில் அவ்வளவு வேதனை. கரங்கள் கூட லேசாக நடுங்கத் தொடங்கியது.
கீழ்த்தரமான புத்தி உங்களுக்கு என்று அவன் சொல்லாமல் சொன்னதில் பொன்ராம் பலமாக அடி வாங்கினார். அவர் முகத்தில் இத்தனை நேரமும் இருந்த கோபம் மங்கியது. எப்பொழுதும் கர்வமாக வலம் வரும் மனிதரின் முகம் சுருங்கிப் போயிற்று.
சித்துவோ தொடர்ந்து, “வந்தா தேவதை மாதிரி ஒருத்தி என் வாழ்க்கையிலும் வந்தா… என்மேல அவ்வளவு பாசத்தை கொட்டினா… எதையும் நான் புரிஞ்சுக்கலை… நீங்க அம்மாவை உதாசீனம் செய்யறதை பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ நானும் அதையே தான் அவளுக்கு பண்ணினேன். ஆனா அம்மா மாதிரி நடை பிணமா மாறி அவ வாழலை… நான் வேண்டாம்ன்னு போயிட்டா… என்னை மனசு முழுக்க சுமந்துட்டு நான் வேணாம்ன்னு முடிவெடுக்கிறது எவ்வளவு பெரிய வலி? அந்த வலியோட போயிட்டா… அவ இல்லாம நான் நடை பிணம்ன்னு எனக்கு புரிய வைக்க போயிட்டா…” என்றவன் தன் முகத்திலேயே அறைந்து கொண்டான்.
“சித்து கண்ணா…” அவன் வலி தாங்க மாட்டாதவராய் அவனை நோக்கி ஓரெட்டு எடுத்து வைக்க,
“அங்கேயே நில்லுங்க. அவ என்னை விட்டு போனதுக்கு காரணம் நான் தான், அது எனக்கு நல்லா தெரியும். ஆனா நீங்க என்னை சரியா வளர்த்திருந்தா நான் அவளை நோகடிச்சிருக்க மாட்டேன். நீங்க அம்மாவுக்கு மரியாதை தந்திருக்கணும். குடும்ப தலைவி மாதிரி நடத்தியிருக்கணும். அப்ப எனக்கும் நமக்கான பொண்ணை எப்படி மரியாதையோட நடத்தணும்ன்னு தெரிஞ்சிருக்கும். ஆனா நீங்க அம்மாவை வேலைக்காரி மாதிரி தானே நடத்தறீங்க. எவ்வளவு மோசமா அம்மா கிட்ட பேசறீங்க… அப்ப எல்லாம் அம்மா உங்கமேல அவ்வளவு பாசம் வெச்சிருக்காங்க, அதுதான் நீங்க என்ன பேசினாலும் உங்க கோபத்தை பெருசா எடுத்துக்காம, உங்களோட தேவைகளை குறையே இல்லாம கவனிச்சுக்கறாங்கன்னு முட்டாள்த்தனமா நினைச்சிருக்கேன். ஆனா அப்படி இல்லை. அம்மா மனைவிங்கிற பந்தத்துக்கு கட்டுப்பட்டிருக்கணும். மகன் மேல இருக்க பாசத்துக்காக எல்லாத்தையும் பொறுத்து போயிருக்கணும். ஆனா நீங்க ஒருநாளும் அவங்களை மனுஷியா கூட மதிச்சதில்லை. அவங்களோட பொறுமைக்கான காரணமும் எனக்கு புரிஞ்சதில்லை. நீங்க செய்யறது தப்புன்னும் நான் யோசிச்சதில்லை” என்றவனின் குரலில் அப்படியொரு ஆதங்கம்.
பொன்ராமின் முகம் அவமானத்தில் கருத்து போனது. பெண்களை மதிக்கத் தெரியாதவன் நீ என மகன் நேரடியாகக் குற்றம் சாட்டுகிறானே!
“என் வைஷு என்னை விட்டுப் போனதுக்கு என்மேல எனக்கு எவ்வளவு கோபம் இருக்கோ… அதேளவு எனக்கு தவறான முன்னுதாரணமா இருந்த உங்க மேலயும், தன்னோட வலிகளை எனக்கு காட்டி எனக்கு உங்க செய்கையை தப்புன்னு புரிய வைக்காம… மனசுக்குள்ள வலியை மறைச்சு வெளிய பொய்யா சிரிச்சு நடமாடின… நல்லது, கெட்டது சொல்லித்தந்து என்னை சரியா வளர்க்காத அம்மா மேலயும் கோபம் இருக்கு” என்றான்.
தந்தை அவனையே பார்த்திருக்க, “பாருங்க… அம்மா எல்லாம் உங்களுக்கு கிடைச்ச வரம். அவங்க உங்க கூட இருக்கும்போது அருமை தெரியாம… பணம் மட்டும் தான் பெருசுன்னு சுத்தி… பெரிய தப்பு பண்ணிடாதீங்க. இந்த பணம் உங்களுக்கு போதும் போதும்ங்கிற அளவுக்கு வந்துடுச்சு… அதுக்கான கௌரவமும் மரியாதையும் நிறையவே கிடைச்சிருச்சு. இதுவரை தொலைச்ச குடும்ப வாழ்க்கையை இனிமேலாவது காப்பாத்திக்க பாருங்க. சொந்த அனுபவத்துல சொல்லறேன்… அவங்களை தொலைச்சுடாதீங்க… அந்த வேதனையை உங்களால கண்டிப்பா தாங்கிக்க முடியாது…” என்று சொன்னான். திருந்துகிறாரோ இல்லையோ சொல்ல வேண்டியது தன் கடமை என்று தோன்றியது போல…
“இன்னைக்கு அம்மா கிட்டயும் கோபத்தை காட்டினேன். உங்ககிட்ட மொத்தமா கொட்டிட்டேன்… ஐ காண்ட் ஹேண்டில் திஸ் ஸ்ட்ரெஸ் எனி மோர்…” என தலையை உலுக்கி கொண்டவன், “நான் ஆந்திரா போக ஏற்பாடு பண்ணுங்க. அங்க இருக்க தோப்பு, பேக்டரி எல்லாம் பார்த்துக்கிறேன். இப்போதைக்கு இங்கே வர மாட்டேன். எனக்கு ரொம்பவுமே ஒரு மாதிரி இருக்கு… புது இடம், புது மனுசங்கன்னு மாறி இருக்கேன்…” என்று விட்டு தன் இடத்தில் போய் அமர்ந்து விட்டான்.
பொன்ராம் தான் செயலற்றவர் போல நின்று விட்டார். மகன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவருள் ஆழமான காயத்தை ஏற்படுத்தி விட்டது. அவரின் கர்வம் மொத்தத்தையும் மகன் தன் வார்த்தைகளால் தூள் தூளாக்கி இருந்தான். இத்தனை நாட்கள் நான் தான் எல்லாம் என இருந்தவரின் மமதை, மகன் எடுத்துக் காட்டிய தோல்வி பக்கங்களால் பலமாக அடி வாங்கியது.
அவர் நிலை அவனுக்கும் புரிந்தது தான்! ஆனால், தன்னவளை தொலைத்தது போல… தாயையும் இழந்து விட முடியாதே! அதற்கு இவன் மட்டும் தாயிடம் இனிமேல் இணக்கமாக நடந்து என்ன பிரயோஜனம்? அவரை அனுதினமும் காயப்படுத்திக் கொண்டிருப்பவர் திருந்தாமல் அன்னைக்கு எங்கிருந்து நிம்மதி கிடைக்கப் போகிறது என்றெல்லாம் யோசித்துத் தான் தந்தையை வாங்கு வாங்கென்று வாங்கி விட்டான்.
கசப்பான மருந்தும், கடினமான சிகிச்சையும் தான் பூரண குணத்தைத் தரும் என்றால், அதை செய்வதில் அவனுக்கு எந்த தயக்கமும் இல்லை.
மதியம் வரை அலுவலகத்தில் வேலைகளைச் செய்தவன், அதன்பிறகு வீட்டிற்குக் கிளம்பிப் போய் விட்டான். மறுநாள் காலை அவனுக்கு நந்தியல் செல்வதற்கான பிளைட், வீட்டிற்கு போய் பேக்கிங்கை பார்க்க வேண்டும். அன்னையிடம் மன்னிப்பைக் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அது பெரிய உறுத்தலாக இருந்து கொண்டே இருக்கும்.
மகன் மதியம் வீட்டிற்கு வந்து நிற்பான் என பகவதி நினைக்கவில்லை. இன்னமும் முக வாட்டத்துடன் இருந்த அன்னையைப் பார்த்தவன், தவிப்பும் தயக்கமுமாக, “ரொம்ப சாரிம்மா” என்றான்.
அன்னையின் கண்கள் கலங்கும் போல ஆகி விட்டது. இப்படி நிதானமாக முகம் பார்த்து மகன் பேசியே ஆண்டுக்கணக்கில் ஆகி விட்டதே!
“சாப்பிட்டியா? அம்மா எடுத்து வைக்கட்டுமா?” என விசாரித்தவரிடம், “அதெல்லாம் வேண்டாம் மா… நாளைக்கு ஆந்திரா வரைக்கும் போறேன். வர கொஞ்ச நாள் ஆகும்” என்றதுமே அவரின் முகம் வாடி விட்டது.
“இப்ப தானேப்பா வெளியூர் எங்கேயோ போயிட்டு வந்த?” சுரத்தே இல்லாமல் அவர் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது. அன்னையைப் பார்க்கப் பாவமாக இருந்தது.
“அங்கே பேக்டரியில ஏதோ பிரச்சினை போலம்மா…” என்றான் மகன் போக வேண்டிய அவசியத்தை குறிப்பிட்டுக் காட்டி. “சரிப்பா…” என்றவரின் முகத்தில் இன்னமும் தெளிவில்லை.
“என்னம்மா?” என்றான் பரிவாக.
“அது கண்ணா… எப்ப திரும்ப வருவ?” என்னவோ அவருக்கு பெரும் தவிப்பு. அவனுக்காகத் தான் அவர் இருப்பதே! ஆனால், அவனோடு சேர்ந்தாற்போல இரண்டு நாட்கள் கூட இருக்க முடிவதில்லை. அவனுக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. ஆனால், இப்படி எப்பொழுதும் அருகே இல்லாமலே இருந்தால் எப்பொழுது தான் அவன் மனம் விட்டு தன் பிரச்சினையைப் பகிர்ந்து கொள்வான் என்று அன்னையாய் மகனுக்காக யோசித்தார்.
மகன் தன் பிரச்சினையைச் சொல்கிறானோ இல்லையோ… அவனுடன் இருந்தால் அவனுக்குத் தான் தனி இல்லை என்ற எண்ணம் வலுக்கும் தானே என்ற யோசனை.
சித்தார்த் கம்பெனியிலிருந்து வரும்போது தான் மேனேஜருடன் நந்தியல் பேக்டரியில் இருக்கும் பிரச்சினைகளைக் குறித்துக் கலந்துரையாடி விட்டு வந்திருந்தான். அந்த கலந்துரையாடல் வைத்துப் பார்த்தால், அங்கிருந்து அவ்வளவு சீக்கிரம் திரும்பி வர முடியாது என்று புரிந்திருந்தது. ஆக அம்மாவிடம், “எப்படியும் ரெண்டு, மூணு மாசம் ஆயிடும் போலம்மா… அப்பப்ப வந்துட்டு போறேன்…” என்று சொன்னதும், அவர் முகம் மொத்தமாக வாடிப் போனது.
“அப்படியாப்பா?” என்று சுரத்தே இல்லாமல் கேட்டவர், என்ன நினைத்தாரோ, “நானும் உன் கூட வரட்டுமா? எனக்கு உன் கூட கொஞ்ச நாள் இருக்கணும் போல இருக்கு…” என கலக்கமும் தயக்கமுமாகக் கேட்க அவன் நொறுங்கியே போய் விட்டான். ஏன் இப்படி கெஞ்சிக் கேட்கிறார்? அந்த நிலையில் தான் அவரை இந்த வீட்டில் வைத்திருக்கிறோமா? என அவன் மனம் புண்பட்டது.
“என்னம்மா? நான் தான் திரும்பி சீக்கிரம் வந்துடுவேனே… நீங்களும் அலையணுமா?” என ஆறுதலாகக் கேட்க,
“எங்கேயாவது போகணும் போல இருக்கு கண்ணா… அதோட உன்கூட இருக்கணும் போலவும் இருக்கு… அதுதான் கேட்டேன். அம்மா, அப்பா இல்லாத அம்மா வீடு நமக்கு ரொம்பவும் அந்நியம். எனக்கு அங்கே போக கொடுப்பினை இல்லை. முடிஞ்சா நீ கூட்டிட்டு போப்பா… இல்லைன்னா வேணாம்” என தளர்ந்த குரலில் சொன்னார்.
என்ன மாதிரியான வலி நிறைந்த வார்த்தைகள்? போக்கிடம் இல்லை என சொல்லாமல் சொல்கிறார். தந்தை மீது ஆத்திரமாக வந்தது. இதுதான் அவர் சாதித்ததா என கோபம் கோபமாக வந்தது.
“ம்ப்ச் அம்மா…” என சின்ன குரலில் கண்டித்தவன், “நம்ம ரெண்டு பேரும் நாளைக்கு நந்தியல் கிளம்பறோம். போங்க போய் பேக்கிங்கை கவனிங்க…” என அவரை அனுப்பி வைத்தவனுக்கு, மனதில் பெரும் போராட்டம்.
தாய், தந்தை இருவருக்கும் தரும் தனிமையும்… தந்தைக்கு விட்டிருந்த டோஸும் சேர்ந்து அவர்கள் வாழ்க்கையைச் சீராக்கும் என அவன் ஒரு திட்டம் போட்டால், அவன் அன்னை அதற்குப் பெரிய ஆப்பாக வைத்து விட்டார்.
‘அப்பா… என்னோட கஷ்டம் உங்களுக்கு வரக்கூடாதுன்னு நினைச்சேன்… ஆனா நானே நினைச்சாலும் அதைத் தடுக்க முடியாது போல…’ என வாய் விட்டுப் புலம்பியவன், அடுத்த நாள் புறப்படுவதற்கான ஏற்பாட்டைக் கவனிக்கச் சென்றான்.