மதியம் மூன்று மணிக்கெல்லாம் தங்கையை மண்டபதிற்கு அழைத்து வந்து விட்டான் ரவி. நவ்ரிதிக்கும் அவளது காதலன் ஸ்ரீதருக்கும் இன்று நிச்சயதார்த்தம்.
பார்லர் பெண்களும் வந்து விட, நவ்ரிதிக்கு ஒப்பனை தொடங்கியது. அவளின் துணைக்கு பாரதியும் அவளின் அக்கா மகள் ரேஷ்மியும் இருந்தனர்.
“எதாவதுன்னா கால் பண்ணுக்கா” என சொல்லி ரவி செல்ல முற்பட, “எங்க வயித்துக்கு குளிர்ச்சியா ஏதாவது வாங்கி கொடுத்திட்டு போங்க மாமா” என்றாள் ரேஷ்மி.
“ஐஸ் வாட்டர் அனுப்பி வைக்கிறேன், உனக்கு மட்டும் நாலு லிட்டர், யாருக்கும் கொடுக்காம நீயே குடி” என சொல்லி நிற்காமல் சென்று விட்டான் ரவி.
“சித்தி…” என சிணுங்கிய ரேஷ்மியின் தலையில் செல்லமாக கொட்டி, “வாயை அடக்குடி” என்றாள் பாரதி.
பொறியியல் இறுதி வருடத்தில் இருக்கும் ரேஷ்மிக்கு ரவியின் மீது ஈர்ப்பு ஏற்படத் துவங்கியிருக்கிறது. ரவியை போலவே வங்கியில் பணி புரிய வேண்டும் என்ற கனவு போய், இப்போதெல்லாம் அவன்தான் கனவில் வருகிறான். இன்னும் யாரிடமும் சொல்லிக் கொள்ளவில்லை அவள்.
கணவருக்கு அழைத்து மகன் எழுந்து விட்டானா என விசாரித்தாள் பாரதி. ஆமாம் அவளுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை இருக்கிறான்.
“உங்களை விட மாமா நல்லா பார்த்துக்குவார் க்கா” என நவ்ரிதி சொல்ல, மறுக்கவில்லை பாரதி.
இரண்டாவது குழந்தைக்கு பாரதி திட்டமிட்ட போதே, வேண்டுமா என கணேசன் கேள்வி எழுப்பினார்தான். ஆனால் மனைவியின் மீதான அக்கறையிலேயே அவர் மறுத்திருக்க, பாரதியும் சண்டையாக்கவில்லை. ஆனால் தன் முடிவில் பிடிவாதமாக இருந்தாள் அவள்.
பாரதி கருவுற்ற சமயத்திலிருந்து பிள்ளைப்பேறு காலம், குழந்தை வளர்ப்பு என அனைத்திலும் மனைவியை தாங்கி பிடித்துக்கொள்ளும் நல்ல கணவராக நடந்து கொண்டார் கணேசன்.
ரவி இப்போது சீனியர் மேனேஜராக பதவி உயர்வு பெற்று திருவெறும்பூர் வந்து விட்டான். வீட்டிலிருந்தே மகன் வேலைக்கு சென்று வருவதால் பூர்ணிமாவுக்குத்தான் மிகுந்த மகிழ்ச்சி.
மண்டபத்துக்கு ரேஷ்மியின் அப்பா வந்தார். அவரை இங்கே இருக்க சொல்லி விட்டு வீட்டுக்கு சென்றான் ரவி. பூர்ணிமாவுக்கு சொந்தக்கார பெண்கள் அவ்வளவாக ஒத்துழைப்பு கொடுக்க மாட்டார்கள். அவன் வீட்டில் இருந்தால்தான் அம்மாவுக்கு உதவியாக இருக்கும்.
சொர்ணம் பாட்டி ரவியை கண்டதுமே, “உன் அம்மா என் யோசனை எதையுமே கேட்க மாட்டேங்குறா, எல்லாம் அவ இஷ்டத்துக்கு செய்றா. என்னை மதிக்காம பொண்ணு ஆசை பட்டான்னு சாதி மாத்தி கல்யாணம் பண்ணி கொடுக்குறீங்க, சடங்கெல்லாம் நம்ம பக்கம் உள்ளது மாதிரி செய்றதா இல்லையா?” என குறை படித்தார்.
இப்படி சுவாரஷ்யமாக ஏதாவது கிடைக்காதா என காத்திருந்த சொந்தங்கள் கவனத்தை இங்கே வைத்தனர்.
“அதுக்கென்ன அப்பயி, என் கல்யாணத்துல சடங்கெல்லாம் நீ ஆசை படறது போல உன்கிட்ட கேட்டு அதுபடி பண்ணிக்கிறேன், சரியா? நீ ரெடியாகாம என்ன பண்ணிட்டு இருக்க?” என தாஜாவாக பேசி, அவரின் கைப்பற்றி “உள்ள போ” என சொல்லிக் கொண்டே வீட்டின் உள்ளே அழைத்து சென்றான்.
“பெரியம்மா… அப்பயிக்கு மேக்கப் போட்டு விடுங்க” என சத்தமாக சொல்லிக்கொண்டே அவரை அறைக்குள் விட்டான். ரேஷ்மியின் அம்மா அதாவது இவனது பெரிய அக்காதான் வந்தார்.
“உன் பெரியம்மா அங்கதான் சித்தி கூட இருக்காங்க டா, நான் ரெடியாகலாம்னு இப்போதான் வந்தேன்” என்றார் ரேஷ்மியின் அம்மா.
“நீங்க மெதுவா ரெடியாகலாம், அப்பயியை கவனிங்க” என அவருக்கு எதையோ சாடையாக சொன்னான்.
தம்பியின் சைகை மொழியை உள் வாங்கிக் கொண்டவரும் அப்பயியை அறைக்குள் பிடித்து வைத்துக் கொண்டார்.
“எத்தன மணிக்கு மண்டபம் போவணும்?” “எத்தனை வேன் வருது? இடம் இருக்கும்ல?” என கேள்வி கேட்டவர்களுக்கு பதில் சொன்னாலும் தன் நடையை நிறுத்தியிருக்கவில்லை அவன்.
ரவியின் தாத்தா கிராமத்திலிருந்து வந்து இங்கு செட்டிலானவர், நிறைய சொந்தங்கள் பூர்வீக ஊரில்தான் இருக்கிறார்கள். தொலைவு அதிகம் என்பதால் விஷேஷ நேரத்துக்கு மண்டபம் வருவோம் என்றில்லாமல் முன்னரே வீடு வந்து விட்டார்கள்.
கணேசன் அவரது மகன் மற்றும் மகளுடன் ரவியின் வீட்டு மாடியில் உள்ள விருந்தினர் அறையில் இருந்தார். அவருக்கும் இந்த சொந்தங்களை பிடிப்பதில்லை, ஆகவே கைகுழந்தையை காரணமாக்கி மாடியிலேயே இருந்து கொண்டார்.
வீட்டு வேலைகளில் தன் அம்மாவிற்கு உதவி செய்வதற்கென ஆட்களை வரவழைத்திருந்தான் ரவி. ஆகவே பூர்ணிமாவுக்கு அதிகம் சிரமங்கள் இல்லை. மண்டபம் எடுத்து செல்ல வேண்டியவற்றை அம்மா சொல்ல சொல்ல சரி பார்த்து வெளியில் கொண்டு வந்து வைத்தான் ரவி.
அவன் அழைத்து வந்த ஆட்களில் ஒருவனுக்கு அங்கே இருந்தே பார்க்கும் படி ஏதோ வேலை கொடுத்து, “எத்தனை பைனு பார்த்துக்கோங்க, பிள்ளைங்க யாராவது விளையாட்டு போக்குல தள்ளி வச்சிட போறாங்க” என கவனம் சொல்லி சென்றான்.
வெகு சில சொந்தங்களே பூர்ணிமாவுடன் இணக்கமாக இருப்பார்கள், அப்படி பட்டவர்களும் முன்கூட்டியே வராமல் அந்த நேரத்துக்கு விஷேஷத்தில் கலந்து கொண்டு சென்று விடுவார்கள்.
சீனுவுக்கு திருமணம் செய்து கொள்ளும் முறையில் நிறைய பெண்கள் சொந்தத்தில் இருந்திருக்க, அவரோ பூர்ணிமாவை காதல் கல்யாணம் செய்து கொண்டார். இப்போது வளமான வாழ்வு வேறு, அவருக்கு பெண் கொடுக்க ஆசை பட்டவர்களுக்கும் அவரது வளர்ச்சியை பார்த்து பொறாமை கொண்டவர்களுக்கும் பூர்ணிமா என்றால் ஆகாது.
ஏதாவது உதவி செய்வோம் என்றில்லாமல் சொர்ணம் பாட்டியிடம் ஏதாவது ஏற்றி விடுவதும் இரண்டு வீடுகளுக்கும் மாறி மாறி நடந்து புரணி பேசுவதுமாக மட்டுமே இருந்தனர்.
மதிய உணவுக்கு கோசலையின் வீட்டிற்கு வந்து விட்டனர். பூர்ணிமாவே தேடி வந்து இவர்களை வருந்தி வருந்தி அழைக்க வேண்டுமாம்.
“பெத்தா இப்படி ஒரு புள்ளைய பெக்கணும். யாரும் அந்த வீட்டுக்கு போகாம இங்கேயே உட்கார்ந்து கெடந்தோம், அவ வந்து கூப்பிடுவான்னு பார்த்தா புள்ளைய வச்சே எல்லாம் பார்க்கிறா?” என்றார் ஒரு பெண்.
“இந்த புள்ளையவே மருமவ புள்ளையா ஆக்கிக்க, யாரு வேணாம்னா?” என்றார் இன்னொரு பெண்.
“இல்லாட்டாலும் கலப்புல கல்யாணம் செஞ்சிடுவ நீயும்?” என நொடித்தார் இன்னொருவர்.
வருபவர்கள் பேசுவதையெல்லாம் காதில் வாங்கியது போலவே காட்டக் கூடாது என ஏற்கனவே வீட்டினருக்கு எச்சரிக்கை சொல்லியிருந்தான் ரவி, ஆகவே யாரின் பேச்சும் பிரச்சனையில் முடியவில்லை.
எல்லாம் முடிந்ததா என பூர்ணிமாவிடம் விசாரித்தறிந்து கொண்ட கோசலை, “நான் ரெடியாக போகட்டுமா?” எனக் கேட்டார்.
சரியென்ற பூர்ணிமா, “நானும் ரெடியாகனும் க்கா, அங்க உள்ளவங்களை அங்கேயே பத்திரமா வச்சுக்கோங்க” என்றார்.
“அதெல்லாம் என் கைல இல்லை, வந்தா சமாளி. எல்லாருக்கும் இவன் மேலதான் கண்ணு, இவனையும் பத்திரமா வச்சுக்க” என சிரிப்புடன் சொல்லி அகன்றார் கோசலை.
“நீ ஏன்டா அவங்க முன்னாடியே வர போவ இருக்க?” என மகனை கடிந்து கொண்டார் பூர்ணிமா.
கைப்பேசியில் மும்முரமாக கவனம் வைத்திருந்த ரவி அம்மாவுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை.
பார்த்து பார்த்து தயாராகியிருந்தாள் தண்மதி. ரவி அவளை கடைக்கு அழைத்துப் போய் வாங்கிக் கொடுத்த பட்டுப் புடவை உடுத்தி, கடந்த வருடம் அவன் பரிசளித்த நெக்லஸ் அணிந்து நேர்த்தியாக இருந்தாள்.