இரண்டு மணி நேரத்துக்கு பின் கணேசனும் ரவியும் வீடு வந்தனர். இரவு உணவை அங்கேயே முடித்துக் கொண்டுதான் கிளம்பினான் ரவி. அவனது வீட்டை அடைந்த பின் கணேசனுக்கு அழைத்து தகவல் சொன்னவன், மறக்காமல் மதிக்கும் குறுஞ்செய்தி அனுப்பி வைத்தான்.

அடுத்த நாள் தண்மதி கல்லூரி சென்று விட, மதியத்திற்கு மேல் கணேசனும் மனைவி மகளோடு ஊருக்கு புறப்பட்டு விட்டார்.

அன்றிலிருந்து தினம் இரவு மதியிடம் பேசி விடுகிறான் ரவி. சில நிமிடங்கள் வரம்பு மீறாமல் அக்கறை தொனிக்க பேசுவான். அந்த சில நிமிடங்கள்தான் மதிக்கு அன்றைய நாளை முழுமையாக்கி தந்தது.

பேத்திக்கும் ரவிக்கும் சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் என கோயில் கோயிலாக பிரார்த்தனை செய்ய ஆரம்பித்து விட்டார் பாட்டி.

இந்த வருடப் படிப்பு முடியவும் அடுத்து என்ன என மதியை கேட்க ஆரம்பித்திருந்தான் ரவி.

மேலே படிக்க நினைக்கிறாள், என்ன ஏதேன அவளுக்கு பெரிதாக யோசனைகள் இல்லை. அவன்தான் இரண்டு வாரங்கள் நேரம் எடுத்து அவளுக்கு எதில் ஈடுபாடு, எது நன்றாக வரும் என கண்டறிந்து புள்ளியியல் படிக்க சொன்னான்.

திருச்சியில் உள்ள பிரபலமான கல்லூரியில் படிக்க நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும். தன்னால் முடியுமா என மலைத்து நின்றவளுக்கு தன்னம்பிக்கை ஊட்டி, அவளை தயார் செய்து கொள்வதற்கான பாட உபகரணங்கள் வாங்கிக் கொடுத்து, இணைய வகுப்புகளில் கலந்து கொள்ள வைத்து என பார்த்து பார்த்து செய்தான்.

படிப்பில் ஆர்வமா என்றெல்லாம் மதிக்கு தெரியாது, ஆனால் எனக்காக இவ்வளவு செய்கிறவரை மகிழ்ச்சி படுத்த வேண்டும் என நினைத்தே மனதை ஒருமுகப் படுத்தி படித்தாள்.

பாரதி இங்கு வருவதே இல்லை, கணேசனும் வற்புறுத்தி அழைப்பதில்லை. அவ்வப்போது அவர் மட்டும் ஊருக்கு வந்து போகிறார். முடிந்த வரை மனைவியின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை அறிந்து அப்படி நடந்து கொள்ள முயற்சி எடுக்கிறார்.

 அகம்பாவம் பிடித்தவள், மரியாதை தெரியாதவள் என பாட்டிதான் மருமகளை பற்றி மகனிடம் ஏதாவது குறை சொல்வார். கணேசன் இதற்கெல்லாம் இப்போது பதில் தருவதில்லை, மௌனசாமியாராக அவதாரம் எடுத்து அமர்ந்து விடுவார்.

மனைவி மகள் தனி யூனிட், அம்மா அண்ணன் மகள் தனி யூனிட் என்பதாக பிரித்துக் கொண்டு இரண்டு பக்கமும் சமநிலை தவறாமல் நடந்து கொள்கிறார்.

அன்று தண்மதிக்கு இறுதி தேர்வு. பக்கத்து ஊரில் ஏதோ அரசியல் கலவரம், அந்தப் பக்கமாக பேருந்துகள் போவது நிறுத்தப் பட்டு விட்டன. கல்லூரி பேருந்தும் வரவில்லை.

அந்த ஊர் ஆடவர்களுக்கு எல்லாம் விஷயம் தெரிந்து விட்டது. வீட்டிலேயே இருந்த பாட்டிக்கும் பேத்திக்கும் ஒன்றும் தெரியவில்லை. இரவெல்லாம் கண் விழித்து படித்த சஞ்சனா காலையில் தாமதமாகத்தான் எழுந்திருந்தாள். உடனே மதிக்கு அழைத்து சொல்லி விட்டாள்.

சஞ்சனாவின் தந்தை காருக்கு ஏற்பாடு செய்திருந்தார், வேற்று பாதையில் செல்லவிருப்பதால் நேரமாகவே புறப்பட வேண்டும் என சொல்லி விட்டார்.

ரவிக்கும் வங்கிக்கு வந்து கொண்டிருக்கும் போதுதான் தெரிந்தது. உடனே மதிக்கு அழைத்து பேசினான். பாட்டிதான் ஏற்று சஞ்சனாவின் தந்தை காரில் அழைத்து செல்வதை சொன்னார். அவசரம் அவசரமாக தயாராகிக் கொண்டிருந்தாள் மதி.

ஊரை சுற்றிக் கொண்டு ரவி வந்து கொண்டிருக்க, வழியில் கார் நின்றிருந்தது. மதி அந்தக் காரில்தான் இருந்தாள். என்னவென போய் பார்த்தான்.

அவசரத்தில் ஹால் டிக்கெட்டை மறந்து விட்டாள் மதி. சஞ்சனாவின் அப்பா மதியின் முன்னாள் ஆசிரியர்தானே? உரிமையோடு திட்டி விட்டார். மதி அழுது கொண்டிருக்க, சமாதானம் செய்து கொண்டிருந்தாள் சஞ்சனா.

திரும்ப போய் எடுத்துக் கொண்டு கல்லூரி செல்ல காரை விரட்டியடிக்க வேண்டும், போகும் வழியிலும் திடீரென பிரச்சனை வந்தால் என்னவாகும்? என பதற்றம் கொண்டிருந்தார் சஞ்சனாவின் அப்பா.

நேரம் போகிறதே, சட்டென முடிவெடுத்த ரவி மதியை விட்டு விட்டு அவர்களை கிளம்ப சொல்லி விட்டான்.

அதீத பதற்றத்தில் இருந்த மதியிடம், “என்ன இப்போ, அதெல்லாம் கரெக்ட் டைம் போயிடலாம்” என சொல்லி அவளை பைக்கில் ஏற்றிக் கொண்டான். கிராமப் புற சாலை என்பதால் வேகமாகவே பைக்கை ஓட்டினான்.

வழியிலேயே பாலைய்யாவுக்கு அழைத்து சொல்லி விட்டான் ரவி. அவரும் மதியின் வீட்டுக்கு சென்று ஹால் டிக்கெட் எடுத்துக் கொண்டு அவன் சொன்ன இடத்திற்கு வந்து விட்டார். அவர் வந்த அடுத்த நிமிடம் அவனும் அங்கு வந்து சேர்ந்தான்.

“என்னம்மா இப்படியா கேர்லெஸ்…” என பாலைய்யா மதியை கடிந்து கொள்ள ஆரம்பிக்க, அதற்கு விடாமல், “ஸார் ஸார்…” என அவரை பேச விடாமல் நிறுத்தி விட்டான் ரவி.

ஹால் டிக்கெட்டை மதி பத்திர படுத்திக் கொள்ள, பாலைய்யாவுக்கு ரவி சொன்ன, “தேங்க்ஸ்” கூட அவருக்கு சரியாக கேட்டிருக்கவில்லை. வண்டி பறந்திருந்தது.

அவளிடம் பேசி பதற்றத்தை குறைக்க கூட அவனுக்கு அவகாசம் கிட்டியிருக்கவில்லை, சாலையின் மீதான கவனம் பிசகுமே.

கல்லூரி இருக்கும் சாலைக்கு வந்த பிறகுதான் இன்னும் பத்து நிமிடங்கள் இருப்பதை கவனித்து வண்டியை நிறுத்தி அவள் பக்கமாக திரும்பினான்.

“என் பேங்க் எக்ஸாம் அப்போ நானும் ஹால் டிக்கெட் மறந்து விட்டுட்டேன் மதி, அப்பா எப்ப எடுத்திட்டு வருவார்னு  எக்ஸாம் சென்டருக்கு வெளில காத்திட்டு நின்னேன். லாஸ்ட் மினிட்ல என் அப்பாவும் ஃபிரெண்ட்டும் தலை தெறிக்க ஓடி வந்து கைல கொடுத்து அனுப்பி வச்சாங்க. இப்பவும் அப்பா சொல்வார் என்னாலதான்டா நீ பேங்க் மேனேஜர்னு, பாவம் என் ஃபிரெண்ட்க்கு கூட அந்த கிரெடிட் கொடுக்கல அவர்” என்றான்.

அவன் சொன்ன விதத்தில் லேசாக இதழ்கள் விரித்தாள்.

“ஃப்யூச்சர்ல என்னாலதான்னு நானும் உன்கிட்ட சொல்லணும்னு இருக்கு, அதுதான் இப்படி நடந்திருக்கு. இந்த டென்ஷன் எல்லாம் இப்பவே காத்தோட ஓடிப் போச்சு, எக்ஸாம் நல்லா எழுதணும் என்ன?” எனக் கேட்டான்.

அவளின் அவ்வளவு நேர பதற்றம் கண்ணீராக வெளி வர, பெரிய மூச்சாக விட்டு முகத்தை துடைத்துக் கொண்டு, “தேங்க்ஸ் மாமா!” என்றாள்.

“நீயே வச்சுக்க” என சொல்லி பைக்கை கல்லூரிக்கு செலுத்தினான்.

தோழிக்காக தேர்வு நடக்கும் ஹாலின் வெளியிலேயே காத்து நின்றாள் சஞ்சனா. மதி ஓடிப் போக, அவளும் வந்து கையை பிடித்துக்கொண்டு, “வா வா…” என இழுத்து சென்றாள்.

மதி திரும்பி பார்க்க, கையை அசைத்தான் ரவி. தெளிந்த மனதோடு உள்ளே சென்றாள் மதி.

தேர்வு முடிந்த கையோடு ரவிக்கு அழைத்து  நன்றாக எழுதியிருப்பதாக சொன்னாள் மதி. கணேசன் தனக்கு அழைக்கும் படி செய்தி அனுப்பியிருக்க, அவருக்கும் அழைத்து பேசினாள். பாலைய்யா மூலமாக காலையில் நடந்ததெல்லாம் அவருக்கு தெரிந்திருந்தது.

“நான் அங்க இல்லாம போயிட்டேன் பாப்பா” என கவலை பட்டார். அவள் சமாதானம் சொன்னாள். திரும்ப வீட்டுக்கு சஞ்சனாவுடன் சென்று விடுவேன் என அவள் சொல்லவும் அவரும் நிம்மதியானார்.

சஞ்சனாவை அழைத்துச் செல்ல அவளது அண்ணன்தான் வருகிறானாம், தண்மதியை அழைக்க யாரும் இல்லா விட்டால் நண்பன் ஒருவனை பைக் எடுத்து வரும் படி சொல்கிறேன் என்றான்.

“சஞ்சனாவோட அண்ணா  யோசனைப் படியே போகவா?” என ரவிக்கு அழைத்து அவனிடம் அனுமதி கேட்டாள் மதி.

“தெரிஞ்ச பையன் பயமில்லைனா தாராளமா போலாமே, எதுக்கு என்கிட்ட கேட்கிற?” என அவன் கேட்கவும், “போங்க மாமா” என சொல்லி கைப்பேசியை வைத்து விட்டாள்.

கல்லூரி வாசலில் சஞ்சனாவின் அண்ணனுடன் ரவி நின்றிருக்கவும் அவளின் விழிகள் விரிந்து கொண்டன.

காலையில் விட்டவன் மதியம் எப்படி வருவாள் என்பதை யோசிக்காமல் போயிருப்பானா?

காலை போல் அல்லாமல் நிதானமான பயணம். அதிகம் பேச்சுக்கள் இல்லாமல் அமைதியாகவே பயணித்தனர். ஊருக்குள் நுழையவுமே அவளுக்கு ஒரு மாதிரியானது.

“பயப்படாத, பக்கத்து ஊர்ல கலவரம் நடந்தது நாம ரிலேட்டிவ்ஸ் எல்லாம் எல்லாருக்கும் தெரியும். நாமளும் அடிக்கடி பைக்ல சுத்திகிட்டு இல்லை, யாரும் தப்பா நினைக்க மாட்டாங்க” என்றான்.

“அவங்க அப்படி நம்மள பத்தி நினைச்சாலும் அது தப்பில்லைல மாமா, சரிதானே?” என அவள் கேட்க வாய் விட்டு சிரித்தான் ரவி.

அவளின் வீட்டருகில் இறக்கி விட்டவன், “பாட்டி என்னை பார்த்திட்டா கல்யாணம்னு ஸ்டார்ட் பண்ணிடுவாங்க, நான் கிளம்பறேன்” என்றான்.

“இன்னிக்கு நைட்டாவது என்னோட ரொம்ப நேரம் பேசுங்க” என உரிமையாக சொன்னாள்.

“பின்ன தூக்கத்தை கெடுத்துகிட்டவாது பேச மாட்டேன்?” என கண்கள் சிமிட்டி சொல்லி விட்டு புறப்பட்டான்.

ஆழமான உணர்வுகளைக் கொண்டு தண்மதியை தன்னுடன் பிணைத்து வைத்து, அவளால் திரும்பி வர முடியாத அளவுக்கு தன்னுடனே இழுத்துச் செல்வதை அறிந்துதான் இருந்தான் அவன்.

எவ்வித பயமோ சந்தேகமோ இல்லாமல், அவளும் ஆசை ஆசையாக அவன் பக்கமாகவே தன்னை செலுத்திக் கொண்டிருந்தாள்.