கடந்து செல் காதலுடன்! 21

குருமூர்த்தி அதிவேகமாக விமான நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

மனிதருக்கு மூளையும், காதும் குப்பென அடைத்து விட்டது.

அவருக்கு முதலில் தன் பிள்ளைகளிடம் சென்றாக வேண்டும்.

தொடர்ந்து வந்த தொலைபேசி அழைப்பும் அவருக்கு கோவத்தை கொடுக்க, “என்னடா வேணும் உனக்கு?” என்று அழைப்பை ஏற்று கத்தியிருந்தார்.

எதிரில் இருந்தது சண்முகம். என்ன புரிந்து கொண்டாரோ, பதிலுக்கு கோவப்படாமல், “சஞ்சீவ் கோயம்பத்தூர்ல ஆளுங்களை கேட்டிருக்கான். அதுவும் உடனே” என்றார்.

குருமூர்த்திக்கு எப்படி இருக்குமாம்? அவரை போலவே அவரின் கையில் இருந்த காரும் ஆட்டம் கண்டது.

“நீ ட்ரைவ் பண்ணாத. காரை நிறுத்து, மூர்த்தி காரை ஓரங்கட்டு. உடனே” என்று சண்முகம் தொடர்ந்து சொல்லியபின் காரை நிறுத்தினார்.

“நான் மாட்டேன்னு எதுவும் சொல்ல முடியாது. அப்படியே சொன்னாலும் அவன் என்னை மட்டுமே கேட்டிருக்க மாட்டான். உனக்கு புரியுது இல்லை” என்றார் சண்முகம்.

குருமூர்த்தி எல்லாம் கைமீறி செல்வதை உணர்ந்தார். “நம்ம கார் வந்திருக்கு பாரு, அதுல ஏறு மூர்த்தி, சீக்கிரம்” என்று சண்முகம் சொல்ல, குருமூர்த்தி கார் கண்ணாடியை ஒருவன் தட்டி கொண்டிருந்தான்.

“அவங்க உன்னை ஏர்போர்ட்ல விட்டுடுவாங்க மூர்த்தி. உன்னோட பாதுகாப்பும் முக்கியம். நீ போனாதான் அவங்களை காப்பாத்த முடியும்” என்று சண்முகம் சொன்னது வேலை செய்தது.

குருமூர்த்தி அவர்கள் காரில் ஏறிக்கொண்டவர், கொஞ்சம் தெளிந்திருந்தார். “லிங்கம், லிங்கம் அய்யாக்கு கூப்பிடு” என்றார்.

சண்முகம் உடனே அவரையும் அழைப்பில் இணைத்தவர், விஷயத்தை சொல்ல, “மூர்த்தி” என்றார் லிங்கம் அதிர்வுடன்.

“வசுந்தரா மேடம்கிட்ட பேசுங்க” என்றார் குருமூர்த்தி.

“நான் கோயம்பத்தூர் போகணும். இப்போவே, அவங்ககிட்ட பேசுங்க. அதோட போலீஸ், ரௌடி யாரா இருந்தாலும் அங்க போக சொல்லுங்க. கோகுல், கோகுல் வீட்ல இருக்காங்க. அய்யா சீக்கிரம்” என்று குருமூர்த்தி அவசரத்துடன் சொன்னார்.

“சொல், சொல்றேன் மூர்த்தி. நீ பொறுமையா இரு. நாம பார்த்துக்கலாம்” லிங்கம் தைரியம் சொல்ல,

“அய், அய்யா. என் பொண்ணு, அவர் இரண்டு பேரும் எனக்கு வேணும். எனக்கு வேணும் அய்யா” குருமூர்த்தி குரல் இறுதியில் நடுங்கியேவிட்டது.

“என்னடா சொல்ற? நம்ம பொண்ணா? அவளோடவா அங்க போயிருக்காங்க” லிங்கம் கேட்க,

“மூர்த்தி சொல்றதை உடனே செய்ங்க ப்ளீஸ்” என்றார் சண்முகம் இடையிட்டு.

“சரி, சரி நான் இப்போவே வசுந்தரா மேடமுக்கு பேசுறேன்” என்று லிங்கம் வைத்துவிட,

“நான் என்ன பண்ணட்டும்?” என்று கேட்டார் சண்முகம்.

“அனுப்பு. உன் ஆளுங்க என் பிள்ளைகளை பார்த்துக்கணும், பத்திரமா பார்த்துக்கணும் சொல்லிடு” என்றார் குருமூர்த்தி.

“சரி. அந்த பையன், அவனை என்ன பண்ண? மாசிலாமணி அவனோட இருக்காரா?”

“ஆ. ஆமா. நான் இப்போ மணிகிட்ட பேசிடுறேன்” என்று குருமூர்த்தி உடனே மாசிலாமணிக்கு அழைத்தார்.

“பாப்பாகிட்ட பேசிட்டிங்களாண்ணா?” என்று மணி கேட்க,

“மணி” என்ற குருமூர்த்தி குரலில் கலக்கம்.

“என்னாச்சுண்ணா?”

“என் பொண்ணும், அவரும் கோயம்பத்தூர் வந்திருக்காங்க மணி. விஷயம் தெரிஞ்சு அவங்களை தேடி ஆளுங்க  போய்ட்டு இருக்காங்க மணி. நான் என்ன செய்வேன். என்ன செய்ய போறேன், எனக்கு தெரியலை. அவங்க எனக்கு வேணும் மணி, சுபத்ரா மட்டுமே போதும், இவங்களும் எனக்கு இல்லாம போயிட கூடாது மணி. அப்புறம் நான்,  நான் என்னாவேன் மணி?”

“அண்ணா. அப்படியெல்லாம் எதுவும் ஆகாது. நீங்க தைரியமா இருங்க. நான் நம்ம பசங்களை உடனே அங்க அனுப்பறேன்” மாசிலாமணி போனை வைக்க, குருமூர்த்தி அப்படியே சீட்டில் சாய்ந்துவிட்டார்.

கையறு நிலை இதுதானா? கடவுளே! என் பிள்ளைங்க அங்க ஆபத்துல இருக்காங்கன்னு தெரிஞ்சும் என்னால உடனே அவங்ககிட்ட போக முடியலையே?

குருமூர்த்தி சீட்டில் ஓங்கி குத்தினார். “சீக்கிரம், ஏன் இவ்வளவு மெல்ல போற? மிதிடா” என்று ஓட்டுனரை விரட்டினார் மனிதர்.

இன்று முடிக்க வேண்டிய வேலைக்காக வசுந்தரா அன்று சென்னையில் தான் இருந்தார். லிங்கம் அழைத்து விஷயத்தை சொன்னதும், வசுந்தரா இடிந்து போனார்.

“என், என்ன சொல்றீங்க?” அவர் குரல் வெளிவராமல் சதிசெய்தது.

“எதையும் விளக்கமா பேச முடியாது. மூர்த்தி உடனே கோயம்பத்தூர் போக ஏற்பாடு பண்ணுங்க. அப்புறம் போலீஸை கோகுல் வீட்டுக்கு அனுப்புங்க” என்றார் லிங்கம்.

“நான், நான் இப்போ சொல்றேன்” என்று வைத்தவர் முதல் முறையாக தன் அதிகாரத்தை பயன்படுத்தினார். அவருக்கு வேறுவழி இல்லை.

அடுத்து சிவப்பிரகாசத்திற்கு சொல்ல வேண்டும். அதை நினைக்கும் போதே மனது கலங்கியது.

சொல்லியாக வேண்டும். மகன் அங்கு ஆபத்தில் இருக்கும் போது சொல்லாமல் முடியாது.

சிவப்பிரகாசத்திற்கு அழைத்தார் வசுந்தரா. விஷத்தை சொல்லிய நொடி முதல், அழைப்பு முடியும் வரை, வசுந்தராவால் ஒற்றை வார்த்தை பதில் பேச இயலவில்லை.

“நான் கோயம்பத்தூர் கிளம்பிட்டேன்” என்று சிவப்பிரகாசம் வைக்க, வசுந்தரா கலங்கியிருந்த கண்களை ஒற்றி கொண்டார்.

டெல்லி செல்வதற்காக தயாராகி கொண்டிருந்த வசுந்த்ராவும், உடனே தன் பயணத்தை கோயம்புத்தூருக்கு மாற்றி கொண்டார்.

அவரின் பதவி முன்னிட்டு எந்த விதமான காத்திருப்பும் இல்லாமல் விமான நிலையம் வந்துவிட்டவர், “குருமூர்த்தியை கூட்டிட்டு வாங்க” என்று அவரின் உதவியாளருக்கு சொல்லி சென்றார்.

அதன்படி குருமூர்த்தியும் அவருடன் கோயம்பத்தூர் பயணப்பட, இருவருக்கும் ஏதும் பேச முடியாத சூழல்.

சிவப்பிரகாசம் வீட்டினருக்கும் விஷயம் தெரிந்துவிட, அவர்களும் பின்னாலே கோயம்பத்தூர் கிளம்பியிருந்தார்கள்.

“குணா. எங்கடா போய் தொலைஞ்ச?” என்று மாசிலாமணி தனி போனில் அழைத்து கத்த,

“எவனோ டீலர் பிரச்சனை பண்றானாம். அதான் நம்ம ஆளுங்களோட நானும் வந்துட்டேன்” என்றான் குணா.

“இதுவாடா முக்கியம்? நான் உன்னை பாப்பா கூட கோயம்பத்தூர் போக சொன்னேன் இல்லை,  ஏண்டா போகலை” என்று மாசிலாமணி சத்தமிட,

“இது எப்போ? எனக்கு தெரியாது” என்றான் குணா.

“ஆபிஸை விட்டு என்னை நகர கூடாதுன்னு தான் உங்க பாப்பா சொன்னாங்க”

“அடிங்க. நேர்ல வந்தேன் தோலை உரிச்சிடுவேன், என்ன பண்ணி வைச்சிருக்க தெரியுமாடா உனக்கு? உன்னால அங்க இரண்டு பேர் ஆபத்தல சிக்கியிருக்காங்க”

“இதென்ன புது கதை? நான் என்ன பண்ணேன்?”

“நீ ஒழுக்கமா வீட்ல இல்லாதது தான் பிரச்சனை? இன்னொரு முறை சண்டை போட்டுட்டு எங்கேயாவது போய் பாரு காலை உடைச்சிடுறேன்”

“அதை சண்டை போடுற என் அம்மாகிட்ட சொல்லுங்க. இப்போ இந்த டீலரை என்ன பண்றது? ஓவரா கிராக்கி பண்ணான்னு எனக்கும், அவனுக்கும் கைகலப்பு ஆகிப்போச்சு” என்றான் சாதாரணமாக.

மணிக்கு ஏற்கனவே உச்சத்தில் நின்றது. இதில் இவன் வேறு?

“நீயாச்சு, அவனாச்சு, எனக்கு தெரியாது?”

“நான் கோயம்பத்தூர் எல்லையை தாண்ட முடியாதாம்? என்னை மிரட்டுறான்?”

“டேய், என்ன சொன்ன? இப்போ எங்க இருக்க நீ?”

“கோயம்பத்தூர்”

“நம்ம பசங்க கூட இருக்காங்களா?” பதிலை வாங்கி கொண்டவர்,

“அந்தோணி தெரியுமில்லை. அவன் சொல்ற இடத்துக்கு நீங்களும் உடனே போங்க. சீக்கிரம்” என்று அவர்களையும் கோகுல் வீட்டுக்கு அனுப்பி வைத்தார் மணி.

“அவன் ஆளு ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கான் மணி. நீ தனியா அவனை சமாளிக்கிறது கஷ்டம். ரிஸ்க் எடுக்காத. அவனை மயக்கத்திலே வைச்சுரு. முன்னவிட இப்போ அவன் நமக்கு அதிகமா தேவைப்படுறான். புரியுது இல்லை” என்று மூர்த்தி விமானம் ஏறும் முன்பு மாசிலாமணிக்கு அழைத்து பேசியிருந்தார்.

மாசிலாமணிக்கும் ஒற்றையாளாக இவனை சமாளிப்பது கடினம் என்பது புரிந்து தான் இருந்தது, அதனாலே தங்கள் கட்டுப்பாட்டில் இருந்தவனுக்கு மயக்கமருந்து செலுத்தினார்.

இனி குருமூர்த்தி சொல்லும் வரை மாசிலாமணி காத்திருக்க வேண்டும்!

சர்வாச்சார்யா, சம்யுக்தா எப்படி இருக்கிறார்கள் என்று தெரியாமல் எல்லோருக்கும் திக், திக்கென தான் இருந்தது.

சம்யுக்தா போனை எடுக்கவில்லை. ஓட்டுனருக்கு பேசி கொண்டே இருந்தார் குருமூர்த்தி. அவர் போனும் திடீரென கட்டாகிவிட்டது. திரும்ப அழைத்தால் அழைப்பு செல்லவில்லை.

ஆட்கள் கோகுல் வீட்டுக்கு சென்றுவிட்டார்கள் என்பதை குருமூர்த்தி உணர்ந்து கொண்டார்.

“போலீஸ் அங்க போயிட்டாங்க இல்லை” என்று வசுந்தராவின் உதவியாளரிடம் கேட்டு கொண்டார் குருமூர்த்தி.

“நம்மாளுங்களும் அங்க சீக்கிரம் போயிடுவாங்க” என்று லிங்கம், சண்முகம், மாசிலாமணி மூவரும் தனி, தனியாக அழைத்து சொல்லியிருந்தார்கள். குருமூர்த்திக்கு சிறிது ஆறுதல்!

விமானத்தில் ஏறும் முன்பு நடந்தது இது?

விமானம் தரையிறங்கியதும் குருமூர்த்தி, “போலீஸ்கிட்ட பேசுங்க. பிள்ளைங்க எப்படி இருக்காங்கன்னு கேளுங்க” என்று வசுந்த்ராவின் உதவியாளரிடம் சொன்னார்.

அவரின் உதவியாளர் வசுந்தரா பார்வையில் அழைப்பு விடுத்தார். “கோகுல் வீட்டை சுத்தி பாதுகாப்பு போட்டிருக்காங்க. ஆனாலும் நிலைமை கொஞ்சம் சரியில்லைன்னு தான் சொல்றார்” அவர் பேசிமுடித்து சொன்னார்.

“நா, நான் அங்க போறேன்” என்று குருமூர்த்தி காரில் ஏறும் முன்பு நின்று, “நீங்க அங்க வராதீங்க. பிள்ளைங்க என் பொறுப்பு” என்று வசுந்தராவிடம் சொன்னார்.

“நான் இப்போவும் உங்களை நம்புறேன்” வசுந்தரா திடமாக சொன்னார்.

குருமூர்த்தி நொடிக்கும் குறைவாக நின்றுவிட்ட பின்னே கிளம்பினார்.

எத்தனை விரைவாக செயல்பட்டும் சில மணி நேரங்கள் கடந்து தான் விட்டது. இதற்குள் என்னென்ன நடந்திருக்கும்?

காவலர்கள் மீதும் முழு நம்பிக்கை இல்லை, சண்முகம் ஆட்கள் மீதும் முழு நம்பிக்கை இல்லை.

லிங்கம், மணி அனுப்பிய ஆட்கள் மட்டும் தாக்கு பிடிப்பார்களா?

சர்வாச்சார்யா குருமூர்த்தி வீட்டில் இருப்பான் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலே ஊட்டியில் வைத்து  அவ்வளவு கலவரம்!

இன்று கோகுல் வீட்டில் நிச்சயமாக இருக்கிறான் என்று தெரிந்த பின், அமைதியாக இருப்பார்களா?

சுலபமாக கைக்கு கிடைத்தவனை விட்டு விடுவார்களா?

குருமூர்த்திக்கு நெஞ்சு அரித்து கொண்டே இருந்தது.

கோகுலின் முன்னோர்கள் வீடு இருப்பது ஓர் கிராமத்தில் என்பதால், காவலர்கள் அந்த தெரு முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டார்கள்.

மீடியாவிற்கு விஷயம் தெரியக்கூடாது என்று இருபக்கமும் கண்டிப்பாக சொல்லப்பட்டிருந்தது. சர்வாச்சார்யாவை கைப்பற்ற நினைப்பவனும் பலத்தின் உச்சம்! சர்வாச்சார்யாவின் குடும்பமும் செல்வாக்கின் உச்சம்!

யார் முதலில் சர்வாச்சார்யா இருக்குமிடம் செல்வது  என்று பெரிய போட்டியே நடந்து கொண்டிருந்தது.

சிவப்பிரகாசம் அவர்களின் தனிப்பட்ட விமானத்தின் வழி பயணம் மேற்கொள்ள, மற்றவனும் அது போலவே கிளம்பியிருந்தான்.

குருமூர்த்தியும் கோகுல் வீட்டை நெருங்கும் தொலைவில் இருந்தார்.

“நான் அங்க போற வரைக்கும் பிள்ளைங்க பாதுகாப்பா இருந்திடணும்” குருமூர்த்தியின் எண்ணமெல்லாம் இதுமட்டும் தான்.

என்ன நடந்தாலும் நான் சமாளிச்சுக்குவேன், ஆனா இவங்களால முடியாது! என் பொண்ணுக்கு இன்னும் இருபது வயசு கூட ஆகலை, சர்வாச்சார்யா இருபத்தி மூன்று, அல்லது இருபத்தி நான்கில் தான் இருப்பான்!

இவர்கள் எப்படி ராட்சச மனிதர்களை சமாளிப்பார்கள்?

தாக்கு பிடிக்க மட்டுமே முடியும்! முழுதாக தப்ப முடியாது! குருமூர்த்திக்கு நன்றாக தெரியும். அந்த பதட்டத்திலே, “மிதிச்சு ஓட்டு, இல்லை காரை என் கையில கொடு?” என்று ஓட்டுனரை சத்தம் போட்டார் குருமூர்த்தி.

“குருமூர்த்திக்கிட்ட காரை கொடுத்திடாத” என்று ஓட்டுனருக்கு தெளிவாக சொல்லப்பட்டிருக்க, அவன் எப்படி கொடுப்பான்?

“வந்துட்டோம்” என்றான் அவன்.

“ஊருக்குள்ள போக முடியாது” கோகுல் ஊர் எல்லையிலே குருமூர்த்தி கார் காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது.