உறங்காத நேரம் கூட உந்தன் கனவே கனவே

உடலோடுஉயிரை போலே உறைந்து போனது தான் உறவே.,

மறக்காது உன் ராகம், மறுக்காது என் தேகம்.,

உனக்காக உயிர் வாழ்வேன்.. வா என் வாழ்வே வா..

         மதுரையில் வீட்டின் பெரியவர்கள் கூடியிருக்க,

    தாத்தா தான், வீட்டினரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

   “மாப்பிள்ளை வீட்ல இருந்து போன் வந்தது, கல்யாணத்துக்கு துணி எடுப்பது பற்றி பேசிட்டு இருந்தாய்ங்க, நம்ம வீட்டுல அங்கிட்டு கூட்டிட்டு வருவீங்களா ன்னு கேட்டாய்ங்க, என்ன முடிவு பண்ணனும் நீங்க சொல்லுங்க, நம்ம சொல்றத பொறுத்து தான் அவங்க முடிவுன்னாய்க உங்க முடிவு சொல்லுங்கன்னு சொன்னாய்ங்க, நீங்கதான் யா சொல்லணும்”, என்று பொதுவாக சொல்லி வைத்தார்.

        மணமகளின் அம்மா வாயை திறக்க போகும் போது,  சரிகா தான், “மா வாய மூடுங்க பெரியவங்க என்ன முடிவு பண்றாங்களோ அதை பண்ணட்டும்., உங்க இஷ்டத்துக்கு எதையும் பேசி தாத்தா கிட்ட திட்டு வாங்காதீங்க”, என்று மெதுவாக முனுமுனுத்தாள்.

    “உனக்காக தான் பார்த்தேன்” என்று மெதுவாக  கிசுகிசுத்தார்.

   “பேசாம இருங்கன்னு சொன்னேன்” என்றாள் கோபமாக

      “தெரியலையே என்ன பண்ணுன்னு தெரியலையே” என்று  பாட்டி  சொன்னார்.

    “நீங்க மாப்பிள்ளை வீட்டுக்கு போன் போடுங்க அவங்க என்ன சொல்லுதாகன்னு கேட்போம், அவங்க சொல்ற முடிவு நமக்கு எல்லாருக்கும் சாதகமா இருந்துச்சுன்னா அதுபடியே இருக்கட்டுமே.,  எதுக்கு நம்மளா போய் சொல்லுறது, அவங்க என்ன முடிவு பண்ணுவாங்கன்னு பார்ப்போம்”, என்று பாட்டி பதில் வார்த்தை பேசினார்.

   அதுபோலவே மாப்பிள்ளை வீட்டிற்கு இங்கிருந்து அழைப்பு விடுக்க,  அங்கு நித்திலனின் அப்பா  கருணாகரன் போனே எடுக்க.,

    இங்கு தாத்தா பேசவும்.,  “சொல்லுங்க மாமா” என்று மரியாதையாக கருணாகரன் அழைப்பதை கண்டவர்.

    நிமிர்ந்து தன் பிள்ளைகளை ஒரு பார்வை பார்த்தார். பின்பு “அது ஒன்னும் இல்ல தம்பி அப்பா பேசியிருந்தாக, கல்யாண விஷயத்தைப் பத்தியும், இந்த புடவை எடுக்கிறது பத்தி எல்லாம் சொல்லிட்டு இருந்தாங்க, அதான் நீங்க என்ன முடிவு பண்ணி இருக்கீங்கன்னு தெரிஞ்சா அதுக்கு தகுந்தாப்ல பேசலாம் ன்னு தான் போன் போட்டேன்”, என்று சொன்னார்.

   “இருங்க மாமா அப்பா கிட்ட கொடுக்கிறேன்” என்று சொல்லி போனை வீட்டின் பெரியவரிடம் கொடுக்க,

    “தாத்தா தான் சொல்லுங்க மச்சான்” என்று உறவு முறையோடு அவரை அழைத்து பேச அருகில் இருந்த அனாமிகாவோ மெதுவாக திரும்பி தாத்தாவைப் பார்த்து சிரித்துக்கொண்டவள் அவர்கள் பேசுவதை கவனிக்கலானாள்.

    பெண் வீட்டின் பக்கமும் போனை ஸ்பீக்கரில் வைத்திருக்க இவரும் போனை ஸ்பீக்கர் ல் வைத்தார்.

அனைவரும் கேட்கட்டும் என்றே. “நீங்க என்ன முடிவு பண்ணி இருக்கீங்கன்னு சொல்லுங்க, அதுல எது நமக்கு சாதகமாக வரும்., எது நமக்கு பாதகமாக வரும் ன்னு அதுக்கப்புறம் பேசிக்கலாம்”, என்று சரிகாவின் தாத்தா சொல்ல.,

    இவரோ “இல்ல நீங்க பொண்ண கூட்டிட்டு வர்ற முறை இருக்கு, கூட்டிட்டு வரலாம் அப்படின்னு நினைச்சீங்கன்னா., நம்ம முதல் நாள் பந்தக்கால் நடுகிறோம் இல்ல  அன்னைக்கே தாலி சேலை எல்லாம் இங்க சென்னையில் எடுத்திடலாம்., இல்ல பொண்ண கூட்டிட்டு வர முடியாது அப்படின்னா நாங்க அதுக்கும் வேற ஒரு ஐடியா வச்சிருக்கோம்.,  நம்ம குறிச்ச தேதியில் இங்க பந்தக்கால் நட்டு தாலி எடுப்பதெல்லாம் பார்த்துட்டு., அதுக்கப்புறம் ஜோசியர்  ட்ட இன்னொரு நேரமும் குறித்து வைத்திருக்கோம்,  அதுக்கு மறுநாள் நாங்க மதுரைக்கு வாரோம்., வந்து  பொண்ணுக்கும் மாப்பிளைக்கு மட்டும் அங்க துணி எடுத்துருவோம்,  மத்தவங்களுக்கு அவங்கவங்க எடுத்துக்கிடட்டும் என்ன சொல்லுறீங்க” என்று கேட்டார்.

  “நீங்க எப்படி சொன்னாலும் சரிதான், பொண்ணு கூட்டிட்டு வரது பிரச்சனை இல்ல., மொத மொதல்ல நீங்க வந்து பொண்ண கூட்டிட்டு போறதுதானே முறை., அதனால தான் யோசிச்சோம்”, என்று தயங்கி சொல்லவும்.,

    “அப்ப சரி நம்ம ரெண்டாவது சொன்ன ஐடியாவே வச்சுக்கிடுவோம்., அது உங்களுக்கு சரிதானே, நீங்க பந்தக்கால் நடுவதற்கு எல்லாரும் முதல் நாள் வந்துருங்க, பந்தக்கால் நட்டு, தாலி எடுத்து முடிச்சுட்டு நீங்க கிளம்பி ஊருக்கு போனதுக்கு  பிறகு மறுநாளுக்கு மறுநாள் நீங்க அங்க கடைக்கு வந்துருங்க, கல்யாண பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் அவங்க அவங்களுக்கு புடிச்ச மாதிரி எடுத்து விடுவோம்” என்று இருவரும் பேசி முடித்தனர்.

   பேத்தியோ தாத்தாவை பார்த்து “சூப்பர் தாத்தா” என்றாள்.

ஏன் என்றால் இந்த ஐடியாவை கொடுத்ததே அவள்தான்.

   வீட்டில் பட்டு எடுப்பதற்கான பேச்சு வரும் போது இவள் ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டாள்,

    “முதல்ல அவங்க ஊர் சைடு உள்ளவங்க, இங்க கூட்டிட்டு வருவாங்களான்னு கேளுங்க தாத்தா., அவங்களுக்கு பிடித்து இருக்கணும்., அவங்க கட்ட போற கல்யாண சேரி அவங்களுக்கு புடிச்சதா இருக்கணும்,  அண்ணனுக்கு புடிச்சதா இருக்கட்டும் ன்னு எல்லாம் சொல்லக்கூடாது,  வாழ்க்கையில் ஒரு தடவை கட்ட போற சேரி, அது அவங்களுக்கு பிடிச்சதா தான் இருக்கணும், அதுதான் முக்கியம்”. என்று சொன்னாள்.

தாத்தாவும் வீட்டில் உள்ளவர்களை பார்த்து கேட்க., அவர்களும் “அவள் சொல்வது சரிதானே” என்று பேசிக்கொண்டனர்.

   அதன்பிறகு தான் ஜோசியரை கலந்து ஆலோசித்து இந்த முடிவுக்கு வந்திருந்தனர். அதை இப்போது சொல்லி அவர்கள் வீட்டிலும் சரி என்று சொல்ல அதுபோலவே செய்வதாக இருந்தது.

    சரியாக பந்தக்கால் நடும் அன்று அவர்கள் சென்னை வந்து இறங்கி இருந்தவர்கள்,  குளித்துக் கிளம்பி நேராக மணமகனின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

  வீட்டில் உள்ள பெரியவர்கள் மட்டுமே வந்திருக்க., கடைசி மகனும் மருமகளும் வீட்டில் பிள்ளைகளோடு இருந்தனர்.

  மூத்த மகன் மூத்த மருமகள் இரண்டாவது மகன் மருமகள் தாத்தா பாட்டி என இவர்கள் ஆறு பேர் வந்திருக்க பெண்ணின் உடன் பிறந்தவனான சரிகாவின் சகோதரனும் வந்திருந்தான்.

   ஆனால் இவள் யார் வருவார் என்று எதிர்பார்த்தாளோ, அவன் வரவில்லை ‘ரொம்ப மோசம்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாலும் வந்தவர்களிடம் சாதாரணமாக தான் பேசினாள்.

    யாரிடமும் அதிகமாக பேசவில்லை, பாட்டி தான் “என்னமோ சொன்ன, நம்ம வீட்டு பங்க்ஷன் நம்ம தான் எடுத்து செய்யணும், நான் ஒதுங்கி எல்லாம் நிக்க மாட்டேன்னு சொன்ன”, என்று கேட்க.,

    “பேசாம இருங்க பாட்டி கல்யாணம் அன்னைக்கு பாருங்க”, என்று மட்டும் சொல்லிவிட்டு அவள் வேலையை பார்க்க அவள் கிளம்பி விட்டாள்.

     வந்தவர்கள் மதிய உணவிற்கு பிறகு ஊர் திரும்ப அதற்கேற்றார் போல் அந்த நேரத்தில் ஒரு ட்ரைனும் இருப்பதாக சொல்லி இருந்தனர், அதிலேயே ஏற்கனவே டிக்கெட் புக் செய்து இருக்க கிளம்பிவிட்டனர்.

    மறுநாள் மாலை இவர்கள் இங்கிருந்து கிளம்புவதாக இருந்தது. ட்ரைன்ல போயிருவோமா காலைல போய் அங்க கிளம்பிட்டு அதுக்கப்புறம் துணி எடுத்துட்டு மத்தியான பிளைட்ல கிளம்பி நைட் வீட்டுக்கு வந்துரலாம் என்று அவர்களுக்குள் பேசி வைத்திருந்தனர்.

    அதுபோலவே முதல் நாள் இரவு ட்ரெயினில் கிளம்பி இருக்க,  இவள்தான் ட்ரெயினில் போகும் போது “அவங்க ரெண்டு பேருக்கும் மட்டும் தான் டிரஸ் செலக்ட் பண்ணும், என்ன அங்க வச்சு எடுன்னு எல்லாம் சொல்லக்கூடாது”, என்று சொல்லவும்.

  அவளுடைய பெரியப்பா மகள் தான், “இது என்னடி கண்டிஷன் கண்டிஷனா போட்டுக்கிட்டு இருக்க”, என்று கேட்டார்.

   “அக்கா உங்களுக்கு புரியாது, எனக்கு சென்னையில் தான் பிடிக்கும் நான் எனக்கு சென்னையில் பிடித்த மாதிரி எடுத்துக்கிறேன், ஒருவேளை எனக்கு அங்க புடிச்ச சாரி இருந்துச்சுன்னா தூக்கிடுறேன் போதுமா”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

     “நல்ல பொறந்திருக்கமா, ஏற்கனவே 4 பட்டு கட்டாம வைத்து இருக்க”, என்று சொல்லிய பாட்டி தான்,

     “எப்படித்தான் உங்க அம்மா உன்னை பெத்தாலோ, உன்னை பெத்து எடுக்கும் போது இப்படித்தான் ட்ரெடிஷனலா பெத்து எடுக்கணும்னு நினைச்சு பெத்தலோ என்னவோ., சேல சேல ன்னு இருக்காதா”, என்று சத்தமாக  முனுமுனுத்தார்.