“அவங்களுக்கு கார்த்தி முக்கியம்னா அது அவங்களோட. அதுக்காக என்னை எதுக்கு பேசணும்? அதுவும் எதோ கார்த்தி வாழ்க்கையையே நான் தான் கெடுக்கப் பார்க்குறேன்ற மாதிரி? அப்படி சொன்னா கோபம் வராத? இப்போ நீங்களும் மன்னிப்பு கேட்டு என்னைத்தான் குற்றவாளி ஆக்குறிங்க” என்றாள் மகிமா.

“நகுலனையும் கார்த்தியையும் நாங்க என்னைக்குமே பிரிச்சு பார்த்ததில்லம்மா. ரெண்டு பேருமே என் அக்கா பசங்க தான்” என்றார் சேது.

“இப்போ என்னங்க மகிமா உங்க பிரச்சனை? இப்ப என்ன? எல்லாருக்கும் முக்கியமானவர் நகுலனாவே இருந்துட்டு போகட்டும். இது ஒரு விஷயமா?” என்றாள் தாரா கோபமாய்.

“ஏய்..! நான் உன்கிட்ட பேசலை” என்றாள் மகிமா.

“இந்த ஏய், பேய்ன்னு சொல்ற வேலையெல்லாம் வச்சுகிட்டா பல்லைத் தட்டி கையில குடுத்துடுவேன் ஜாக்கிரதை. அன்னைக்கு சொன்னது தான், மரியாதை குடுத்தா தான் மரியாதை கிடைக்கும்” என்றாள் தாரா.

“தாரா என்னம்மா இது? நீயாவது கொஞ்சம் அமைதியா இரும்மா” என்றான் நகுலன்.

“இங்க பாருங்க நகுலன், உங்க வொயிப்க்கு இப்போ ஏதாவது பிரச்சனை பண்ணியே ஆகணும். அதுக்கான காலத்தையும் காரணத்தையும் பார்த்துட்டு இருந்தாங்க. சரியா வந்து தாமரை சித்தி சிக்கிட்டாங்க. கிடைச்ச சான்சை விடாம பிடிச்சுகிட்டு அப்படியே அட்டென்ஷன் சீக்கிங் பண்ணிட்டு இருக்காங்க. தாமரை சித்தி அப்படி பேசக் கூடியவங்களா? உங்களுக்குத் தெரியாதா? விசேஷம் நடக்குற வீட்ல இதெல்லாம் ஒரு பிரச்சனைன்னு பேசுவாங்களா முதல்ல? இதுல இருந்தே தெரிய வேண்டாமா இவங்க கேரக்ட்டரை” என்று தாரா பேசிய பேச்சில் யாராலும் பதில் வார்த்தை பேச முடியவில்லை.

“இவளுக்கு இப்போ இது தேவையா? இந்த சமையல்காரர் பொண்ணு வேற பாயிண்ட்டு பாயிண்ட்டா பேசுறா?” என்று எண்ணிய வசந்தி வேடிக்கை பார்க்க,

“நீயெல்லாம் என் கேரக்டரை பேசுற அளவுக்கு நான் ஒண்ணும் மோசமில்லை” என்றாள் மகிமா கோபமாய்.

“அதென்ன நீயெல்லாம்?” என்றாள் தாரா இடுங்கிய பார்வையுடன்.

“ஏன் தெரியாதா உனக்கு? நான் நடந்துக்கிறதைப் பத்தி பேசுன தாமரை சித்திக்கு உன்னோட நடத்தை தெரியாமையா இருக்கும்? அப்போ உன்னையும் அவங்க கண்டிச்சு இருக்கனும்ல? நான்னா மட்டும் அவ்வளவு இளக்காரம்?” என்றாள் மகி.

“வார்த்தயை பார்த்து பேசுங்க மகிமா. என்னோட நடத்தையில என்ன கண்டிங்க?” என்றாள் கூர்மையான பார்வையுடன்.

“ஏன் உனக்குத் தெரியாதா? எதுக்கு அத்தனை தடவை கார்த்தி ரூம்க்குள்ள போயிட்டு போயிட்டு வந்த? எதுவும் நடக்காமையா உடனே கல்யாணமும் பண்ணிகிட்ட? இதுல நீயெல்லாம் என்னைப் பத்தி பேச வந்துட்ட?” என்றவளை ஓங்கி அறைந்திருந்தாள் தாரா.

அனைவரும் அதிர்ந்து போய் பார்க்க, அகனோ கைகளைக் கட்டியபடி சுவாரஸ்யமாய் பார்த்திருந்தான்.

“இன்னொரு வார்த்தை என் கேரக்டரை பத்தி தப்பா பேசுன, இப்போ அறையோட விட்டேன். அடுத்து பேசுறதுக்கு நாக்கு இருக்காது.  நீ பேசுறதை இவங்க வேணும்னா கேட்டுட்டு பேசாம இருக்கலாம். எனக்கு அப்படி இருக்கணும்னு எந்த அவசியமும் கிடையாது. மைன்ட் இட்” என்று விரல் நீட்டி எச்சரித்திருந்தாள்.

“கை நீட்டுறது என்ன பழக்கம் தாரா?” என்றான் நகுலன் கோபமாக.

தப்பே செய்தாலும் மனைவிக்காய் நின்று பேசிக் கொண்டிருந்த நகுலனைப் பார்த்தவள், திரும்பி அகனைப் பார்த்தாள். அவனோ வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்க, கண்களால் அவனை முறைத்தாள் தாரா.

‘எல்லா இடத்துலையும், எல்லா நேரத்துலயும் இனி நான் மட்டும் தான் பேசணும் போல’ என்று எண்ணியவளுக்கு உள்ளுக்குள் ஏதோ ஒன்று உடைய,

“அவன் என்ன வேணும்னா அப்படி இருக்கான். அவனால பேச முடிஞ்சா வந்து பேச மாட்டானா?” என்று அப்போதும் அவள் மனம் அகனுக்காக வாதாடியது.

“அட்லீஸ்ட் பக்கத்துல வந்து ஒரு சப்போர்ட்க்கு நிக்கலாம் தான?” என்று அவளும் விடாமல் வீம்பு பிடித்தாள் மனதிடம்.

பூமிநாதனும், வேணியும் மகளுக்கு ஆதரவாய் நிற்க, அவள் பார்வை என்னவோ அகனிடம் மட்டும் தான்.

‘இதுக்கு மேல வேடிக்கை பார்த்தா வந்து என்னையும் அறைஞ்சிடுவா போலயே?’ என்று எண்ணிக் கொண்டவனின் இதழ்களில் புன்னகை மலர,

“நான் என்ன நிலமையில இருக்கேன், இந்த புன்னகை மன்னனுக்கு இப்போ இந்த சிரிப்பு தேவையா? என் கேரக்டரையே ஒருத்தி சிரிப்பா சிரிக்க வச்சுட்டு இருக்கா. அதை வேடிக்கை பார்த்தது மட்டுமில்லாம நீயும் சேர்ந்து சிரிக்க வேற செய்யுறியா? பம்பரக்கட்டை மண்டையா, இன்னைக்கு உன் மண்டைய நான் உடைக்கல, என் பேரு யுகந்தாரா இல்லடா” என்று மனதிற்குள் கறுவிக் கொண்டாள்.

அவளைப் பார்த்துக் கொண்டே அவளின் அருகில் வந்தவனை முறைத்துக் கொண்டிருந்தாள் தாரா. பூமிநாதனையும் வேணியையும் விலக்கி அவளைத் தன் கையணைப்பிற்குள் கொண்டு வந்தவன், நகுலனைக் கேள்வியாய் பார்த்தான்.

தாராவோ தன்னை அணைத்தபடி நின்றிருந்தவனை ‘ஆ’வென்று பார்த்திருந்தாள்.

“தாரா எப்படி மகியை அடிக்கலாம் கார்த்தி? அவளை அடிக்க தாரா யாரு?” என்றான் நகுலன் கோபமாய்.

அகனின் அருகாமையில் மீண்டும் தெம்பானவள்,

“இங்க பாருங்க நகுலன்” என்று ஆரம்பிக்க, அகனின் கைகள் அவள் தோள்களை அழுத்திய விதத்தில் அமைதியானவள் வாயை மூடிக் கொள்ள, அவர்களைப் பார்த்திருந்தவர்களுக்கு ஆச்சர்யம். அவனின் உடல் மொழியை கூட புரிந்து கொள்ளும் தாராவை அவர்கள் அப்படி பார்த்ததில் ஆச்சர்யமில்லை.

மெல்ல அவளின் காதருகில் குனிந்தவன்,

“யுகா” என்றான் மெதுவான குரலில். அவன் இதழ்கள் காதோரத்தில் உரசிய உணர்வில் அவளுக்கு கூசி சிலிர்த்தது. அந்த உணர்வில் அசிரத்தையுடன் அசட்டையாய் இருந்தவள் முதலில் காதில் கேட்ட குரலை கவனிக்கவில்லை.

அகனோ மீண்டும் அழுத்தமாக,”யுகா” என்றழைக்க, பட்டென்று திரும்பி அவன் முகம் பார்த்தவள் குழம்பிப் போய் நின்றாள்.

“என்ன?” என்றான் புருவத்தை உயர்த்தி.

“இல்ல, இப்போ என்னை யாரோ..இல்ல நீங்க.. இல்ல..பச்ச்.. யுகான்னு கூப்பிட்ட மாதிரி இருந்தது” என்றாள் புரியாமல்.

‘ஒருவேளை நான் தான் அப்படி நினைக்கிறேனோ? வரவர மைன்ட் வாய்ஸ்ல பேசிப் பேசி  எல்லாமே மைன்டுக்குள்ள பிக்ஸ் ஆகிடுச்சு போல’ என்று தனக்குத் தானே பேசிக் கொண்டிருக்க,

அவளின் நிலை பார்த்து சிரித்துக் கொண்டவன்,

“ஷீ இஸ் மை வொயிப் நகுலா. மை லைப் பார்ட்னர். டூ யு ஹேவ் எனி டவுட்ஸ் அபௌட் தட்?”என்றான் அகன் கணீர் குரலில்.

அவன் பேசியதில் அந்த இடமே அமைதியாய் இருக்க, முட்டக் கண்ணை விரித்துப் பார்த்துக் கொண்டிருந்த தாராவிற்கோ தலையை சுற்றிக் கொண்டு வந்தது. அவளுக்கு இப்படியாகும் என்று முன்கூட்டியே அகன் கணித்திருந்தானோ என்னவோ? தன் கைப்பிடியில் இருந்தவளை விடாமல்  தன்னுடன் இறுக்கியிருந்தான்.

“கார்த்தி” என்று அதிர்ந்த நகுலனுக்கு பேச்சே வரவில்லை. இத்தனை வருடங்கள் பேசாமல் இருந்தவன் பேசியதில், இத்தனை வருடங்களாக பேசிக் கொண்டிருந்தவர்கள் பேச்சற்று நின்றிருந்தனர்.

“நீ தானே கேட்ட நகுலா? இவ யாருன்னு? அதான் பதில் சொன்னேன். இப்போ உனக்கு எந்த சந்தேகமும் இல்லையே? இட்ஸ் கிளியர் நவ்” என்றான் அகன்.

“டேய் கார்த்தி..! நீ பேசுறடா? எப்படிடா?” என்ற நகுலனுக்கு கண்கள் எல்லாம் கலங்கிப் போக, அவனை அணைத்துக் கொள்ள துடித்த மனதை அடக்கிக் கொண்டு நின்றான் நகுலன். அகன் தான் அவன் கைப்பிடியில் தாராவை வைத்திருந்தானே.

“கார்த்தி” என்றவர்களுக்கு பேச்சே  வரவில்லை. அவன் பேசிக் கொண்டிருக்கிறான் என்பதை அவர்கள் உள்வாங்கிக் கொள்ளவே நேரம் தேவைப்பட்டது.

“டேய் கண்ணா, கார்த்தி எப்படிப்பா?” என்ற லட்சுமி அவனின் அருகில் வந்து அவனை ஒரு படப்படப்புடன் பார்க்க,

“சந்தேகம் வேண்டாம் பாட்டி. சாட்சாத் உங்க பேரன் அகன் கார்த்திகேயன் தான் நான்” என்றான் அவரின் கண் நோக்கி.

“எப்படிப்பா? அப்பறம் ஏன் இப்படி இருந்த? ஏன் சொல்லலை? என்னாச்சு? எப்படி பேச்சு வந்துச்சு?” என்றவருக்கு அதீத மகிழ்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அகனின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.

தயாளனோ தன் மகன் பேசியதில் ஆணியடித்தார் போல் நின்றார். ஏதோ மேஜிக் நடப்பதை போன்று அனைவரும் பார்த்திருந்தனர்.

பூமிநாதனுக்கும் வேணிக்கும் அப்படி ஒரு சந்தோசம். என்னதான் தாராவின் சந்தோஷத்திற்காக அவர்கள் இந்த திருமணத்திற்கு ஒப்புக் கொண்டிருந்தாலும், மனதின் ஒரு ஓரத்தில் இருந்த தவிப்பும் இப்போது அடங்கியிருந்தது அவர்களுக்கு.

வசந்திக்கும் மகிமாவுக்கும் முகத்தில் ஈயாடவில்லை. மகிமாவோ ஒரு படி மேலே போய், அவனைப் பேயைப் பார்த்த மாதிரி பார்த்து வைத்தாள்.

பாசத்தில் தயாளன் வேகமாய் அவன் அருகில் வர, அது வரை சிரித்த முகமாய் இருந்தவன் மீண்டும் இறுகிப் போனான்.

“எல்லாத்தையும் இப்பவே பேசணுமா? இப்போதான் எங்களுக்கு மேரேஜ் முடிஞ்சிருக்கு. இன்னும் கல்யாண சாப்பாடு கூட சாப்பிடலை. அதுக்குள்ள இவ்வளவு க்வெஸ்டின்ஸ் தேவையில்லைன்னு நினைக்கிறேன். ஏற்கனவே வந்தவங்களுக்கு காட்சிப் பொருளாகியாச்சு. இனியும் அப்படி இருக்கனுமா?” என்றான் அனைவரையும் பார்த்து.

அவன் எது சொன்னாலும் அவர்கள் அமைதியாகவே இருந்தனர். யாருக்கும் பேச்சே வரவில்லை. அவன் பேசிக் கொண்டிருக்க தாமரையோ அழுது கொண்டிருந்தார்.

“ஹய்யோ லோட்டஸ்? என்னதிது?” என்றான். பத்து வயது வரை அவரை அப்படித்தானே அழைத்தான் அவன்.

தாராவை நகர்த்தி, தாமரையை அணைத்துக் கொண்டவன்,

“தத்து எடுத்தாதான் நான் உங்களுக்கு புள்ளையா லோட்டஸ். எப்பவுமே அகன் உங்க புள்ளை மட்டும் தான். அதை நீங்க எப்பவும் மறக்காதிங்க” என்றான் உறுதியுடன்.

“கார்த்தி, கண்ணா என்னால நம்பவே முடியலை. நிஜமாவே இது நீதானா?” என்றார்.

“உங்களுக்கு எப்படி தெரியுது?” என்றான்.

“ஏங்க இது நம்ப கார்த்தி தாங்க” என்று சேதுராமனை அழைத்துக் கூறியவர் சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தார்.

“சித்தி நான் சொல்லலை. இவன் பேசுவான்னு இந்த தாராவுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கு. அதான் கிடைச்ச வரைக்கும் லாபம்னு இந்த கல்யாணத்துக்கு சரின்னு சொல்லியிருப்பாளோ? பேசி வச்சுட்டு நடந்த மாதிரி இல்ல?” என்றாள் மகிமா, வசந்தியிடம்.

“எனக்கும் அப்படித்தான் தோணுது மகி. இந்த தாரா எப்படி திடீர்ன்னு சம்மதம் சொன்னான்னு நானும் யோசிச்சேன். இப்பத்தான தெரியுது. இவனும் லேசுப்பட்ட ஆள் இல்லை மகி. இத்தனை நாள் ஊமைக் கோட்டான் மாதிரி இருந்துகிட்டே காரியம் சாதிச்சிருக்கான். நாமளும் கேனை மாதிரி நம்பிட்டு இருந்திருக்கோம்” என்றார் வசந்தி.

“மகி வாயை மூடப் போறியா இல்லையா?” என்றான் நகுலன் அழுத்தமாக.

அவர்கள் பேசியது தாராவின் காதிலும் விழத்தான் செய்தது. மனதில் ஏதேதோ உணர்வுகள் அழுத்த, மெல்ல அகனின் அருகில் இருந்து அகன்றவள், மாலையைக் கழற்றி அங்கிருந்த சேரில் போட்டுவிட்டு, கால் போன போக்கில் நடந்து சென்று கொண்டிருந்தாள்.

“அம்மாடி தாரா” என்ற பூமிநாதனின் குரலில் திரும்பியவன், அப்போது தான் அருகில் அவள் இல்லாததை கவனித்தான்.

“இவளை எப்படி மறந்தேன்” என்று எண்ணியவன்,  வேகமாய் அவ்விடத்தை விட்டு  வர,

“யுகா” என்றான் அழுத்தமாய். அவளோ சட்டை செய்யாமல் நடந்து கொண்டிருக்க,

“நான் பேசுறது பிடிக்கலைன்னா சொல்லிடு, இனி எப்பவும் பேசவே மாட்டேன்” என்றான் மீண்டும் அதே அழுத்தத்துடன்.

அவளின் நடை தடைபட, திரும்பி நின்று அவனை முறைத்தவள் வேகமாய் அவன் அருகில் வந்தாள்.

“நிஜமாத்தான் சொல்றேன், பேசுறது பிடிக்கலைன்னா சொல்லிடு. எப்பவும் போல பேசாமையே இருந்துடுறேன்” என்றான் உறுதியுடன். அவன் சொல்லி முடிக்க அவனை ஓங்கி அறைந்திருந்தாள் தாரா.

“தாரா என்ன பழக்கம் இது?” என்று பூமிநாதன் அவளை கடிந்து கொள்ள, அவளோ கலங்கிய கண்களுடன் வேகமாய் வீட்டிற்குள் சென்றவள், அறைக்குள் சென்று கதவை அறைந்து சாத்தியிருந்தாள்.

“தம்பி அது அவ இப்படி பண்ணது தப்புத்தான்” என்று பூமிநாதன் ஏதோ சொல்ல வர,

“நீங்க அங்க போய் அங்க கவனிங்க அங்கிள். நான் கூட்டிட்டு வர்றேன்” என்றான் அகன்.

“சரிங்க தம்பி” என்றவர் மனமேயில்லாமல் சென்றார்.

“யுகா ஓப்பன் த டோர்” என்றான் பொறுமையாக. சில நிமிடங்கள் பொறுமையாக நின்றவன்,

“டோரை ஓப்பன் பண்றியா இல்ல நான் உடைக்கவா?” என்று அவன் கத்திய கத்தில் கதவை வேகமாய் திறந்திருந்தாள்.

அவளின் அருகில் வந்தவன்,

“யுகா” என்றான் உயிரைத் தேக்கிய குரலில். அவன் குரலில் இருந்த ஏக்கமும் எதிர்பார்ப்பும் அவளை ஏதோ செய்ய, புதிதாய் கேட்கும் அவன் குரலில் தன்னை மறந்து நின்றவளை இறுக அணைத்துக் கொண்டான் அகன்.

அவனின் அருகாமையும் அணைப்பும் அவளை வசம் இழக்கச் செய்ய,

“ஐ ஹேட் யு அகன்” என்றாள் உறுதியான குரலில்.

“யுகா” என்றவன் அணைப்பின் இறுக்கத்தைக் கூட்ட,

“சீரியஸ்லி ஐ ஹேட் யு அகன்” என்றாள் மீண்டும்.

“நோ, அப்படி சொல்லாத யுகா” என்றான் இறுகிப் போன குரலில்.

“எஸ்.. ஐ ஹேட் “ என்பதற்குள் அவளின் இதழ்களைப் பூட்டியிருந்தான் அகன் கார்த்திகேயன்.