அன்று ரத்னா நண்பனைத் தேடிக் கொண்டு வீட்டிற்கே வர, போதையில் இருந்த அவரைக் கண்டு முகம் சுளித்தார் அகல்யா.
“அவர் வீட்ல இல்லைண்ணா. போயிட்டு அப்பறம் வாங்க” என்றார்.
தன்னைக் கண்டு முகத்தை சுளித்த அகல்யாவின் மேல் வைத்த பார்வையை மாற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தான் ரத்னா. தன்னை விட்டுச் சென்ற மனைவி தன்னைப் பார்த்து முகத்தை சுளித்தது அவனுக்கு ஞாபகத்திற்கு வர,
“என்னையப் பார்த்தா எப்படி தெரியுது உனக்கு? முகத்தை சுளிக்கிற அளவுக்கு கேவலமாவா இருக்கேன். அவன் கூட இருக்கும் போது மட்டும் இனிக்குதோ” என்று உளறத் தொடங்கியவர், அகல்யாவிடம் தவறாக நடக்க முற்பட்டார்.
“அண்ணா என்ன பண்றிங்க? நான் உங்களுக்கு தங்கச்சி மாதிரி. போங்க முதல்ல இங்க இருந்து” என்று அவரைத் தள்ளிய அகல்யாவை அவன் மூர்க்கத்தனமாய் பலவந்தப் படுத்த முயற்சி செய்ய, அம்மாவின் குரல் கேட்டு ஓடி வந்த கார்த்தியின் கண்களில் பட்டது இந்த காட்சி தான்.
“அம்மாவை விடுங்க அங்கிள்..!” என்று ஓடி வந்தவன், தன் சக்தியெல்லாம் திரட்டி ரத்தினத்தை தள்ள,
“பொடிப் பய..! நீ என்னையத் தள்ளுறியா? போடா” என்று அவர் அவனைத் தள்ளிவிட, அவனோ விடாமல் அவரை இழுக்கத் தொடங்கினான். போதையின் வீரியத்தில் இருந்தவனிடம் அந்த பாலகனின் தெம்பு எடுபடவில்லை.
கார்த்தியின் கழுத்தை பலமாய் நெறித்த ரத்னா அவனை ஓங்கித் தள்ளியதில், சுவற்றில் பின்மண்டை பலமாய் மோதி கீழே விழுந்த கார்த்திக்கு மூச்சுமில்லை பேச்சுமில்லை.
“அகன் கண்ணா” என்ற அகல்யாவுக்கு எங்கிருந்து தான் வந்ததோ அவ்வளவு ஆவேசம்,ரத்தினத்தை தன் பலம் கொண்டு தடுத்தவர் மகனிடம் விரைய, சரியாக அந்த நேரத்திற்கு வந்து விட்டிருந்தார் தயாளன்.
வந்தவர் முதலில் கண்டது என்னவோ ரத்தம் வழிந்தோட கிடந்த மகனைத்தான். அவருக்குள் உறங்கிக் கொண்டிருந்த இயல்பான தந்தையின் பாசம் வெளிவர, ரத்தம் கொதித்தவர்..
“கார்த்தி கண்ணா” என்றவர் வேகமாய் மகனைத் தூக்கிக் கொண்டார்.
நண்பன் வந்த உடன் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த ரத்னாவிற்கு போதையின் தாக்கம் குறைய, அதிலிருந்து தப்பிக்கும் வழிதேடிக் கொண்டிருந்தவருக்கு..தானாய் சிக்கியது காரணம்.
“நம்ம உறவுக்கு இடைஞ்சலா இருக்கான்னு பெத்த பையன்னு கூட பார்க்காம இப்படி கொல்லத் துணிஞ்சிட்டியே அகல்யா. நான் வேணாம்னு சொன்னேன் கேட்டியா? இப்போ பாரு வீணா கொலைப்பழியும் வந்து சேரப் போகுது” என்று தலையில் அடித்தவன்,
“என்னைய மன்னிச்சிடு தயா. உனக்குத் துரோகம் பண்ணிட்டேன். நான் எவ்வளவோ சொன்னேன், ஆனா அகல்யா கேட்கலை. என் நண்பன் குடும்பத்தை நானே கெடுத்துட்டேன்” என்று தலையில் அடித்துக் கொண்டு அழ,
“பொறுக்கி நாயே” என்று அகல்யா ஆரம்பிக்கும் முன் மனைவியை அறைந்திருந்தார் தயாளன்.
“உனக்குத் தெனவெடுத்தா நீ எப்படியும் போக வேண்டியது தானேடி. பிள்ளை என்ன பண்ணான்? பெத்த பிள்ளையை கொல்ற அளவுக்கு போயிருக்க நீ? என்ன ஜென்மம்டி நீயெல்லாம்?” என்றவர்,ரத்தினத்தையும் அடித்துத் துவைத்து விட்டார்.
“உன்னை மாதிரி ஒரு கேடு கெட்ட நண்பனை நான் வாழ்க்கையில பார்த்ததில்லை. துரோகி,என் மூஞ்சியில முழிச்சிடாத” என்றவர் கார்த்தியை தூக்கிக் கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு விரைந்தார். அகல்யாவோ கணவனின் பின்னால் ஓடியிருந்தார்.
“ஏங்க நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளுங்க. நான் அப்படி பட்டவளா? அவன்தான் என்கிட்ட தப்பா நடந்துக்கப் பார்த்தான். கார்த்தியோட இந்த நிலைமைக்கு காரணமே அவன் தான்” என்று அகல்யா எவ்வளவோ மன்றாடிப் பார்த்தார்.
“எனக்கு உன் முகத்தைப் பார்க்கவே பிடிக்கலை அகல்யா. தயவு செஞ்சு என்னை விட்டு போய்டு. இங்க இருந்து என்னை கொலைகாரன் ஆக்காத” என்றார் கோபமாய்.
“நான் அப்படிப்பட்டவளா? அவன் சொன்னதை நீங்க நம்புறிங்களா? நாம வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன?” என்றார் மீண்டும்.
“யாருக்குத் தெரியும்?” என்றார் வெறுத்துப் போன குரலில்.
“என்ன மனுஷன் நீங்கள்லாம்? கட்டின பொண்டாட்டிகிட்ட ஒருத்தன் தப்பா நடக்க பாத்திருக்கான். பெத்த பிள்ளை இப்படி சாகப் பிழைக்க கிடக்க காரணமும் அவன் தான். அவனை சந்தேகப்படாம, அந்த குடிகார நாய் சொன்னான்னு என்னை சந்தேகப்படுறிங்க, உங்களுக்கு வெட்கமா இல்லையா?” என்றார் கோபமாய். அகல்யா இத்தனை கோபமாய் பேசி இதுவரை அவர் கேட்டதில்லை. அகப்பட்ட கோபத்தில் பேசுவதாகவே எண்ணிக் கொண்டார் தயாளன்.
“என்னடி வாய் நீளுது?” என்றார்.
“நான் என் பையனைப் பார்க்கணும். எனக்கு உங்க கூட வாழ விருப்பமில்லை. எனக்கு விவாகரத்து வேணும்” என்றார் தயாளனிடம்.
“ஏன்? அப்போ தான் அவன் கூட எந்த பிரச்சனையும் இல்லாம இருக்க முடியுமா? அதுக்குத்தான விவாகரத்து கேட்குற? அப்படி என்கிட்ட இல்லாதது என்னதான் இருக்கு அவன்கிட்ட?” என்றார் பச்சையாய்.
அவரின் பேச்சைக் கேட்ட அகல்யாவுக்கு கண்ணீர் தாரை தாரையாய் வர,
“இப்படி பேசாதிங்க, நான் அப்படி பட்டவ இல்லை” என்றார் குரல் கமற.
“மாட்டிக்கிட்டா எல்லாரும் சொல்ற காரணம் தான். உன்கூட இத்தனை நாள் வாழ்ந்தேன்னு நினைக்கும் போதே அசிங்கமா இருக்கு. வசதியான வீட்டுப் பொண்ணை எதுக்கு நமக்குத் தர்றாங்கன்னு நான் அப்பவே யோசிச்சிருக்கணும்? இப்போ தானே தெரியுது வண்டவாளம் எல்லாம். பேசாம போய்டு. இல்லைன்னா பெத்த மகனை கொல்லப் பார்த்தன்னு போலீஸ்ல கம்ப்ளைன்ட் குடுத்துடுவேன்” என்று வார்த்தைகளை வீசி விட்டார் தயாளன்.
“என் பையன் வந்து சொல்லுவான், நடந்தது என்னன்னு?” என்றார் அகல்யா சோர்வான குரலில். அந்த நேரத்தில் தான் மருத்துவர் வந்து தலையில் இடியென செய்தியை இறக்கியிருந்தார்.
“இது பையன் கீழ விழுந்து அடிபட்ட மாதிரி தெரியலை. பின்மண்டையில பலமான அடி பட்டிருக்கு. கழுத்தை போர்சா நெரிச்சிருக்காங்க. பையன் உயிருக்கு ஆபத்தில்லை. ஆனா இனி அவனால பேச முடியாது. காதுக்கு போற நரம்பும் பாதிக்கப்பட்டிருக்கு”
“டாக்டர் என் பையனால இனி பேச முடியாதா?” என்ற அகல்யாவால் கேட்ட செய்தியைத் தாங்க முடியவில்லை.
“என்னால தான் என் பையனுக்கு இப்படி ஆயிடுச்சு” என்றவர் தன் போக்கில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பிக்க, தயாளனோ அதை தவறாக புரிந்து கொண்டார்.
“இப்ப அழுது என்ன பிரயோஜனம்? முன்னாடியே இதையெல்லாம் யோசிச்சிருக்கனும்?” என்றார் வெறுப்பாய்.
அவர் பேசியது எதுவும் அகல்யாவின் காதில் விழவேயில்லை. பித்துப் பிடித்தவர் போல் மகனின் அருகில் அமர்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.
“அகன் கண்ணா” என்ற வார்த்தைகளைத் தான் சொல்லிக் கொண்டே இருந்தார். விஷயத்தை கேள்விப்பட்டு குடும்பமே வந்திருக்க, தயாளன் நடந்த விஷயத்தை சொல்லாமல், மாடியிலிருந்து தவறி விழுந்து விட்டான் என்றே கூறியிருந்தார். மற்றவர்கள் முன்னால் சட்டென்று மனைவியை அப்படி பேச மனம் வரவில்லை அவருக்கு.
தன் கணவரின் கௌரவம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக கணவரின் குண மாற்றத்தை பிறந்த வீட்டில் சொல்லாமல் விட்டது இப்போது அகல்யாவுக்கு எதிராகவே திரும்பியிருந்தது.
எப்போதும் போல் அனைவரும் தயாளனைப் போல் உண்டா என்று பேச, தான் என்ன சொன்னாலும் இவர்களை நம்ப வைப்பது கடினம் என்று உறுதியாக தெரிந்து போனது அகல்யாவுக்கு.