சிறிது தூரம் சென்றதும் பேகில் இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து முகத்தை கழுவியவள் ஷாலில் முகத்தை துடைத்த படியே சென்றாள்.
பேருந்தை இயக்கிக் கொண்டிருந்த தாமரைக்கோ என்றைக்கும் இல்லாத படபடப்பு. “தப்பு பண்ணிட்டோம்”, என்ற குற்ற உணர்வு.
“கொஞ்சம் அமைதியா வா பாப்பான்னு சொல்லி இருக்கலாமோ? அவ்வளவு பேசி இருக்க கூடாதோ? சந்தோஷமா வந்த பிள்ளையை அழ வச்சிட்டோமே?”, என்று எண்ணிய படியே வந்தான். அவள் அழுததில் அவன் முகத்தில் இருந்த சிரிப்பு எல்லாம் மறைந்திருந்தது.
அவர்கள் ஊரில் பேருந்தை நிறுத்த அவனது தங்கைகள் அவனுக்கும் கதிருக்கும் பை சொல்லி விட்டு இறங்கிக் கொண்டார்கள். மீண்டும் ஆட்களை ஏற்றி விட்டு திருச்சி நோக்கி பேருந்து செல்ல கூட்டம் குறைவாக இருந்ததால் கதிர் முன்னே வந்து கண்டக்டர் இருக்கையில் அமர்ந்தான்.
நண்பன் முகம் ஒரு மாதிரி இருக்கவும் “என்ன ஆச்சு டா?”, என்று கேட்டான். அவன் பின்னால் நின்றிருந்ததால் அவனுக்கு என்ன நடந்தது என்று தெரிந்திருக்க வில்லை.
“ஒரு பிள்ளை ரொம்ப சிரிச்சு பேசிட்டு வந்துச்சு டா. கொஞ்சம் சத்தம் போட்டுட்டேன். அழுதுட்டே இறங்கி போச்சு. கஷ்டமா இருக்கு டா”
“இதுக்கு என்ன கஷ்டம்? உனக்கு தொந்தரவா இருந்ததுனால தானே சொல்லிருப்ப? பரவால்ல விடு”
“இல்லை டா, நான் திட்டுனேன்னு மத்தவங்களும் அவளை திட்டிட்டாங்க. அவ அழுதுட்டே போறா. முகம் எல்லாம் சிவந்துருச்சு. வீட்ல வேற கேப்பாங்கள்ல? என்ன சொல்லப் போறாளோ?”, என்று சொல்ல கதிர் வேறு ஏதோ பேசி தாமரையின் மனதை திசை திருப்பினான்.
அன்றைய இரவில் பன்னிரெண்டு மணிக்கு பேருந்தை டிப்போவில் கொண்டு நிறுத்தி விட்டு கதிருடன் அவர்கள் ஓய்வெடுக்கும் அறைக்குச் சென்றான். இனி அடுத்து காலையில் மூன்று மணிக்கு எழுந்து கிளம்ப வேண்டும் என்பதால் கதிர் வாங்கி வந்த உணவை இருவரும் உண்டு விட்டு படுத்தார்கள்.
படுத்த பிறகும் தாமரைக்கு உறக்கம் வரவில்லை. முதல் முறையாக அவன் மனதுக்குள் ஒரு பெண்ணின் முகம் மின்னியது.
“பொம்மை மாதிரி இருந்தா, அழ வச்சிட்டேனே? இனி அந்த பஸ்ல வருவாளா? ஒரு மாதிரி அவமானமா இருந்துருக்கும்ல? சே நான் கொஞ்சம் அமைதியா இருந்துருக்கணும். நான் கொஞ்சம் சும்மா இருந்திருந்தா அடுத்த ஸ்டாப்ல இறங்கிருப்பா. தப்பு பண்ணிட்டேன். நாளைக்கு காலைல அவ இந்த பஸ்லயா வருவா? அந்த ஸ்டாப்ல நிறைய பேர் ஏறுவாங்க. ஆனா இவ இருப்பாளான்னு தெரியலையே”, என்று அவன் மனசாட்சியே அவனிடம் பேசிக் கொண்டிருக்க அவனுக்கு தூக்கம் தூரப் போனது.
அடுத்த நாள் காலையில் லேசான சோர்வுடன் தான் குளித்து கிளம்பி வண்டியை எடுத்தான். இத்தனை நாள் இருக்கும் உற்சாகம் இன்று அவனுக்கு இல்லை.
அவர்கள் இரண்டாவது ட்ரிப் போகும் போது தான் அவள் பேருந்தில் ஏறுவாள். ஆனால் இப்போது முதல் முறை போகும் போதே அவன் கண்கள் அவளுடைய நிறுத்தத்தை அலசியது. ஏனோ ஒரு முறையாவது அவள் முகத்தை பார்த்து விட்டால் போதும் என்று ஒரு உணர்வு அவனை ஆட்கொண்டது.
அவர்கள் ஊரில் ஆள் ஏற்றி விட்டு ஆர்வமாகவே வந்தான். அவளுடைய நிறுத்தத்தில் அவள் ஏறுகிறாளா என்று அவன் கண்கள் ஆர்வமாக தேட அவள் இன்று வரவே இல்லை. ஒரு மாதிரி மனது மீண்டும் சோகத்தை தத்தெடுத்துக் கொண்டது.
“இனி வரமாட்டாளோ? அவளுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ? வீட்ல இனி அந்த பஸ்ல போகாதேன்னு சொல்லிருப்பாங்களோ?”, என்று பல கவலைகள் அவனை சூழ்ந்து ஒரு மாதிரி மனக் குழப்பத்துக்கு ஆளானான். ஒரு வேளை அவளை இன்று பார்த்திருந்தால் இவ்வளவு கவலை வந்திருக்காதோ என்னவோ?
மதியம் பேருந்தை அங்கே விட்டுவிட்டு அவன் வண்டியை எடுத்துக் கொண்டு ஊருக்கு வரும் போது அவளது ஊரில் தன்னால் ஒரு நொடி வண்டியை நிறுத்தினான். அவளது ஊருக்கு உள்ளே தள்ளிச் செல்ல வேண்டும் தான். இருந்தாலும் ஏனோ அவன் கண்கள் அந்த பக்கம் பார்த்தது.
பின் மீண்டும் வண்டியை எடுத்துக் கொண்டு சென்றான். அன்னை வேலைக்கு சென்றிருந்ததால் தனக்கு தேவையான உணவை தட்டில் எடுத்து வைத்துக் கொண்டு அமர ஏனோ உண்ண தான் மனதில்லை.
பசி எடுத்ததால் தான் உணவை போட்டான். ஆனால் சாப்பிட தான் மனதில்லை. எண்ணங்கள் முழுக்க அந்த பொம்மை பெண்ணே நிறைந்திருக்க அவன் கைகள் உணவை அலைந்தது.
உணவின் மதிப்பும் அரிசியின் விலையும் நினைவுக்கு வர அதை வீணாக்க மனதில்லாமல் அவசரம் அவசரமாக விழுங்கியவன் “தூங்குனா மட்டும் தான் நீ சரியாவ தாமரை. ஒழுங்கா படுத்து தூங்கு”, என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு உறங்கி விட்டான்.
உறங்கி எழும் போது அவனது அன்னை வீட்டில் தான் இருந்தாள். அவனுக்கும் கொஞ்சம் புத்துணர்வாக இருந்தது. அவனது தங்கைகளும் வேறு வந்திருக்க அனைவரும் பேசிய படியே வசந்தா கொடுத்த கருப்பு காபியை குடித்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது கலையரசி மிச்சரை சிந்திய படியே உண்டு கொண்டிருக்க “கொட்டாம தின்னு டி”, என்று அவள் தலையில் கொட்டினாள் வசந்தா.
“தலைல கொட்டுற. போ மா எனக்கு ஒண்ணும் வேண்டாம்”, என்று கோபத்தில் எழுந்து செல்ல பார்த்தாள் கலை.
அவள் கையை பற்றி அமர வைத்த தாமரை “கோவ படாத கலை குட்டி. டீ குடி”, என்றான்.
“என்ன கோவம் வருது இந்த சின்ன குட்டிக்கு”, என்றாள் வசந்தா.
“நான் கீழ கொட்டினாலும் கடைசில அதையும் வாயில எடுத்து போட்டுருவேன். அதுக்கப்புறம் கீழே கிடந்தா தானே நீ என்னை கொட்டனும்”, என்று வேறு சட்டம் பேச “எம்மா தாயே தெரியாம சொல்லிட்டேன் போதுமா? அப்படியே என் மாமியார் குணம் டி உனக்கு. அத்தைக்கு தான் இவ்வளவு கோவம் வரும்”, என்றாள் வசந்தா.
“நான் மட்டுமா கோப படுறேன்? நேத்து அண்ணன் கோவ பட்டதை பாக்கணுமே? ஒரு அக்காவை அப்படி திட்டிட்டான். அந்த அக்கா அழுதுட்டே போச்சு”, என்று சொல்ல வசந்தா மகனை திகைப்பாக பார்த்தாள்.
“என்ன டா தாமரை? உன் தங்கச்சி என்ன சொல்றா?”
“ஆமா மா, ஒரு கோபத்துல அந்த பொண்ணை கொஞ்சம் சத்தம் போட்டுட்டேன். ரொம்ப சத்தமா பேசிட்டு வந்துச்சு. அதான். அதுக்கு மத்தவங்களும் அந்த பிள்ளையை திட்ட ஆரம்பிச்சிட்டாங்க. கஷ்டமா போச்சு”, என்றான் குற்ற உணர்வுடன்.
வசந்தாவுக்கும் என்ன சொல்ல என்று தெரிய வில்லை. ஆனாலும் ஈ எறும்புக்கு கூட துரோகம் செய்யாத மகனின் மனது இப்போது எப்படி இருக்கும் என்று புரிந்தவள் “இனி யார் கிட்டயும் கவனமா பேசுப்பா. அந்த பொண்ணை இனி பாத்தா எதுவும் சொல்லாத. இதோ வதனா போய் அவ கிட்ட பேசுவா. உன் சார்பா அவ சாரி சொல்லுவா சரியா?”, என்று கேட்க அவன் தங்கையைப் பார்த்தான்.
“இன்னைக்கு அந்த அக்கா வருவாங்கன்னு நினைச்சேன் மா. ஆனா வரலை. இனி பாத்தா அண்ணனுக்காக நான் சாரி கேக்குறேன்”, என்றாள் வதனா.
இங்கே இவர்கள் அவளைப் பற்றி பேசிக் கொண்டிருக்க அவளோ அதீத காய்ச்சல் இருந்தாலும் சமைத்துக் கொண்டிருந்தாள்.
அவள் அழகு மீனா. இந்த உலகத்தில் மொத்த துரதிஷ்டத்தையும் குத்தகைக்கு எடுத்திருக்கும் அழகி. அழுததால் காய்ச்சல் வந்திருக்க அன்று லீவ் போட்டு விட்டு ஓய்வெடுக்க நினைக்க அந்த ஓய்வு அவளுக்கு கிடைத்தால் தானே?
கண்களில் இருந்து கண்ணீர் வடிய மூக்கை உரிந்து கொண்டே மீனை அலசி கொதிக்கும் குழம்பில் போட்டு மூடி வைத்து விட்டு தரையிலே அமர்ந்து கொண்டாள். உடல் அவ்வளவு சோர்வாக இருந்தது அவளுக்கு. இதுக்கு லீவ் எடுக்காமலே இருந்திருக்கலாம் என்று எண்ணிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.