“யாரு ரவி, பாரதி வீட்டுக்காரரோட அண்ணன் பொண்ணோ?” எனக் கேட்டார் வரவேற்பில் நின்றிருந்த பெண்மணி. அவர் கேட்ட விதமே இந்தப் பெண்ணால்தானே பாரதிக்கு பிரச்சனை என்ற ரீதியில் இருந்தது.
“ம்ம்… என் மாமா பொண்ணு அத்தை” என்ற ரவி, கண்களால் தன்னை பின் தொடரும் படி அவளுக்கு சொல்லி விட்டு மண்டபத்தின் உள்ளே சென்றான்.
அவரின் கேள்வியில் மதியின் முகம் சுணங்கியது நொடி நேரம்தான், அப்போதே உதறித் தள்ளி விட்டாள்.
உள்ளே வரவுமே, ஷஷ்டி அவள் வயதை ஒத்த பிள்ளைகளின் கூட்டத்திற்கு சென்று விட்டாள். குழந்தைக்காக கை நீட்டினான் ரவி. குழந்தை அவனிடம் செல்ல மறுக்க, “மாமாகிட்ட போடா, போ மாட்டியா? மாமாடா” என்றாள் மதி.
“ஆமாம்தானே? அதென்ன பேரு, யாரை முழுங்கினேன் நான்?” என அவள் கேட்க, அவளை ரசித்து பார்த்திருந்தவன் ‘என்னைத்தான்’ என பார்வையாலேயே சொன்னான்.
சில நொடிகள் மௌனமாகி விட்டாள் அவள். ரவி கட்டாயமாக விசாகனை தூக்க முயல, அவன் அழவே ஆரம்பித்து விட்டான்.
குழந்தையை சமாதானம் செய்து கொண்டே, “புது இடம்ல, அதான் என்னவோ போல இருக்கான், என்கிட்டேயே இருக்கட்டும் மாமா” என்றாள் மதி.
“புடவை கட்டிக்கிட்டு இவனையும் வச்சுக்க முடியுமா? மேனேஜ் பண்ணிப்பியா?” எனக் கேட்டான்.
“மேனேஜ் பண்ண என்ன இருக்கு? நான் பார்த்துப்பேன்” என்றாள்.
“ம்ம்…” என்றவன் அவள் அமர இருக்கை காண்பித்து விட்டு விலகி சென்று விட்டான்.
பூர்ணிமா அவளை தேடி வந்து பேசினார். நெருக்கத் தொடுத்த மல்லியை அளவாக ஒற்றைச் சரம் மட்டும் சூடியிருந்தாள். மெனெக்கெட்டு மணப்பெண் அறைக்கு சென்று இன்னும் கொஞ்சம் பூ எடுத்து வந்து தன் கையாலேயே அவளுக்கு வைத்து விட்டார் பூர்ணிமா.
அவள் சங்கடமாக சிரிக்க, “அப்புறம் பேசுறேன் உன்கிட்ட, திடு திப்புனு வந்து உன் மருமக வந்திருக்கா போய் பார்த்திட்டு வான்னு சொல்லிட்டு போறான். எனக்கு என்ன பேச செய்யன்னே தெரியலை” என பட படத்தார்.
அதிர்ந்து போனவளாக அவள் பார்க்க, வாய் கொள்ளா சிரிப்புடன் அவளின் தோளை பற்றிய பூர்ணிமா, “என்னை தவிர வேற யாருக்கும் தெரியாது, ஃபங்ஷன் முடிஞ்சதும் நீ பாட்டுக்கும் போயிடாத” என அன்புக்கட்டளை போட்டார்.
சிறு பதட்டத்தோடு தலையாட்டிக் கொண்டாள். “அழகா இருக்க மதி, இவ்ளோ நாள் வாயே தொறக்காம இன்னிக்கு வந்து சொல்றான் பாரு இவன்” என இன்னுமே பர பரப்பு அடங்காமல் பேசினார் பூர்ணிமா.
மாப்பிள்ளை வீட்டார் வந்து விட்டதாக யாரோ சொல்லிச் செல்ல, ஓட்டமும் நடையுமாக வெளியில் சென்றார் பூர்ணிமா.
‘இப்படியா அதிரடி பண்ணி வைப்பார்? ஒரு வார்த்தை எனக்கும் சொல்லிருக்கலாம், தனியா மாட்டட்டும்!’ என ரவியை மனதிற்குள் திட்டித் தீர்த்தாள் மதி.
மணப்பெண் அறையிலிருந்து வந்த பாரதி, நேராக இவளிடம் வந்தாள். கையில் பால் புட்டி இருந்தது. அம்மாவை கண்டதும் தாவிய குழந்தையை சோர்வை மீறிய தாய்மையுடன் வாங்கிக் கொண்டே, எப்போது வந்தாய் வேலை எப்படி செல்கிறது என அவளிடம் விசாரித்தார்.
அவளும் பதில் தர, குழந்தையை மீண்டும் அவள் வசமே ஒப்படைத்தாள் பாரதி. பால் புட்டியையும் அவளிடம் தந்து, “பார்த்துக்க, மேள சத்தத்துக்கு மிரண்டா கொஞ்சம் தள்ளி அழைச்சிட்டு போ” என அறிவுறுத்தி விட்டு வெளியே சென்றாள்.
மாப்பிள்ளை வீட்டாரை பெண் வீட்டார் வரவேற்று அழைத்து வந்தனர். அதன் பின் சடங்கு சம்பிராதயங்கள் என நடைபெற ஆரம்பித்தன. அம்மா, அண்ணனின் மனைவி, அண்ணன் மகள்களின் குடும்பம் என அனைவரையும் மேடைக்கு ஏற்றியிருந்தார் சீனு. ரவியும் அங்கிருக்க, தண்மதியால் அவனை குறை வைக்காமல் பார்க்க முடிந்தது.
உறங்கிப் போயிருந்த குழந்தையை பத்திரமாக பிடித்துக்கொண்டு நிகழ்வுகளை பார்ப்பது போல ரவியை நன்றாக ரசித்து பார்த்திருந்தாள் மதி. ஏதோ ஒரு நொடியில் அவனது பார்வையும் அவள் பக்கமாக திரும்ப, வெட்கத்தில் நெற்றியை பிடித்துக்கொண்டே குனிந்து கொண்டாள். அவனும் சின்ன சிரிப்புடன் கடினப் பட்டு தன் கவனத்தை அவளிடமிருந்து மாற்றினான்.
நிச்சயப் பத்திரிக்கை வாசிக்க பட்ட பின் நலங்கு செய்வது, புகைப்படம் எடுப்பது என சென்று கொண்டிருந்தது.
மைசூரிலிருந்து ரவியின் பால்ய கால நண்பர்கள், அலுவலக நண்பர்கள் என சிலர் வந்திருந்தனர். மேடையை விட்டிறங்கி அவர்களை சாப்பிட அனுப்பி வைத்தவன் மதியிடம் வந்தான்.
அவள் பதற, “ஹேய் இவ்ளோ கூட்டத்துல என்ன செய்ய போறேன் நான்? சாப்பிட போக சொல்லலாம்னு வந்தேன்” என்றான்.
“அதுக்குள்ளவா? பொண்ணோட அண்ணி நான், விஷேஷ வீட்டுக்காரியே பந்திக்கு முந்துறதா?” எனக் கேட்டாள்.
“பார்டா!” என அவன் பொய்யாக வியந்தான். குழந்தை சிணுங்க என்னவென பார்த்தவள், “டயப்பர் சேஞ்ச் பண்ணணும் போல” என்றாள்.
மேடையில் நவ்ரிதி பக்கத்தில் பாரதிதான் நின்று அவளுக்கு உதவிக் கொண்டிருந்தாள்.
அவளை காத்திருக்க சொன்னவன் அக்காவிடம் போய் பேசி விட்டு வந்தான்.
“என்ன வெறும் கையோட வர்றீங்க மாமா?” என கேட்டவளை தன்னுடன் வரும் படி சொல்லி விட்டு நடந்தான்.
மணப்பெண் அறைக்குத்தான் அழைத்துச் சென்றான். பாரதி சொன்ன பையை எடுத்து மதியிடம் கொடுத்தவன் குழந்தையை வாங்கிக் கொண்டான்.
அவள் அழகாக குழந்தையை கவனிக்க, “பேபிய கேர் பண்ணிக்கிறதுல நீ எக்ஸ்பெர்ட்டா இருக்கலாம், அதுக்காக உடனே எல்லாம் என்னை அப்பா ஆக்க நினைக்காத” என்றான்.
கண்களை உருட்டிக் கொண்டு அவனை பார்த்தாள்.
“ஃபர்ஸ்ட் என் பேபிக்கு அம்மா ஆக போறவளை நல்லா கொஞ்சி கொஞ்சி குடும்பம் நடத்திக்கிறேன், அப்புறமா பேபியை கொஞ்ச ரெடியாகலாம்”
“மாமா…” என அவள் கண்டிக்க, “ஏம்மா…” என ராகமிழுத்தான்.
“நிஜமா சொல்றேன் மதி, நீ இன்னிக்கு… போ… கண் எடுக்க முடியலை உன்னிட்டேருந்து. நான் என்ன செய்றேன் பண்றேன்னு எதுவும் கண்ட்ரோல்ல இல்லை. படிக்கிற பொண்ணை லவ் பண்ணவே கூடாது. வருஷக் கணக்கா அவஸ்தை பட வச்சிட்ட” என்றவன்.
தனிமையில் இப்படியெல்லாம் அவன் பேச, என்ன எதிர்வினையாற்ற என்றே அவளுக்கு தெரியவில்லை.
விசாகன் படுக்கையில் அமர்ந்து கைக்கு கிடைத்ததை வைத்து விளையாடிக் கொண்டிருக்க, சட்டென அவளின் கை பற்றிக் கொண்டான்.
அவனது தொடுகை ஒன்றும் அவளுக்கு புதிதல்ல, ஆனால் இப்படி கண்களில் வெளிப்படையாக ஆசையை தேக்கி வைத்து அவன் அவளின் கை பிடிப்பது இதுதான் முதல் முறை.
உடலெங்கும் எழுந்த மென் அதிர்வுகளில் பட படத்து, பின் தன்னை நிலைப் படுத்திக் கொண்டு அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.
“அப்படியே என் கூட இழுத்திட்டு போயிடலாமான்னு தோணுது, என்ன பண்ணலாம்?” எனக் கேட்டான்.
“சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றாள்.
பிடியிலிருந்த அவளது கையை சுண்டி தன்னை நோக்கி அவளை இழுத்தான். அவனில் லேசாக மோதிக் கொண்டவள் விலகப் போனாள். அவளை விடாதவன், நெருக்கத்தில் அவளின் விழிகளை சந்தித்தான்.
இருவரது சுவாசங்களும் முட்டி மோத, “ஹ்ம்ம்… சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம்” என அவள் கேட்டறியாத தாபம் நிறைந்த குரலில் சொன்னான்.
அவளின் மூச்சுகள் சீரற்று இருப்பதை உணர்ந்து அவளை விலக்கி நிறுத்தினான். அவளின் கன்னம் தட்டியவன், “டென் மினிட்ஸ் இங்கேயே இருந்து ரிலாக்ஸ் பண்ணிட்டு வா” என சொல்லி வெளியேறினான்.
அவன் தன் கை பிடித்து கிறங்கியதிலிருந்து அவளால் வெளிவர முடியவில்லை. கண்கள் மூடிக் கொண்டவள் முடிந்து போன நிகழ்வை கற்பனையில் மீள் உருவாக்கம் செய்தாள்.
கற்பனைக்கு எல்லைகள் ஏது, அவனது அணைப்பிற்குள் அவள் செல்ல, அவளின் முகத்தில் தன் பிஞ்சுக் கரம் கொண்டு அடித்து நிஜத்திற்கு அழைத்து வந்தான் குழந்தை.
தன் நெற்றியில் தட்டிக் கொண்டு சிரித்தவள், குழந்தையின் கன்னங்கள் இரண்டிலும் முத்தங்கள் வைத்து அவனை கட்டியணைத்துக் கொண்டாள்.