அன்னையின் கதகதப்பில் அவளின் அரவணைப்பில் புரிந்தும் புரியாத நிதர்சனத்தில் உறக்கம் தழுவியிருந்தாள் கயல்விழி. தன் கை சேர்ந்துவிட்ட பொக்கிஷத்தை நொடிநேரம் கூட விலகியிருக்க முடியாது என்பது போல் கயல்விழியை அணைத்தே கிடந்தாள் அழகுராணி. கணவன் தன்னிடமே முரடு பிடிப்பான் ராஜாவை அனுப்பிவைத்தால் என்ன நினைப்பானோ என்று அத்தனை தயக்கம். செய்திகளை பார்த்து தன்னை தவறாக நினைத்துக்கொண்டு வரமாட்டேன் என்று முகம் காண்பிப்பான் என்று அவள் யோசித்ததை புரிந்துகொண்ட ராஜா பாதுகாப்பு கருதி தானே செல்கிறேன் என்று சக்திவேலனைப் பார்க்கச் செல்ல, இப்படி தன் குடும்பம் தன்னிடம் வந்து சேரும் என்று அவளே எதிர்பாராதது. சக்திவேலனின் மனமாற்றம் அவளை ஆசுவாசப்படுத்தியது என்றால் அவன் பார்வையில் இருக்கும் விலகல் மகிழ்வை முழுமையாக உணர விடவில்லை. இப்பொழுதும் அந்த ஒற்றை படுக்கையறையில் இருக்கும் மெத்தையில் அவளும் மகளும் இருக்க, கூடத்தில் இருந்தான் சக்திவேலன். எழுந்து சென்று அவனிடம் பேசலாம் என்றால் தன் கைபிடித்து உறங்கும் மகளை விலக்கிவிட்டு எழ மனமில்லை.
கூடத்தில் இருந்தவனின் பார்வையும் நொடிக்கொரு முறை அறைக்குச் சென்று வந்தது. மகளுக்காக என்று இங்கு வந்தாகிற்று, அம்மா என்று மனைவியை காண்பித்தாகிற்று அடுத்து இது எப்படி செல்லப் போகிறது என்ற யோசனை. அறைக்குச் சென்று அவர்களுடன் இணைய தயக்கம். அதன்தொட்டு வெளியேயே இருந்துகொண்டவனுக்கு மனம் பிசைந்தது. தன் சகலமும் மகள்தான் என அவளுக்காகவே ஐந்து வருடமாக வாழ்ந்தவனுக்கு திடுமென அவளை மனைவியிடம் ஒப்படைத்து தள்ளி நிற்பது உறுத்தலாக இருந்தது.
விழிப்பு முதல் உறக்கம் வரை மகளின் அனைத்திற்கும் அவன் தேவை, இனி அப்படியில்லையே. மகளை தனித்து வளர்த்துவிட்டவன் இனி அதனை மனைவியுடன் பகிர வேண்டும். மகளின் விஷயத்தில் மனைவியின் முடிவுகள் பிரதானமாக்கப்படும். இத்தனை நாள் அம்மாவுக்காக ஏங்கிய பிள்ளை இனி அவளை விட்டு நகராது, அவனிடம் முன்பு போல் அனைத்திற்கும் வருவாளா என சந்தேகம் என்று தறிகெட்டு ஓடியது யோசனை. உறக்கம் வருவேனா என்று போக்கு காட்ட, சுவரில் சாய்ந்து சரிந்தவாக்கில் அமர்ந்துகொண்டான்.
விடியும் தருவாயில் அறையிலிருந்து வெளிவந்த அழகி கணவன் இன்னும் விழித்திருப்பதை கண்டு தயக்கத்துடன் அவனிடம் சென்றாள். தன் முன் நிழலாட நிமிர்ந்து பார்த்தவன் ஒன்றும் சொல்லவில்லை.
“ஏன் இங்கேயே இருக்கீங்க? உள்ள வந்து தூங்குங்க.” என்றவளுக்கு பதில் சொல்லாமல் சக்திவேலன் முகத்தை திருப்ப, தயக்கம் இருந்தாலும் துணிந்து அவன் அருகில் அமர்ந்து அவன் கையை தன் இரு கைகளுக்குள் பொதித்துக்கொள்ள, முன்னர் போல் வெடுக்கென்று இல்லாது மெல்ல கையை உருவிக்கொண்டான்.
அவன் இந்தளவு இறங்கி வந்ததே பெரிது என்று சுணங்கிய மனதை தேற்றிக்கொண்டவள், “நான் கீழ படுத்துகிறேன். நீங்க விழியோட மேல தூங்குங்க ப்ளஸ்.” கண்களை சுருக்கி குரல் தழைத்து பேச,
“அஞ்சு வருஷ ஏக்கம் என் கை சேர்ந்திருக்கு. அதை அனுபவிக்கனும்னு தோணுது.” என்றாள் ஆழ்ந்த குரலில். என்னதான் கடத்தல் வேலையை விட்டுவிடுகிறேன் என்று சொல்லியிருந்தாலும் அவளுக்கு இருக்கும் திட்டங்களை கேட்டால் என்ன சொல்வானோ என்ற தயக்கமும் ஐயமும் அவளை மேற்கொண்டு பேசவிடவில்லை.
“பாப்பாக்காக மட்டும்தான் இங்க வந்திருக்கேன். அவளுக்கு ஏதாவது ஆச்சு…” என்று அழுத்தமாய் பார்த்துக்கொண்டே எழ,
“அவ எனக்கும் பொண்ணுதான்.” என்றாள் அழகுராணியும் பட்டென்று. அவள் சொன்ன தொனியில் முறைப்பொன்றை பரிசாக கொடுத்துவிட்டு அறைக்குச் சென்று மகளை அணைத்துக்கொண்டு அவன் படுத்துவிட, பெருமூச்சுடன் பின்தொடர்ந்தவள் சொன்னது போல் கீழே பாய் விரித்து படுத்துக்கொண்டாள். பேசிக்கொள்ள, சிந்திக்க ஆயிரம் இருப்பினும் உடல் அசதியில் இருவருமே உறங்கிப் போயினர்.
விடிந்தது தெரிந்தாலும் விழிக்க முடியாமல் அழகி புரண்டு கொண்டிருக்க, கை எதன்மீதோ உரசுவது உணர்ந்து பட்டென்று கண்விழிக்க, அவளருகில் அமர்ந்து அப்பாவியாய் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள் கயல்விழி.
பட்டென்று எழுந்துவிட்ட அழகி விழியை தூக்கி மடியில் அமர்த்திக்கொண்டவள், “சீக்கிரமே எழுந்துட் டீங்களா தங்கம். அம்மாவை எழுப்ப வேண்டியதுதான. பால் காய்ச்சவா?” என பிஞ்சுக் கன்னங்களில் முத்தம் வைத்துக் கேட்க,
“அம்மாக்கு உடம்பு முடியலடா. இந்த ஊர்ல ட்ரீட்மெண்ட் எடுத்துட்டு இருந்தாங்க. இப்போ தான் சரியாச்சு அதான் பாப்பாவை கூட்டிட்டு வந்தேன்.” பதில் சக்திவேலனிடமிருந்து வந்தது. அழகி நிமிர்ந்து பார்க்க, அவர்களையே பார்த்த வண்ணம் மெத்தையில் அமர்ந்திருந்தான் சக்திவேலன்.
“ஐ ஜாலி.” என குதித்துக்கொண்டு அழகியை கட்டிக்கொண்டவள் ஏதோ நியாபகம் வந்தவளாய் விலகி அழகியை பார்த்தாள், “அன்னைக்கு நிலா ஆன்ட்டிகூட வீட்டுக்கு வந்தப்போ நீங்கதான் என் அம்மான்னு ஏன் சொல்லல.” என்று அடுத்த கேள்வி கேட்டாள்.
“பாப்பாக்கு சின்ன வயசா இருக்கும் போதே இங்க வந்துட்டாங்க அதான் பாப்பா வளர்ந்து பெரிய பொண்ணானதும் அடையாளம் தெரியல.” அழகிக்கு வேலை கொடுக்காமல் சக்திவேலனே கயல்விழியை சமாளிக்க, ஆசுவாசமாக பார்த்தாள் அழகுராணி.
“பாப்பா பால் குடிப்பா காலையில. நாங்க ப்ரெஷ் பண்ணிட்டு வரோம்.” மகளின் கேள்விகளை நிறுத்தவென அழகுராணியிடம் இயல்பாக சொல்லிவிட்டு அவன் எழ,
“ப்ரெஷ், பேஸ்ட் புதுசு இருக்கு, நான் எடுத்து தரேன்.” என்றபடி மகளை தூக்கிக்கொண்டு எழுந்தாள் அழகுராணி.
இப்படி கயல்விழியை சமாளிக்கவென இருவரும் இயல்பு போல் பேசிக்கொள்ள, இலகுவான சூழ்நிலை நிலவியது. அம்மாவுடன் சேர்ந்துவிட்ட மகிழ்ச்சியில் அழகியின் முந்தானையை பிடித்துக்கொண்டே சுற்றினாள் கயல்விழி. சொல்ல ஆயிரம் விஷயங்கள் இருக்க அனைத்தையும் அப்போதே பேசிவிட வேண்டும் என்ற உந்துதலில் வாய் வலிக்க பேசினாள். ஒருவித ஆச்சர்யத்துடன் அவளை பார்த்துக்கொண்டிருந்தான் சக்திவேலன். தந்தையாக, தாயாக, தோழனாக மகளின் தேவைகள் அனைத்தையும் பார்த்து பார்த்து நிறைவேற்றியதாக நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு இப்படி அழகியிடம் வாயடைக்கும் மகள் புதியதாய் தெரிந்தாள். வார்த்தைக்கு வார்த்தை அம்மா அம்மா என்று சொல்பவள் இன்று தன்னை மறந்துவிட்டாளோ என்றுகூட தோன்றியது.
அந்தக் கடுப்பில் உர்ரென்று அவர்கள் முன் சென்று நின்றான் சக்திவேலன், “நாளைக்கு எங்களுக்கு ஸ்கூல் இருக்கு. டிரெஸ் எதுவும் இங்க எடுத்தட்டு வரல, குளிக்கணும்.” என்றவுடனே தடுமாறிய அழகியின் மனதினில் வரிசையாக கேள்விகள் அணிவகுக்க, பேச வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தாள்.
“டீவி பாருடா விழி. அம்மா லஞ்ச் ரெடி பண்றேன்.” என மகளை நகர்த்தப்பார்க்க, அவளோ பெரிய பட்டியலை கொடுத்து, “எனக்கு லன்ச்க்கு இதுதான் வேணும் ம்மா.” என்றாள்.
“அங்க நான் வச்சதை சாப்பிடுவா இங்க ஹோட்டல் மாதிரி ஆடரை பாரு.” வாய்விட்டே சொல்லிவிட்டான் சக்திவேலன். மெலிதாக சிரித்தாள் அழகி. இதற்குத்தானே இத்தனை நாள் காத்திருந்தது, இந்த வரத்தை தவறவிட்டுவிட்டோமே என்றுதானே வருந்தியது.
கயல்விழி நகரவும் சக்திவேலனை பார்க்க, அவன் முகம் இறுகியது. ஆழ மூச்செடுத்தவள் அங்கேயே ஓரமாக கைகாண்பித்து அங்கு அமரலாமா என்று கேட்க, அங்கு சென்று அமர்ந்தான். பின்னோடே சென்றவள் எப்படி ஆரம்பிக்க என்று தயங்க,
“இங்கேயே இருக்க முடியாது என்னால. வீடு, ஸ்கூல் எல்லாம் சென்னைல.” என்று ஆரம்பித்து வைத்தான் சக்திவேலன்.
“அங்கேயே போய்டலாம் இப்போ ஒன்னும் பிரச்சனை இல்லை.”
“அப்புறம் எதுக்கு எங்களை இங்க வர வச்ச?” நீயே அங்கு வந்திருக்கலாமே என்று அவன் சொல்லாமல் விட்டது அவளுக்குப் புரிந்தது.
“செய்ய வேண்டிய வேலை கொஞ்சம் இருந்துச்சு ஒருவாரமா இங்க தான் இருக்கேன். நான் அங்க வந்தா சட்டுன்னு பதட்டப்படுவீங்க. கதவை சாத்துவீங்க. இதுனா கவலை இல்லாம வருவீங்க, என் பேச்சை கொஞ்சம் காது கொடுத்து கேப்பீங்கன்னு தான்…” என்று இழுத்தவள், “இது தெரிஞ்சவங்க வீடு. அவங்க ஊருக்கு போய் இருக்காங்க.”
மேலே சொல்லு என்பது போல் அவன் பார்க்க,
“எல்லாம் வேண்டாம்னு ஒதுங்கிட்டாலும் எனக்கு கொஞ்சம் வேலை பாக்கி இருக்கு.” தயங்கித் தயங்கி அழகி சொல்ல, இவன் முகம் இறுகியது.
“விட்டுட்டேன்தான். ஆனா முன்னாடி செஞ்சதோட மிச்சமிருக்கு. தம்பி மாதிரி கூடவே இருந்த ரவி ஜெயில்ல இருக்கான், அவனை வெளில எடுக்கணும். என்னை நம்பி என்னை சுத்தி சிலர் இருக்காங்க. அவங்களை அப்படியே அம்போன்னு விட்டுட்டு வரமுடியாது. அவங்களுக்கு ஒரு ஏற்பாடு பண்ணனும். அதோட…”
“அதோட?” இவன் புருவங்கள் நெரித்தது.
“கட்சில எனக்கு ஒரு போஸ்ட் கிடைக்குற மாதிரி இருக்கு. அடுத்த எலெக்ஷன்ல நிக்கலாம்னு…” என்று இழுக்க, சட்டென எழுந்துவிட்டான் சக்திவேலன்.
“ஏங்க…”
“திருந்த மாட்டீல்ல நீ? உன் வார்த்தையை நம்பித்தானே வந்தேன், பாப்பாகிட்டேயும் உண்மையை சொன்னேன்.” சக்திவேலன் கொதிக்க, தவிப்பாய் பார்த்தாள் அழகி.
“பதில் சொல்லுடி.”
“சட்டத்துக்கு புறம்பா பண்றதுதான் தப்பு இது சட்டத்துக்கு உட்பட்டது.”
“…”
“இத்தனை வருஷம் இந்த கடத்தல் பண்ணதே இதுக்காக தான்.” தவறை மறைக்க என்ன சப்பைக்கட்டு இது என்று சக்திவேலன் பார்க்க,
“நல்லது பண்றதுக்கு மனசு மட்டும் போதலைங்க இங்க. அதிகாரம் தேவைப்படுது. நம்மளை மாதிரி சாதாரண மக்களுக்கு அந்த அதிகாரம் எளிதா கிடைக்காது. பெரிய திமிங்கலங்களை கடந்து வரணும்னா சில தகிடுதத்தம் பண்ணாதான் முடியுது.”
“என்னையும் பாப்பாவையும் யோசிக்கவே மாட்டீல்ல நீ.” மனம் சமன்படாதவனாக அவன் வேதனை குரலில் கேட்க,
“அஞ்சு வருஷம் முன்னாடி கழுத்துக்கு மேல தொங்கிட்டு இருந்த கத்தி இன்னும் அதே இடத்துல தான் தொங்கிட்டு இருக்கு. கொஞ்சம் நகர்ந்தோம்னா பாகுபாடு இல்லாம இரத்தம் பாத்திடும்.” என்ற அவளின் பதிலில் அதிலிருந்து வெளியே வரவே முடியாதா என்று மருகிப் பார்த்தான் சக்திவேலன்.
அவன் உறுத்தல் புரிந்தது போல் மறுப்பாக தலையசைத்து சக்தி, “அதிலேந்து வெளில வந்தா அவங்களை சமாளிக்க அவங்களை விட பெரிய இடத்துல நாம இருக்கனும். இந்த ஸ்டேட் எலெக்ஷன்ல நிக்கிறதால நாம பெரிய இடத்துக்கு போயிட்டோமானா இல்லைனு தான் சொல்வேன். இந்த போதை பொருள் கடத்தல் எல்லாம் பெரிய நெட்ஒர்க், சென்ட்ரல் வரைக்கும் லிங்க் இருக்கு. எல்லாமே சிலந்தி வலை மாதிரி பின்னிட்டு இருக்கு, அதை பின்றது யாரு என்னனு எனக்குமே தெரியாது. கண்ணுக்கு தெரியாத எதிரிகிட்ட இருந்து வேற எப்படியும் தப்பிக்க முடியும்னு தோணல. மேல இருக்குறவங்க புள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுவாங்க. அந்த அரசியல் சாக்கடைல கலந்தாதான் இந்த சாக்கடைலேந்து வெளில வர முடியும்.” என்று அவளால் முடிந்த அளவிற்கு விளக்க, என்ன சொல்வதென்று தெரியாமல் பொத்தென்று அமர்ந்தான் சக்திவேலன்.
பார்வை அன்னிச்சையாக மகளிடம் செல்ல, அழகியின் விழிகளும் அவனைத் தொடர்ந்தது.
“போதை பொருள் கடத்துறதுல இருக்குற ஆபத்து இதுல இல்லை. மிஞ்சிமிஞ்சி போனா அதிகாரத்தை பிடுங்கி ஓரமா உக்கார வைப்பாங்க. உயிர் இருக்கும்ல பாத்துக்கலாம்.” என்றவளை எதுவும் சொல்ல முடியாமல் அவள் சொன்னதை ஜீரணிக்கவும் முடியாமல் தடுமாறினான்.
அவள் இதனுள் வந்தது போல் இப்போது தானும் தன் மகளுடன் சேர்ந்து தலை கொடுத்தாகிற்று. இனி இதிலிருந்து வெளிவருவது என்பது மனைவியை விட்டு தூர செல்வது மட்டுமே ஆனால் அது தங்கள் மகளின் மனநிலையை மொத்தமாக பாதிக்க வாய்ப்பிருக்கிறது.
“ஒரு சான்ஸ் கொடுங்க. நம்ம குடும்பத்துக்கு எதுவும் ஆகாது. நான் பாத்துப்பேன். இதுவும் ஒரு வேலைனு நினைச்சுக்கோங்களேன்.” தெம்பாக பேசினாலும் கணவன் ஒத்துக்கொள்ள வேண்டுமே என்ற தவிப்பு மண்டிக்கிடந்தது அவள் குரலில்.
“ஏங்க?” எதுவும் சொல்லாமல் எதிரிலிருக்கும் சுவரை வெறித்தவண்ணம் இருந்தவனை தயக்கத்துடன் உசுப்பினாள்.
“முன்னாடி வாழ்ந்த வாழ்க்கைக்கு போகவே முடியாதுல்ல?” வருந்திக் கேட்டவனை வருத்தமாக பார்த்தவள்,
“இனி வரப்போற நாளை அழகா மாத்திக்கலாம். என்கூட மட்டும் இருங்க.” என்ற போதே கண்ணிலிருந்து சொட்டு நீர் அணிவகுத்து வழிந்தது.
அதை துடைக்க உந்திய மனதை அடக்கிய சக்திவேலன் இருமனதாக, “வேற வழி இருக்கா என்ன? உனக்கு உன்னோட பாதை, கயல்விழிக்கு அவளை சேர வேண்டிய பாசம் அதுக்கு இதுதான் பண்ண முடியும்னா…” ஒப்புதல் போல தலையசைத்தான்.
“தேங்க்ஸ்…” சட்டென மனைவி கணவனை அணைத்துவிட, இவர்களை பார்த்த கயல்விழியும் நான் நான் என்று ஓடிவந்து தந்தையை கட்டிக்கொண்டாள்.
விரிசல்கள் இருந்த போதிலும் அவர்களின் அழகிய குடும்பம் நிறைவானது.