அத்தியாயம் -9.2

கைப்பேசி பார்த்துக் கொண்டிருந்த ரவி, தண்மதியை கண்டதும் இரண்டு கண்களையும் சிமிட்டி புன்னகைத்தான். அவள் கூச்சமும் சங்கடமுமாக இருக்க, அவனது புன்னகை நன்றாக விரிந்தது.

சற்று பதட்டத்துடனே அவனிடம் டம்ளரை நீட்டினாள்.

“எக்ஸாம்ஸ் எப்போ மதி?” என விசாரித்துக் கொண்டே தேநீர் பருக ஆரம்பித்தான்.

அவள் பதில் சொல்ல, “உட்கார்” என்றான். அருகில் கிடந்த இருக்கையின் நுனியில் அமர்ந்து கொண்டாள்.

“நல்லா உட்கார் மதி” என அவன் சொல்ல, அசடு வழிய சிரித்துக்கொண்டே கொஞ்சம் வசதியாக அமர்ந்து கொண்டாள்.

“என்ன நீ, என்னை புதுசா பார்க்கிற மாதிரி இப்படி ஷை ஆகுற?”

“புதுசா பார்க்கிற மாதிரிதான் இருக்கு” என அவனை பார்க்காமல் சொன்னாள்.

“என்னை சரியா பார்க்காமலே என்ன புதுசா கண்டுபிடிச்சியாம் என்கிட்ட?”

“அது…” என அவள் தயங்க, “ம்ம்…” என அவளை பேச ஊக்கினான்.

“ஹேர்கட் பண்ணிருக்கீங்க, முகம் பள பளன்னு இருக்கு, கைல புதுசா முடி கயிறு கட்டியிருக்கீங்க” என அடுக்கினாள்.

நிஜமாகவே வியந்துதான் போனான். அம்மா கட்டி விட்ட கயிறு, கடந்த வாரத்தில் போர் அடிக்கிறது என தங்கை தன் முகத்தில் எதை எதையோ தடவி நேரத்தை ஓட்டியது என எல்லாம் சொன்னான். அவளும் கேட்டுக் கொண்டாள்.

“நான் ப்யூர் வெஜ்னு உனக்கும் இப்போதான் தெரியுமா?” என அவன் கேட்டதற்கு, “உங்களை பத்தி என்ன சொல்லியிருக்கீங்க என்கிட்ட?” எனக் கேட்டாள்.

“ஏஏய்ய்… குறை சொல்றியா என்னை?” என சிரிப்புடன் கேட்டான். வேகமாக மறுப்பாக தலையாட்டினாள்.

“அம்மா அவங்கள மாதிரியே எங்களை பழக்கிட்டாங்க, அப்பா நான் வெஜ் சாப்பிடுவார், என் பக்கத்துல உட்கார்ந்து ரகம் ரகமா சாப்பிடுவார், நான் சாப்பிட மாட்டேனே ஒழிய பக்கத்துல உள்ளவங்க சாப்பிடுறதுல எனக்கு பிரச்சனை இல்லை. அதனால சாப்பாட்டு விஷயம் பத்தியெல்லாம் பயப்படாத” என்றான்.

“நானும் சைவமா மாறிடவா?” எனக் கேட்டாள்.

“சாப்பாட்டு விஷயம் உன் நம்பிக்கைகள் இதையெல்லாம் எனக்காகன்னு இல்லை யாருக்காகவும் மாத்திக்க வேணாம் மதி” என அவன் சொல்லிக் கொண்டிருக்க, கையில் கேரம் போர்டுடன் வந்தார் கணேசன். பின்னால் துள்ளி குதித்துக் கொண்டு ஓடி வந்தாள் ஷஷ்டிகா.

“டேய்! புதுசு வாங்க வச்சியா அப்பாவை?” என ஷஷ்டியை செல்லமாக கடிந்து கொண்டான் ரவி.

“இருக்கட்டும், இங்க வந்தா விளையாடிக்குவா” என்றார் கணேசன்.

இத்தனை நாள் பழக்கத்தில் இருவரும் ‘ஸார்’ போட்டுக் கொள்வதை நிறுத்தியிருந்தனர். போக போக ‘மாமா’ என உறவுமுறை சொல்லி அழைக்கவும் பழகிக் கொண்டான் ரவி.

கணேசனுக்குதான் ரவியை முறை சொல்லி அழைக்க வரவில்லை, மொட்டையாக ‘வாங்க போங்க’ என குறிப்பிட்டு பேசுவார், தானாக மாறும் என அவனும் விட்டு விட்டான்.

ரவி, அவனது தாய், தங்கை, ஷஷ்டி என அனைவரும் ஒன்றாக இருந்தால் கேரம் போர்ட், செஸ் என எதையாவது விளையாட ஆரம்பித்து விடுவார்கள். பொழுது போக்குக்கு என்றில்லாமல் போட்டி போட்டுக் கொண்டு மணிக் கணக்கில் விளையாடுவார்கள்.

விட்டுத் தருகிறேன் என்பதற்கும் இடமிருக்காது, ஷஷ்டி முகம் சுணங்கினாலும், “இது கேம், ஸ்போர்டிவா இருக்கணும்” என அறிவுரை சொல்வானே தவிர, அசட்டையாக விளையாட மாட்டான்.

ஷஷ்டியும் அவளது அப்பாவும் ஓர் அணியாம், அக்காவும் மாமாவும் இன்னொரு அணியாம், உற்சாகத்தோடு அனைவரையும் விளையாட தயார் படுத்தினாள் ஷஷ்டி.

விளையாடத் தெரியாத தண்மதி பாவமாக தன் சித்தப்பாவை பார்த்தாள்.

“இவ விட மாட்டா, எனக்கே சொல்லி கொடுத்திருக்கா, ஈஸிதான் சும்மா கைக்கு வந்த காய்னை அடிச்சி விடு” என்றார் கணேசன்.

“இப்படித்தான் தப்பு தப்பா சொல்லி தருவீங்களா மாமா?” என கடிந்து கொண்ட ரவி, பத்து நிமிடங்கள் அவளுக்கு பாடம் எடுத்தான்.

பாரதி எட்டிப் பார்க்க, ஆளை விடுங்களேன் மன நிலையில் இருந்த கணேசன் மனைவியிடம் ‘ஏதாவது செய்’ என பார்வையால் சொன்னார். ‘மாட்டிக் கொண்டாயா?’ என அவள் கண்களால் கிண்டல் செய்ய, முகத்தையும் கண்களையும் சுருக்கிக் கொண்டு கெஞ்சினார்.

பெண்கள் இருவரும் இதை கவனிக்கவில்லை, ரவியின் கவனத்திலிருந்து அந்த தம்பதியினரின் பார்வை மொழி பரிமாற்றம் தப்பவில்லை.

ரவி நமட்டு சிரிப்புடன் விளையாட, “ஏன் மாமா சிரிக்கிறீங்க?” என கேட்டு வைத்தாள் ஷஷ்டி.

ரவி ஏதோ சொல்லி சமாளிக்க, “இலை வாங்கிட்டு வரலையா நீங்க?” என கணவரிடம் கேட்டாள் பாரதி.

“மறந்திட்டேன் பாரதி, இதோ இப்ப வாங்கிட்டு வர்றேன்” என எழுந்து சென்றார் கணேசன், ஷஷ்டியும் அப்பாவை வால் பிடித்துக்கொண்டாள். மகளும் வந்து விட்டாளே என்ற யோசனையோடு உள்ளே எட்டிப் பார்த்தார் அவர்.

அவரை அறிந்தவன் போல ரவியும் அவரை பார்த்தான். அவர் அவஸ்தையாக பார்க்க, “மாமா…” என கண்டனமாக அழைத்தான்.

“என்னடா?” என கேட்டுக் கொண்டே வந்து விட்டாள் பாரதி.

“தெரியலை உன் ஹஸ்பண்ட்கிட்டேயே கேளு, மதி என் கூட இருக்கவும் இப்படி வயசு பொண்ணை இவன் கூட தனியா விட்டுட்டு போறதான்னு யோசனை போல” என கணேசனை மாட்டிக் கொடுத்து விட்டான்.

தண்மதி விழிக்க, “கடைக்கு போங்க நீங்க” என அதட்டி கணவரை அனுப்பி வைத்த பாரதி, தம்பியை சங்கடமாக பார்த்து நின்றாள். அவன் கண்கள் சிமிட்டி, “சும்மாக்கா, நீ போ” என்றான்.

அவள் ஆசுவாச மூச்சு விட, “விளையாட நீயும் வர்றியா க்கா?” எனக் கேட்டான் ரவி.

“இல்லடா நீங்க விளையாடுங்க, அவளும் எப்ப பாரு படிச்சிட்டே இருக்கா, மைண்ட் ரிலாக்ஸ் ஆகும்” என சொல்லி சென்று விட்டாள் பாரதி.

“என்ன மாமா நீங்க?” என்றாள் தண்மதி.

“பின்ன… நான் என்ன உன்னை முழுங்கவா போறேன்? அவர் மட்டும் அவர் ஆள் கூட கண்ணால பேசுறாரு, ஸைட் அடிக்கிறாரு, எனக்கு மட்டும் ரூல்ஸ் போடுவாரா?”

“மாமா! சித்தி ஆத்தாலாம் இருக்காங்க” என பயந்தாள்.

“நீ அவருக்கும் மேல இருக்க, என்ன பண்ணினேன் நான்? விளையாடு வா”

“என்னோட விளையாடினா உங்களுக்கு போர் அடிச்சிடும்”

“அப்படின்னு நீயே நினைச்சுக்காத” என்றவன் அவளுக்கு சொல்லிக் கொடுத்து, அவளை விளையாட வைத்து, தானும் விளையாடினான்.

திடீரென, “என்கிட்ட ஏன் மாமா நீங்க பேசுறதே இல்லை?” எனக் கேட்டாள்.

“படிக்கிற பொண்ணை தொல்லை செய்ய வேணாம்னுதான் மதி” என அவன் சொல்லவும், எதுவோ சொல்லத் தயங்கி சொல்லாமலே விட்டாள்.

“ஹேய் என்ன, சொல்லு”

“ஒன்னுமில்ல” என அவள் சொல்லவும் சில நொடிகள் யோசித்தவன், “நான் உன்கிட்ட பேசாததே டிஸ்டர்ப் ஆகுதா?” எனக் கேட்டான்.

சட்டென நிமிர்ந்து அவனை பார்த்தாள். “சொல்லு” என அவன் இன்னொரு முறை அழுத்திக் கேட்டான்.

ஆமாம் என தலையசைத்தவள், “உங்களுக்கு எம்மேல ஏதும் கோவமோ, என்னை பிடிக்கலையோன்னு எல்லாம் தோணுது. ரொம்ப வேணாம், ரெண்டு வார்த்தை பேசலாம், மெசேஜாவது பண்ணலாம்” என குறையாக சொன்னாள்.

“இப்பதானே சொல்ற? இனிமே பேசுறேன்” என அவன் இலகுவாக சொல்லவும், வேகமாக தன் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினாள்.

கணேசன் இலை வாங்கிக் கொண்டு வருகையில் ரவியும் மதியும் பல்லாங்குழி விளையாடிக் கொண்டிருந்தனர்.

“என்ன பாப்பா இது?” எனக் கேட்டார் கணேசன்.

“எனக்கு விளையாட தெரியாதத விளையாட வச்சு படுத்துறாங்க சித்தப்பா, அதான் இதை எடுத்திட்டேன்” என்றாள்.

மனைவியிடம் இலை கொடுத்து விட்டு வந்தவர் ரவியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டார். மூவர் பங்கு பெற்று விளையாடும் முறையில் விளையாட ஆரம்பித்தனர். அப்பாக்கு பதிலாக ஷஷ்டி விளையாடினாள், அவர் சொல்லும் குழியிலிருந்து காய்களை எடுத்து பிரித்து போட்டாள்.

பல்லாங்குழி ஆட்டம் அவ்வளவாக ரவிக்கு தெரியவில்லை என்றாலும் தற்செயலாக அவனே வென்றான். கணேசனை அவன் கிண்டல் செய்து ஓட்ட, பொறுக்காத ஷஷ்டி எல்லா காய்களையும் எடுத்து ஒன்றாக்கி அப்பாவிடம் கொடுத்து விட்டு கள்ளச் சிரிப்பு சிரித்தாள்.

“திருட்டு கழுதை!” என செல்லமாக திட்டினான் ரவி. அதில் கோவம் கொண்ட ஷஷ்டி, அப்பாவிடம் புகார் சொல்ல, மகளை மடியில் அமர வைத்து சமாதானம் செய்தார் கணேசன்.

தண்மதி மீண்டும் காய்களை பல்லாங்குழியில் பூட்ட, போதுமென சொல்லி வெறும் தரையில் படுத்து விட்டான் ரவி.

“உள்ள படுக்குறீங்களா?” எனக் கேட்டார் கணேசன்.

“ஜஸ்ட் படுத்தேன் மாமா, இருக்கட்டும்” என சொல்லி விட்ட ரவி, ஷஷ்டியின் கை பிடிக்க, அவள் உதறி விட்டாள்.

கணேசன் கண்டிக்க, மீண்டும் புகார் வாசித்தாள் ஷஷ்டி.

“இப்படி கம்ப்ளைண்ட் பண்ணினா மாமா இனிமே வர மாட்டாங்க” என மகளிடம் சொன்ன கணேசன், சமையல் ஆகி விட்டதா என பார்க்க சென்று விட்டார்.