பெருங்காதல் கூடுதடி! – 4

 

 

தேடிக் கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை…

தேடிப் பார்ப்பதென்றே மெய்த்தேடல் தொடங்கியதே…

அவனது அறையில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலின் வரிகள் சித்தார்த்தின் மனதை அழுத்திப் பிசைய, தொய்ந்து போனவனாகக் கையாலாகாத தனத்துடன் இருக்கையில் கண் மூடி அமர்ந்திருந்தான்.

அவன் விழிகளுக்குள் அவன் தொலைத்து விட்ட தேவதையின் பிம்பம்.

வைஷ்ணவியைத் தேடி அலைந்தவனுக்கு இந்த முறையும் ஏமாற்றம் தான். அவளைப்பற்றி சின்ன துப்பு கூட கிடைக்கவில்லை.

ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது இன்னமும் வைஷ்ணவி இருக்கும் இடம் அவனுக்கு தெரியவில்லை. முதலாம் ஆண்டு கல்லூரி படிப்போடு, படிப்பைக் கூட முழுதாக முடிக்காமல், அவன் பார்வைக்கு அகப்படாமல் மறைந்து விட்டாள்.

தொலைந்தவர்களைத் தேட முடியும். மறைந்து வாழ்பவர்களை எங்கனம் தேடிக் கண்டுபிடிப்பது?

அவளிடம் அனாயசயமாக வீசிய நொடி தெரியாத வார்த்தைகளின் வீரியம்… படிப்பு கூட வேண்டாம் என அவள் கண்காணாமல் போன பிறகு தான், அதன் பலமும், அது உண்டாக்கிய சேதமும் புரிந்தது.

அதிலும் அவள் அன்று கேட்ட வார்த்தை… ‘ஒரு மணி நேரத்துக்கு எவ்வளவுன்னு சொல்லி தந்துடுங்க சார்…’ என பிசிரே இல்லாமல் கேட்டாளே… அந்த ஒரு கேள்வியில் மொத்தமாகச் சரிந்தே போய் விட்டான்… எத்தனை வீரியமான வார்த்தைகள்?

கிட்டத்தட்ட அதேயளவு வார்த்தைகளைத் தானே கொஞ்சமும் யோசிக்காமல் அவளை நோக்கி வீசியிருந்தான்? அதுவும் அத்தனை பேர் பார்த்து நிற்க? பூ மனம் கொண்டவள் எத்தனை துடிதுடித்திருப்பாள்? அவளின் நம்பிக்கையைக் காதலை மொத்தமாக சிதைத்திருக்கிறானே!

அதுவும் பிரியும் அன்று கூட சீனியர் என்று அழைத்தவள், அவளை மீண்டும் தேடிச் சென்றபோது சார் என்று அழைத்து எத்தனை தூரம் தள்ளி நிறுத்தியிருந்தாள். எத்தனை மனபாரம் கொண்டிருந்தால் அதுபோல அவளால் சொல்லியிருக்க முடியும்?

அவள் மனதிலிருக்கும் காதலின் அளவு அவன் அறியாததா? அதனை வெறுப்பாக மாற்றி வைத்தது அவன் அல்லவா! இந்த பாவத்திற்கு எப்பொழுதேனும் மன்னிப்பு கிடைக்குமா? இல்லை வாழ்க்கை முழுவதும் வாள் அறுக்கும் வேதனை போல இந்த தண்டனையை அனுபவித்துக் கொண்டே இருக்க நேரிடுமா?

அவளது ஒரு பார்வை அவனை உயிர்ப்பிக்குமே! தான் கண்டு கொண்டதைப் பார்த்ததும் அவஸ்தையுடன் அந்த விழிகள் அலைபாயுமே! அதன் அழகில் எத்தனை தூரம் மயங்கியிருந்திருக்கிறான்.

‘அந்த விழிகளைக் கலங்கச் செய்து விட்டேனே! பாவி நான்! மன்னிப்பைக் கேட்கக் கூட தகுதியில்லாத கொடும்பாவி நான்…’ எனத் தவிக்கும் அவன் மனதில் தீராத கொடும் வலி.

இன்னமும் அவனின் முகம் தாங்கி அவள் பேசிய வார்த்தைகள் அவனுக்கு நினைவில் இருக்கிறது. மொத்தமாக விலகிவிடும் முடிவைத் துளியும் யோசிக்காமல் அப்பொழுதே எடுத்து விட்டாளே! அவ்வளவு தூரம் அந்த வார்த்தைகள் காயப்படுத்தியிருந்தால் தண்டனை அவனுக்கு தானே தர வேண்டும்?

அதை விடுத்து, ஊர் வேண்டாம், படிப்பு வேண்டாம், காதல் வேண்டாம் என்று அவளை ஏன் தண்டித்துக் கொள்கிறாள்?

‘போதும்டி வந்துடு…’ அவன் மனம் ஊமையாய் அழுதது. வெளியே அப்படியொரு இறுக்கம்.

குளித்துவிட்டு கருப்பு சட்டையும் நீல ஜீன்சும் அணிந்து வேகமாக உணவு உண்ண வந்தான்.

அவன் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்த அவனின் அன்னை பகவதிக்கு, அவன் உடையை பார்த்ததுமே முகம் சுருங்கி விட்டது. இன்று கூட இந்த நிறம் தான் கிடைத்ததா இவனுக்கு என்று தான் தோன்றியது. பெருமூச்சோடு தலையை இடவலமாக அசைத்துக் கொண்டார்.

“ஹேப்பி பர்த்டே கண்ணா…” பாசமாக அவன் தலை வருடி சொல்லத் துடித்த கைகளை வலுக்கட்டாயமாக இழுத்துப் பிடித்தபடி மெதுவான குரலில் சொன்னார். மகனிடம் நெருங்க முடியாத வேதனை அந்த அன்னையிடம். பார்வையிலேயே தள்ளி நிறுத்தும் அவனிடம் எங்கனம் நெருங்குவார்?

காதிலேயே வாங்காதவன் போல சித்தார்த் உணவில் மட்டும் கவனமாயிருந்தான்.

கோயிலில் மகன் பெயருக்கு அர்ச்சனை செய்து, நெய் வேத்தியம் படைத்து வந்திருந்தவர், மகன் உண்ணுபதற்காக அவன் தட்டிலும் கொஞ்சம் பொங்கலை வைக்க வந்தார். வைக்கும் முன்பே கை நீட்டித் தடுத்து விட்டான் அவன்.

பிரசாதம் உண்பதற்காக வற்புறுத்தினால் உணவையும் உண்ண மாட்டானோ என்கிற கலக்கத்தில் அவரால் மேற்கொண்டு வற்புறுத்த முடியவில்லை.

அவன் உண்டு முடிக்கும் தறுவாயில், “அப்பா பர்த்டே பார்ட்டி வைக்கிறதைப் பத்தி சொன்னாருன்னு சொன்னேனே கண்ணா…” தயங்கி தயங்கிச் சொன்னவரை அவன் விழியுயர்த்தி கூட பார்க்கவில்லை.

கணவர் சொன்னதைச் செய்யாவிட்டால் அவர் ஒரு வழி செய்து விடுவார். மகன் வழக்கம்போல பிடி கொடுக்க மறுக்கிறான். பகவதிக்கு இந்த இக்கட்டான நிலையை கையாள தெரியவில்லை.

“கண்ணா…” என்றார் மீண்டும் ஒருமுறை. இணக்கமான ஒரு பதிலைப் பெற்று விட மாட்டோமா என்கிற ஏக்கம் அவரிடம்.

இதுநாள் வரையிலும் சித்தார்த் பெற்றோரிடம் ஒதுக்கத்தைத் தான் காட்டுவானே தவிர பெரும்பாலும் கோபத்தைக் காட்டியதில்லை.

இந்த முறை அவனால் அப்படி இருக்க முடியவில்லை. வைஷ்ணவியைத் தேடிச் சென்றதில் அவனுக்கு எந்த விவரங்களும் கிடைக்கவில்லை. கடைசி நம்பிக்கையும் பொய்த்து போனது போல மிகப்பெரிய ஏமாற்றம்! இனி அவள் கிடைக்கவே போவதில்லையோ என்கிற அளவு விரக்தியும் பயமும்… கிட்டத்தட்ட எல்லா ஊரிலும் சல்லடை போட்டு தேடியாயிற்று. நிறைய டிடெக்டிவ் நிறுவனங்களை அணுகியாயிற்று. எத்தனை ஏமாற்றங்கள்… எவ்வளவு ஏக்கங்கள்… மனதின் வலியைத் தீர்க்க அவளை ஒரு முறை நேரில் பார்த்து விட்டால் கூட போதும் என மனம் அத்தனை துடிக்கிறது. அவளை கட்டி அணைத்துச் சிறு பிள்ளை போல கதறி அழுதால் தன் மனபாரம் இறங்கி விடாதா என தவியாய் தவிக்கிறான். ஆனால், அவளைக் கண்ணால் பார்க்க முடியவில்லை. இனியும் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. உயிரோடு தான் இருக்கிறாளா என்று கூட தெரியவில்லை. அந்த அழுத்தத்தில் இருப்பவன் இப்பொழுது எரிமலையின் சீற்றத்திலிருந்தான். இந்த நேரம் பார்த்து அன்னை இப்படி பேசவும் அவன் கோபம், எரிச்சல் எல்லாம் அன்னை மீது திரும்பியது.

“என்னம்மா?” என்று அதட்டலாகக் கேட்டவன், தட்டை கொஞ்சம் தள்ளி விட்டு கோபமாக தன் முழு உயரத்துக்கும் நிமிர்ந்து நின்றான்.

பகவதி பயத்தில் எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டார். மகனின் ஆக்ரோசம், நிதானமற்ற தன்மை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போவதை வலியுடன் பார்த்தார். இவன் எப்பொழுது தன்னை செம்மைப் படுத்திக் கொள்வான்?

‘கடவுளே! இவன் நிலை மாறாதா?’ என அன்னையாய் அவரின் உள்ளம் துடித்தது.

அவரின் தவிப்பையும் துடிப்பையும் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல், “எனக்கு பர்த்டே செலிபிரேஷன் வேண்டாம்ன்னு வருஷ வருஷம் உங்ககிட்ட சொல்லுவேனா? சும்மா நைநைன்னு என்னைத் தொந்தரவு பண்ணறதை முதல்ல நிறுத்துங்கம்மா… என்னை கொஞ்சம் அப்படியே விட்டுடுங்க… இனிமே இந்த மாதிரி பேச்சு வந்தா நான் மனுஷனாவே இருக்க மாட்டேன் பார்த்துக்கங்க…” என அன்னை என்றும் பாராமல் கடினமாக பேசிவிட்டு, விறுவிறுவென்று சென்று விட்டான்.

இத்தனை கோபத்தையும் கடினத்தையும் மகனிடம் எதிர்பார்க்காமல் திகைத்துப் போய் நின்று விட்டார் பகவதி.

அவன் கோபத்தைக் காட்டிலும், முழுமையாக உணவை உண்ணாமல் சென்றது தான் அன்னைக்கு மிகவும் வலித்தது. உணவு உண்டதும் பேசலாம் என நினைக்க முடியாமல், மகன் அதற்கெல்லாம் வாய்ப்பே தருவதில்லை. அத்தனை தூரம் தள்ளி நிறுத்துகிறான்.

இத்தனை காலமும் கணவனின் உதாசீனத்தைத் தாங்கிய போதெல்லாம் மகனுக்காக என்று பொறுத்து போன அன்னையால்… இப்பொழுது மகனின் உதாசீனத்தை அவ்வளவு எளிதாக தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஒரே பற்றுக்கோல் என என்னும் அவனும் இப்பொழுதெல்லாம் அன்னை என்ற நினைவே இன்றி சுற்றுவது தாங்க முடியாத வேதனையை தந்தது.