தயாராகி விட்டாயா எனக் கேட்டு அவனிடமிருந்து செய்தி வந்தது. இப்போது அவன் பிஸியாக இருப்பான் எனது தெரியும், அத்தனை வேலைகளுக்கு மத்தியிலும் தன்னை பற்றி கேட்கும் அவனது அக்கறையில் தித்திப்பாக உணர்ந்தாள்.
முழுதாக தயாராகியிருந்தவள் அவனுக்கு செல்ஃபி எடுத்து அனுப்பி வைத்தாள்.
“என்னடா நான் பேசிட்டு இருக்கேன், ஃபோன்ல அப்படி என்னத்த பார்த்து ரசிச்சிட்டு இருக்க?” எனக் கேட்டார் பூர்ணிமா.
“வர வர எதுக்கெடுத்தாலும் இதை ஒன்ன சொல்லிடுற, எங்க காட்டு நானும் அவளை பார்க்கிறேன்” என அவர் கைப்பேசியை பறிக்க முனைந்தார்.
முதலில் தராதவன் அம்மாவின் முறைப்பில் சிரித்துக்கொண்டே கைப்பேசியை அவரின் கையில் கொடுத்தான். திரையில் நிறைந்து போயிருந்தாள் தண்மதி.
இன்று இத்தனை பெரிய அதிர்ச்சியை தன் மகன் தனக்கு கொடுப்பான் என அவர் நினைக்கவே இல்லை. பேச்சிழந்து போய் மகனை பார்த்தார்.
“என்னம்மா?” மலர்ந்த முகமாக கேட்டான்.
“எவ்ளோ நாளாடா?” என இன்னும் அதிர்ச்சி விலகாமல் கேட்டார்.
“அவளை பார்த்த அன்னிலேருந்து” என மென்மையான குரலில், சிறு வெட்கத்துடன் மகன் சொல்லவும் என்னிடம் மறைத்து விட்டானே என்ற கோவத்தை தாண்டிக் கொண்டு மகிழ்ச்சியால் நிறைந்து போனது அந்த தாயின் மனது.
“ரிதியோட மேரேஜ் முடியட்டும், அப்பாகிட்ட சொல்லிக்கலாம்.. அதுவரை…” என்றவன் தன் வாயில் ஒரு விரல் வைத்து, “ஷ்ஷ்ஷ்…” என்றான்.
“உனக்கு சொல்ல நேரம் காலமே கிடைக்கல, அடுத்து என்ன செய்றதுன்னே தெரியாம பிளாங் ஆகிட்டேன் டா” மகனது முதுகில் செல்லமாக அடித்து குறை சொன்னார்.
“பிளான் பண்ணியா சொன்னேன், இன்னிக்கு ரொம்ப அழகா தெரிஞ்சாளா, இதே லுக்ல உனக்கு அவளை மருமகளா காட்டணும்னு திடீர்னுதான் தோணிச்சு”
“ம்ம்… நல்ல அழகாதான் இருக்கா. உன் அப்பயி கொஞ்சம் ஆடுவாங்க, இந்த விஷயத்துல மட்டும் அவங்களுக்கு ஏதாவது ஜால்ரா போடட்டும் உன் அப்பா, அப்ப வச்சுக்கிறேன்”
“உனக்கு ஓகேதானே ம்மா?”
“இல்லாம என்னடா? எவ்ளோ குணமான பொண்ணு? ஆனா இப்படி உங்க ரெண்டு பேருக்கும் செய்யலாம்னு நான் யோசிக்கவே இல்லை. அவளும் என்னைய கண்டா சகஜமாவே பேச மாட்டா, என்ன சொல்லி பயமுறுத்தி வச்சிருக்க?”
“அவகிட்டேயே கேட்டுக்க மா” என்றவன் தயாராக அறைக்கு சென்று விட்டான். அடுத்து என்ன செய்ய வேண்டும் என யோசித்து பூர்ணிமா செயல்பட சில நிமிடங்கள் பிடித்தது.
கலப்புத் திருமணம் மூலம் பிறந்த பிள்ளைகளுக்கு நல்ல இடமாக அமைய வேண்டுமே என அவருள் உள்ளூர பயமிருந்தது. மகளுக்கு திருமணம் கூடியிருக்க, இப்போது மகனுக்கும் பெண் கிடைத்திருக்கிறாள், அதுவும் அவருக்கு பிடித்த பெண் என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சிதானே?
அறைக்கு தயாராக வந்திருந்த மனைவியின் இதழ்களில் ஒட்டிக் கொண்டிருந்த புன்னகையை கண்ட சீனு, கண்களை சுருக்கிக் கொண்டு பார்த்தார்.
“பூர்ணி, பொண்ணுக்கே கல்யாணம் பண்ணி வைக்க போறோம், ஆனா நீயே இன்னும் சின்ன பொண்ணாதான் இருக்க?” என்ற கணவரின் குட்டித் தொப்பையில் ஒரு அடி வைத்து அவரை வெளியேற்றி விட்ட பூர்ணிமாவுக்கு ஒரே சிரிப்பு.
‘இதோ விடுதியிலிருந்து புறப்பட்டு விட்டேன்’ என ரவிக்கும் சித்தப்பாவுக்கும் செய்தி அனுப்பி வைத்த தண்மதி அறையை விட்டு வெளியேற எத்தனிக்க, அவளுக்கு அழைத்து விட்டான் ரவி.
“எப்போ ரெடியான நீ? இவ்ளோ லேட்டா புறப்படற, நாங்கலாம் மண்டபம் வந்தாச்சு, டிராஃபிக்ல மாட்டிக்க போற, நீதான் பொண்ணோட அண்ணி, நீயே லேட்டா வந்து சேருவியா?” என கடிந்து கொண்டான்.
“கரெக்ட் டைம் வந்திடுவேன் மாமா, டென்ஷன் ஆகாம வேலைய பாருங்க” என்றாள் தண்மதி.
“ம்ம்… பிளவுஸ் எல்லாம் ஒழுங்கா செக் பண்ணினியா?” என அவன் விசாரிக்க, “மாமா…” என அதட்டினாள்.
“என்ன?”
“நான் ஒன்னும் குழந்தை புள்ள இல்லை”
“நானும் எங்க அப்படி சொன்னேன்? லாஸ்ட்டா எப்போ உன்னை சாரீல பார்த்தேன்? ம்ம்… காலேஜ் ஃபங்ஷன் எப்பவோ, திடீர்னு இன்னிக்கு பெரிய பொண்ணா தெரியற. எவ்ளோ மாறிட்ட?”
“மாமா…” என அவள் சிணுங்க, மெலிதாக அவன் சிரிக்கும் சத்தம் இவளுக்கு கேட்டது.
ரவி சொன்ன படியே புள்ளியியலில் மேற்படிப்பு படித்து முடித்து விட்டவள், தரவு பகுப்பாய்வாளராக பெரிய நிறுவனம் ஒன்றின் திருச்சி கிளையில் பணியில் சேர்ந்து நான்கு மாதங்கள் ஆகின்றன.
முன்னரெல்லாம் அவளிடம் பார்த்து பார்த்து பேசும் ரவி இப்போதெல்லாம் எல்லை மீறித்தான் பேசுகிறான். இருவருமே தங்களது திருமண வாழ்க்கையை ஆசையாக ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர்.
இப்போது அவளை அதிகமாக வெட்கம் கொள்ள வைக்க அவனுக்கு நேரமில்லை, ஆகவே ‘பத்திரமாக வந்து சேர்’ என மட்டும் சொல்லி பேச்சை முடித்துக் கொண்டான்.
கேப் புக் செய்து கொண்டு கிளம்பினாள் தண்மதி. வழியெல்லாம் ரவியின் நினைவுகளே அவளை ஆக்கிரமிப்பு செய்திருந்தது.
பாட்டியின் இழப்பின் போது இவளை தைரியப் படுத்தியது இவன்தான். கணேசன் தன்னுடன் வந்திருக்கட்டும் என்ற போது இவன்தான் தலையிட்டு விடுதியில் இருப்பதற்கு அவரை சம்மதிக்க வைத்திருந்தான்.
தன்னை குறித்து சித்தி பேசியதை இன்னுமே அவள் மறந்திருக்கவில்லை. ரவியின் கண்டிப்புக்கு பின்னர் புண்படும் படி அவளை சித்தி பேசுவதில்லை என்றாலும் அந்தக் காதலில் சித்திக்கு விருப்பமில்லை என்பதை உணர்ந்தே இருந்தாள்.
சித்தியுடன் ஒரே வீட்டில் வசிப்பதை அசௌகரியமாக உணர்ந்தவள் தள்ளியிருப்பதையே விரும்பினாள். அவளின் மனமறிந்து செயல் படுத்தி கொடுத்தது ரவிதான்.
இன்று யாரையும் எதிர்பார்த்து இல்லாமல் சுய பலத்தோடு நிற்கும் பெண்ணாக மிளிர்கிறாள். இதற்கு கணேசனின் தியாகம், பாட்டியின் அர்ப்பணிப்பு மட்டுமின்றி ரவியின் வழிகாட்டுதலும் மிகப்பெரிய காரணம்.
சிறு வயது கவலைகள், வேதனைகள் என எதுவுமே அவளுள் இல்லை, மனம் விரும்பியவனுடனான மகிழ்ச்சியான நிம்மதியான எதிர்காலத்தை நோக்கி காத்திருக்கிறாள்.
என்ன… இப்போது பரமேஸ்வரி பாட்டி உயிருடன் இல்லை என்பதுதான் அவளுக்கு குறை. அவரது ஆன்மா தன்னை கண்டு பெருமை கொள்ளும் என நம்புகிறாள்.
தண்மதி மண்டபம் வந்தடைய, வெளியிலேயே அவளுக்காக காத்துக் கொண்டிருந்தார் கணேசன். அருகில் கையில் தனது குட்டித் தம்பி விசாகனை வைத்துக் கொண்டு நின்றிருந்தாள் ஷஷ்டி.
அவர்களிடம் வந்ததுமே ஆசையாக குழந்தையை வாங்கிக் கொண்டாள் மதி.
“அக்கா… முந்தாநேத்துதான் ஃபர்ஸ்ட் ஸ்டெப் எடுத்து வச்சான் க்கா” என்றாள் ஷஷ்டி.
“ரெண்டு பேரையும் பார்த்துக்க மதி, மாப்ள வீட்டுகாரங்க வர டைம் ஆகிடுச்சு, பாரதியோட சித்தப்பா ஏதோ வேலைனு கூப்பிட்டார்” என சொல்லி சென்று விட்டார் கணேசன்.
விருந்தினரை வரவேற்க யாரோ ரவியின் சொந்தங்கள் வாயிலில் நின்றிருந்தனர். சந்தனம் குங்குமம் இட்டுக் கொண்ட மதி, ஷஷ்டிக்கும் அழகாக நெற்றியில் இட்டு அவர்களை கடந்து சென்றாள்.
பட்டு வேஷ்டி சட்டையில் எதிர்ப்பட்டான் ரவி. சட்டென மதியின் முகம் மலர, அவனும் ஒரு புன்னகையை தாங்கி, “வா…” என்றான்.