திடீரென சஞ்சனா தன் வீட்டிற்கு வர வேண்டும் என வற்புறுத்தி அழைப்பாள் என மதி எதிர்பார்த்திருக்கவே இல்லை. பிரச்சனைக்கு தீர்வு கிட்டியது என தோழியின் வீட்டுக்கு சென்று விட்டாள் மதி. சித்தப்பாவின் மனம் வருந்தாத படி சஞ்சனாவுடன் இருக்க ஆசையாக இருக்கிறது எனவும் சொல்லி விட்டாள்.
இருவரும் வருடக் கணக்காக தோழிகள் என்பதால் கணேசனும் சம்மதித்து, மனைவியின் பிறந்த வீட்டிலேயே பண்டிகையை கொண்டாடினார்.
சஞ்சனாவின் வீட்டுக்கு வந்து விட்டாலும் மதியால் முழு மனதுடன் அங்கிருக்க முடியவில்லை. சஞ்சனாவின் அண்ணனுக்கு திருமணம் முடிந்திருக்க, அவனது மனைவி இவளை அந்நியர் என்ற ரீதியில்தான் பார்த்தாள்.
எப்போதாடா விடுதி திறக்கும் என காத்திருந்து, வந்த பிறகுதான் மதி இயல்பாக உணர்ந்தாள்.
சஞ்சனா இவளை அழைத்ததே ரவி சொல்லித்தான் என்பது தாமதமாகத்தான் மதிக்கு தெரியும். ஏன் அவளை தொந்தரவு செய்தீர்கள் என கோவித்துக் கொள்ளவும் செய்தாள்.
நிம்மதியாக போய் வர என தனக்கென இடமில்லை என அவள் வருந்துகிறாள் என்பது ரவிக்கு தெரியும். இப்போது இவளிருக்கும் தனியார் மகளிர் விடுதியில் கூட பாதுகாப்பு அம்சங்களுக்கு குறைவில்லை என்றாலும் உணவு வாய்க்கு ருசியாக இருக்காது. மதி குறையாக எதுவும் சொன்னதில்லை என்றாலும் அவன் அறிவான்.
இதையும் மனதில் வைத்துதான் திருமணத்தை சீக்கிரம் நடத்தி விட நினைக்கிறான் ரவி. இன்று தங்க சொன்னதும் கூட அவளுக்கென குடும்பம் உள்ளது என்ற எண்ணத்தை அவளுள் ஆழமாக விதைக்கவும் வயிராற வீட்டு சாப்பாடு உண்பாளே என்ற ஆசையிலும்தான்.
ரவியின் எண்ணம் மதிக்கும் தெரியாமல் இல்லை. சொல்லப் போனால் அவன் நினைப்பது போன்ற விஷயங்கள் தன்னை அதிகம் பாதிக்க விடாமல் பார்த்துக் கொள்கிறாள்.
இவ்வளவு சொல்லியும் தான் சென்று விட்டால் இதை நினைத்து ரவி வருந்துவான் என்பதற்காகவே இருக்கலாம் என முடிவெடுத்தாள்.
அனைவருக்குமே சோம்பலாகத்தான் அந்த நாள் துவங்கியது. குழந்தையுடன் வெளியில் உலவிக் கொண்டிருந்தார் கணேசன். கடைக்கு புறப்பட்ட ரவி, ‘மாலை வரை மதி இருக்கட்டும்’ என அவர் மறுக்க முடியாத படி சொல்லி விட்டுத்தான் சென்றான்.
பூர்ணிமா மகனின் விருப்பத்தை பற்றி மகளிடம் சொல்லி விட்டார் போலும். கடையிலிருந்து ரவி வரவுமே கேட்டு சண்டை போட ஆரம்பித்து விட்டாள் ரிதி. அவளது காதலை முதலில் அண்ணனிடம் சொல்லி, அவன் மூலமாகத்தான் வீட்டில் சொல்ல வைத்திருந்தாள்.
ஏதேதோ சொல்லி தங்கையை சமாதானம் செய்தான் ரவி. அவனது கையிலிருந்த பையை பார்த்த பூர்ணிமா என்னவென கேட்டார்.
“மதிக்கு மா” என மட்டும் சொன்னான். அதை பறித்துக் கொண்ட ரிதி, “போய் அங்கேயும் கேட்டுட்டு வர்றேன், நாத்தனார் மேல கொஞ்சமும் பயமில்லை” என சொல்லி மாடிப் படிகளில் ஏறினாள்.
நவ்ரிதி உர் என முகத்தை வைத்துக் கொள்ள, புரியாமல் குழப்பத்தோடு எழுந்து நின்றாள் மதி.
கொள் என சிரித்து விட்ட ரிதி, “ஹையோ ஸ்வீட் அண்ணி…” என சொல்லிக் கொண்டே அவளிடம் போய் அவளின் கன்னங்களை கிள்ளி கொஞ்சினாள்.
“விடு, கையோட அவ கன்னத்து சதை வந்திடும் போல” என சொல்லிக் கொண்டே வந்தான் ரவி.
அண்ணன் சொல்லவே இல்லை என குறை பட்டுக் கொண்டாள் ரிதி.
மதி சங்கடமாக ரவியை பார்க்க, “அவ ரெடியாகி வரட்டும், என்னை பத்தின எல்லா கம்ப்ளைண்ட்ஸையும் பேப்பர்ல எழுதி வச்சு ஒன்னு விடாம பொறுமையா அவளுக்கு படிச்சு காட்டலாம்” என்றான் ரவி.
“அதைத்தான் செய்ய போறேன் ண்ணா, இன்னிக்கு எங்க ரெண்டு பேர் இடைல உன்னை விட மாட்டேன்” என்றாள் ரிதி.
“நீ வேற யார்கிட்டேயும் பேச ஸ்ரீதர் விடுறாரான்னு பார்க்கலாம்” என ரவி சொல்ல, முறைத்தாள் ரிதி. சரியாக அந்த நேரம் பார்த்து ஸ்ரீதர் அவளுக்கு அழைக்க, வெட்கத்துடன் ஓடிச் சென்று விட்டாள் அவள்.
“சீக்கிரம் குளிச்சிட்டு கீழ் வா” என மதியிடம் சொன்ன ரவி, அவளின் முக மாற்றத்தை கண்டு விட்டு, “என்னம்மா?” என ஆதுரமாக கேட்டான்.
“அத்தையும் அண்ணியும் இவ்ளோ ஈஸியா என்னை அக்செப்ட் பண்ணிப்பாங்கன்னு நினைக்கவே இல்லை” என மூக்குறிந்து கொண்டே சொன்னாள்.
“ச்சீ மக்கு! ஏன் உன்னை வேணாம்னு சொல்லப் போறாங்க? என்ன குறை உனக்கு? தேடினாலும் இப்படி ஒரு பொண்ணை என்னால பார்த்திருக்க முடியாதுன்னு என் அம்மா அவங்க வாயாலேயே சொன்னாங்க. நானும்தான் கேட்கிறேன்… அழகு அறிவு குணம்னு எதுல குறைஞ்சு போயிட்ட நீ?”
“மக்குன்னு சொல்லிட்டு அப்புறம் புகழ் பாடுறீங்களா? ரெண்டுல எது உண்மை?” என அவள் கேட்க, சிரித்தான்.
“பெரிய மாமாவும் ஓகே சொல்வாங்களா மாமா?” என சந்தேகமாக கேட்டாள்.
“அப்பாவே லவ் மேரேஜ் பண்ணினவர்தான்”
“ம்… என் அம்மா வச்சு வேணாம்னு சொன்னா? உங்க அப்பயி…” என தயக்கமாக பேச ஆரம்பித்தவளின் கன்னங்களை அழுந்த பற்றி, அவளை பேச விடாமல் செய்தான்.
“கல்யாணம் பத்தியெல்லாம் உனக்கெதுக்கு கவலை? டேட் குறிச்சிட்டு சொல்வேன், அப்ப ரெடியாகி என் பக்கத்துல வந்து உட்காருறது மட்டும்தான் உன் வேலை” என அவன் உறுதியோடு சொல்ல, சரியென தலையாட்டினாள்.
“என்ன செய்ய மதி, கல்யாணம்னு ஒன்ன பண்ணி அதையும் ரெஜிஸ்டர் செய்தாதான் சட்டப் படி நாம ஹஸ்பண்ட் அண்ட் வைஃப். ஆனா நிஜத்துல நாம அந்த உறவுக்குள்ள வந்து வருஷங்கள் ஆகுது” என அவன் சொல்ல, மீண்டும் அவளின் கண்கள் கலங்கிப் போயின.
அவன் உச்சு கொட்டி சலிக்க, சமாதான சிரிப்புடன் அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.
“நாம ஆல்ரெடி புருஷன் பொண்டாட்டிதான்னு சொல்றேன், அழுதா என்ன அர்த்தம்? நான் சரியா சொன்னேனா தப்பா சொல்லியிருக்கேனா?” என கேலியாக கேட்டான்.
“என் ஹஸ்பண்ட் ரொம்ப மோசம், வருஷக் கணக்கா ஹாஸ்டல்ல விட்டு வச்சிருக்கார், அதை நினைச்சி அழுதேன்” என்றாள்.