சிந்தை நிறை தண்மதியே -10

அத்தியாயம் -10

வீட்டில் கணேசனுக்கும் பாரதிக்கும் வாக்குவாதம் முற்றிப் போனதால், ஷஷ்டியை அழைத்துக் கொண்டு பக்கத்திலிருக்கும் திடலுக்கு வந்திருந்தாள் தண்மதி.

இந்தப் பக்கத்தில் நிறைய பிள்ளைகள் விளையாடுவார்கள். தெரிந்த பையனிடம் கேட்டு அக்கா சைக்கிள் வாங்கி கொடுக்க, தங்கையும் ஆர்வமாக ஓட்ட ஆரம்பித்து விட்டாள்.

கணேசனின் வீட்டிலிருந்து கிளம்பிய ரவியை பாலைய்யா பிடித்துக்கொண்டார். வெகு நாட்களாக வீட்டிற்கு அழைத்துக் கொண்டிருப்பவர் அன்று விடாமல் ரவியை தன் இல்லத்துக்கு கடத்தி சென்று விட்டார்.

அங்கு சற்று நேரம் இருந்து விட்டு புறப்பட்ட ரவி இந்தப் பக்கமாகத்தான் வந்து கொண்டிருந்தான். ஏதோ சிந்தனையில் நின்றிருந்த மதி, அருகில் பைக் ஒன்று நிற்கவும் திடுக்கிட்டுப் போய் பார்த்தாள்.

“இந்த டைம் இங்க என்ன பண்ணிட்டு இருக்க?” அவளது முகத்தில் நிலவும் கலவரத்தை படித்துக் கொண்டே கேட்டான் ரவி.

சித்தி தன்னை குறித்து பேசியதே அவளுக்கு மீண்டும் மீண்டும் நினைவுக்கு வர, அவனை காணவும் அடைத்து வைத்திருந்த அழுகை வெடிக்கத் துடித்தது.

வேகமாக பைக்கிலிருந்து இறங்கியவன் என்னவென விசாரித்தான். சுற்றிலும் பார்த்துக் கொண்டவள் அழகையை உள் இழுத்துக் கொண்டு, விஷயத்தை சொன்னாள்.

“உன்னை யாரும் ஏதும் பேசினா உன் பக்க நியாயத்தை வாயை தொறந்து சொல்ல மாட்டியா மதி? சண்டை போட வேணாம், குரல் உயர்த்தாமலே உனக்காக நீ பேசலாமே. என்ன பயம் உனக்கு?” எனக் கேட்டான்.

‘சித்தியிடம் மல்லு கட்ட சொல்கிறாரா ஐயோ!’ என மனதில் நினைத்தவள் அவனிடம் ஏதும் சொல்லவில்லை.

“ஆ ஊன்னா வாயடைச்சு போயிடு” என்றவன் ஷஷ்டியும் அங்கேயிருப்பதை கண்டு விட்டு, “பத்திரமா இங்கேயே இருங்க, அரை மணி நேரம் கழிச்சு வீட்டுக்கு வந்தா போதும்” என சொல்லி, வேகமாக கிளம்பி விட்டான்.

வீட்டுக்குத்தான் போகிறான் என்பது மதிக்கும் புரிய, எதுவும் சண்டையாகி விடக்கூடாதே என கவலை பட்டாள்.

ரவி வீடு வந்த போதும் கணவன் மனைவியின் வாக்குவாதம் ஓய்ந்திருக்கவில்லை. ரவி – மதி காதல் பற்றி பேசுவதை விட்டு தங்களின் பழைய கதைகளை சொல்லி பொங்கிக் கொண்டிருந்தாள் பாரதி.

அவனை கண்ட பாட்டி, “பார்த்தீயளா தம்பி செயாவை?” என ஆரம்பித்து, தண்மதி இவனிடம் சொன்னதையே கொஞ்சம் காரம் தடவி சொன்னார்.

ரவி கேட்டுக் கொள்ள, “இம்புட்டு இவ பேசின பொறவும் கல்யாணத்தை தள்ளி போடுறது சரின்னு எனக்கு படல” என்றார் பாட்டி.

அதற்குள் தம்பியின் வரவை அறிந்து கொண்டு பாரதி வர, பின்னாலேயே கணேசனும் வந்தார். இருவருமே ரவியை கோவமாக பார்த்தனர்.

“எதுக்காக க்கா இவ்ளோ சத்தம் போட்டுட்டு இருக்க நீ? ஆத்திரம் வந்தா யாரை என்ன பேசுறோம்னு கூட தெரியாம போயிடுமா உனக்கு?” என அக்காவை பார்த்துக் கேட்டான் ரவி.

“உனக்குத்தான் ஒன்னும் புரியலை. உண்மையை சொல்லு, இவர் கேட்டுத்தானே மதியை கல்யாணம் பண்ணிக்க ஓகே சொல்லியிருக்க? வீட்ல உள்ளவங்க பத்தி என்னை பத்தியெல்லாம் கவலை இல்லைல உனக்கு?” எனக் கேட்டாள் பாரதி.

அக்காவை இழுத்துக் கொண்டு அறைக்கு சென்று விட்டான் ரவி.

“வாயை வச்சிட்டு சும்மான்னு இருக்க மாட்டியா மா நீ?” என அம்மாவை கடிந்து கொண்ட கணேசன், மகள்கள் வெளியில் சென்றிருப்பது அறிந்து அவர்களை தேடிக் கொண்டு சென்று விட்டார்.

அரை மணி நேரம் கடந்து கணேசனும் பெண்களும் வீட்டுக்கு வந்தனர். ரவி இரண்டு பெண்களையும் பின்பக்கம் போயிருக்க சொல்லி விட்டான்.

 “எவ்ளோ ஈஸியா மதியோட கல்யாண பேச்சை நிறுத்தி வச்சீங்க, என்னையவே குத்தம் சொல்லிட்டா உங்கக்கா” என ரவியிடம் முறையிட்டார் கணேசன்.

“விரிசலை அடைக்கணும் மாமா, எதையாவது போட்டு மறைக்க கூடாது. உங்க ரெண்டு பேருக்கும் இடைல உள்ளதை நீங்க ரெண்டு பேரும்தான் ஒர்க் அவுட் பண்ணி சரி செய்துக்கணும். இல்லைனா இப்படி தேவையில்லாத சமயத்துல தேவையில்லாத  டாபிக்கை பெருசா பேசி சிக்கல் ஆகும்தான்” என ரவி சொல்ல, மௌனமாகி விட்டார் கணேசன்.

“தம்பி நான் என்ன சொல்றேனா… கல்யாணத்தை முடிச்சிகிட்டீங்கன்னா…” என்ற பாட்டியை கோவமாக பார்த்து அவரை பேச விடாமல் செய்தான்.

“இவ்ளோ காலம் மதி உங்க மகன் பொறுப்பு, கல்யாணம் பண்ணி வச்சிட்டா கட்டினவன் பொறுப்பு, எதுக்காக அவளை யாரையாவது சார்ந்தே இருக்கணும்நுங்கிற நிலைக்கு தள்ளுறீங்க பாட்டி? உங்க பையன் அவர் வாழ்க்கையை பார்க்க போயிட்டதால இவளுக்கு கல்யாணம் செய்ய துடிக்கிறீங்க. நாளைக்கு எனக்கும் இவளுக்கும் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் நான் செத்து போயிட்டா என்ன செய்வீங்க பாட்டி. என் கூடவே உடன்கட்டை ஏற வச்சிடுவீங்களா?” என அவன் சற்று கடுமையாகவே கேட்டான்.

பின்பக்கத்தில் இருந்தாலும் இங்கேயே கவனம் வைத்திருந்த மதி, ஏன் இப்படியெல்லாம் பேசுகிறார் என  கவலை கொண்டாள். “டேய்! என்ன பேச்சு இது?” என அதட்டினாள் பாரதி.

அவனது பேச்சிற்கான காரணம் புரிந்து கணேசன் அமைதியாக இருக்க, பாட்டிதான் கலங்கிப் போனார்.

“பதில் சொல்லுங்க பாட்டி” கிடுக்குப் பிடி போட்டான் ரவி.

“கல்யாணம் பண்ணி கூட படிக்கலாம்ல தம்பி, அவ பெரிய பெரிய வேலைக்கெல்லாம் போகணும்னு எனக்கும் கொள்ளை ஆசை இருக்கு, உங்க பொண்டாட்டியாக்கிட்டு அப்புறம் நீங்களே அனுப்பி வைங்கன்னுதான் சொல்றேன்” என்றார் பாட்டி.

“ம்… இன்னிக்கு கல்யாணம் பண்ணிக்க சொல்வீங்க, அப்புறம் குழந்தை வேணும்பீங்க, எப்படி ஃபோகஸ் பண்ணி படிக்க முடியும்? அவசர அவசரமா கல்யாணம் பண்ணிக்க என்ன நடந்துச்சு இப்போ? கல்யாண லைஃப், படிப்பு, பரீட்சை அப்படினு ஏன் நாங்க டென்ஷன்ல சிக்கணும்? நிதானமா ரசிச்சு வாழ ஆசை படுறோம், அதுக்கான வயசும் காலமும் எங்களுக்கு இருக்கு பாட்டி” என நிதானமாகவே சொன்னான்.

தம்பியை எரிச்சலாக பார்த்திருந்தாள் பாரதி.

ஒரு புன்னகையுடன் அக்காவை ஏறிட்டவன், “ஊரறிய கல்யாணம் பண்ணி கூட கமிட்மெண்ட் இல்லாம தப்பு தப்பா முடிவெடுக்கிற ஆள் போல நான் கிடையாது க்கா. இவதான்னு முடிவு பண்ணிட்டேன், நாந்தான் இவ மனசுலேயும் ஆசைய வளர்த்தேன். எந்த தடை வந்தாலும் சமாளிக்கிறதுன்னு முடிவோடதான் இருக்கேன். எங்களை வச்சு உன்னை யாரும் பேசினா பதில் கொடுக்க தெரியாத அளவுக்கு நீ அப்பாவி இல்லக்கா” என்றான்.

முகத்தை திருப்பிக் கொண்டாள் பாரதி.

கணேசனை பார்த்தவன், “எனக்கு லவ் வந்தா நீங்க காரணம்னு நம்புற அளவுக்கு முட்டாள் இல்லை என் அக்கா. நான் அக்காட்ட தெளிவா பேசிட்டேன், இனி எங்களை பத்தி பேசி சண்டை போடாது அக்கா. உங்களுக்கு தெரியாததா, பாரதி மேடம் டென்ஷன் ஆனா எப்படி பேசுவாங்கன்னு? நீங்களும் பதிலுக்கு பதில் சண்டை போடணுமா மாமா? ஷஷ்டிய மட்டும் பார்த்தா போதும்னு நினைக்காதீங்க, என் அக்காவையும் நினைங்க. உங்க கல்யாண  லைஃபோட ஆரம்ப கட்டத்துல எங்க கோட்டைய விட்டீங்கனு அலசி ஆராய்ச்சி பண்ணுங்க, அப்புறம் எங்கக்காக்கு உங்களை தவிர வேற எந்த நினைப்பும் இருக்காது” என்றான்.

கிருதாவை தடவிக் கொண்டு கொஞ்சம் விரைப்பாக நின்ற கணேசன், தன் மனைவியை ஓரக் கண்ணால் பார்த்தார்.

“இது எங்க போய் முடியுமோ எனக்கு தெரியாது, என்னை இது உள்ள இழுக்க கூடாது சொல்லிட்டேன்” என்றாள் பாரதி.

“கண்டிப்பாக்கா, நீ உள்ள வராமலே இருன்னுதான் நானும் சொல்றேன்” கணேசனை பார்த்து கண்கள் சிமிட்டிக் கொண்டே தீவிர தொனியில் சொன்னான்.

தம்பியை உக்கிரமாக பார்த்தாள் பாரதி. அப்போதும் ரவி இளக்கம் காட்டாமல் நிற்க, கோவமாக வீட்டின் முன்பக்கம் போய் விட்டாள் பாரதி.

‘ஏன் இப்படி?’ என்பது போல கை சைகையால் கேட்ட கணேசனும் மனைவியின் பின்னே சென்றார்.

இன்னும் தெளியாமல், ‘இப்போது கல்யாணம் நடக்க வாய்ப்பில்லையா?’ என பார்த்து நின்றார் பாட்டி.

பாட்டியின் கையை பிடித்துக் கொண்டு, “பொண்டாட்டிதான் புருஷன் பொறுப்புலன்னு யார் சொன்னா பாட்டி? புருஷனுக்கும் பொண்டாட்டிய சார்ந்து இருக்கிற நிலைமை வரலாம். அப்ப தாங்கி பிடிக்கிற அளவுக்கு அந்த பொண்ணு தன்னை வளர்த்துக்க வேணாமா?” தண்மையாக கேட்டான்.

வேகமாக அங்கே வந்த தண்மதி, “கல்யாணம் இப்ப இல்லைனா இல்லைதான். விடுங்க” என்றாள்.

அவளை சுள் என பார்த்தான். நான் என்ன செய்தேன் என்பது போல பின்னால் நகர்ந்து நின்றாள் அவள்.